‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

கரு. திருவரசு


புல்லில் உறங்குகின்ற – அழகு
வெள்ளிப் பனித்துளிபோல்
உள்ளக் கமலத்துள்ளே – முருக
வள்ளல் அழகுகண்டேன்! – புல்லில்

வானத் திறங்கிவந்து – மிளிரும்
வண்ணப் பன்னித்துளிபோல்
நானும் பிறந்துவந்தே – உலக
நாற்றத்தில் ஏன்கலந்தேன்! – புல்லில்

தாமரை இலைவயிற்றில் – விழுந்தே
தவிக்கும் பனித்துளிபோல்
பூமியில் விழுந்துவிட்டேன் – என்னைப்
பொறுத்தருள் புரிகுவனோ! – புல்லில்

ஒற்றைப் பனைமரத்தைப் – பனிநீர்
ஒடுக்கிக் காட்டுதல்போல்
சுற்றும் உலகத்தையே – அழகுச்
சுடருக்குள் காட்டிநின்றான்! – புல்லில்

முத்துப் பனித்துளியின் – கதையோ
முடியும் சிறுபொழுதில்
பித்து மனிதக்கதை – தொடரும்
பீடைப் பெருங்கதையாம்! – புல்லில்

தூங்கும் பனிநீரின் – உயிரை
வாங்கக் கதிர்வருவான்
ஏங்கும் உயிர்ச்சுமையை – முருகன்
தாங்கி அருள்குவனோ! – புல்லில்

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு