விடியும்! நாவல – (4)

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


(4)

‘சைவமா!!! ‘

தேவசகாயம் நிகம் கடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்திலேயே கேட்டிருக்க வேண்டிய கேள்வி. சைவமெனத் தெரிந்திருந்தால் அப்போதே கழட்டி விட்டிருப்பார். எட்டு வயசு வித்தியாசம் கூட இப்போது சிறிதாகத் தோன்றியது. டானியல் கத்தோலிக்கன். அவன் கொண்டு வந்த சம்பந்தமும் கத்தோலிக்கமாயிருக்குமென நம்பியது பிழை. கல்யாணத்திற்கு இது ஒரு முட்டுக்கட்டையான விசயம் என்று ஏன் டானியலுக்கு விளங்கவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமா இது ? குடும்பம், சமூகம், சேர்ச், திருமறை, பாதர் இப்படி எத்தனை சிக்கல். கல்யாணம் பேசுறதுக்கு ஒரு வயசு வேனும். சிறுபிள்ளை வேளாண்மை என்பது இதுதானா ?

உள்ளுக்குள் தன்னைத் திட்டுகிறாரோ என யோசித்தான் டானியல். வயசில் இடறிய போதே இதிலும் தடுக்கி விழவேண்டி நேருமென அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். எந்தத் தாய் தகப்பன் மத விசயத்தில் தங்கள் மதம் காட்டாமல் விட்டிருக்கிறார்கள் ?

கனடாவில் பல திருமணங்களைப் பார்த்திருக்கிறான் அவன். இந்திய இந்துப் பெண்ணை மணந்த கனடியன். தாய்லாந்து பெளத்தப் பெண்ணை மணந்த இங்கிலாந்து கிறீஸ்துவன். இன்னும் எத்தனையோ கலப்புகள். அவர்கள் எல்லாம் கெட்டொழிந்தா போய்விட்டார்கள் ? இங்கே பத்து வருசம் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாராம், என்னத்தைப் பார்த்தார் இவர். மாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகப் பரிமாணங்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை இவரால். நம்மூரில் நடக்காததா ? சிங்களப் பெண்ணை தமிழனும் கிறிஸ்துவப் பெண்ணை இந்துவும் முஸ்லிமை சிங்களவரும் மணந்து கொள்ளவில்லையா என்ன ?

தேவசகாயத்திடம் நிறையக் கேள்விகள் ட்றபிக் ஜாம்மில் நெரிபட்டன. நீண்டு கொண்டு போன மெளனத்தை அவர் கலைத்தாக வேண்டும். இந்த சம்பந்தம் களையென்று தெரிந்த பின்னும் தொடர்ந்தும் நீர் பாய்ச்சிப் பயனில்லை. ஈரம் இருக்கும் போதே வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

அவர் மெளனம் கலைக்க நிமிர்ந்தார். அவன் முந்திக் கொண்டான். சரியான நேரத்தில் அஸ்திரம் எறிவது முக்கியம் என நினைத்தான். எதிராளியின் மனம் படித்து அது போகும் வழியறிந்து துரத்த வேண்டும். கிழவனை வென்றாக வேண்டும். செல்வத்திற்காக மட்டுமல்ல இந்த மக்குக் கிழவனின் மகளுக்காகவும்தான்.

‘அங்கிள் நீங்க என்னை விட அறிவிலும் அனுபவத்திலும் வயசிலும் பெரியவர். எனக்கு தகப்பன் மாதிரி. உங்க தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மதத்தில் கொண்டிருக்கிற மரியாதை பிடிப்பு பயம் பக்தி ஒன்றும் புதுசில்லை. செல்வம் கூட உங்களைப் போலத்தான் யோசித்தான். ஆனால் அவன் படித்தவன். பகுத்தறிவும் பண்பும் உள்ளவன். எதையும் ஆற அமர யோசித்துப் பார்ப்பவன். ‘

தேவசகாயம் இமைகளை உயர்த்தினார். நான் அப்படி இல்லை என்று அர்த்தப் படுத்துகிறானா ? அவனை ஏற்றி என்னை இறக்கி காரியத்தைச் சாதிக்கும் முயற்சியா இது ? கண்களுக்கு வெளpயே வந்த சந்தேகம் தலை நீட்டிப் பார்த்தது. அவருடைய மகளுக்கே சம்பந்தம் பேசி வந்தாலும் எதிரியைப் பார்ப்பது போல அவனை இப்போது பார்த்தார் அவர்.

‘அங்கிள் செல்வம் ஒத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. மேரியின் நல்ல குணங்களை எடுத்துச் சொன்னேன். அவவின் அடக்கம், ஒத்துப் போகிற தன்மை, மென்மையான குணம் பற்றிச் சொன்ன பிறகு இறங்கி வந்து விட்டான். குடும்ப வாழ்க்கைக்கு சாதி மதந்தானா முக்கியம் ? அன்பும் புரிந்துணர்வுமிருந்தால் போதாதா ? ‘

‘தம்பி நான் மறுப்புச் சொல்வதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எங்களுக்காக மினக்கெட்டு இவ்வளவு தூரம் சம்பந்தம் பேசி வந்ததுக்கு நான் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மேரி எங்களுக்கு ஒரே மகள். எல்லா விதத்திலும் பொருத்தமான மாப்பிள்ளை வேனுமென்றுதான் இவ்வளவு காலமும் காத்திருந்தோம். இல்லாட்டி எப்பவோ கட்டிக் குடுத்திருக்கலாம். இது கோயில் சமூகம், குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம். எதையும் இலேசாக தட்டிக் கழிக்க முடியாது. நீங்களும் ஒரு கதலிக். நான் பெரிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. பிறக்கப் போகிற குழந்தைகளை சமூக ரீதியாக பாதிக்கிற விசயம் இது. ‘

‘அங்கிள், பத்து வருசமாக இங்கே இருக்கிறீர்கள். சாதி மதம் மொழி தொழில் எதுவுமே ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதற்கு இங்கே குறுக்கே நிற்பதில்லை. பெண் டொக்டராயிருப்பாள். புருசன் சாதாரண பொலிஸ்காரனாயிருப்பான். வீட்டில் அவன் புருசன். அவள் பெண்சாதி. அவ்வளவுதான். தொழில் ஏற்றத்தாழ்வு சாதி மதம் இங்கே புகுவதில்லை. அதனால்தான் இந்த மக்கள் சமுதாய அளவில் எங்களை விட உச்சத்திலிருக்கிறார்கள். செல்வத்தை செல்வமாகப் பாருங்கள் அங்கிள். நீங்கள் இழக்கக் கூடாத செல்வம் அவன். ‘

‘தம்பி நீங்க சொல்றது இவர்களின் கலாசாரத்துக்கும் பண்பாட்டிற்கும் ஒத்துவரலாம். எங்கள் ஊரிலும் மேடைப் பேச்சுக்கு வேண்டுமானால் நல்லாயிருக்கும். வாழ்க்கைக்கு ஒத்துவராது ? ‘

‘ஏன் ? ‘

‘எங்கள் சமூகம் காலம் காலமாக பின்பற்றி வந்தவற்றை என் ஒருவனால் மட்டும் எப்படி உடைத்தெறிய முடியும் ? முயற்சித்தால் எங்களை தள்ளி வைத்து விடுவார்கள். ‘

‘யார் தள்ளி வைப்பார்கள் ? ‘

‘சொந்தக்காரர் தள்ளி வைப்பார்கள். சமூகம் தள்ளி வைக்கும். கோயில் தள்ளி வைக்கும். பாதிக்கப்படுவது யார் ? இதில் நிறையப் பிரச்னையிருக்கு. முதலில் திருமணம் நடத்த கோயிலின் அனுமதி பெற வேண்டும். பிறகு மதம் மாறுவதற்கு அவர் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மாற ஒப்புக்கொண்டால், கோயில் பிரச்னை தீரலாம். ஆனால் பிறந்ததிலிருந்து பழகி வந்த சொந்த மத அனுடிடானங்களை மனம் மறப்பதில்லை. மதமாற்றத்தை பெண்பகுதியின் கட்டாயத்தின் பேரில் செய்ததாக பின்னாளில் அவர் சுட்டிக் காட்டி சண்டையில் இறங்கக் கூடும்.

அவர் பிள்ளையாரைக் கும்பிடுவார். பிடியதனுருவுமை கொளமிகு கரியது என்று உரக்கத் தேவாரம் பாடுவார். அர்ச்சிஸ்ட மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே என்று இவள் சிலுவையை வணங்குவாள். இருவராலும் வளைந்து கொடுக்க முடியாமல் போகும். ஆசை அறுபது நாளுக்கும் மோகம் முப்பது நாளுக்குமாக ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்து நடக்கலாம். பிறகு தனித்தன்மை தலைகாட்டும். ஈகோ விட்டுக் கொடுக்காது. பிள்ளை பிறக்கும். அப்போஸ்தலர்களின் பெயர்களில் ஒன்றை பிள்ளைக்கு வைக்கச் சொல்வாள் அவள். அவரோ அறுபத்துமூன்று நாயன்மார்களின் பெயர்களில் ஒன்றை தெரிவு செய்து கொண்டு மல்லுக்கு நிற்பார். பெயர் வைக்கிற விசயத்திலேயே இழுபறி வரும்.

இனி மற்ற வாழ்க்கைப் பிரச்னைகள். நீயா நானா போட்டி வரும். குடும்பத்தின் ஆதார வேரே ஆட்டம் கண்டு போகும். எந்தப் பக்கம் என்று தெரியாமல் குழந்தைகள் அநாதையாக நிற்கும். இதை விட சடங்கு சம்பிரதாயம் மதக்கட்டுப்பாடு என்று இன்னும் நிறைய இருக்கு. இதில் சிக்குப்பட்டு ஆடாமல் அசையாமல் குடும்பத்தைக் கொண்டு செலுத்துவது மிகவும் கடிடம். எல்லாம் தெரிந்து கொண்டு அருமைப் பெருமையாகப் பெற்ற ஒரே பிள்ளையை எப்படி சிக்கலில் மாட்டுவது ? உங்களுடைய முகத்தை முறிப்பது எனக்கு கடிடந்தான். அதைப் பார்த்தால் பின்னுக்கு மகள்தான் கடிடப்படுவாள். ‘

‘அங்கிள் இதையெல்லாம் மீறி நிம்மதியாக வாழமுடியாதென்றா நினைக்கிறீர்கள் ? ‘

‘சுழி இருக்கு எனத் தெரிந்து கொண்டும் கடலில் இறங்குவது ஆபத்து. ‘

‘வேறு மதத்துக்காரரை மேரி காதலித்தால் என்ன செய்வீர்கள் ? ‘

‘அப்போதும் இதே முடிவுதான். ‘

‘ஒற்றைக் காலில் நின்றால் ? ‘ என்று கேள்வியைக் கேட்டுவிட்டு அவரது கண்களையே உற்றுப் பார்த்தான்.

‘நான் அந்த மாதிரி வளர்ப்பு வளர்க்கவில்லை. ‘

அவரது தொனி உசந்து கேட்டது. முகம் வியர்த்து உணர்ச்சி வசப்பட்டவராகத் தோன்றினார். அவனது கேள்வி அவரைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். அவர் அந்தக் காலத்து ஆசாமி. அப்படித்தான் பேசுவார். மதம் என்னும் மறிப்பை விலக்கி வெளpயே வந்து மானுடம் சார்ந்த ஆரோக்கியமான ஒற்றுமைக் குடும்பத்தை அவரால் எண்ணிப் பார்க்க முடியாது.

டானியல் சிறிது ஆடிப் போனான். சும்மாயிருந்த செல்வத்தை உசுப்பி விட்டவன் அவன். முகத்தைக் தொங்கப் போட்டுக் கொண்டு அவன் முன்னால் போய் ஐ ஆம் சாறி சொல்வது எப்படி ? பதமாகக் காய்ச்சிய பால் திரைந்து வீணாய்ப் போனதைப் பார்த்த துன்பத்தில் மேலும் எதைப் பேசுவது எனப் புரியாமல், புரிந்தாலும் பயனேதும் விளையப் போவதில்லையென உணர்ந்து திண்டாடினான் அவன்.

படிக்கும் அறையில் கணனியைக் கண்டதும் பிள்ளைகளின் மெளன விரதம் கலைந்து போனாலும் கூடத்தில் பேச்சு சூடு பிடித்தபோது அதை பெரியவர்கள் கிரகித்துக் கொள்வதற்கு வசதியாக அவர்கள் அமைதியடைய வேண்டியதாயிற்று. சியாமளாவிற்கு எல்லாமே தெளpவாகக் கேட்டது. திரேசா அன்ரி, மேரியும் கூட திடாரெனக் குழம்பிப் போனார்கள்.

அந்தப் பேச்சு ஒரு முடிவுக்கு வரும் வரை, தான் எதுவும் கதைத்து விடக் கூடாதென சியாமளா கவனமாயிருந்தாள். செல்வத்திற்கு பெரியதொரு தவறிழைத்து விட்ட கலக்கம் அவளை இப்போது அலைக்கழிக்கத் தொடங்கி விட்டது. தாயும் மகளும் இப்போதைக்கு தன்னிடம் எதுவும் கேட்டுவிடாதிருக்க கணனியில் கவனம் செலுத்தியவள் போல் பாசாங்கு செய்தாள்.

புருசனை நினைக்க அவளுக்குப் பாவமாக இருந்தது. கோபமாகவும் இருந்தது. பட்டை தீட்டிய வைரத்தை மதிக்கத் தெரியாத இந்தக் கிழவனை நம்பி வந்ததற்கு இதுவும் வேனும் இன்னமும் வேனும். தான் மட்டும் என்னவாம். ஆரம்பத்திலிருந்தே எல்லாத்துக்கும் புருசனுக்கு உடைந்தையாகவே இருந்திருக்கிறாள். எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த அவமானம் வராமல் தடுத்திருக்கலாம்.

தொடர்ந்து அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. வெக்கையான சூழலிலிருந்து உடனடியாக விடுபட்டுப் பறந்து போய் வெட்டவெளpயின் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அவள் விரும்பினாள்.

டானியலின் குரல் மீண்டும் கேட்க, காது கொடுத்தாள்.

‘அங்கிள் சும்மாயிருந்த செல்வத்திற்கு நான் ஆசை காட்டி விட்டேன். அவன் முகத்தில் விழிப்பது எனக்குக் கடிடந்தான். அதற்காக மட்டுமே உங்கள் முடிவினை மாற்றும்படி நான் கேட்கமாட்டேன். இப்படியொரு பதில் வருமென நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். எங்கள் சமூகம் ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை நோக்கி நடை போடுகிறது என்று நம்பியது என் தவறு. இதையெல்லாம் யோசியாமல் எப்படி வந்தேன் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

அதற்கு என் சொந்த வாழ்க்கைதான் ஆதாரமாக இருந்திருக்கிறது. நான் கத்தோலிக்கன். சியாமளா சைவம். என் பெற்றோர் தங்கள் மெளனத்தால் வலிமையாக எதிர்த்தார்கள். எனது மூத்தண்ணன் என் சார்பாக நின்றதால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள். சியாமளாவின் பக்கம் மறுப்பு வரவில்லை. அவர்களின் வறுமையோ, அல்லது நான் நல்ல மாப்பிள்ளை என்ற நம்பிக்கையோ அல்லது ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதற்கு மதம் முட்டுக்கட்டையில்லையென்ற புரிந்துணர்வோ அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த விதிவிலக்கான விவாகம் அது. குடும்பங்களில் உண்டாகிற சின்னச் சின்ன இயல்பான பிரச்னைகள் எங்களுக்குள் வரத்தான் செய்தன. ஆனால் நாம் இருவரும் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டோம். சியாமளா என்னோடு சேர்ச்சுக்கு வருகிறாள். நான் கோயிலுக்குப் போகிறேன். மகளுக்கு ஞானலட்சுமி அனிதா என்று பெயர். மகனுக்கு டேவிட் திலீபன். எங்களுக்குள் ஒரு குழப்பமுமில்லை. கோயிலோ சடங்கு சம்பிரதாயங்களோ எங்கள் வாழ்க்கையை குழப்பவில்லை.

இன்னும் சொன்னால் மனம் விட்டுப் பேசி விட்டுக் கொடுத்துப் போக நல்ல பயிற்சியைத் தந்திருக்கிறது இந்தத் திருமணம். பாரம்பரியமாக அவளிடம் இருந்த நல்ல விசயங்கள் என்னிடம் சேர்ந்திருக்கின்றன. அது போல என்னுடைய நல்லவைகள் அவளிடம் ஒட்டியிருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான சேர்க்கை. ஆனாலும் இதைச் சொல்லி உங்களை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன். மகளின் எதிர்காலத்தில் உங்களை விட வேறு யாருக்கும் அக்கறை இருக்க முடியாது.

சமூகம் தள்ளி வைக்கும் என்கிறீர்கள். எந்தச் சமூகம் ? செய்யும் தொழிலையும் சார்ந்த மதத்தையும் வைத்து மனிதனை எடைபோடாது மனிதனை மனிதனாகப் பார்க்கும் இந்த சமூகமா ? அல்லது எல்லாவற்றையும் இடியப்பச் சிக்கலாக்கி நேராக்க முடியாமல் முழிக்கும் எங்கள் சமூகமா ? சாதி மதம் சீதனம் என்ற புற்றுநோய் பிடித்து புரையோடிப் போனது எங்கள் சமூகம். செய்யும் தொழிலைச் சார்ந்து மனிதர்களை சாதி சாதியாகப் பிரித்த சமூகம். தலைமயிர் வெட்டியவனை வெட்டிச் சாய்த்த சமூகம். மரத்தில் ஏறியவனை விழுத்தி நெஞ்சில் ஏறி நின்ற சமூகம். உடுப்பு வெளுத்தவனை சாயம் போக வெளுத்துக் கட்டிய சமூகம். பறையடித்தவனை பக்கத்திலும் சேர்க்காத சமூகம். யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரித்து அதற்குள்ளும் வடமராட்சி தென்மராட்சி என்று வகுத்து நார் நாராய்க் கூறாகிப் போன சமூகம்.

ஆனாலும் நாமெல்லாம் தமிழர் என்று பறைசாற்றிக் கொள்ளத் தவறுவதில்லை. பெரிய கட்டமைப்பான சமூகம் என்று பெருமை பேசுகிறோம். உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடி வந்ததை மறந்து விட்டோம். உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முதன்மை அகதியாக வந்து நிற்கும் அனுபவம், கிடைத்த மேல்நாட்டு வசதிகளினால் மங்கிப் போய் விட்டது. பெரும்பான்மை இனத்தின் இரானுவ இயந்திரம் எங்களை ஒட்டு மொத்தமாக அழிக்க முற்பட்டபோது இயல்பாகவே எங்களுக்குள்ளே உண்டான ஒற்றுமையுணர்வு சாதி மத பேதங்களை மறக்கச் செய்து விடும் என்று எண்ணினேன். பேரழிவுகளால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் அந்த ஒற்றுமைக்கு உரமூட்டும் என்று நம்பினேன். சாதி மத வேலிகள் எல்லாம் தகர்ந்தொழிந்து புதுப்பொலிவு பெற்ற சமூகம் பிறக்கப் போகிறது என்று இறுமாந்தேன்.

ஆனால் இப்போது புரிகிறது. எவ்வளவு பேரழிவுகள் வந்தாலும் சாதிமதத் திமிரை விட்டுக் கொடுக்காத சமூகம் இந்தச் தமிழ்ச் சமூகம். நீங்கள் நான் செல்வம் இன்னும் லட்சக் கணக்கான மக்கள் இங்கு அகதிகளாக ஓடிவந்த போது உங்கள் நிறம் சாதி மதக் கூறுகளை இந்த கனடிய மக்கள் கணக்கில் எடுத்திருந்தால் நமக்குப் புகலிடம் கிடைத்திருக்குமா ? உயிருக்குப் பயந்து ஓடிவந்தவர்களை கை நீட்டி வரவேற்றவர்கள் இந்த மக்கள். இருக்க இடம் கொடுத்தார்கள். வசிக்க உரிமை கொடுத்தார்கள். இதெல்லாம் எப்படி முடிந்தது! மனிதனை மனிதனாகப் பார்த்தார்கள் இவர்கள். அந்த மனிதத்துவத்தின் கருணையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாமோ எங்கள் கிடுகு வேலிகளை விட்டு இன்னமும் வெளpயே வரத் தயாராயில்லை.

அங்கிள், மனிதனை மனிதனாகவே பார்க்கும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. தயவுசெய்து செல்வத்தை செல்வமாகப் பாருங்கள். அவன் நல்லவன். குடும்பத்தின் உயர்வுக்காக தன்னையே அர்ப்பணித்த மனிதன். இருபது வயதிலேயே திருமணம் பற்றிச் சிந்திக்கும் இளைஞர்கள் மத்தியில் தன் பொறுப்புகளை உணர்ந்த சராசரிக்கும் மேலான மனிதன். இப்பவும் சொல்கிறேன் மேரியின் குணத்திற்கும் அடக்கத்திற்கும் பொருத்தமான மாப்பிள்ளை அவன். இரண்டு பேரும் நல்லதொரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவார்கள். நான் செல்வத்திற்காக மட்டும் இங்கு வரவில்லை. மேரிக்காகவுந்தான். இனி உங்கள் இடிடம் அங்கிள். ‘

வழிந்த வியர்வையைத் துடைத்தான் டானியல். இன்னும் சொல்வதற்கு அவனிடம் நிறைய இருந்தன. ஆனால் அதிகமாகப் பேசிவிட்டது போலத் தோன்றியது. இதையெல்லாம் விளங்கிக் கொள்ளக் கூடிய மனப்பான்மை அவரிடம் இருக்குமென்று அவன் கருதவில்லை. ஏதோ ஒரு வேகம். அவனையும் மீறிக் கிளர்ந்த ஆத்திரம். ஆத்திரம் சமூகத்திலா அல்லது அதன் பிரதிநிதியாக நிற்கும் அவரிலா ? சரியாகத் தெரியவில்லை. மேலும் பேசினால் அது செல்வத்தின் மதிப்பை ஏற்றுவதற்கு மாறாக குறைத்து விடலாம். பந்தை அவர் பக்கம் ஊன்றி அடித்தாயிற்று. இனி அவராச்சு, மகளாச்சு. பாரத்தை இறக்கி வைத்த தற்காலிக நிம்மதி.

அவனுடைய நீண்ட பிரசங்கத்திற்கு எதையாவது பதிலுக்கு சொல்லப் போக ஏற்கனவே எடுத்த முடிவுக்கு மாறாக சொல்லி விடக்கூடுமென்பதால் தேவசகாயம் வாய் திறவாமலே இருந்தார். அவர்கள் உடனே போய் விட்டால் ஆறுதலாயிருக்கும் போலிருந்தது. இன்னம் தேநீர் போட வில்லையா என்று படிக்கும் அறையைப் பார்த்துக் கேட்டார். அவரைப் பொறுத்தளவில் முதல் அத்தியாயத்திலேயே கதை முடிந்து விட்டது. இனித் தொடராது.

வந்த காரியம் முடியாமல் வாய் நனைக்கக்கூடாதென்ற மனோபாவம் டானியலிடம் இல்லை. ஆனாலும் தேநீர் பருகாமல் போய் விடவே அவன் விரும்பினான்.

இல்லை அங்கிள் நாங்க இன்னொரு நாளைக்கு ஆறுதலாக வாறம்டி. நான் உங்களோடு அளவுக்கு மீறிப் பேசியிருந்தா என்னை மன்னிச்சிருங்க என்று சொல்லிக் கொண்டே சியாமளாவைப் பார்த்தான்.

சியாமளா கிளம்பத் தயாரானாள். குழந்தைகளை கணனியின் கவனத்திலிருந்து பிரித்தெடுத்தாள். நாங்க போறம் அன்ரி என்றாள். போயிற்று வாறம் என்று வழக்கமாகச் சொல்லிப் பழக்கப்பட்டவள் அவள். போறம் என்று மொட்டையாகச் சொல்லக்கூடாது என சின்னப்பிள்ளையிலேயே தகப்பன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். இருந்தும் சொன்னாள். அப்படிச் சொன்னதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அவர்களைத் தண்டித்த திருப்தி.

திரேசா அன்ரி சியாமளாவின் கையைப் பற்றினாள். அந்தப் பிடியில் ஒரு பதம் தெரிந்தது. நான் என்னம்மா செய்யிறது புருசனை மீறி என்னால் போக முடியாது என்ற கையறுநிலை தெரிந்தது. தங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து ஏமாற்றத்தோடு திரும்பிப் போவதை விரும்பாத உணர்வு தெரிந்தது.

மேரி முகம் வாடியிருந்தாள். அவர்களிடம் நல்ல பட்டுப் புடவைக்குச் சொல்லியிருந்து அவர்களும் நாலு கடை ஏறியிறங்கி நல்லதாக கூடிய விலை கொடுத்து வாங்கி வந்த பின், கரை சரியில்லையென திருப்பிக் கொடுத்து முகத்தை முறித்த வெட்கம் அவளை ஆட்கொண்டது. முகம் தெரியாத செல்வத்திலும் அவளையறியாமலே அனுதாபம் பிறந்தது. வாயால் பேச தனக்கு அருகதையில்லையென்பதால் கண்ணால் சியாமளாவுடன் கதை பேச முயன்றாள். ரீ குடிச்சிற்றுப் போங்க அன்ரி என்றாள். தயாராக வைத்திருந்த சான்ட்விச் தட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்து கூடத்தில் வைத்தாள்.

வியர்வை அடங்கியிருந்தான் டானியல். எண்ணி வந்த விசயம் ஒப்பேறாவிடினும் பெருந்தன்மையாக நடப்பதில் அவனுக்குப் பிரச்னையேதுமில்லை. டானியல் சான்ட்விச் எடுத்ததும் தானும் ஒன்று எடுத்து மெதுவாகக் கடித்தாள் சியாமளா. பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுத்தாள் மேரி.

உடனேயே தேநீர் வந்தது. மிகுந்த சிரத்தையோடு மேரி வார்த்த தேநீர். போகும் நேரம் நெருங்கி வர அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆறேழு வருடங்களாய் தேன் சேர்த்த மாதிரி சிறுகச் சிறுக கட்டிக் காத்துவந்த குடும்ப நட்பு சடுதியில் மாறி வேண்டாதவர்களாகி விட்டது போல் விந்தை நிகழ்ந்திருக்கிறது, புருசன் பெண்சாதிக் கிடையில் திடாரெனத் தோன்றுகிற இறுக்கம் மாதிரி. இளக்கி விட்டுப் போவது நல்லது.

மேரி இன்னொரு நாளைக்கு அன்ரியைக் கூட்டி வருகிறேன். கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள், பழகட்டும் என்று மொட்டையாகச் சொன்னான் டானியல்.

என்ன அங்கிள் என்று மேரி ஆச்சரியமாகக் கேட்டாள்.

‘நல்ல டா போடுவது எப்படி என்றுதான் ? உண்மையில டா நல்லாயிருக்கம்மா. அப்ப நாங்க போயிற்று வாறம். ‘

நடந்ததை உடனே மறந்துவிட்டு அவனால் எப்படி அவர்களோடு சாதாரணமாகச் சிரிக்க முடிகிறது என்று ஆச்சரியப் பட்டாள் சியாமளா. சிரிப்பு ஓய்வதற்குள் அவன் எழுந்தான். தேவசகாயம் கார் வரை கதையாமலே வந்தார். சியாமளா ஏறுவதற்கு வசதியாக கார்க் கதவை திறந்து விட்டு ஒதுங்கி நின்றார். திரேசா அன்ரியும் மேரியும் குனிந்து காருக்குள் கை காட்டினார்கள். குழந்தைகளின் கைகளைத் தடவினார்கள்.

காரில் ஏறி ஸ்ராட் செய்த போது டானியலுக்கு முன்னே நின்ற கேள்வி.

செல்வத்தின் முகத்தில் எப்படி விழிப்பது ?

**

(தொடரும்)

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்