விடியும்! – நாவல் – (32)

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


கண்களை மேவிப் பொங்கிய கண்ணீர் கடிதத்தின் கடைசிவரியில் விழுந்து பேப்பரில் ஊறிப் பிடித்த மாத்திரத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாயிற்று – தம்பிக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

எங்கேயோ யாரோ சொல்லக் கேட்டதாகவோ ஏதோ ஒரு புத்தகத்தில் வாசித்ததாகவோ ஞாபகம். உயரமான மலையிலிருந்து கீழே பார்த்தால் பனை மரத்தின் உயரமோ அரச மரத்தின் அகலமோ கண்ணுக்குத் தெரியாது. கம்பளத்தை விரித்து விட்ட மாதிரி ஒரே சீரில் பச்சையாகத்தான் தெரியும். எவனொருவன் பொது நலனுக்காக தன்னை நேர்மையாக அர்ப்பணிக்கிறானோ அவன் உயர்ந்தவனாகிறான். அவனது பார்வையில் தாயும் சரி தகப்பனும் சரி, பக்கத்துவீட்டுக்காரனும் சரி ஒன்றாகவே தெரிவார்கள். அப்படி அர்ப்பணிக்காதவன், தன் வளவில் போட்டிருக்கும் மாரி வெள்ளத்தை வாய்க்கால் வெட்டி தெருவுக்கு ஓட விடுபவனாக இருப்பான். தெருவில் ஏற்கனவே பெருக்கெடுத்தோடும் வெள்ளம் என்ன ஆனாலும் அவனுக்குப் பிரச்னையில்லை.

ஆருக்காக கனடாவிலிருந்து இழுத்துப் பறித்துக் கொண்டு பறந்து வந்தானோ அந்தத் தம்பி தன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத உயரத்தில் நிற்பதாக அந்தக் கடித வாசகங்கள் உணர்த்திற்று. யார் என்ன சொன்ன போதும் தம்பியை எப்படியும் கண்டுபிடித்துக் கூட்டி வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் தளராமல் இருந்தவனுக்கு இப்போது அது பறியாதென முதன் முறையாக தெளிவாயிற்று.

கூடாத கூட்டம் கூடாதவன், தானுண்டு தன் படிப்புண்டாக இருந்தவன், அடித்துப் புரண்டு வந்த வெள்ளத்தில் அள்ளுப்பட்டுப் போன அப்பாவி…என்றெல்லாம் பெற்ற தாயால் மிகுந்த விசுவாச அலங்கரிப்புடன் வக்காலத்து வாங்கப்பட்ட தம்பி – நான் வெள்ளத்தில் அள்ளுப்பட்டவன் அல்ல – வெள்ளமே நான்தான் என்று தன் கைபட எழுத்தில் உறுதி செய்திருக்கிறான்.

பிள்ளைக்கு சனி நடுக்கூறு, சித்திரை பிறக்க, உக்கிரம் குறைஞ்சு போக வந்திருவான்…..இது ஏலாக்கையில் அப்பாவுக்கு வந்த நம்பிக்கை.

ஒன்டாப் படிக்கிற பொடியள் ஒரு புழுகத்தில இப்பிடி எடுபடுறது ஊரில உலகத்தில நடக்கிறதுதான். பிள்ளை வந்திருவான்……இது மாமா ஒன்றுக்கு நாலு முறை காட்டிய நம்பிக்கை ஒளி.

காளியாச்சிக்கு நாள்தோறும் அடியழித்து, சனீஸ்வரனுக்கு வாரந் தவறாமல் எள்ளுப் பொட்டனி எரித்து, நகரத்திலுள்ள அத்தனை கோயில்களிலும் வேண்டுதல் வைத்திருப்பதனால் உண்டான நம்பிக்கை சின்னம்மாவுக்கு.

எல்லா நம்பிக்கைகளையும் ஒரு கடிதத்தால் பொய்யாக்கி – இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நான் நன்றாகத் தீர்மானித்தவன், இனிமாத்திரம் குடும்பத்திற்குப் பயன்படுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று முரசு கொட்டிச் சொல்லியிருக்கிறான்.

நம்ப முடியவில்லை. இன்னொரு முறை பக்கங்களைப் புரட்டினான். திரும்ப வருவதைப் பற்றி எங்காவது ஒரு வரி! அது போகட்டும், போனதற்கு மனம் வருந்தி அம்மா அப்பாவிடம் ஒரு மன்னிப்பு! ஏதோ பிறத்தியாருக்குச் சொல்கிற மாதிரி பட்டும் படாமல் ‘என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ அவ்வளவுதான். பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டதும் சொல்லாமல் போனதுக்குத்தான் – போனது பிழையென்பதற்காக அல்ல.

புலிக்குப் போனால் தொடர்ந்து உயிரோடு இருக்க உத்தரவாதம் இல்லையென்பது தெரியாமலிருக்காது. கனடாவுக்கு வந்தால், நானும் டானியலும் இருக்கிற மாதிரிக்கு பூப்போல கஷ்டப்படாமல் இருக்கலாம் என்பதும் தெரியாமலிருக்காது. அப்படியிருக்க, தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பூவை ஒதுக்கிவிட்டு புலியைப் பிடித்திருக்கிறான். தீர்மானத்தில் இத்தனை திடப்பட்டவன் இனி திரும்புவது நடவாத காரியம்.

இப்ப புரிந்தது செல்லத்தம்பி மாஸ்றர் பவ்வியமாகச் சிரித்த சிரிப்பின் சூட்சுமம்!

கவலைக்குள்ளும் ஆச்சரியம் அடங்கவில்லை. இவன் அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா ? சந்தேகம் வந்தது. சற்றுப் பொறுத்து, அதற்கு சமாதானமும் வந்தது. இவன் அம்மா அப்பா பிள்ளைதான். இரண்டு பேருடைய சமமான கலவைதான். அம்மாவிடமிருந்து நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் துணிவும் வாங்கியிருக்கிறான். அப்பாவிடமிருந்து நேர்மையும் அன்பும் சுத்தமாக வந்து சேர்ந்திருக்கிறது. அவர்கள் தங்கள் சுதந்திர உணர்வுகளை வீட்டுக்கு வெளியே காட்டியதில்லை. இவன் வெளிக்காட்டியிருக்கிறான்.

அப்பாவிடம் தெளிவு இருந்தது. பலராலும் உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாத அதிரடி முடிவுகளை விடுதலைப் புலிகள் எடுத்த போதுகளில் எல்லாம், அப்பா அவர்கள் பக்கமே பேசுவார். பொடியன்கள் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று அடித்துச் சொல்வார். விட்டுக் கொடுக்க மாட்டார். சின்னம்மாவும் சளைத்தவளல்ல. பக்கத்துவீட்டு செல்லம்மாக்கா, இரண்டு கரண்டி கோப்பித்தூளோ ஒரு சுண்டு அரிசி மாவோ கைமாற்று வாங்க வருகிற வேளைகளில், இயல்பாக உண்டாகும் வெட்கத்தை மறைத்துச் சமாளிக்க, சம்பந்தமில்லாத ஏதோவொரு கதையை எடுத்து விடுவது வழக்கம்.

இவங்கள் கண்ணிவெடி வைச்சிற்றுப் போயிருவாங்கள் வீடுவாசலில நிம்மதியா படுத்தெழும்ப வழியில்லை – என்று ஒரு ஒருநாள் சொல்லிவிட, சின்னம்மா அவளை பிடி பிடியெனப் பிடித்து விட்டாள். வந்த ஆத்திரத்தில், அந்தஇந்த கதை பேசாம தயவுசெய்து போயிருங்க என்று திட்டி அனுப்பி விட்டாள். ஒரு பொசுப்புக்கு வாயைக் கொடுக்கப் போய் கிடைப்பதை கெடுத்துக் கொண்டதுதான் செல்லம்மாவிற்கு மிச்சமாயிற்று. நன்றியில்லாத இந்தக் கூட்டத்துக்காக இந்தப் பிள்ளையள் அநியாயமா உயிரைக் குடுக்குதுகளே என்ற கவலை மேலிட்டு பொருமிக் கொண்டேயிருந்தாள் சின்னம்மா.

ஆக, அடிப்படையில் அம்மா அப்பாவிடமிருந்துதான் இந்த சுதந்திர தாகத்தை சின்னனிலிருந்தே உள்வாங்கியிருக்கிறான் தம்பி. நன்றாகப் பண்பட்ட நிலத்தில் ஊன்றிய ஆரோக்கியமான விதை அவன். எது சரியாகப் பட்டதோ, அதை பொய்புரட்டு இல்லாமல் துணிந்து செய்திருக்கிறான். அந்தத் துணிவில் ஒரு துளியளவாவது என்னிடம் இல்லாமல் போயிற்றே! தாழ்வுணர்வு தாக்குதல் தொடுத்த வேளை, பழசானாலும் பயங்கரத்தின் மாற்றுக் குறையாத அந்தக் கரிநாளின் படச்சுருள் ஓடத் தொடங்கிற்று.

92 சித்திரை வாக்கில் அரசோடு நடாத்திய பேச்சுவார்த்தை முறிந்ததும் விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் திரும்பிய அடுத்தநாளின் வைகறைப் பொழுது. பயந்தது போலவே, அரசபடைகளால் திருகோணமலை நகரம் நித்திரைப்பாயில் சுற்றி வளைக்கப்பட்டது. ஓட முயற்சித்தால் சுடப்படுவீர்கள் என்று ஒலிபெருக்கி வைத்து தெருத்தெருவாகப் பறைதட்டினார்கள். முகமூடித் துரோகிகள் காட்டிய தலை அசைவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பிஞ்சுப் பிள்ளைகள் அள்ளிச் செல்லப்பட்டார்கள். ஆஸ்பத்திரி சந்தியில் நாற்பது இளைஞர்கள் டயர் போட்டு குப்பையைப் போல குவியலாக எரிக்கப்பட்டார்கள்.

நகரம் முழுக்க பிணக்காடாயிற்று. எரிக்கப்பட்ட உடலங்களிலிருந்தும் கடைகண்ணிகளிலிருந்தும் மேவிக் கிளம்பிய கரிய புகை மண்டலம் மேகத்தை மறைத்து பகலை இரவாக்கிற்று. ஆமி ட்றக்குகள் வெறிச்சோடிய தெருக்களில் தறிகெட்டு ஓடி மக்களை வீட்டோடு கட்டி வைத்தன. கட்டாக்காலி மாடுகள் தெருவிற்கு வரப் பயந்து வளவுகளுக்குள் மனிதரோடு பதுங்கிக் கொண்டன. காகங்கள் மரங்களிலேயே அடைந்து கொண்டன. கடல் அலைகள் ஓடி வந்து ஓசைப்படாமல் விழுந்தன. மக்களின் ஐயோ கூக்குரல்கள் காற்றில் கலந்து நிரந்தரமாய்க் கேட்டுக் கொண்டேயிருந்தன.

அவனுக்கு அப்போது முப்பது வயசு. வயசுக்கு வந்து விட்ட சகோதரிகள், வயசுக்கு வராத தம்பி, வயசாகி விட்ட அப்பா. உதறிவிட முடியாத சொந்தக் குடும்பப் பொறுப்புகள் பல. அவற்றை நிறைவேற்ற அவன் உயிரோடு இருந்தாக வேண்டும். எனவே, அவன் சொந்த மண்ணை விட்டு ஓடினான்.

தமிழர் என்று நம்மை தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற அதீத மரியாதை உள்ளத்தில் இருந்தாலும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இன்றளவும் இருந்தான் அவன். எவ்வகையிலும் தன் குடும்பம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – இதுதான் அவன் அடக்கி வாசிப்பதன் தாற்பரியம்.

வாசல் கதவினூடாகத் தெரிந்த இருட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்வை நிலைகுத்தியிருந்த இருட்டிலிருந்து சின்னம்மா வந்தாள்.

எந்த முகத்தோடு சின்னம்மாவைப் பார்ப்பது ? அவர்கள் அனுப்பத் தயாரென்றாலும் உன் பிள்ளை வராமல் அடம் பிடிக்கிறான் என்று எப்படிச் சொல்வது! காலில் விழுந்தென்டாலும் என்ர பிள்ளையைக் கூட்டி வாறன். என்னைக் கூட்டிக் கொண்டு போ தம்பி என்று ஒரேயடியாகப் பிடித்துக் கொண்டால்!

ஒரேயிரையில் இருந்ததால் இடதுகால் விறைத்துப் போயிற்று. வெளியே சுத்தமான இருட்டு. முழுக்கிராமமும் போர்த்துக் கொண்டு படுத்து விட்டது. அலைந்து வந்த களைப்பில் நிமலராஜன் குறட்டை விட்டான் – மரத்தை மொட்டை வாளால் விட்டுவிட்டு அறுத்த மாதிரி. மூர்த்தி கொண்டு வந்த சாப்பாட்டுப் பார்சலிலிருந்து வாழையிலை அவிந்து போன வாசம் வந்தது.

பசி வரவில்லை.

வந்ததுமே அங்கே நிலவிய மெளனத்தின் மொழியை புரிந்து கொண்டான் மூர்த்தி. ஆளைக் குழப்பக்கூடாது என்று நினைத்தவன், இல்லாத புழுக்கத்தின் மேல் பழியைப் போட்டு மேல் கழுவப் போவதாகச் சொல்லி நழுவிய போது ‘இடியப்பம் காய முதல் சாப்பிடுங்க ‘ என்று மட்டும் சொன்னான்.

தம்பி கடிதம் அனுப்பியிருக்கிறார் … என்று கடிதத்தைக் கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்டது போல் கை கழுவப் போனான் செல்வம்.

இரண்டாம் பக்கத்திற்கு வருகிற போதே – இது ஆரோ சொல்லிக் கொடுத்து எழுதியது என்று மூர்த்திக்கு சந்தேகம் வந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சாக்குப் போக்குச் சொல்லாமல் சொல்கிற வேலையைச் செய்கிற அடக்கமான பையன் எழுதிய கடிதமாகத் தெரியவில்லை. கடைக்குட்டியானதால் மூன்று குடும்பங்களின் அத்தனை தொட்டாட்டு வேலைகளுக்கும் அவன்தான் பொறுப்பாக இருந்தான். ஜெயம் இல்லாதது எல்லாருக்கும் கை முறிந்த மாதிரி.

சாப்பிட்டு முடிக்கட்டும் எனக் காத்திருந்தான் மூர்த்தி. கடைச்சாப்பாடு, மனமும் சரியில்லை. அரைவாசியோடு எழும்பி பார்சலைச் சுருட்டி எட்டத்தில் எறிந்துவிட்டு கை கழுவி வந்தான், செல்வம்.

“மாஸ்றர் என்னவாம் ?”

“வந்தா கூட்டாற்றுப் போகட்டாம் என்டு சொல்லுகினமாம்”

“அது சும்மா. ஜெயத்தோட நேர கதைச்சாத்தான் உண்மை தெரியும் ?”

“தம்பியிர கடிதத்தில ஒரு நேர்மையும் சத்தியமும் தெரியுது. நானே நியாயமா நடக்கேல்லையோ என்டு குழப்பமாயிருக்கு.”

“ஏன் ?”

“உயிரைக் குடுத்துப் போராடுற பொடியளுக்கு ஏதோ ஒரு வகையில பக்க பலமா இருந்திருக்கலாம்”

“சாப்பாடு குடுத்ததுக்கே குடும்பத்தோட அள்ளிக் கொண்டு போய் கொடுமைப் படுத்திறாங்கள்”

“என்னவோ தெரியேல்லை தம்பி. கடிதத்தைப் பாத்த பிறகு ஒரு குற்றவுணர்வு வந்திட்டுது”

அதற்கு மேல் கேட்க விரும்பாதவன் போல் “அது சரி மாமீட்டை என்ன சொல்லப் போறீங்க ? என்று கேட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு அவன் தூங்கப் போனான். சரிந்து பத்து நிமிசத்தில் குட்டிக் குறட்டை கேட்டது.

சாமமாயிற்று. சீலிங் இல்லாத முகட்டை வெறித்துப் பார்த்தான் செல்வம். ஒட்டடை அடிக்காத கூரை. சிராய் கிளம்பியிருந்த மரச்சட்டத்தில் குஞ்சமாகத் தொங்கிய ஒட்டடையில் நித்திரை வராத ஒரு சிலந்தி சில்லுக்கோடு பாய்ந்து கொண்டிருந்தது. இரண்டு குறட்டைகளுக்கிடையில் அகப்பட்டுப் போனான் அவன். கண்கள் சோர்ந்த போது கனவு வந்தது.

கனவிலும் நடுச்சாமம். தெருவில் அவன் மட்டுந்தான். எங்கிருந்து முளைத்ததோ திடாரென ஒரு நாய் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது. வழக்கமாகப் போடும் செருப்பு காலில் இல்லை. எறியக் கல் தேடியபடியே வெறுங்காலோடு அவன் நடந்தான். தெருவோரம் நெடுக கற்குவியல்கள். எடுக்க எடுக்க கற்கள் கையில் பிடிபடவில்லை. அதற்குள் நாய் கிட்ட வந்து விட்டது. காலால் உதைத்தான். உதைக்க உதைக்க உதை நாயில் படவில்லை. துடையைக் கடித்து சதையைப் பிடுங்கும் வெறி நாயின் கண்களில் மின்னியதை கண்டதும் அவன் தலைதெறிக்க ஓடினான். ஓட ஓட அவன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். துரத்தி வந்த நாய் துடையில் வாய் வைத்து…..!

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். துரத்தி வந்த நாய், எடுக்க எடுக்க கையில் வராத கல், உதைக்க உதைக்க நாயில் படாத உதை, ஓட ஓட ஓடாத கால்! அவனுக்குக் குழப்பமாக இருந்தது. பக்கத்தில் பார்த்தான். குறட்டைகளின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

நல்ல கனவு கண்டால் கெட்டதென்றும் கெட்ட கனவு கண்டால் நல்லதென்றும் சொல்வார்கள். இதென்ன கனவு! நடுச்சாமத்தில் நாய் துரத்துவதென்றால் அது கெட்ட கனவாகத்தான் இருக்க வேண்டும். கெட்ட கனவென்றால் அது நல்லதற்கு. அப்படியானால்! நல்லது நடக்கப் போகிறது. தம்பி திரும்பி வரக்கூடும். கனவை சாதகமாக நியாயப்படுத்திய சின்ன ஆறுதலில் அவன் கண் அயர்ந்தான்.

காலையில் எழுந்த போது கண்கள் கெஞ்சின. கனவு கண்ட ஞாபகம் வந்தது. நிமலராஜன் புறப்படத் தயாராகிவிட்டான். செல்வத்தையும் பார்த்து மணியையும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். நுளம்புக்கடியால் ராத்திரி முழுக்க கண்ணோடு கண் மூடவில்லை என்றும் சொன்னான். சம்சுதீன் ஜீப்பைக் கழுவி முகம் தெரிய துடைத்துக் கொண்டிருந்தான். மூர்த்தி பிரீப் கேசில் இருந்த பைலை தேவையேதுமின்றி புரட்டிக் கொண்டிருந்தான்.

செல்வம் பல் தீட்டி முகம் கழுவி ஐந்தே நிமிசத்தில் தயாரானான். வெளிக்குப் போகாததால் இட்டு முட்டாயிருந்தது.

திரும்பும் வழியில் கந்தளாய்க் குளம் அணைக்கட்டு வீதியில் ஒரு வாகை மரம் ஓரமாக ஜீப்பை நிற்பாட்டினான் சம்சுதீன். நிமலராஜனும் சம்சுதீனும் சுதந்திரமாக ஒன்றுக்குப் போக வாகையில் மறைந்தார்கள். மூர்த்தி எட்டத்திலிருந்த இன்னொரு மரத்தை நோக்கிப் போனான். செல்வத்திற்கு ஒன்றுக்கு முடுக்கினாலும் இறங்கப் பஞ்சியாயிருந்தது.

உயரமான அணைக்கட்டு. இந்தப் பக்கம் கந்தளாய்க் குளம். அந்தப் பக்கம் – பள்ளத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை – பச்சைக் கம்பளம் விரிந்திருந்தது!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்