விடியும்!-நாவல் – (28)

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


உள்ளே தகரக்குடிசை இருப்பதை ஜீப்பின் ஓட்டத்தில் காட்டியும் காட்டாமலும் மறைத்துக் கொண்டிருந்த சோளஞ்சோலை சூழ்ந்த வளவு. செருகி வைத்த மாதிரி தொங்கும் நீண்ட பச்சைத்தாடிகளுடன் சோளங்கதிர்கள். உள்ளிருந்து ஒரு சிறுமி வாசலுக்கு ஓடிவந்தாள். இடுப்புக்குக் கீழ் ஒரு துண்டு கட்டியிருந்தாள். பாவாடையா கவுணா சாறனா என்று மட்டுக்கட்ட முடியாத துண்டு. இடுப்புக்கு மேலே ஒன்றுமில்லை. வயசுக்கு வராத – இன்னும் இரண்டொரு வருடங்களில் வந்து விடும் அறிகுறிகள் துளிர் விடத் தொடங்கியிருந்த பருவம். கையில், சுட்ட மரவள்ளிக்கிழங்கு ஒரு வாய் கடித்தபடி.

காட்டுப் பயணத்தில் ஓருமணி நேரமாய் மனித சஞ்சாரம் காணக்கிடைக்காத வரட்சியிலிருந்த மொத்தக்கண்களும் ஜீப்பிலிருந்து அவளைப் பார்த்ததில் கொஞ்சம் மிரண்டவளாய், முகத்தில் வெட்கம் பூத்தவளாய், வளவுக்குள் ஓடிப் போனாள். காடோ நாடோ சிங்களமோ தமிழோ பெண் குழந்தைகளின் இயல்பு எங்கும் இப்படித்தானிருக்கிறது. இருந்தாலும் சட்டையில்லாமல் ஒரு பெண்பிள்ளை எப்படி நிற்கப் போயிற்று ?

பெண் சகோதரங்களோடு கூடிப்பிறந்தவன் செல்வம். ‘பிள்ளைப்பெறுவு ‘ பார்த்துவிடுவதோடு பெரிசுகள் பெரிய கடமையை முடித்து விட்டதான ஆறுதலில் கொஞ்சம் சோர்ந்து போய் போக்குவரவும் குறைந்து போக, பிள்ளைப் பராமரிப்பில் தாய்க்கு இணையாக கண்ணும் கருத்துமாக இருந்தவன் செல்வம்.

‘முப்பத்தொன்று ‘ வரைக்கும் தாய்க்கோ பெற்ற களைப்பு. குழந்தை நடுச்சாமத்தில், எரிச்சலூட்டுமளவிற்கு பாலுக்கு அழும். செல்வம் முழித்து விடுவான். அம்மாவை எழுப்பி தொந்தரவு செய்ய மனம் வராது. தானே சமாளிக்கப் பார்ப்பான். ஓராட்டுவான். ஆராரோ ஆரீரரோ சரியாக வராது. கேள்விஞானத்தில் ஏதேதோ பாடுவான். தாளம் சுரம் தப்பிய அவனது கத்தலுக்கு எல்லா நேரங்களிலும் ஏமாற பிள்ளை தயாராயிராது. கிலுகிலுப்பை ஆட்டுவான். ஏணையிலிட்டு ஊஞ்சலாட்டுவான். காலில் போட்டு கதை கேட்பான். பிஞ்சுக்கன்னத்தைக் கொஞ்சி வாசம் பிடிப்பான். தாயைப் போல பால் கொடுக்க முடிந்தால் அதையும் செய்திருப்பான். ஏலாக்கைக்கு அம்மாவை எழுப்புவான்.

குழந்தையின் பிஞ்சுவிரல்கள் நிகங்கள் ரோசா இதழ் நிறத்தில் மெலிதாய் பெரிதாவதையும் மூக்கு கூர்மையாவதையும் முகம் தெளிவாகி அம்மாஅப்பா சாடை தீர்மானமாவதையும் பார்த்துப் பார்த்து வியப்புறுவான். காலை எழுந்ததும் வெளியே ஓடிப்போய் பதியம் வைத்த ரோசாச் செடியில் கனிந்த முகப்பரு போல வெளிக்கிளம்பும் குருத்துப்பச்சை முளையை நோகாமல் தடவிப் பார்த்து ரசிப்பது போல தங்கைமாரை அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் அணுஅணுவாகப் பார்த்து ஆளாக்கியவன் செல்வம்.

சட்டையில்லாத அந்தச் சிங்களப்பிள்ளையைக் கண்டதும் மனதிற்குள் கவலை மண்டிற்று.

வயசுக்கு வரும் அறிவிப்புகள் பெண் குழந்தைகளிடம் தாராளமாகவே தெரிய ஆரம்பிக்கின்றன. கன்னம் உப்பும். மார்பு பெருக்கும். குரல் மாறும். கூந்தல் சடைக்கும். பூசிவிட்டமாதிரி ஒரு பொலிவு தோன்றும். இவைகளோடு மெல்லிய கோடு இழுத்த மாதிரி தவறாமல் வெட்கம் தலைகாட்டும். தாய்மையின் தகுதிகளைப் பெறுவதான இந்த லட்சணங்கள் இயற்கை அள்ளி வழங்கும் அழகு.

பெண்குழந்தையைப் பொறுத்தவரை தமிழ்மண்ணின் பாரம்பரியமே தனி. பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாய்மார்கள் பண்ணுகிற அட்டூழியத்திற்கு அளவு கணக்கில்லை. அது உணவில் ஆரம்பமாகும். இந்த விசயத்தில் அம்மாவும் சின்னம்மாவும் ஒரே அச்சில் வார்த்த பிறவிகள். நுரைக்க நுரைக்க முட்டைக்கோப்பி அடித்து வெறும் வயிறில் குடிக்கக் கொடுப்பதற்காக, தப்பியோடும் தங்கச்சிமாரோடு அம்மாமார் ‘சில்லுக்கோடு ‘ பாய்ந்ததை அவன் பார்த்திருக்கிறான். அது போதாதற்கு நல்லெண்ணையில் வதக்கி எடுத்த உழுத்தங்களி, கையால் இடித்து எண்ணை வழிய வழியப் பிடித்த எள்ளுருண்டை – இப்படிப் பல சங்கதிகள். திடாரென உருவெடுக்கிற கடும் போக்கான உணவுகளை பிள்ளை ஏற்கமுடியாமல் ஓங்காளித்தாலும் விடமாட்டார்கள்.

அடுத்து வருவது பாதுகாப்பு. பிள்ளை அங்கு இங்கு அசைய முடியாது. தெருவை எட்டிப் பார்க்காதே, கண்டவங்களிடம் பல்லிளிக்காதே என்று ஒழுக்கக் கோவையின் பல பக்கங்கள் படித்து இடித்துக் காண்பிக்கப்படும். குட்டி போட்ட பூனை கணக்கில் நாலு சுவருக்குள் வலம் வரவேண்டும். பிள்ளைக்கு – ஏன் வயசுக்கு வந்தோம் என்று இருக்கும்.

பிள்ளையைக் கொண்டே டியூசனில விட்டுட்டு நின்டு கூட்டி வாங்கோ – தங்கச்சியை சைக்கிளில ஏத்திக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விட்டுட்டு வா.. .. .. கரும்பு கட்டோடு இருப்பதை உறுதிப்படுத்த வீட்டு ஆண்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படும். சைக்கிள்பாரில் இருத்தி ஏற்றிப் போகிற போது தங்கச்சியை ஆர் பார்க்கிறான் ஆர் சேட்டை விடுகிறான் என்று அண்ணன்காரன் விளக்குப் பிடித்துப் பார்த்துக் கொண்டே போவான்.

சீதனபாதனம் நகைநட்டு தேடும் அவசரம் அவசியம் நேரகாலம் என்றில்லாமல் கணவனுக்கு உணர்த்தப்படும். பலவீடுகளில் பிள்ளைக்கு பல் முளைக்குமுன்பே சீதனந் தேடச் சொல்லும் அரிகண்டம் முளைத்துவிடுவதுமுண்டு. பெண் என்றால் கல்யாணத்திற்கென்று பிறந்தவளே போல அவளை ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரை மடிநெருப்போடு காலந்தள்ளுவாள் தாய். வசதியிருக்கோ இல்லையோ எல்லா வீடுகளிலும் தாய்மாரின் தொல்லையும் கரிசனையும் ஒன்று போலத்தானிருக்கும்.

அந்தத் தாய்க்குத் தெரியும் – தன்னைப் போலவே நாளைக்குக் கல்யாணமாகி வேறு வீட்டிற்குப் போய் நாலைந்து பிள்ளைகளுக்குத் தாயாகி குடும்பத்தைக் கொண்டிழுக்கப் போகிறவளுக்கு நிறையப் பலம் தேவை. அதையெல்லாம் திரட்டி தன்னோடு இருக்கிற போதே கொடுத்துவிட வேண்டும், போகிற இடத்தில் எப்படியோ!

வளைவில் ஜீப் திரும்ப, தூரத்தில் நாற்சந்தி தெரிந்தது. மகிந்தபுர செக்பொயின்ற் என்று எச்சரிக்கையுடன் சொல்லிவிட்டு, கசட்டில் அதுவரை சத்தமாகப் போட்டிருந்த ‘அந்த அரபிக்கடலோரம் அவள் அழகைக் கண்டேனே ‘ பாட்டை டக்கென்று நிறுத்தினான் சம்சுதீன். சின்னப்பிள்ளை போட்ட தொளதொள சட்டை மாதிரி கொளனிப் பிரதேசத்துக்கு பொருத்தமில்லாத பாரிய செக்பொயின்ற்.

காரணமில்லாமலில்லை. இடப்புறமாக மூதூருக்கும் வலப்புறமாக மட்டக்களப்பிற்கும் எதிரே – திட்டமிட்ட குடியேற்றத்தினால் அண்மையில் உருவாக்கப்பட்ட சேருவிலைக்குமாக பாதைகள் பிரிகின்றன. மூன்று இனமக்களும் சரிக்குச் சரியாக அடுத்தடுத்துச் சீவிக்கிற நெருடலான பகுதி. திட்டமிட்ட குடியேற்றங்கள் உண்டாகிற பகுதிகளில் விடுதலைப்புலிகளும் இயல்பாகவே உண்டாகி விடுகிறார்கள். போய்வரும் சுற்றுவட்டாரத்து மக்களை பரிசோதனை செய்ய, நாலு தெருக்கள் ஒன்றாகச் சந்திக்கும் இந்த இடத்தை விட்டால் வேறு பொருத்தமான இடம் அரசபடைக்குக் கிடைக்காது.

இன்றைக்கு எவ்வளவு நேரம் இந்த இடத்தில் காய வேண்டுமோ என்ற சோர்வு அவனுக்கு வந்தது. கனடாவில் நாலு தெருக்கள் கூடும் சந்திகளில் ட்றபிக் சிக்னல் விழும்வரை காரில் காத்து நின்ற அனுபவம் அவனுக்கு நிறையவே உண்டு. நாளுக்கு நாலு தடவைகளாவது காத்திருக்க நேரும். சிலவேளைகளில் வரும் போது பச்சைவிளக்கு எரிந்து கொண்டிருக்கும். வந்த வீச்சிலேயே போய்விடுவான். இன்னொரு தரம் சிவப்பு விளக்கு எரியும். நிறுத்திவிட்டு காத்திருக்கும் நேரத்தில் சுற்றுமுற்றும் பார்ப்பதுதான் வேலை. இன்னொரு முறை வரும்போதே சொல்லி வைத்தாற் போல் மஞ்சள் விளக்கு தோன்றி பச்சை வந்துவிடும். சிறிதும் நிற்காமலே போய்விடுவான். இன்றைக்கு என்ன வருகிறது பார்ப்போம் என்று யோசித்தான் செல்வம்.

சந்தி தென்பட்டதும் சட்டைப் பையிலிருந்த அறிமுக அட்டையை தொட்டுப் பார்த்துக் கொண்டான் நிமலராஜன். சொந்த ஊர் யாழ்ப்பாணம். அட்டையில் பிறந்த இடம் நெல்லியடி என்று போட்டிருக்கிறது. அதனால் இரானுவத்தின் பார்வைகள், கேள்விக் கணைகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. யாபன கொகேத ? யாழ்ப்பாணத்தில் எங்கே ? என்று கேட்பார்கள். அரச வாகனத்தில் வந்தாலும் கரச்சல் கொடுக்காமல் லேசாக அனுப்ப அவர்களுக்கு மனம் வராது. வெறுமனே முறைத்து அனுப்புவதில் என்ன ஆத்மதிருப்தி கிடைக்கப் போகிறது!

இப்ப யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்றெல்லாம் குறுகிய எல்லைகளோடு இவர்கள் தமிழர்களைப் பார்ப்பதில்லை. – தெமளத ? ஏனம் கொட்டி தமாய் – தமிழனா ? அப்ப புலிதான் என்று எல்லாத் தமிழர்களையும் ஒரே விதமாய்க் கணிக்கும் பரந்த மனப்பான்மை வந்துவிட்டது என்று மூர்த்தி சொன்னான்.

ஜீப்பிற்குள் எல்லா இடத்திலும் இப்போது வெய்யில் காய்ந்தது. அந்தச் சந்தியிலிருந்து வலப்புறமாகப் பிரிகிற வழியில் ஒரு வரிசை மக்கள் எறும்பு போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். கைகளில் நாலைந்து சொப்பிங் பைகள். ஈச்சிலம்பற்றை, மாவடிச்சேனை, வெருகல் முகத்துவாரம் விவசாயக் கிராமங்களில் வசிக்கும் மக்கள். அவர்களது வயிறுகளைத் தேடியும் காணமுடியவில்லை.

மா, பருப்பு, சீனி, ஆகிய அடிப்படை உணவுப் பண்டங்களைக் கூட வாங்கிப் போக முடியாதபடிக்கு இரானுவக் கட்டுப்பாடுகள் இறுகிவிட்டன என்று மூர்த்தி சொன்னான். வருத்தம்வாதை வந்தால் இருக்கிறதைக் கொண்டு நாட்டுவைத்தியம் செய்து கொண்டால்தான் உண்டு. சாதாரண தலையிடிக்குக் கூட வெகு தூரத்திலிருக்கும் மூதூர் வைத்தியசாலைக்குத்தான் போக வேண்டும். அதுவும் இரானுவம் அனுமதித்தால் மட்டுமே. டிஸ்பிரின் பனடோல் வாங்கிச் சமாளிக்கலாமென்றாலும் கொண்டு போக விடமாட்டார்கள்.

மூலாதார சீவியம் விவசாயமாயினும் அவர்களால் அதற்குத் தேவையான உரம் டாசல் போன்றவைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. வீடு கட்டும் சீமெந்தை கண்ணால் கண்டு கனகாலமாகிறதாம். ஊசியிலிருந்து உலக்கை வரை அத்தனைக்கும் கட்டுப்பாடு – அதனால் தட்டுப்பாடு. இரவில் வீட்டுக்கு விளக்கு வைக்க, விளக்கொளியில் பிள்ளைகள் படிக்க, பூச்சிபூரானிடம் கடிபடாமல் படுக்க, மண்ணெண்ணை தேவை. கொண்டு போகக்கூடிய மண்ணென்ணையின் அளவு நாளுக்கு நாள் சிறுத்துப் போய்விட்டது.

நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.. .. .. ஓளவைப்பாட்டியின் மூதுரை நமக்கு விளங்குகிறதோ இல்லையோ அரசுக்கு மிக நன்றாகவே விளங்கியிருக்கிறது. பொருட்களைச் சுதந்திரமாகக் கொண்டு போக விட்டால், அதில் ஒரு பகுதி புலிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் அதைத் தடுத்து மக்களைப் பட்டினி போட்டால் புலிகள் காய்ந்து போவார்கள் – காய்ந்து போனால் தானாக வழிக்கு வருவார்கள் என்பதே அரசு மூதுரையை விளங்கிக் கொண்ட தாற்பரியம்.

ஒரு நாளா இரண்டு நாளா ஏழு வருடங்கள், அரசு இயந்திரம் கண்ணில் எண்ணையூற்றிக் கொண்டு பொருளாதாரத் தடையை அந்தப் பகுதியில் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. புலிகள் காய்ந்து போனதாகத் தெரியவில்லை. காய்ந்து கருவாடாகி மக்கி மண்ணாகிப் போனதெல்லாம் ஏழை எளியதுகள்தான். சைக்கிளில் வந்து ஆமியைச் சுட்டுவிட்டுப் போனார்கள் என்பதற்காக சைக்கிளே ஓடக்கூடாதென்று சட்டம் வந்தது. பதிலுக்கு நடந்து வந்து சுட்டுவிட்டுப் போனார்கள். நடக்கவே கூடாதென்று சட்டமியற்ற முடியுமா ? என்று கேட்டான் நிமலராஜன்.

மூதூரைப் பார்த்த வழியில் ஜீப் திரும்பி நின்றதும் செல்வம் இறங்கி நின்று வலப்புறமாய் ஊர்ந்து கொண்டிருந்த மக்களைப் பார்த்தான்.

வயசு போன கிழவி ஒருத்தி. உழைத்து தேய்ந்து உருக்குலைந்து போன றப்பர் சிலிப்பர் கால்களில். பெருவிரல் இடுக்கில் பூட்டூசி போட்டு இறுக்கியிருந்தது. இடுப்புச்சேலை மறைப்பில் ஒரு கொட்டைப் பெட்டி. அதற்குள் அவளின் சீவியகாலத்து வைப்புச்செப்பு.

மண்ணென்ணையை போத்தலில் வாங்குவதுதான் வழக்கம். கிழவி சொப்பிங்பையில் வாங்கியிருந்தாள். அதுதான் சட்டமாம். சொப்பிங் பையை இறுக்கியிருக்கும் கைப்பிடி சிறிது சோர்ந்தாலும் கீழே முழுதும் சிந்திவிடும். கிழவியின் கவனம் முழுக்க மண்ணெண்ணைப் பையில். மற்றக் கையில் ஒரு அரைக்கிலோ அளவில் சீனி ஒரு பையில். இரண்டு சவர்க்காரம் ஒரு தீப்பெட்டி ஒரு சுருட்டுக்கட்டு இன்னொன்றில். கோதுமை மா வேறொன்றில் அவ்வளவுதான். எல்லாமே பேப்பரில் சுற்றாமல் அம்மணமாகத் தெரிந்தன. பார்த்தவுடன் தெரிவதற்காக அப்படித்தான் கொண்டுவர வேண்டுமென்று கட்டளை.

ஏழெட்டு மைல் நடையில் வந்து வாங்கிச் சேர்த்த திரவியத்தை கொண்டு போய் பிள்ளைகுட்டிகளிடம் சேர்க்கும் வரை இந்தக் கஷ்டங்களை அவள் பொறுத்தாக வேண்டும். வீட்டில் இளம் பிள்ளைகள் இருப்பார்கள். வர, கிழடுகட்டைகள் விடாது. வந்தால் ஆமியிடம் மாட்டிக் கொள்வார்கள். மாட்டிக் கொண்டால் அவர்களின் விலாசங்கள் தொலைந்து போகும்.

வரிசையில் நின்ற எல்லாருக்குமே வயசு ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பார்க்கலாம். தன்னுடைய முறை வருவதை நெஞசிடியோடு பார்த்துக் காத்திருக்கிறாள் கிழவி. எல்லாம் பொலிசாரின் மனநிலையைப் பொறுத்தது. அது சற்று ஏறஇறங்க இருந்துவிட்டால் எதுவும் நடக்கலாம்.

கிழவி ஈச்சலம்பற்றையைச் சேர்ந்தவளாயிருக்க வேண்டும். இங்கிருந்து பத்து மைலாவது இருக்கலாம். நடந்தே செல்ல வேண்டியிருக்கும். பாதையும் சீரானதில்லை. கல்லும் குழியுமாய் காலம் காலமாய் கவனிக்கப்படாத பாதை. முந்தி நாலைந்து வருசத்திற்கொரு முறையாவது வீதி செப்பனிடும் ஒப்பந்தகாரர்கள் கல்லைப் போட்டு தோசைக்கு சாம்பார் ஊற்றுகிற மாதிரி தாரை ஊற்றி விட்டுப் போவார்கள். சரியாக நெருக்குப்படாத கற்கள் கால்களைப் பதம் பார்க்க துருத்திக் கொண்டு நிற்கும். அதுகூட இப்போது இல்லை.

இந்த வழியால் வெருகல் முருகன் கோயிலுக்கு நேர்த்தி முடிப்பதற்காக அம்மா அப்பாவோடு பலமுறைகள் வந்திருக்கிறான் செல்வம். அதெல்லாம் இருபத்தைந்து முப்பது வருசத்துக்கு முன்னர். அப்போதெல்லாம் வெருகலுக்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற மாதிரி அல்லைக் கந்தளாயால் வரவேண்டிய அவசியமில்லை. கடலால் படகில் வந்து மூதூர் ஜெற்றியில் இறங்கி காத்து நிற்கும் வெருகல் பஸ்ஸில் ஏறி கோயிலைச் சேரலாம்.

வெருகலம்பதி நினைவுக்கு வரும்போது கூடவே வெருகல் ஆறும் வரும். பக்கமாய் ஓடும் ஆற்றின் இருப்பு ரம்மியமானது. மற்றும்படி குக்கிராமத்து கோயில்தான். வேலையற்று சோம்பிப் படுத்துக் கிடக்கிற இளைஞனைப் போலவே சத்தமில்லாமல் ஐயோ பாவம் போல இருப்பார் முருகன். வருச உற்சவம் தொடங்கி விட்டால் கொடியேற்றத்திலிருந்து தீர்த்தம் வரை புதுமாப்பிள்ளைதான்.

ஓரு கற்பூரம் ஒரு சிறங்கை எண்ணையுடனான தீபங்காட்டலும் இரண்டு திரணை வெண்பொங்கல் இரண்டு வாழைப்பழம் கொண்ட சிறு படையல், தட்சனையில்லாத கோயில் கணக்கு அர்ச்சனை.. .. .. இப்படி மட்டுப்படுத்தப்பட்ட ஆராதனையில் வருசம் முழுக்க ஆண்டியாக இருக்கும் முருகனுக்கு அந்தப் பதினெட்டு நாட்களும் ராஜ உபசாரம்.

ஏழெட்டுத் தரம் வந்திருப்பான். வந்து தங்கியிருக்கும் நாலைந்து நாட்களும் சுற்றுலாவிற்கு வந்தது போலவே தோன்றும். ஏறி இறங்கி பயணித்து வந்த அலுப்புக்கு முதல்நாள் ஓய்வு. அடுத்தநாள் பொழுது புலர்வதற்கு முன்பே மூலஸ்தான முன்றலில் பொங்கல் முடிந்துவிடும். ஒவ்வொரு முறையும் அவனுக்குத்தான் மொட்டை விழும். காவடி எடுப்பதும் அவன்தான். அம்மா கற்பூரச்சட்டி எடுப்பாள். கற்பூரம் போட்டுக் கொண்டே வருவார் அப்பா. நெற்றியில் வீபூதி பூசி ஐயர் காவடியை இறக்கியதும் முதல் காரியமாக அம்மா பசிக்குது என்பான்.

அதற்குள் கிராமத்துப்பிள்ளைகள் பொங்கல் வாங்குவதற்காக தட்டோடு காத்திருப்பார்கள். ஐயரின் அர்ச்சனையில் வடைமாலை மோதகம் எல்லாம் கிடைக்க அங்கேயே வரிசையாக குந்தியிருந்து பொங்கலை ஒரு பிடிபிடிக்க வெறும்வயிற்றில் காவடி சுற்றிய களைப்பெல்லாம் பறந்தோடிப் போகும்.

உற்சவத்தின் முதல் நாலைந்து நாட்களின் போதே போய் வந்துவிட வேண்டும் அம்மாவுக்கு. தீர்த்தத்தை அண்டிப் போனால் மண்போட்டால் மண் விழாத சனம் என்பாள். ஆரம்ப நாட்களில் போவதன் அனுபவமே வித்தியாசம்தான். மெல்ல மெல்ல மலர்கிற உதயம் போல மெல்ல மெல்ல களை கட்டுகிற உற்சவ ஆயத்தங்கள் – கோயில் சத்திரத்தில் சிபார்சில்லாமல் கிடைக்கும் தனியறை. புதிதாக அமைக்கப்படும் தண்ணீர், கழிப்பிட வசதி. சேறாக்கப்படாத தீர்த்தக்கரை. அக்கம்பக்க கிராமங்களிலிருந்து அப்பப்ப தேவைக்கேற்ப பறிக்கிற பச்சைக் காய்கறிகள். பார்த்திருக்கக் கறக்கிற பசும்பால். கட்டித்தயிர், காட்டுத்தேன் .. .. இப்படி எல்லாமே புதுசுதான். விலையும் மலிவு. அதற்குள்ளும் அம்மா சதக்கணக்கில் பேரம் பேசுவாள். என்றாலும் நேர்த்திக்கடன் எல்லாம் திருப்தியாக முடிந்து நிம்மதியாக விட்டுக்குப் புறப்படுகிற போது வளைத்து நிற்கும் கிராமத்துப் பிள்ளைகளின் கைகளில் ரெண்டு ரூபாய்த்தாள் செருகி விட்டுப் போக அம்மா மறந்ததில்லை.

நிற்கிற ஐந்து நாட்களும் இரட்டை மாட்டு வண்டி பூட்டி அக்கம்பக்கக் கிராமங்களிலிருந்து அள்ளும்படும் சனங்களை வேடிக்கை பார்ப்பதும், அப்பாவின் கண்காணிப்பில் ஆற்றில் தப்படிப்பதும், சமையல் அடுப்புக்கு சுற்றியுள்ள பற்றைக் காடுகளில் ஓடியோடிச் சுள்ளிகள் சேகரிப்பதும், இலந்தை மரங்களுக்கு கல் எறிவதும், ஓயாமல் எதையாவது உண்பதும் ஓடியாடி விளையாடுவதும், புதிது புதிதாகத் தோன்றும் கடைகண்ணிகளில் குந்தியிருந்து விளையாட்டுச் சாமான்கள் ஆராய்வதும், விலை கேட்பதும், பலூன் வாங்கி உடைப்பதுமாய் அந்த ஐந்து நாட்களும் எப்படிப் போனதென்றே தெரியாமல் போகும்.

புறப்படும் கடைசிநாளன்று மணிக்கடைப்பக்கம் தன் பார்வையைச் செலுத்துவாள் அம்மா. வீட்டுக்காகிய, முக்கியமாக அடுப்படிப் பாத்திரங்களை அம்மா வாங்கிச் சேர்க்கும் அழகே அழகு. அலுமினியத்தட்டுகளுக்கு கடைக்காரன் ஐம்பது ரூபாய் சொன்னால் அம்மா கூச்சமில்லாமல் சரிபாதி விலை கேட்பாள். எவ்வளவு இழுபறிப்பட்டாலும் கடைசியில் அம்மா கேட்கும் விலைக்கே அவன் கொடுக்க வேண்டியிருப்பது பெரிய மாயம்.

அது ஒரு காலம்!

இப்போது அந்தப் பகுதிக்குள் போக முடியாது. வருசக்கணக்கில் உற்சவங்கள் இல்லாததால் முருகன் கவனிப்பாரற்று இருப்பார். மாற்றிக்கட்ட சால்வைத்துண்டு கூடக் கிடைக்காது. பொங்கல் படைக்க நாதியிராது. மொட்டை போடவும் காவடி எடுத்துக் கெளரவிக்கவும் பக்தர்கள் கிடைக்கமாட்டார்கள். பிரம்மம் இதையெல்லாம் தாண்டியது என்றாலும் சின்னவயதில் மனதில் பதிந்துவிட்ட வெருகல் முருகனை நினைத்தால் கவலைதான். அவருக்கே இந்த நிலையென்றால் அந்தக் கிராமத்துச் சனங்கள் என்ன பாடுபடுவார்கள் என்ற எண்ணம் முட்டிய போது –

அந்தக் கிழவி சேதாரம் இல்லாமல் செக்பொயின்றைக் கடந்து குடுகுடுவெனப் போய்க் கொண்டிருந்ததை அவன் கண்டான்.

சம்சுதீனின் முகமும் பேச்சும் இந்த ஆமிகளிடமும் செல்லும் படியாகவே இருந்தது. மேலும் கீழும் பார்த்ததோடு சரி. முக்கியமாக செல்வத்தை கொஞ்சமேனும் சோதிக்காதது பெரிய காரியம். அவர்களும் எத்தனைக்கென்று பார்க்கிறது என்று பிரச்னையில்லாமல் நழுவி வந்த ஆறுதலில் சொன்னான் நிமலராஜன்.

கிளிவெட்டி ஆற்றில் ஜீப்பை ஏற்றி பாதை நகர்ந்த போது இறங்கி நின்று ஆற்றைப் பார்த்தான் செல்வம். ஆற்றை சல்வீனியாப்பச்சை மூடி மறைத்து விட்டிருந்தது – தமிழ்மண் முழுக்க சூழ்ந்திருக்கும் சோகம் போல.

தோப்பூர் கடந்து மூதூரில் அவர்கள் தங்கப் போகும் பெரியபாலத்து நீர்ப்பாசன திணைக்கள விடுதியை அண்மிக்கும் போதுதான் அந்த எதிர்பாராத பரபரப்பு தூரத்தில் தெரிந்தது. ஜீப்பை தெரு ஓரமாய் நிறுத்திவிட்டு சாரத்தை மடித்துக் கட்டியபடி என்னஏது என்று பார்க்க ஓடிநடந்தான் சம்சுதீன்.

ஜீப்பிற்குள் இருப்புக் கொள்ளவில்லை. எதிரே ஒரு நூறு யார் தூரத்தில், ஒரு வீட்டின் முன்னால் தெருவை மறைத்து சனக்கூட்டம். பதைபதைப்பில் ஜீப்பிற்குள் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். என்னவோ நடந்திருக்கு, அதுதான் தோப்பூருக்கு இங்கால சனப்பிழக்கத்தைக் காணேல்லை என்றான் நிமலராஜன். இறங்கிப் போய்ப் பார்க்க விருப்பந்தான். எதுக்கு வீண்வம்பு! சணல் பறந்த நடுமத்தியான வெய்யில்!

இனி மூதூருக்குப் போய்த்தான் கடைச்சாப்பாடு எடுப்பிக்க வேண்டும். என்றாலும் குழப்பத்தில் பசி மந்தித்துப் போன ஒரு அமுக்கம். சம்சுதீன் கொண்டு வந்து சேர்க்கப் போகும் செய்தியை கேட்டு குழம்புவதற்கு ஆயத்தமானவர்கள் போல ஜீப்பை விட்டு இறங்காமல் மூவரும் அந்தரத்தோடு இருந்தார்கள். சம்சுதீன் வந்து ஏறிக் கதவைச் சாற்றியபின் மூர்த்தியின் முகத்தைப் பார்த்தான்.

“கண்கொண்டு பாக்க முடியேல்லை சேர்”

“என்னடாப்பா சொல்லு கெதீல”

“நேத்து ராத்திரி நாலைஞ்சு ஆமிக்காரன்கள் குடிச்சித்து வந்து ‘ .. .. .. சொல்லக் கஷ்டப்பட்டு அவன் நிறுத்தினான்.

“சொல்லு சம்சுதீன்”

“புருசனை கட்டிப் போட்டுத்து பெஞ்சாதியை ஆள் மாறி ஆள் கெடுத்துப் போட்டானுவள். மகள்காரி கத்திக் கொண்டு ஓடவும் அவளையும் கிணத்தடிக்கட்டில வெச்சு கெடுத்துப் போட்டு கெணத்தில தள்ளிக் கொண்டு போட்டானுவள். மையம் இன்னம் கெணத்தில மிதக்குது. இறங்கி எடுக்கப் பயத்தில பொலிசுக்கு ஆள்விட்டு இப்பதான் வந்திருக்கு. வாப்பா உம்மாட்டை விசாரனை நடக்குது”

“ஆராக்கள் ?”

“வல்லிபுரம் என்டு சொல்லி சங்கக்கடையில அரிசி நிறுக்கிற ஆள். மனுசன் மிரிச்ச புல்லுக்கூட மவுத்தாகாது. இரண்டு பொம்பிளைப்பிள்ளை. ஒன்னு புலிகளோட போய்ச் சேந்திற்றுது. மவுத்தான குட்டி இந்த வருசம் சோதனை எடுக்குது”

“இனி ?”

“இனியென்ன ? பொடியன்மாருவள் சும்மா விடமாட்டாங்கள். கெதீல ஆமிகாம்புக்கு அடி நடக்கும். இந்த அண்டையில பொம்பளைப்புலியிருக்கு. இப்படி மானக்கேடு நடந்தா செல்லி வேலையில்லை ‘ .. .. .. சொல்லிவிட்டு கடும் யோசனையில் ஆழந்தான் அவன். அவனது வீடும் ஆமி காம்ப்புக்குப் பக்கத்தில் தானாம்.

விடுதலைப்புலிகள் மகளிர் அணி! பின்னிக்கட்டிய கொண்டையும் கமபிளாஜ் யூனிபோமும் கையில் மெசிங்கன்னுமாய் இருக்கும் அவர்களின் படங்களை இணையத்தில் பார்த்திருக்கிறான்.

பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட பொம்பிளைப் பிள்ளைகள்!

karulsubramaniam@yahoo.com

Series Navigation