விதியா? மதியா?

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

செந்தில்


பழங்காலந்தொட்டு நவீன காலம் வரையிலும், வர்ணாஷ்ரம-மனு நீதி காலம் தொடங்கி தற்க்கால மக்காளாட்சி வரையிலும், சாமானியர்களையும், சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும், மத-வேதாந்த போதகர்களையும் பேசவைக்கும் ஒரு விவாதம் “விதியா? மதியா? அதாவது விதியை மதி வெல்ல முடியுமா? என்பது”. இது விஜய் தொலைக்காட்சியையும் விட்டு வைக்கவில்லை. இந்த விவாதத்தை ஓரளவுக்கு அறிவார்த்தமாக நடத்த முயன்றதற்க்காக விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு பாராட்டுடன், இந்த விவாத தலைப்பு குறித்து எனது கருத்துகளை வரைகிறேன். விதி-மற்றும் மதி குறித்து விவாதிப்பதற்க்கு ஆய்வுக்குரிய-அணுகுதற்குரிய தளம் (level of analysis/level of intervention), மிகவும் முக்கியம். அதாவது, விதி குறித்த கருத்தாக்கமும், பாதிப்பும், தனி-மனித தளத்திலும், சமூக தளத்திலும், மனித வாழ்வு-உயிர் என்ற தளத்திலும், இயற்க்கை-சூழல் என்ற தளத்திலும், புவி (கோள்)-மற்றும்-பிரபஞ்சம் என்ற தளத்திலும் வெவ்வேறு வித தாக்கங்களை ஏற்படுத்த வல்லது.

“விதி” குறித்து பல வித புரிதல்களும் விளக்கங்களும் நிலவுகின்றன. ஒரு வித “மகா சட்ட-விதி” என்றோ, “தளராத – தவிர்க்க இயலாத பிரபஞ்ச இயக்கவிதி” என்றும், முன் வினை பயன் (காரண-விளைவு என்ற பொருளில்) என்றும், முன் பிறவி பயன் என்ற பொருளிலும் (karma-fate), முன் நிர்ணயம் செய்யபட்ட பாதைகள்-நிகழ்வுகள் (predetermined/path dependence) என்றும் ‘விதி’ குறித்து பல கருத்துகள் உண்டு. குறிப்பாக, மத அல்லது இறை நம்பிக்கையை ஊன்று கோலாக, வாழ்க்கையின் அடிப்படை தத்துவமாக கொண்டுள்ள மக்களிடம் ‘விதி’ குறித்த ஆழமான, உறுதியான கருத்துகள் உண்டு.

வாழும் உயிரினங்களின், மனிதன் உட்பட, வாழ்க்கையில் நிகழும் சம்பவங்க்களையெல்லாம் ‘விதி’ என்று சொல்வது அபத்தம் ஆகும். தனிமனித தளத்தில், மனித கட்டுப்பாடுக்குள் அடங்காத, விவரிக்க முடியாத விளவுகளை (effects, outcomes), ‘அதிர்ஷ்டம்’, அல்லது ‘விதி’ என்றோ மனித மனம் காரணபடுத்துகிறது. உளவியல் நோக்கில், மனதை “சமாளிக்கும் திறன்” அல்லது “தேற்றிக் கொள்ளும் முறை” என்றோ இதை கூறலாம். ஆனால், நன்றாக சிந்தித்து செயல் ஆற்றும் நிலையில் உள்ள மனிதனை, இத்தகைய பார்வை எந்த ஒரு நல்வினையையும் ஆற்ற விடாமல் தடுக்குமாயின், இது மனிதன் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும், நிலையினை உருவாக்கும். இந்த வகையில், “முயற்சி திருவினையாக்கும்” என்ற வள்ளுவனின் சொல் எத்தருணத்திலும் செல்லும். எதிர் பார்த்த “சுய வெற்றிகள், பலன்கள்” கிட்டாவிடினும், நல் முயற்சி, நல் வினைகள், நல்ல பொது-பலன்களை உருவாக்கும். மேலும், தனி-மனித தளத்தில் கட்டுக்குள் அடங்க மறுக்கும் காரண-காரணீகள், மற்றொரு தளத்தில், பிறருடைய/புற சக்திகளின் கட்டுக்குள் அடங்கியிருக்ககூடும். ஒருவனுடைய விதி, மற்றொருவனின் அதிகாரத்திற்கு உட்பட்ட (அல்லது) அறிவுக்கு இதுவரை புலப்படாத, அடங்காத இயற்கை சக்திகளின் வினையோ, பகடையாட்டமாகவோ இருக்ககூடும். ஒருவனுடைய விளையாட்டு அடுத்தவனுடைய விதியாக முடியும்(one man’s game could be another’s fate). பொருளாதார சித்தாந்தங்களிலும், பொருளீட்டுவதில் வெற்றி காணுவதிலும் அதீத பற்று கொண்டுள்ளவர்கள், இத்தகைய நிலையை நியாய படுத்த சொல்ல ஆரம்பித்திருப்பது “வல்லவன் வெல்வான்” ( survival of the fittest).

தனிமனிதர்களை பொறுத்தவரை உடல், மரபணு, பிறப்பு/ வாழும் சூழல், ஆகிய சிலவற்றை – முன்பே நிர்ணயிக்கபட்டது என்று சொல்வதை விட (அமையப் பெற்றது [அ] ஊழ்வினை) என சொல்லலாம்தான். ஆனால், இப்படி ‘அமையப்பற்றவைகளை’ மீறி தன் பயணத்தை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள மனிதனுக்கு வழிகள் உண்டு. 1) எதிர் நீச்சலுடன் அமைப்பை மீறுவதற்க்கு, முயற்சி செய்வது. 2) மற்ற தளங்களில் தீர்வுகளை தேடுவது, அல்லது புதிய அமைப்பினை உருவாக்குவதற்க்குதற்க்கு முயல்வது. 3) மற்றது, ஞான மற்றும் யோக மார்க்கம் – ஊழ் வினையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லையெனில் – இல்லையெனில் மட்டுமே!- மனம் – விழிப்புணர்வு – ஆகியவற்றை எந்த வித புற தாக்கங்களுக்கும் மயங்க விடாமல் ஊழ்வினையுடன் தொடர்வினை கொள்வது. இதை புத்தன் தொடங்கி, சித்தர்கள் முதல் ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தி வரை முயற்சி செய்திருக்கிறர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி இதை ஆங்கிலத்தில் choiceless awareness or choiceless freedom என சொல்வார். இத்தகைய சிக்கல்களுக்கான தொடக்கம் உயிரினங்களின், குறிப்பாக மனிதனின் ஆரம்ப கட்ட பரிணாம வளர்ச்சியிலேயே (evolution) அமைந்து விட்டதாக விட்டதாக, ஜேகே சொல்கிறார்.

இத்தகைய விதிகளை வெல்வதற்க்கு, எதிர் வினையோ, புரட்சிகர முயற்சிகளோ, கூட்டு முயற்சியோ, சமுதாய தளத்தில் மேற்கொள்ள படும் திட்டங்களோ, அறிவியல் அணுகு முறையோ, மனித இனத்தின் மொத்த பரிணாம வளர்ச்சியோ புதிய வழிகளை உருவாக்கும். உதாரணமாக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாட்டின் அதிபர், மற்றொரு நாட்டில் வாழும், ஏன், இந்த உலகத்தின் வாழும் பெரும்பாலான உயிர்களின் விதியை ஒரு நொடியில் முடித்து விடக்கூடும். ஒரு நாட்டினுடைய அதீத கட்டற்ற வளர்ச்சி கூட, மற்ற நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் நேரடியாகவோ, அல்லது மற்ற வகையிலோ பேரழிவுகளை ஏற்படுத்தகூடும். நாடுகளுக்கு இடையினாலான போர்களினாலும், பொருளாதார கட்டுபாடுகளீனாலும் (Economic sanctions) குழந்தைகள் இறந்துபடுவதை விதி என்று எப்படி தள்ள முடியும்? இத்தகைய அழிவு சக்திகளை விதி என்று எப்படி புறம் தள்ள முடியும்? போர் செய்யும் நாடுகள் மட்டுமின்றி, மொத்த உலக சமுதாயத்தையே இத்தகைய நாச வினைகளுக்கு பொறுப்பேற்க்க அரசியல் சட்ட தீர்வுகள் காண்பதுதான் மதியாகும். பொருளாதார, அரசியல் சிக்கல்களை அறிவியல் மூலவும் தீர்வு காண முடியும். அறிவியல் அழிவு சக்திகளை, அரசியல்-பொருளாதார-சட்ட தீர்வுகளின் மூலமும் ஒடுக்க முடியும்.

தனிமனிதர்களை போலவே, சமூகங்களும், இனங்களும், நாடுகளும் கூட விதியின் பேரால் அடிமைபட்டிருக்ககூடும் (அ) அடிமை படுத்தமுடியும். பொருளாதார ஏற்ற/தாழ்வுகள், கல்வி-தகவல்-வளங்கள் குறைபாடுகள், சாதீய கோட்பாடுகள், மூட மத நம்பிக்கைகள், காரண-காரணீகள் உணராமல் செய்யும் சாதிய-மத சடங்குகள் தன் சமூகத்திற்க்கோ அல்லது மற்றொரு சமூகத்திற்க்கோ தீய விதி-விளைவுகள் உருவாக்க கூடும். உதாரணமாக, வர்ணாஷ்ரம கோட்பாட்டினால், -இதை ஒரு சமூகபொருளாதார அமைப்பு என்று நியாயபடுத்தினால் கூட- இந்தியாவின் பெரும்பாண்மையான மக்கள் வாழ்க்கை தரம் சீரிழந்து போனதும், உரிமைகள் இழந்து போனதும் விதி என எப்படி ஒதுக்க முடியும்.

காலம், அணு, பிரபஞ்ச-ஊழ், மற்றும் பிரபஞ்ச விதிகள் குறித்து மனித இனம் விடுக்கும் எந்த கேள்விகளுக்கும் அறிவியல் மிக சரியான பதில்களை அளித்ததாக தெரியவில்லை. இந்த விசைகளும், இயக்கங்களும் நிலையானவையா? நிலையற்றவையா? காலத்திற்க்கும் இடம்/பொருளுக்குமான தொடர்பை பேருலக பிரபஞ்ச விதிகள்(macro-cosmic laws) ஓரளவுக்கு தெளிவாக்குகின்றன என்றாலும், சிற்றுலக பௌதீகம்(micro-cosmic physics) ஒரு நிலையற்ற தண்மையை கொண்டதாகவே அறியபடுகிறது. இந்த நிலையில் உயிர் அணுக்களின் தண்மை என்ன? மனித மனம், விழிப்புணர்வு, நினைவு, சிந்தனை, ஆகியவற்றுக்கும் அணுவுக்கும், பிரபஞ்ச விதிகளுக்குமான தொடர்புகள் என்ன? மனித மனம் இவ்வகை சக்திகளை உணர முடிந்தால் கூட, இத்தகைய சக்திகளுடன் வினை ஆற்ற இயலுமா? மிகப்பெரும் ஊழ் விதியாக உள்ள ‘காலத்திற்க்கும்’ ‘உயிர்-முடிவுக்கும்’ உள்ள தொடர்பு என்ன?

ஒரு வாழும் உயிரின் ‘மரபணுக்கள்’ ( genes) அதனுடைய முந்தைய தலைமுறைகளின் உடற்கூறு, திறன்கள் பற்றிய தொகுப்பு மட்டுமன்றி, முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த சுற்று சூழல், உறவுகள், இடம், மற்றும் காலம் ஆகிய செய்திகளின் தொகுப்பையும் கொண்டுள்ளதா? அப்படி கொண்டிருப்பின், மறுபிறப்பு என்ற மத-பிதற்றல்களுக்கு அறிவியல் மூலம் விளக்கம் காணமுடியும். அதாவது, ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை; முந்தைய தலைமுறையின் மறக்க இயலாத நினைவுகளை உள்ளடக்கிய முக்கியமான மரபணுக்களை(for eg. cognition related genes that contain information on critical events/memories) கொண்டுள்ள (ஆழ்ந்த தன்-உணர்வு மிக்க) ஒரு நபர், அவருடைய மூதாதையர்களின் அதேகால கட்டத்தில் வாழ்ந்து-உறவு கொண்ட (எத்தகையதாயினும்) மனிதர்களின் பல-முக்கிய மரபணுக்களை கொண்டு வளர்ந்துள்ள மற்றொரு மனிதரை சந்திக்க நேர்ந்தால், அந்த ஆழ்ந்த தன்-உணர்வு மிக்க நபருக்கு ஏதெனும் உணர்த்துமா? (Deja vu போன்ற நிலை) இப்படி ஒரு நிகழ்வு சாத்தியம் ஆக, சித்தர்கள்-புத்தர்கள் போன்று ஆழ்ந்த சுய-விழிப்புணர்வு அவசியம். அத்தகைய விழிப்புணர்வு உள்ள நிலையில் உள்ள ஒரு நபர், புத்தரை போன்று இயற்கையுடன், ஊழ் உடன் வினை புரிவது சாத்தியம்தான்(னா?)!!!

துகள் பௌதீகத்தை (particle physics) போன்று, உயிரையும் (life force), மரபணுக்களையும்(genes) வெறும் “மின் காந்த அதிர்வுகள்” என விளக்கம் தந்தால் கூட, மேற் சொன்ன “ஊழ் வினையறுத்தல்” சாத்தியமே! இந்திய ஞான மரபில் “தடுத்தாட் கொள்ளல்” “வினையறுத்தல்” போன்ற தொன்மங்கள், இத்தகைய ஆழ்ந்த விழிப்புணர்வு உள்ளவர்களால் பேரூழுடன் தொடர்வினை கொள்வது சாத்தியம் என உரைக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பொருள்முதல்வாத சித்தாந்தங்களோ -தற்செயல்கள், விபத்துகள், எதேச்சையாக நேர்ந்த கால நேர் இணைவினைகள் (coincidences and correlations)- என மதிப்பிடுகின்றன. புத்தரை போல் பிரபஞ்ச விதிகளுடன் இணைவினை (correlation) கொள்ள முடியுமோ (அல்லது) இயலாதோ, ஆனால், தனி மனிதர்களும், சமூகங்களும் வெவ்வேறு நிலைகளில் தங்கள் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும், ஒவ்வொரு கணமும், தீவிர சுய பரிசோதனை செய்வதின் மூலமும், சுய தேட்டலின் மூலமும் அவர்களை நாள் தோறும் பாதிக்கும் ‘ஊழ்-விதியினை” மாற்றியமைத்து/தடுத்து நற்பயன்களுக்கான வினைகளை ஆற்ற முடியும்.

ஆனால், இப்படி பிரபஞ்ச விதிகளுடன், தொடர்வினை புரிந்து (அறிவியல் வழியோ, ஆன்மீக வழியோ), அவ்விதிகளை மனித உயர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ள முடியும் எனில், ஒரு முக்கியமான அனுமானம்/ தேற்றம் (Theory) எடுத்தாக வேண்டும்: அதாவது,

“புவியீர்ப்பு, மின் காந்த அலை, ஒலி, ஒளி போன்ற விசைகளை போல, உயிர் (life-force) விசையும் பிரபஞ்சத்தின் ஆதி விசைகளில் (Meta forces) ஒன்று; உயிர்விசை மற்றவகை விசைகளோடு சேர்ந்தே தோன்றியிருக்கலாம் அல்லது முன்னரும் தோன்றியிருக்கலாம்”. இந்த அனுமானத்தின் நோக்கம் “கடவுள் என்ற கருத்தாக்கத்தை முன்னிலை படுத்தவோ அல்லது இயற்கையின் மகாதிட்டம் (grand design) என்று வாதிடுவதற்க்காகவோ” அல்லாமல், “எல்லா ஆதிவிசைகளும் உயிர்விசையும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் (symbiotic-mutual)இயங்குகின்றன என சொல்வதற்கே. இப்படி அல்லாமல், பரிணாம வளர்ச்சி கொள்கை (Theory of evolution) சொல்வது போல, பிரபஞ்சம் தோன்றி பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு பின் தான் உயிரினம் சந்தர்ப்பவசத்தால் (accidental creation) தோன்றிருக்குமானால், மனிதனும் மற்ற உயிரினங்கள் போல, இந்த பிரபஞ்ச இயற்கை இயக்கத்திற்கு அடிமை என்ற நிலையைதான் எடுக்க வேண்டியிருக்கும்”.

மனிதன் மீதும், மற்ற உயிரினங்களின், ஏன் இயற்கையின் மீதும் சாற்றப்பட்டுள்ள ஆழ்ந்த பெரும் ஊழ் பிரபஞ்ச விதிகளை (மகத்தான! பெரும் சுமை) புரிந்து கொள்ள, அதன் தாக்கங்களில் இருந்து விடுதலை பெற, காலத்தை மீறி செல்ல தேவையான அறிவியல் தீர்வுகள் தனிமனிதன், இனம், தேசம், மதம், பொருளாதார சித்தாந்தங்கள், வணிகம் போன்ற தளங்களில் இல்லை என்றே சொல்லலாம். மொத்த மனிதம் (total humanity), உயிரினம் (all life force), பிரபஞ்சம் (universe) என்ற உயர் தளங்களில் பிரச்சனைகளை அணுகும் போதுதான் சரியான தீர்வுகள், அதாவது விதிகளை-மதியால் வெற்றி காண முடியும்.

ஆனால், மதியின் பெயரால் ஆணவம் கொண்டு, அறிவியல் – பொருளாதார சக்திகளின் மீது குருட்டு மோகம் கொண்டு பிரபஞ்ச, இயற்கை விதிகளை புரிந்துகொள்வதோடு நிறுத்தி கொள்ளாமல், அத்தகைய சக்திகளுடன் விளையாடுவதும் மிக ஆபத்தான வினைகளை உருவாக்கலாம். உதாரணமாக, cloning என்ற அறிவியல் மூலம் மரபணுக்களுடன்-செல்களுடன் விளையாடி மனித மரப்பாச்சி பொம்மைகள் லாபகர நோக்கங்களுக்கென செய்வது, மனித இனத்தை, இயற்கை சூழலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி என்றே சொல்லலாம்.

Series Navigation

செந்தில்

செந்தில்