விதியை அறிதல்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

மலர்மன்னன்


நான் ஏதோ எல்லாம் அறிந்தவன் போலவும், என்னிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதுபோலவும் தாமாகவே முடிவு செய்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிக் கட்டுரை எழுதுமாறு பணிக்கும் மின்னஞ்சல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதானிருக்கின்றன. செந்தில் என்ற பெயருடைய வாசகர் தொடர்ந்து ஒரே விஷயம்பற்றிக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.

விதி என்கிற விஷயம் அவரை மிகவும் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது. விதி என ஒன்று இருக்குமானால் அப்புறம் எனக்கென்று சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் என்ன இருக்கிறது? எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் நானாக எனது சுயேற்சையான சங்கற்பத்தின் படியும் இயக்கத்திற் கேற்பவும் நடப்பது எனபது எப்படி சாத்தியம்? இதற்கு நம் ஹிந்து தத்துவ ஞானம் என்ன சமாதானம் சொல்கிறது?

இதற்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று செந்தில் இதுவரை நான்கு மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டார். எனது பதில் அனைவரும் படிக்கும்படியாக ஒரு கட்டுரையாக எழுதிவிட வேண்டும் என்பதும் இவரது விருப்பம். எனக்கு இருக்கிற கவலையெல்லாம் செந்திலின் விருப்பத்திற்கு இணங்க எனக்குத் தெரிந்ததை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முற்பட்டால் அதன்பிறகு இவ்வாறான எதிர்பார்ப்புகள் அதிகரித்து நான் ஓர் உபன்னியாசக்காரனாக மாறிவிட நேருமோ என்பதுதான். எனது அறிவின் எல்லைகள் மிக மிகக் குறுகியவை என்பதை தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் உண்மை. சம்பிரதாயமான பெரிய மனுஷ தோரணையிலான அவையடக்கம் அல்ல.

இன்னொரு வாசகர் கிலாஃபத் இயக்கத்தின் பழி முழுவதையும் காந்தியின் மீதே சுமத்துகிறீர்களே, பால கங்காதர திலகரும் கிலாஃபத்தை ஆதரித்தார்தானே, அதை ஏன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறீர்கள் என்று இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். இதே கேள்வியை ஆனந்த கணேஷ் என்கிற பெங்களூரு அன்பரும் ஓரிருமுறை கேட்ட ஞாபகம் இருக்கிறது. நான் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்தால் என்னிடம் இதற்கு பதில் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்படக் கூடும். கடைசியாக வந்த மின்னஞ்சல், கிலாஃபத்தை ஆதரித்தார் என்கிற குற்றச்சாட்டை இனி காந்தி மீது மட்டும் சுமத்த மாட்டீர்கள் அல்லவா என்று, இளக்காரமாகச் சிரிக்கும் ஒரு வட்ட ஒட்டுப்படத்தையும் கடைசியில் வைத்துக் (ஸ்மைலி என்று பெயராம் அதற்கு!) கேட்டது, இதை உறுதி செய்கிறது!

கிலாஃபத் பற்றி அவ்வபோது வெவ்வேறு அனபர்களும் ஏதாவது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆகவே கிலாஃபத் இயக்கம் பற்றித் தனியாக ஒரு புத்தகமே எழுதத் தொடங்கி யிருக்கிறேன். கிலாஃபத்தும் திலகரும் என அதில் ஒரு தனி அத்தியாயமே எழுதவிருக்கிறேன். காந்தியைத் தவிர அக்காலப் பிற காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டையும் அதிலேயே விவரித்திருக்கிறேன். வேண்டுமானால் புத்தகத்தை முன்னறிவுப்புச் செய்யும்விதமாக அந்த அத்தியாயத்தை வெளியிட்டு விடுகிறேன்.

வந்தே மாதரம்: எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம் என்ற சிறு நூலை இப்போதுதான் எழுதி முடித்து அது வெளியாகியிருக்கிறது (த்ரிசக்தி பதிப்பகம், சாஸ்த்ரிநகர், சென்னை 600 020). உடனே கிலாஃபத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும்படியாகிவிட்டது.

விதியைப் பற்றி ஆரம்பித்துவிட்டு கிலாஃபஃத்தில் நுழைந்து விட்டானே என்று எண்ணத் தோன்றலாம். கிலாஃபத் இயக்கம் ஹிந்துஸ்தானத்து விதியின் விளைவு என்பதால்தானோ என்னவோ விதியப்பற்றிப்பேசுகையில் அதுவும் தானாகவே வந்து சேர்ந்துகொண்டுவிட்டது!

சரி, விதியைப் பற்றி இனி யோசிப்போம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது, சங்கப் புலவன் கணியன் பூங்குன்றன் கவிதை.

உண்மையில், சொந்த ஊராவது, சொந்த நாடாவது, உற்றாராவது, உறவினராவது, இறப்பு என்பது புதிதாகத் தோன்றி வருத்துவதுமில்லை, உயிர்த்திருக்கிறோம் என்பதற்காக அகமகிழ்ந்து போவதுமில்லை என்றெல்லாம் முதிர்ந்த ஆன்மிக விழிப்புடன் எழுத்டப்பட்ட கவிதை இது. ஆனால் இந்த உட்பொருளை உணராமல் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற முதலடியை வேறு விதமான பிரசாரத்திற்குப் பயன்படுத்தி யாகிறது! இதுவும் விதியின் விளையாட்டுதான்!

விதிக்கு மிகச் சரியான, சுருக்கமான விளக்கம் கணியன் பூங்கின்றனின் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற வாசகம். நமக்கு நேர்கிற நன்மைகளுக்கும், அதாவது பொதுவாக நன்மையாக நமக்குத் தோன்றுவனவற்றுக்கும் தீமையெனத் தோன்றுவனவற்றுக்கும் நாமேதான் காரணம். இதிலிருந்து நமக்குப் புலனாவது என்ன?

விதி எனப்படுவதும் நமது சுயேற்சையான சஙகற்பமும் வெவ்வேறல்ல, ஒன்றே என்பதுதான். வேண்டுமானால் விதி என்பது முன்பு நமது சுயேற்சையான சங்கற்பத்தின்படி மேற்கொண்ட செயலின் விளைவு என்றும் சுயேற்சை சங்கற்பம் என்பது அவ்வப்போது மேற்கொள்ளும் செயல் என்றும் கொள்ளலாம். விதி என்பது கடந்த காலச் செயலின் பின்விளைவு, சுயேற்சை சங்கற்பம் என்பது நிகழ்காலச் செயலின் எதிர்காலப் பின் விளைவு, அவ்வளவுதான். அதாவது நமது விதிக்கு நாமேதான் முழுப் பொறுப்பாளி.

எதிர்பாராத விபத்துகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றில் சிக்கி அழிய நேரிடுகிறதே இதற்கு யார் பொறுப்பு?

விபத்து நிகழும் இடத்தில் நீ இருக்க நேர்ந்தது உனது சுயேற்சை சஙகற்பமே அல்லவா?

இயற்கைச் சீற்றத்திற்குத் தனி நபரான நீ நேரடிப் பொறுப்பாக இல்லா விட்டாலும் அது இயற்கையுடன் விளையாடுகிற ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பேயல்லவா?
தாயான பூமியைக் குப்பைக் கூடையாக்கியது போதாதென்று ஆகாய வெளியையும் செயல் இழந்த செயற்கைக் கோள்களும், நடப்பில் உள்ள செயற்கைக் கோள்களுமாக ஏராளமான கசடுகளை பூமியைச் சுற்றி வரச் செய்தும் நச்சு வாயுக்களை இடைவிடாது கக்கி, பூமியின் கவச வெளியை சொட்டை யாக்கியும், சோதனை என்கிற பெயரில் ஆழ்கடலின் தரையில் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஒவ்வொரு வல்லரசும் வல்லரசாக விழையும் அரசுகளும் மாற்றி மாற்றி இடைவிடாது வெடிக்கச் செய்தும் மனித சமுதாயம் விளையாடுவதற்கெல்லாம் பின் விளைவு இருக்க வேண்டாமா?

ஹிந்து தத்துவ ஞானமும் சரி, ஹிந்து சமயக் கோட்பாடும் சரி, தர்மம், கர்மம் என்கிற இரு தூண்களின் மீதுதான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. தர்மம் என்பது அவரவருக்குரிய கடமை இன்னதென்று உணர்ந்து அதற்கு முரண்படாமல் இருத்தல். கர்மம் என்பது அந்த தர்மத்தின் பிரகாரம் ஒழுங்கு தவறாமல் வினை செய்து வருதல். இவ்வாறு வினை செய்து வந்தால் செய்யும் வினைக்கு ஏற்பப் பயன்கள் விளையும். எனில் இங்கு இறைச் சக்தியின் வேலை என்ன? வினைக்குரிய பயனை முறை பிசகாமல் கிடைக்கச் செய்வதுதான்.

உள்ளுறையும் ஒளியே எல்லாமுமாய் இருந்து இயக்கச் சுழற்சியை நடத்தி வைக்கிறது. இதற்கெல்லாம் நோக்கம் என ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா? நிச்சயமாக இது அர்த்தமற்ற விளையாட்டாக இருப்பதற்கில்லை. எனில் நோக்கம் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் படிப்படியான பரிணாம வளர்ச்சியே இதன் நோக்கமாயிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியை முன்னிட்டு, விதிப் பயனுக்கேற்பப் பிறவிச் சுழற்சியும் அமைகிறது. பரிணாம வளர்ச்சியின் நோக்கமும் அதன் இறுதி நிலையும் என்ன என்று யோசித்தால் அதுவே பிரம்மத்தை அறிதல்.

ஊழ்வினை வந்து உறுத்த என்றொரு விளக்கம் சொல்கிறார், இளங்கோ, தமது சிலப்பதிகாரத்தில். கோவலன் அபாண்டமாய்ப் பழிச்சுமை யேற்றுக் கொலைப்படுவதற்கென்றே மனையாள் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றதை ஊழ்வினை எனப்படுகிற விதியின் தூண்டுதலால் விளைந்த செயல் என்கிறார். சரிதான், ஆனால் கோவலன் செட்டி தனது சுயேற்சை சங்கற்பத்தினால் தான் கண்ணகி ஆச்சியைப் பிரிந்து மாதவியைச் சேர்ந்து, தனது சுயேற்சை சஙகற்பத்தினாலேயே எவ்வித நியாயமும் இன்றி மாதவியாளைப் பிரிந்து மீண்டும் கண்ணகியைச் சேர்ந்து, வறியவனாய் சொந்த ஊரில் வளையவர வெட்கியும், தனது நிலையைத் தன் சமூகத்தாரிடம் வெளிப்படையாகக் கூறிப் பரிகாரம் பெறுவதற்கு சுய மரியாதை இடங் கொடாததால் தனது சுயேற்சையான சங்கற்பத்தின்படி மனைவியிடம் எஞ்சியுள்ள காற் சிலம்பையே முதலீடாக வைத்துக் கண் காணாத இடத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்று எடுத்த சுய முடிவே ஊழ்வினை வந்து உறுத்தலாக முடிந்தது.

ஆனால் இவற்றையெல்லாம் பேசுவதால் செந்திலுக்கு மனச் சமாதானம் ஏற்பட வேண்டுமே? அவருக்கு ஏதோ பிரச்சினை. அதை வெளிப்படையாகச் சொல்லவும் அவருக்கு மனமில்லை போலும். ஆகவேதான் இடைவிடாமல் விடாமல் விதியைப்பற்றி வினவிக்கொண்டேயிருக்கிறார். என்னதான் பிரச்சினை என்று கேட்பதும் நாகரிகமல்லவே!

யோசிக்கும் வேளையில் விதியின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கும் முயற்சியாகத்தான் அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டே இருப்பாராயிருக்கும். இதைச் சொல்ல எனக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு குற்றச்சாட்டாக நான் இவ்வாறு கூற வில்லை என்பதை செந்தில் புரிந்துகொள்ளவேண்டும். எவருக்கும் உள்ள இயல்பான மனப்போக்கு இது என்பதைக் குறிப்பிடுவதாகத் தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகையால் செந்திலுக்கு மனச் சமாதானம் கிடைக்க நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அதை எதிர்பார்த்துத்தானே அவர் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்? ஆகவே நமது ஹிந்து ஞான மரபின் பிரகாரமான பரிகாரமாகவே அதைச் சொல்கிறேன்.

உங்களுக்கான விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. எனவே நிச்சயமாக அதனை அனுசரித்து உங்களுடைய நிகழ்கால சுயேற்சையான சங்கற்பத்தின்படி நடந்துகொள்வதன் மூலம் உங்கள் எதிர்கால நிகழ்வுகளைச் சாதகமாக அமைத்துக்கொள்ள முடியும். எதுவும் கடந்து போகும் என்பதால் இப்போதைய விதியின் விளைவு சாதகமாக் இல்லையெனில் விரைவில் அது கடந்துபோய் நிகழ் காலத்துச் சரியான சுயேற்சை சங்கற்பத்தின் பயனாக எதிர்கால விதியின் போக்கு சாதகமாக அமையும்.

சரி, நிகழ்காலத்தில் எடுக்கிற சுயேற்சையான சஙகற்பம் பின்னால் சங்கடத்தை விளைவிக்கக் கூடிய விதியாக மாறிவிடாமலிருக்க என்ன செய்யலாம்?

பரிபூரண நம்பிக்கையுடன் இறைச் சக்தியைச் சரனடைதல் ஒன்றே இதற்கு மார்க்கம். தியானத்தின் மூலமே இறைச் சக்தியின் உதவி கைகூடும். இதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். காற்றோட்டமும் இயற்கை வெளிச்சமும் உள்ள சந்தடியற்ற சூழலில் தியானத்தில் அமர்தல் தியானம் விரைவில் சித்திக்க வழி செய்யும்.

தமிழா, தெய்வத்தை நம்பு என்று பாரதி சொன்னது வெறும் பேச்சல்ல. இஷ்ட தெய்வம் ஒன்றைத் தேர்ந்துகொள்ளல் தியானம் எளிதில் கைகூடுவதற்கான வழி. இறைச் சக்தி அந்த இஷ்ட தெய்வத்தின் வடிவாகவே உள்ளிருந்து சரியான வழி காட்டும். ஆண்டவரே பேசுங்கள், அடியவன் கேட்கின்றேன் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் இறைச் சக்தி உங்களுடன் பேசத் தொடங்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். அந்தப் பேச்சு உங்களை ஆற்றுப்படுத்தும். உங்கள் விதியின் பயன் எதிர்மறையாக இருந்து வரின் நீங்களே வியந்து போகிற மாதிரி காலைப் பனியாய் அது மறைந்து போகும்.

விதியும் சுயேற்சை சங்கற்பமும் வெவ்வேறல்ல, ஒன்றே, வேண்டுமானால் கடந்த கால சுயேற்சை சங்கற்பத்தை விதியென்றும் நிகழ்கால வினை செய்தலாகிய விதியை சுயேற்சை சங்கற்பம் என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம்.
மிகவும் கவனமாக, பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆழ்ந்து யோசித்து சுயேற்சை சங்கற்பத்தை மேற்கொண்டால் விதியின் பயன் நல்லவிதமாகவே இருக்கும்.

+++

Series Navigation