வேதவனம் -விருட்சம் 74

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

எஸ்ஸார்சி


ஒளிர் அழகன் அக்கினியே
என்னையும் ஒளிரச்செய்
வீர்யன் பலவான் அக்கினியே
வழங்கு எனக்கு அவைகளை
தூய ஒளி அக்கினியே
அவ்வொளி எனக்கருள்க
அக்கினியே சின உருவோன்
சினம் எனக்கு த்தந்திடுக
வெல்ல வல்லோன் அக்கினியே
வெல்லும் வலி வழங்கிடுக
தந்தை பாட்டன் முப்பாட்டன்
யாவருக்கும் வந்தனம்
சுவதா மொழிதல் அனைவருக்கும்
புனிதவான்கள் யாவருக்கும்
உலக உயிர்கள்
சமமாய் நோக்கி
சம ச்சீர்சிந்தையோடு
என்னுடை உயிராயுள்ளோர்
இல்லம் வாழும் திருமகள்
என்னில் நூறு வருடங்கள்
ஒங்கட்டும் சிறக்கட்டும்
வழிகள் இரண்டு யாவர்க்கும்
பிதுரு வழி தேவ வழி
சொல்லக் கேட்டிருக்கிறேன் யான்
இவ்வழியே தந்தை தாய்
அரணாய் நிற்க
எல்லா உயிரினங்களும்
தத்தம் வாழ் நடை பயில்கின்றன
நல் மனமுடை தகப்பனை
மகனைச் சந்ததியை
விஷ்ணுவே எனக்கு த்தந்தான்
பிதுருக்களே யாவர்க்கும்
வீர மக்கள் வழங்கி
வளம் பலம் அருள்வோர்
எம் குற்றம் பொறுப்போர்
அக்கினியே பிதிர்க்கு
அவி கொண்டு போகிறான் ( சுக்ல யஜுர் 19)
கிராமத்தில் வனத்தில்
மக்கட்கூட்டத்தில் தத்தம்
காயத்தால் இந்திரியபலத்தால்
சூத்திரன் ஆரியன்
ஒருவருக்கு ஒருவர்
இழைத்திட்டகுற்றத்திற்கு
பரிகாரன் அக்கினியே ( சு.ய. 20)

அசுவேதவேள்வியில்
பலிபடு குதிரையின்
எலும்புகள் பாகமாகின்றன
இந்திராக்கினி சரசுவதி
மித்திரன் நீர்
நிருதி அக்கினி
சோமன் சர்பங்கள்
விஷ்ணு இந்திரன்
வருணன் எமன்
விண் விசுவதேவர்
தந்திடுவோம் யாம்
தலா ஒர் எலும்பு
காற்று இனிய மருந்தேயாகுக
தாய்ப்புவியும் தருக அதனை
தந்தை வானும் வழங்கும் அதனை
எம்செவி நல்லது கேட்கட்டும்
எம்கண் நல்லது பார்க்கட்டும் ( சு. ய 25)
பிராமணன் க்ஷத்ரியன்
சூத்திரன் ஆரியன்
அருகிருப்போன் அந்நியன்
எல்லோருக்கும் நன்மை தரு
வேதம் இங்கு உரைக்கின்றேன் ( சு.ய.26)
முத்தேவிகள் பாரதி சரசுவதி இஷை
இந்திர பத்தினிகள்
வானொடு வேள்விச்சாலை
மனிதர் வாழில்லம் வந்து
வளமே தந்திடுக
இந்திரனுக்குபலியாகிறது
வேள்விக்கம்பத்தில்
பிணைபட்ட ஆடு
நெய்யொடு அவியன்னச்சேர்ப்பு
இந்திரப்படையல் முடிய
எமக்குபலனாகி வருகிறது
தேவ தானம் ( சு. ய 28 )
—————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி