விடியும்! நாவல் – (11)

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


ஒழுங்கை தூரத்தில் தெரிந்ததும் கொஞ்சம் இருட்டுப் பட்டபின் வந்திருந்தால் வசதியாயிருந்திருக்கும் என நினைத்தான் செல்வம். ஒன்றரை நாள் பிரயாண அலுப்பு. தண்ணி வெண்ணியோ சாப்பாடோ இப்போது தேவையில்லை. உடுப்பைக் கழட்டியெறிஞ்சு போட்டு கொஞ்சம் சரிந்தால் போதும். அயலில் ஆருடைய கண்ணிலும் படாமல் வீட்டுக்குப் போய்ச் சேர வேனும். கண்டு, கதை கேட்பவர்களிடம் முகத்தாட்சனைக்கு மறுமொழி சொல்லி மினக்கெட இப்ப ஏலாது.

நேரம் மூன்று ஐம்பது. மேற்கில் விழுந்து மறைய முன் சூரியன் நிறையச் சுடுகிற நேரம். அந்த நேரத்தில் ஆருக்குமே அலையப் பிடிக்காது. ஒழுங்கைப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வர நாலரையாகும். ஆம்பிளைகள் வேலை விட்டு வர ஐந்தாகி விடும். கரைச்சல் இல்லாத இந்த வேளையைப் பயன்படுத்தி வீட்டுப்பெண்கள் ஒரு கண் சரிந்திருப்பார்கள்.

படங்கு மறைப்பில் ஈயோட்டிக் கொண்டிருந்தது சந்திக்கடை. படங்கின் நிறம் மங்கிப் போனதைத் தவிர வேறு மாற்றமில்லாத அதே கடை. அதே முட்டாசிப் போத்தல்கள் பலசரக்குப் பட்டறை, தொங்குகிற தராசு, சீல் வைக்காத படிகள், சட்டை போடாத முதலாளி, விழுந்து விடுவது போலிருக்கும் பந்தல், இருந்து அரட்டை அடிக்க இரண்டு பக்கமும் வாங்குகள். பேப்பர் தேடியலையும் மடி வற்றிப் போன ஒரு பசுவின் அசைவைத் தவிர சோம்பல் முறித்த ஒழுங்கை. செல்வம் எட்டி நடந்தான். மூலை வளவு செல்லம்மா ஆச்சி கண்டால் விடமாட்டுது மனுசி.

“ஆரது பொன்னுத்தங்கத்தின்ர மகனோ வாறது. எப்ப வந்தனி ? ”

“இப்பதான் ஆச்சி”

“கண்ணும் புகைஞ்சு போச்சு. இதாரது கூட”

“பன்குளத்துக்குப் போக வந்தவர். பஸ் இல்லை. ராவைக்கு நின்டுட்டு போயிருவார். ”

ஆச்சி புகைஞ்ச கண்ணோடு கிட்ட நெருங்கி வந்து புதுமுகத்தைப் பரிசீலித்துவிட்டு சொன்னாள்.

“ஒரு ராவைக்குத் தங்குறதென்டாலும் பொலிசில பதிய வேனும் யோசிச்சுச் செய் ”

“ஓமனை ஓமனை சுகமாயிருக்கிறியோனை”

“ஏதோ இருக்கிறன். என்ன பெட்டி ஒன்டையும் காணேல்லை சும்மா வெறுங் கையை ஆட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் ”

“அவசரத்தில வெளிக்கிட்டது”

“என்ன கண்டறியாத அவசரம். ஐஞ்சு வரியத்துக்குப் பிறகு வாறனி கையை விசிறிக் கொண்டு வாறதோ. அங்க என்ன வேலை பாக்கிறாய் ? ”

“இஞ்ச பார்த்த ஒப்பீஸ் வேலைதான் ”

“என்ன தாறான் ? ”

“சம்பளம் பரவாயில்லையனை”

“பின்ன, ரெண்டு குமரைக் கரையேத்திப் போட்டாய். அவள் செவ்வந்திக்கும் பேச்சுக்கால் முடிஞ்சிற்றுது. வீடும் எழும்பிட்டுது. இதெல்லாத்துக்கும் லெட்சக்கணக்கில உழைச்சாத்தானே முடியும். ”

“ஆச்சி நான் வரட்டோனை, வீட்டில பாத்துக் கொண்டிருப்பினம். பிறகு கதைப்பம் ”

ஆச்சியைக் கண்டால் தப்பினோம் பிழைத்தோமென பிய்த்துக் கொண்டு அவன் ஓடியிருக்கிறான். சின்னம்மாவிற்கு ஒரு தலைமுறை மூப்பான கிழவி. வயசு எழுபதுக்கு மேலதான் பார்க்க வேனும். நல்ல மனுசி. அயலுக்குள் நல்லது கெட்டதுக்கு அடுகிடை படுகிடையாக முன்னுக்கு நிற்கிற மனுசி. திருமண வீடுகளில் கால் மாறி வருவதிலிருந்து மஞ்சள் தண்ணீர் ஊற்றுச்சடங்கு வரை ஆச்சியின் ஆலோசனைப்படியே நடக்கும். துக்க வீடுகளில் அயல் பெண்டிரோடு தோள் கோர்த்து மாரடிப்பதும் மரித்தவரின் அருமை பெருமைகளை மட்டும் அபரிமிதமாக ஒப்பாரி வைப்பதுமான முக்கிய நிகழ்வுகள் அவள் தலைமையிலேயே அரங்கேறும். இன்ன இன்ன சடங்கிற்கு இன்ன இன்ன சாமான் என பட்டியல் கொடுப்பவளும் ஆச்சிதான். ஒரு குணம், எதையும் பார்த்துப் பாராமல் முகத்துக்கு நேரே கேட்டுப் போடுவாள். ஆச்சியிடமிருந்து கிடைக்கும் பயன்பாடுகளால் அயலுக்குள் ஆரும் முகம் முறியக் கதைத்து பகைப்பட விரும்புவதில்லை.

நேரம் போகாமல் திரிந்த சந்தர்ப்பங்களில் ஆச்சியோடு வலியப் போய் கதைக்க ஆசை வரும். எப்ப பார்த்தாலும் அப்பதான் தோய்ந்து குளித்து வந்த மாதிரியான பொலிவு. கந்தையானாலும் கசக்கிக்கட்டுகிற சுத்தம். சற்று கட்டையும் மெலிவுந்தான். ஆனால் அதை மீறிய கட்டுறுதியான தோற்றம். ஆரென்றாலும் சரி, நறுக் நறுக்கென்று கேள்வி கேட்டு பதிலைப் பிடுங்கி எடுக்கும் ஞானமுள்ளவள். ஆச்சி மட்டும் படித்திருந்தால் நிச்சயம் அப்புக்காத்தாக வந்திருக்கும்.

அயலுக்குள் இறங்கியதும் ஆச்சியின் ஞாபகந்தான் வந்தது. தன்னைக் காண நேர்ந்தால் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக் குடைந்திருப்பாள் என்கிற நினைவோட்டம் அவன் தலைக்குள் ஊர்ந்தது. அதிஷ்டவசமாக ஆச்சி கண்ணில் படவில்லை.

கிடுகு, தகர வேலிகள் சுண்ணாம்புச் சுவருக்கு மாறியிருந்தன. ஒழுங்கை கொஞ்சம் விட்டுவீதியாகத் தோன்றியது. அந்தக் காலத்தில் பட்டம் ஏற்றித் திரிந்த மண். பட்டக் காலம் முடிந்தாலும் மின்சாரக் கம்பிகளில் சிக்குப்பட்ட பட்டவால்கள் தோரணம் மாதிரித் தொங்குவதை எப்போதும் காணலாம். இப்போதைய பொடியன்கள் பட்டங்கள் ஏற்றுவதில்லையா ? கம்பிகள் வெறுமையாக இருந்தன.

பின்னால் கூட்டமாக சைக்கிள் சத்தம் வர செல்வம் ஓரம் கட்டினான்.

பள்ளிக்கூடம் முடிந்து வருகிற பிள்ளைகள். ஆணும் பெண்ணுமாக ஆளுக்கொரு சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தார்கள். எல்லாருக்குமே பதினாறு பதினேழு மதிக்கத்தக்க வயசு. வீட்டிற்குப் போய் உடுப்பு மாற்றிக் கொண்டு டியூசனுக்குப் பறக்கும் அவசரம்.

செல்வம் படித்த காலத்திலும் டியூசன் இருந்தது. அது இரவில் மட்டுமே நடத்தப்பட்டதால் இரவுப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்படியில்லை. இப்ப தெருவிற்குத் தெரு டியூசன், போஸ்டர் ஒட்டி விளம்பரம் வேறு. அந்தப் பிள்ளைகள் யாரையும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களும் அவனை கண்டு கொள்ளவில்லை. அவன் போகும் போது சின்னப்பிள்ளைகளாக இருந்திருப்பார்கள் தம்பி ஜெயத்தைப் போல.

வீடு வந்திட்டுது என்று தொங்கலுக்கு முன்னுள்ள வீட்டைக் காட்டினான் செல்வம். பஸ்ஸில் பக்கம் பக்கமாக பயணித்த எட்டுமணி நேர குட்டி உறவு. இருந்தும் பலநாள் பழகியவனைப் போல நினைக்கத் தோன்றியது. கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரு வயசுதானிருக்கும்.

“காலையிலிருந்து ஒண்டா வருகிறம், பாத்தீங்களா நானும் சொல்லேல்லை நீங்களும் கேட்கேல்லை”

“என்ன சார் ? ”

“என்ர பெயர் செல்வம். செல்வநாயகம். ”

“சாரி சார். ஏம் பெயர் சுந்தரம்.”

“வெறும் சுந்தரமா ? ”

“சுந்தர்ராஜன். சுந்தரம்னு பழகிப் போச்சு”

“இனி இந்த சார் கீர் எல்லாம் விட்டுட்டு என்னை செல்வம் என்டே கூப்பிடுங்க. ஆ.. .. .. அதுதான் வீடு உங்க வீடு மாதிரி நினைச்சுக் கொள்ளுங்க”

“சரி சார்”

“சாரா”

சுந்தரம் சந்தரமாகச் சிரித்தான் புது மாப்பிள்ளைக்கு மாமியார் காட்டுகிற மரியாதையுடன்.

தெருக்கதவு உட்பக்கமாக கொழுக்கி போட்டிருந்தது. இரும்புச் சட்டத்தில் கிறில் வேலைப்பாடு வைத்து தகரமடித்த உறுதியான புத்தம் புதிய கதவு. பழைய கதவு மரச்சட்டத்தில் துண்டு துண்டாய் தகரங்கள் அடித்து இறுக்கியிருக்கும். திறந்து பூட்டுகிற போது தொய்வுக்காரன் மாதிரி ஈவ் ஈவ் என ஈய்ந்து இருமும். சத்தத்தைக் கொண்டே வருகிறரின் அடையாளம் புரிந்து குசினியிலிருந்து சின்னம்மா குரல் கொடுப்பாள். கதவுக்கு அடிக்கடி நாடி தளர்ந்து போகும். சுத்தியலும் கையுமாய் அவன்தான் செம்மையாக்குவான். அதில் உருப்படியாக இருந்ததே சுற்றிக் கொழுவுகிற இரும்புச் சங்கிலியும் ஆமைப் பூட்டுந்தான்.

மேலால் கைவிட்டு கொழுவியைக் கழட்டினான் செல்வம். சத்தம் கேட்டு கட்டில் இருந்த நாய் தலை நிமிர்த்தாமல் இமை உயர்த்திப் பார்த்தது. வாய் திறவாமல் உறுமியது. பக்கத்தில் சோற்றுப் பருக்கையும் மண்ணும் ஒட்டிக் காய்ந்து கிடந்த அலுமினியக் கோப்பை. மத்தியான உணவிற்குப் பிறகு வெக்கைக்கு தலையைச் சுழற்றிக் கொண்டு வந்த சுகமான தூக்கத்தைக் கெடுத்த பாதகர் யார் ? விர்ரென எழுந்து நின்று குரைக்கத் தொடங்கிற்று. நாலு வீட்டுக்குக் கேட்க நாயனம் வாசித்தது. அலவாங்கில் கொழுவியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு வருவது போல் திமிறியது.

சின்னம்மா உள்ளிருந்து ஓடி வந்தாள்.

“தம்பி வந்திற்றியா ?.. .. .. .. இஞ்சருங்கோ ஓடியாங்கோ தம்பி வந்திற்றான். ”

வந்தவர்களிடம் நாய்க்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. விடாமல் குரைத்தது. சங்கிலியில் இல்லாவிட்டால் கடித்துக் குதறி எடுத்து விடும் சீற்றம்.

உஞ்சூ ஆக்களை ஆரென்டு தெரியேல்லைப் போலை என்று சொல்லிக் கொண்டே கிட்டப் போய் தலையைத் தடவி விட்டாள் சின்னம்மா. புது நாய். அதற்கு எப்படி அவர்களைத் தெரியும் ? தலைத் தடவலுக்குப் பின் உஞ்சூவின் உறுமல் தேய்ந்து கொண்டே போய் அடங்கிற்று.

தங்கச்சி செவ்வந்தி அண்ணாச்சி என்று ஓடி வந்தாள். புதுமுகமொன்றை பக்கத்தில் கண்டதும் பிறேக் போட்டுக் கொண்டாள்.

சுந்தரத்திற்கு சங்கடமாயிருந்தது. அபூர்வமாக அண்ணன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். நானொருவன் நந்தி மாதிரி நடுவில் சே.. .. .. சிவன் கோயிலுக்கே போயிருக்கலாம். புதுஇடத்தில் அந்நியமாகிப் போன கூச்சத்தில் ஒடுங்கிப் போய் நின்றான். சுந்தரத்தை இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போகத் திரும்பிய செல்வம், சப்பாத்துக் காலுடன் வீட்டுக்குள் போகக் கூடாதென்று சின்ன வயதிலேயே அம்மா இட்ட கட்டளை ஞாபகம் வந்ததும் விறாந்தைக் கதிரையிலிருந்து கழட்டத் தொடங்கினான்.

உள்ளே வந்த அண்ணனை முழுசாகப் பார்த்துவிட்டு அண்ணாச்சி நிறத்து வந்திருக்கிறாரம்மா என்று சொன்னாள் செவ்வந்தி. செவ்வந்தி என்று பெயர் வைத்தது அவன்தான். பெயருக்குத் தோதாகவே மலர்ந்திருந்தாள் அவள்.

ஏன் நீயென்டாப் போல என்ன எனக்கே அடையாளம் தெரியேல்லை என்றான் செல்வம். தங்கச்சியின் தலையைப் பிடித்து நெற்றியில் கொஞ்சி விட்டான்.

“ஏன் சின்னம்மா எங்கட ரிக்கியைக் காணேல்லை. இது புது நாயாக் கிடக்கு.”

“அதையேந்தம்பி கேக்கிறாய். அதுக்கு வயசு போயிற்றுது. இப்பிடித்தான் ஒரு வெள்ளிக்கிழமை நாத்து கிணத்தடிக்குப் பக்கத்தில உயிர் போய்க் கிடந்தது. சரியான கவலை. ஜெயம் அன்டு முழுக்கச் சாப்பிடேல்லை. நந்தியாவட்டைக்குக் கீழ தம்பிதான் பள்ளம் கிண்டி வெள்ளைச்சீலையால சுத்தி அடக்கம் பண்ணினது. ”

ரிக்கி உள்வீட்டுப் பிள்ளை மாதிரி. சாமியறையை விட்டு எல்லா இடமும் சுதந்திரமாகப் போய் வரும். கட்டி வைத்து வளர்த்த நாய். சங்கிலியைக் கையில் எடுத்தவுடன், விருப்பமில்லாவிடினும் விசுவாசத்தில் ஓடி வரும். ஆருக்குக் குரைக்க வேனும் ஆருக்குக் குரைக்கக் கூடாது என்ற அனுபவபாத்தியமுள்ளது. புதியவர்கள் வந்தால் அது குரைக்கிற குரையில் பிடித்துக் கட்டுமளவிற்கும் பதட்டந்தான். ஆனால் ரிக்கி ஆருக்கும் வாய் வைத்ததில்லை. பொன்னுத்துரை மாமா கொண்டு வந்த போது மூன்று மாசக் குட்டி. பிள்ளைகளோடு பிள்ளையாக வளர்ந்த சீவன்.

காலம்பறை காகம் கரையேக்குள்ளயே பொழுது படுறதுக்குள்ள தம்பி வந்திருவான் என்டு விளங்கீற்றுது என்று அப்பா சொன்னார். தன்பாட்டில் சும்மா கத்திய காகத்திற்கு பொன்னாடை. மகன் வந்து சேர்ந்து விட்ட புழுகத்தில் உதிர்ந்து விட்ட சம்பிரதாயம். காகம் வழக்கம் போலக் கரைந்திருக்கும். அவன் கனடாவிலிருந்து வெளிக்கிட முதல் போன் பண்ணிவிட்டுத்தான் வந்தான். காகத்திற்குமா போன் பண்ணினான் ? வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் செல்வம்.

“தம்பி வழியில பிரச்னையில்லையே”

“இல்லையப்பா”

“என்ர முருகன் காத்தது”

சின்னம்மா அடுப்படியில் கோப்பி வார்த்துக் கொண்டிருந்தாள்.

“குசினி உள்ளுக்கை வந்திற்றுது! ”

“ஓமனை. பின்சுவரை இடிச்சு இரண்டறையும் குசினியும் கட்டினது. உனக்கு எழுதினனானல்லோ”

“மறந்து போயிற்றன் சின்னம்மா. பின்னுக்கிருந்த வாழைகளை பிரட்டாற்றீங்களா ?”

“ஓந்தம்பி வசதிக் குறைவு, எத்தினைக் கென்டு முத்தத்தில சில்லுக்கோடு பாயிறது.

அது சரி தம்பி ஆரது உன்னோட கூட வந்தது ? ”

“அது ஹட்டன் பொடியன். பன்குளத்துக்குப் போக வந்ததாம். பஸ் இல்லை. பாவமாக் கிடந்தது. கூட்டி வந்தனான். ”

“இந்தா இதைச் சுடச்சுடக் குடி. ”

செல்வத்திடம் கொடுத்து விட்டு விறாந்தைக்குப் போனாள். சுந்தரம் எழுந்து நின்று பணிவுடன் கோப்பியை வாங்கினான்.

“இந்தக் குண்டாளக் கோப்பையில கோப்பி குடிச்சு சரியா ஐஞ்சு வருசம் சின்னம்மா”. நாலு முடர் கோப்பி இறங்க, ஒரு முறை வியர்த்து அடங்கியது செல்வத்திற்கு. வந்ததும் விழுந்து படுக்க எண்ணியிருந்தான். கோப்பியுடன் முறிந்து விட்டது.

“தம்பி அறைக்குள்ள பாய் போட்டு விடுறன் கொஞ்சம் சரியிறியே”

“இல்லை சின்னம்மா”

“அப்ப மேலைக் கழுவிற்று வாவன் இடியப்பம் அவிக்கிறன் ”

“அவதிப்படாதீங்க சின்னம்மா ஆறுதலா ராவைக்கு சாப்பிடலாம்.”

செல்வம் கோப்பி மண்டியை ஊற்றுவதற்கு குசினிப் பக்கமாக பின்னுக்கு இறங்கினான். அறுக்கையான சுவருக்குப் பின்னால் அஸ்பெஸ்டஸ் கூரை உயரமாகத் தெரிந்தது. அது செவ்வந்திக்குக் கட்டுகிற வீடு. சுவரோடு ஒட்டியிருந்த மரக்கட்டையில் ஏறி எட்டிப் பார்த்தான். போர்ட்டிகோ நிலம் இழுக்க வேனும். சுவருக்குப் பூச்சுப் பூசி சுண்ணாம்பும் அடித்து விட்டால் வேலை முடிந்துவிடும். ஆட்கள் வேலை செய்கிற சிலமனைக் காணவில்லை. அது அது போட்ட போட்ட இடத்தில் அப்படியே கிடந்தது போலிருந்தது.

வலது பக்கமாக எட்டிப் பார்த்தான். அந்தப் பக்கம் இரண்டு வீடுகள். இரண்டும் ஒரே மாதிரியில் ஓட்டு வீடுகள். ராணிக்கும் வசந்திக்கும் சீதனமாகக் கொடுத்தவை. ஏழு ஏழு பேர்ச்சர்ஸ் காணியில் இடத்துக்கு அடக்கமாயிருந்தன. பாசி படியாத கொழுக்கி ஓடுகள் வீட்டின் புதுசைக் காட்டின. கோடியைச் சுற்றிலும் குருத்துப்பச்சை வாழைமடல்கள்.

சின்னம்மாவை நினைக்க அவனுக்கு பிரமிப்பாயிருந்தது. மாதாமாதம் காசனுப்புவது பெரிசில்லை. சிந்தாமல் சிதறாமல் பக்குவமாக வீட்டை நிர்வகிக்கிறதுதான் பெரிசு. மூன்று வீடுகளின் செழுமையும் சின்னம்மா சிந்திய வியர்வையைச் சொன்னது. வீடுகளுக்கும் மேலே சின்னம்மா உயர்ந்து நின்றாள். இந்த சண்டைக் காலத்தில் கட்டுமானத்துக்குத் தேவையான சாமான்கள் எடுப்பது கஷ்டம். ஓடாவி மேசன்மாரை வைத்து வேலை வாங்குவது அதை விடக் கஷ்டம். இத்தனை கஷ்டத்திலும் கண்ணுக்குள் எண்ணையூற்றிக் கொண்டு உன்னிப்பாகப் பார்த்துப் பார்த்து உயர்வாகச் செய்திருக்கிறாள். ஆம்பிளைகளாலேயே முடியாத காரியம். தட்டத் தனிய நின்று எப்படித்தான் மூன்று வீட்டையும் கட்டி முடிச்சாவோ!

சின்னம்மா பென்னாம் பெரிய மனுசியாக விசுவரூபம் எடுத்து நின்றாள்.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

author

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Similar Posts