விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

எஸ்ஸார்சி


வெளிச்சத்துக்கு ஏங்குகிற பிரக்ஞையின் அனுபவத்தை வாசகனுக்குத் தெரிவிக்கின்ற உத்தியைப் பாவண்ணனின் சிறுகதைப் படைப்புகளில் எளிதாகக் காணலாம். புராணப் பின்னணியில் அமைந்த கதைகள் பாவண்ணனுக்குக் கூடுதல் சிந்தனைத் தளத்தைத் தந்து உதவியிருக்கின்றன. தன் கவனத்தின் ஆழத்தை அனாயசமாய்த் தொட்டுப் பார்த்துவிட புராணப் பாத்திரங்கள் அவருக்குத் துணைக்கு வருகின்றன. வாழ்க்கை என்னும் புதிர் அவிழாதா என்கிற சிறுபிள்ளையின் பெருவிண்ணப்பம் அவரைக் குடைந்து குடைந்து, திக்குமுக்காட வைத்து, திணற வைத்து, உறையவும் வைத்து, கிறங்க வைத்துக் கருத்துக் கதிர்வீச்சாய்ப் படைப்பாக்கங்களில் கொப்பளிக்கிறது. ஞானவாரியில் ஜலக்கிரீடை செய்து விடுகிற பேரவா சாத்தியப்பாடில்லை என்பது சத்தியமாய்த் தெரிந்தாலும் சாதிக்க முனையும் மனித உந்துதல்களின் அரிய வெளிப்பாடு. கருத்து மூலங்களில் எதிராய்ச் சென்று கன்னத்தில் அறைவது என்பது எளிதாய் இருக்க கருத்தோடு கைகோர்த்துக் கொண்டே கருத்துக்குள் விளங்காது பூடகமாய்க் கிடக்கிற முடிச்சுகள் சிலவற்றை அவிழ்த்து விடுதல் பாவண்ணனுக்குச் சாத்தியமாகி இருக்கிறது.

சிறுகதை வடிவத்தின் சூட்சுமத்தைத் தளமுயர்த்திக் காட்டியிருக்கிறார் பாவண்ணன். ‘ஏழு லட்சம் வரிகள் ‘ என்னும் சிறுகதை மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதைகளில் ஒன்று. சிறுகதை ஓடிப்பறந்து மறைந்து விடுகிற செய்தி சொல்லும் சிட்டுக் குருவியாக இல்லாமல் பசுமரத்தில் அமர்ந்து பலபேசும் புதிர்ப்பறவை என்பதை எதார்த்தமாகக் காண்பிக்கிறார் பாவண்ணன். ஆகப்பெரிய செவ்வியல் படைப்புகளில் ஆன்மாவுடன் வாதப் பிரதிவாதம் செய்கின்ற நசிகேதன் நம் கண்முன் தோன்றிப் பிரமிப்பூட்டுகின்றான். ஞானப்புயல் சுழல வைக்கிறது வாசகனை.

அரசருடன் அமர்ந்து அரசுக்காகச் சிந்திக்கிற பொறுப்பினைத் தமதாக்கிக் கொண்ட பண்டிதக் கூட்டங்களைத் தோலுரித்துக் காட்டுகின்ற ஏழு லட்சம் வரிகள் என்னும் சிறுகதை கூரான சமூக விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது. பைசாச மொழி இழிக்கப்பட்டதன் ஆதி வரலாற்றைத் தளமாகக் கொண்ட கதையில் ஒவ்வொரு வரியிலும் விமர்சனம் மறைந்திருக்கிறது. ‘பூவின் மணத்தை நரிகள் எப்படி உணரும் நந்திதேவா ? ‘ குணாட்யர் மூலமாய் வினாவை வைக்கின்றார் பாவண்ணன். சமூக நீதி இங்கே திரைவிலக்கி மெல்ல எட்டிப் பார்க்கிறது. ‘வெகுவேகமாக இந்தக் காவியம் மக்களிடையே பரவ வேண்டும் என்கிற அவசரத்தில் அரசரை அணுகி விட்டேன். அது பெரிய பிசகு ‘ இது கதையில் வரும் சாரமான வரி. மக்களுக்கும் அரசருக்கும் இடையேயுள்ள வெளி சிரஞ்சீவியாக நிலைத்திட நிரந்தரமாய்ச் சுழலும் ஒரு அசட்டுக் கூட்டம். படைப்புத் தளத்தில் லாவகமாகத் தோலுரிக்கிறார் பாவண்ணன்.

பெண்மையின் மனப்பறவை பறந்து பறந்து செல்லும் உச்சங்களையும் அதல பாதாளங்களையும் அழகு மெருகிட வடித்துக் காட்டும் படைப்பு ‘அல்லி ‘. சிறுகதையின் வெற்றி இது. உன்னதம், செய்நேர்த்தி, எழுத்துப் பெருமிதம் ஆகியவை அனைத்தும் ஒருங்கே கொப்பளிக்கும் படைப்பு. தன் தந்தையை ஒத்த ஆண்மகனுக்காக ஏங்கித் தவிக்கும் அல்லி. ‘அவரைப் போல ஓர் ஆண் உலகத்தில் மறுபடியும் பிறக்காமலேயே போனானா ? ‘ கேள்வி ஒரு உதிர்ந்த இறகு போல மிதந்து இறங்கி அவள் நெஞ்சை அடைந்தது. கச்சிதமான சொல்லாடல். பாவண்ணனுக்கு வருத்திக் கொள்ளாமல் வசப்படுகிறது. வாசகனை உலுக்கிப் பார்க்கிற இக்கதை உலகத் தரத்துக்கு இணையானது.

‘ரணம் ‘ சிறுகதையில் அற்புதமான விவாதமொன்று முன்வைக்கப் படுகின்றது. கர்ணன் தன் தாயையே ஒரு பாவி, அரக்கி, இரக்கமில்லாதவள் என்று அடுக்கடுக்காயத் திட்டுகிறான். ‘பரசுராமனிடம் நீ உன்னைப் பிராமணன் என்று பொய்யுரைத்து விற்பயிற்சி அடைய உனக்கு உருவான நெருக்கடி போல மற்றவர்களுக்கு நெருக்கடி வரக் கூடாதா கர்ணா ‘ என்கிற கேள்வி அவனைச் சுக்கு நுாறாக உடைத்துப் போடுகிறது. வண்டு துளைத்து ரணப்படுத்தியது சிறுத்துப் போய் இவ்வினாவின் ரணம் விசுவ்ருபம் எடுக்கிறது.

துரியோதனனின் இறுதிக்கணம் குறித்து உணர்வுக் குமிழ்களை வரிசைப்படுத்தும் சிறுகதைப் படைப்பு திரை. முக்கியமான தருணத்தைச் சித்திரக் காட்சியாக முன்வைக்கிற கதை. குற்ற உணர்வைத் துரியோதனனைப் பிடறியைப் பிடித்து உலுக்க வானம் பார்க்கிறான் அவன். பாவண்ணனின் பார்வையில் விரிந்த நீலப்பரப்பில் சுற்றிச் சுற்றி வட்டமடித்த அந்தப் பறவையை அவன் கண்கள் தேடின. வாழ்வின் அந்திப்பொழுதைப் பறவையோடு பார்க்கிறான் துரியோதனன். பாவண்ணன் பறவைகளை அடிக்கடி தொட்டுப் பேசுகிறார். தத்துவப் பார்வை செறிவு பெற்றதன் வெளபேபாடாய் இது இருக்க சாத்தியப் பாடுகள் அதிகம். ராமானுசரின் பறவை குறித்த வியாக்கியானங்கள் துணைக்கு வரலாம். ஷெல்லியின் வானம்பாடியின் அடைமொழி மனக்கண்களிலே தெரிகிறது. வால்மீகியின் பறவை தரிசனம் இதிகாசமாய் உரு எடுத்து வெளிப்பட்டதும் எதார்த்தம் . தமிழ்மறையரூம் உயிர்ப்பறவையைப் பற்றிப் பேசுகிறது.

சுழல் என்னும் சிறுகதை லட்சுமணன் சீதையை முனிவரிடம் ஆற்றுப் படுத்திய விஷயம் பேசுகிறது. பொருள் பொதிந்த ஒன்று பொருளற்றதாகப் போகிற தருணத்தைத் தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். மகளே, மானிடத்தைப் பொசுக்குகின்ற நெருப்புப் புள்ளி அது என்று சீதையிடம் பேசும் வால்மீகியின் ஊடாக வாழ்வு கோடி கோடித் தற்செயல்களாின் தொகுப்பு சீதை. மணிகளைக் கோர்க்கின்ற கயிறு போல எல்லாவற்றையும் கோர்த்தபடி ஒரு சரடு கண்ணுக்குத் தெரியாமலே நிள்கிறது. என்று உபநிடத சாரத்தைச் சொல்லிச் செல்கிறார் பாவண்ணன்.

புள்ளொடு விருட்சத்தையும் அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பேசும் பாவண்ணன் சுழல் கதையில் பெண்களை மரத்தோடு ஒப்புமைப் படுத்தி அழகாயப் பேசுகிறார். உலக உயிர்ப்புக்கு நீரைத் தருவிக்கும் மரங்கள் , உயிர்கள் மூச்சுவிட உயிர்க்காற்றுக் கொடை தருபவை. பசி நெருப்பு ஆற்றும் கற்பகத் தருக்கள் மரங்கள். மரங்களின் ஒவ்வொரு இலை நுனியிலும் கண்ணீர்த் துளி போல நீர்நின்று வழிந்தபடி இருந்தது என்று குறிப்பிடுகிறார் பாவண்ணன். சீதையின் துயரத்தைக் காட்டில் நிற்கும் நெடுமரங்கள் உணர்கின்றன. பெண்கள் உயிர்த் தருக்கள். மனிதர்கள் அதை உணர்வதில்லை. கேவலமாகக் குறுக்கிக் கொள்கிறார்கள் என்ற விமர்சனம் சொல்லாமலேயே வெளிப்படுகிறது.

‘போர்க்களம் ‘ சிறுகதையில் ராகுவின் தீட்சண்யம் துல்லியமான சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டப்படுகிறது. ராகுவின் கேள்விக் கணைகள் ஒரு நல்ல வழக்கறிஞரின் ஆளுமை வயப்பட்டதாய் வெளிப்படுகின்றன. மார்க்சிய விஷயங்களை மாயக் கண்ணன் ஒப்ப ராகுவின் வாக்கு மூலமாக நமக்குத் தருகிறது இக்கதை. ‘நன்றாக யோசித்துப் பாருங்கள். பாற்கடலைக் கடையநாமும் அவர்களும் ஒரே அணியில் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள் ‘ என்று சொல்லும் ராகு ‘தந்திரப் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதை விட வெளிப்படையாகவே மோதிச் செத்துப் போகலாம் ‘ என்று பேசுகிறான். ‘உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு ‘ என்று ராகுவின் பேச்சில் வெளிப்படும் விஷயம் கதையைச் சமகாலத் தன்மை கொண்டதாக மாற்றி விடுகிறது. தேவர்களின் கொப்பரையில் அமுதத்தை ஊற்றும் மோகினி வெற்று அகப்பையை அசுரர்களின் கொப்பரைகளில் விட்டுவிட்டு எடுக்கிறாள். அமுதம் தமக்குக் கிடைத்ததாக எண்ணி வெற்றுக் கொப்பரையைத் தம் வாயில் கவிழ்த்துக் கொண்டு மோகினியின் சுண்டி ஈர்க்கும் சிங்காரத்தில் சிறைபடுகிறார்கள் அசுரர்கள். யார்யாருக்கோ இதில் செய்தி அடங்கியிருப்பதுதான் இக்கதையின் வெற்றி. கஞ்சி குடிக்க வழியும் அதற்கான காரணங்கள் என்ன என்கிற தெளிவும் இல்லாதவர்கள், வீட்டில் பூச்சிகள் போல மக்கள் வாழ்வதையும் மடிவதையும் கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறார் பாவண்ணன். சிறிதும் கலைநயம் குறையாத வகையிலும் ச்முக விமர்சனத்தைப் படைப்பில் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்படைப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆண்டாள், பெரியாழ்வார், மகள், தந்தை, அரங்கன், அரங்கநாயகி, ஜீவாத்மா,பரமாத்மா, அன்பு பேரன்பு என்கிற அருமையான உணர்வுத் தளங்களை அலசுகிறது புதிர் என்னும் சிறுகதை. ‘அவரும் நீயா ? நானும் நீயா ? எல்லாமே நீயா ? எல்லாமே நீயா ? எனக்கு ஏன் புரியவில்லை ? ‘ இது என்கிற பெரியாழ்வாரின் கேள்வி, அண்ணாமலை ரமணரின் நிலைத்த கேள்வியாகும். காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் படுவன அவை என்ன ஆரிதற்கு எல்லாம் அதிகாரி என்னும் உள்ளம் துருவும் வினா. பாவண்ணனின் படைப்புகளில் நிழலாய்த் தென்படுகிற அடித்தள நாதமிது.

வியாசர் சொல்வதாகப் பாவண்ணன் குறிப்பிடும் ‘ஒரு பிம்பமாய் ஒரு கணம் எழுச்சி கொண்டது மட்டுமே உண்மை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் என் மனத்தை நானே முறுக்கேற்றிக் கொண்டு கவிதையின் உச்சத்துக்குச் சென்றேன். எழுதி முடித்ததும் எனக்குள் மறுபடியும் உருவான வெறுமைக்கு அளவேயில்லை. மிகப் பெரும் வெறுமை ‘ என்கிற வரிகள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் எல்லாருமே மனத்துக்குள் சொல்லிக்கொள்ளக் கூடிய வரிகள் . மனத்தின் மறுபக்கம் இது. வியாசர் எவ்வளவு பெரிய கவிஞர். அவர் கெஞ்சிக் கரைவதைக் காட்டும் இம்மறுபக்கம் வாழ்வில் ஒவ்வொரு தந்தைக்கும் நேரக் கூடியதே. காலந்தோறும் ஒவ்வொரு ஆணுக்கும் உருவாகும் மனநெருக்கடியை வியாசர்-சுகர் பின்னணியில் வைத்துப் பேசுகிறது இக்கதை.

ஆழ்ந்த இந்தியத் தத்துவ ஞானச் சுரங்கமாய் விளங்கும் தொன்ம விஷயங்களைச் செரித்துக் கொண்டு சமகாலத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் சில தருணங்களை மறு ஆக்கம் செய்வது இத்தொகுதியின் முக்கியத் தன்மையாகும். படைப்புத் தளத்தை விரிவாக்கும் பாவண்ணனின் முயற்சிகள் வெற்றி அடைந்திருக்கின்றன. எந்த இடத்திலும் கதையின் சரடு சமகாலப் பிரதிபலிப்பைக் கைவிடாமல் இருப்பது கவனிப்புக்குரிய விஷயம். சமூக அக்கறையோடு ஒவ்வொரு கதையும் ஒடுக்கப்பட்டோர்களின் பக்கம் நிற்பது மற்றுமொரு கூடுதல் சிறப்பாகும். தமிழ்ப் படைப்புலகில் பாவண்ணனின் எழுத்து முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாகும். நல்லது பெரிதாகும்.

***

essarsi2002@hotmail.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி