வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

மத்தளராயன்


சில காலைப் பொழுதுகள் இனிமையாகப் புலர்கின்றன –

தமிழ் சுப்ரபாதத்துக்காக டி.வியைப் போட (பிரமாதமாக இருக்கிறது – யார் மொழிபெயர்ப்பு, யார் பாடியது என்று தெரியவில்லை!), ஸ்டார் சேனலில் ஒரு பழைய இந்திப் பாட்டு –

‘மேரே மெஹபூப் ‘ படத்தில் நெளஷத் இசையில் முஹம்மத் ரஃபி பாடிய ‘மேரே மெஹபூப் முஜே மேரி மொஹப்பத் கி கஸம் ‘

முஹம்மத் ரஃபி மறைந்து இருபது வருடமாவது ஆகி இருக்கும். அந்தக் குரல் இன்னும் மனதின் உள்ளறைகளைத் தட்டித் திறந்து உள்ளே உள்ளே போய் எதையோ தேடுகிறது.. இனிமையான சோகம், கசப்பான மகிழ்ச்சி, வாஞ்சை, கம்பீரம், கண்களின் ஓரத்தில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரின் உப்புச் சுவடு.. ரஃபியின் குரலில் எல்லாம் உண்டு.

நெளஷத்தின் இசையமைப்பில் ரஃபியின் கலை நேர்த்தி இன்னும் துல்லியமாகத் துலங்குகிறது.

‘பெய்ஜூ பவ்ரா ‘வில் தொடங்கிய உறவில்லையா அது ?

பெய்ஜு பவ்ரா படத்தில் இடம் பெற்ற மனதை உருக்கும் கானம் – ‘மனு தர்பத் ஹரி தர்ஷன் ‘ – ராகம் மால்கெளன்ஸ் – ஹிந்தோளம் – . எந்த இந்துவும் இந்தப் பாடலைக் கேட்டால் கண்ணீர் மல்கக் கை கூப்பித் தொழுவான். பாடலை எழுதிய கவிஞர் – ஷக்கீல் பதாய்னி; இசையமைத்த இசை மேதை – நெளஷாத் அலி; பாடிய கந்தர்வக் குரல் – முஹம்மத் ரஃபி. மூன்று பேருமே இஸ்லாமியர்கள். இது தான் இந்தியா.. இனம், மொழி வேற்றுமைகளைக் கடந்து வாழும், வளரும் பாரத சமுதாயம் இது.

பூலி ஹுயி யாதோன் கா சஹாரா தே தே

மேரா கோயா ஹுவா ரங்கீன் நஸாரா தே தே..

(மறந்த நினைவுகளுக்கு ஆறுதல் கொடு

என் தொலைந்து போன வண்ணக் காட்சியைத் தா)

ஷக்கீல் பதாயினியின் மனதைத் தொடும் வரிகள்.

***

வழியெனக்கு பிழயாத வண்ணம்முற்றருள் செய்யென்

மனகுருந்திலிளகொண்டு புனல் கொண்டு வடிவாண்டு

எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி

ளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி

சுழலின்றகிலலோகர் வணங்கின்ற குழலி

துகில் புலித் தொலி கொள்ளின்றரநுதல் கண்ணிட பெட்டு

அழிவு பெட்ட மலர்வில்லியெயனங்கனெ

அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே

இது என்ன ? பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கேரள இலக்கியமான (கவனிக்கவும் – மலையாள இலக்கியம் என்று சொல்லவில்லை) ‘ராமசரிதம் ‘ நூலில் மலைமகள் வழிபாடு. இந்நூலை எழுதியவர் பெயர் இன்னும் தெரியவில்லை. திருவிதாங்கூர் அரசராக இருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது.

தமிழிலிருந்து மலையாளம் கிளை பிரியத் தொடங்கிய காலமாக இருக்கலாம் ராமசரிதம் எழுந்த போது. பாடலை அலகிட்டுப் பார்த்தால் முக்காலே மூணு வீசம் தமிழ்தான்.

வழியெனக்கு(ப்) பி(ை)ழயாத வண்ணம் உற்றருள் செய் என்

மனகுருந்தில் இளைகொண்டு புனல் கொண்டு வடிவு ஆண்டு

எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி.

இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி

சுழலின்ற அகில லோகர் வணங்கின்ற குழலி

துகில் புலித் தொலி கொள்ளின்ற அரன் நுதல் கண் இ(ை)ட (ெ)பட்டு

அழிவு (ெ)பட்ட மலர்வில்லி(ை)ய அனங்க(ை)ன

அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே

மலையாள நிகண்டில் ‘இளை ‘ என்பதற்கு பூமி, நிலம் என்று பொருள் காணப்படுகிறது. ‘பதரும் ‘ என்பதற்கு ‘wave like ‘ – அலையாடும் என்று பொருள் கிடைக்கிறது. நெறி நெற்றியாக இருக்கும். தழுத்த – தழைத்த.

எளிய தமிழில் சொன்னால்

எனக்கு வழி தவறிப் போகாமல் அருள் செய்யம்மா

என் மனதில் மண்ணும் நீருமாக உருக் கொண்டு

எழுந்தவளே.. கருமேகம் அலையசையும் நெற்றி கொண்ட, தழைத்த கருங்குழலி!

சந்திரன் ஏங்கும் வண்ணம் அழகுடைய பிறைநுதல் கொண்டவளே..

சுழலும் உலகோர் வணங்கும் குழலி

புலித்தோல் துகிலாய் உடுத்த அரன் நெற்றிக் கண் பட்டு

அழிந்த மலர்வில்லாளன் மன்மதன் போல் அழகோடு

அவதரித்த இளையவளான மலைமகளே.

கவனித்துப் படித்தால், தமிழ் மலையாளமாக மெல்ல மாறும் பரிணாம நிகழ்வின் கூறுகள் தெரிகின்றன –

1) ஐகாரம் அகரமாவது – ‘பிழை ‘ என்பது ‘பிழ ‘ யாவது; ‘வில்லியை ‘ என்பது ‘வில்லியெ ‘ ஆவது

2) ‘ ‘கின்ற ‘ சிதைவது – ‘சுழலின்ற ‘ (சுழல்கின்ற), ‘வணங்கின்ற ‘ (வணங்குகின்ற) – இது பின்னாட்களில் ‘சுழலும் ‘, ‘வணங்கும் ‘ என்று இன்னும் எளிமைப் படுத்தப் பட்டிருக்கிறது.

3) அகரம் எகரம் ஆவது – பட்டு என்பது பெட்டு என்றாகிறது.

4) சொல்லாக்கம் – செருப்பம் – ‘இளமை ‘ என்ற பொருளில். ‘சிறு ‘ – ‘செறு ‘ – ‘செருப்பம் ‘ . வல்லினம் இடையினமானதற்குக் காரணம் தெரியவில்லை. செறு என்பதற்கு ஏற்கனவே போர் என்ற பொருள் இருந்ததாலோ ? பேச்சு மொழியிலிருந்து வந்திருக்கலாம்.

5) வெப்பு – இது வெற்பு என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. தற்கால மலையாளத்தில் வெப்பு பெரும்பாலும் சமையல் செய்வதைக் குறிக்கும் – அரிவெப்பு – வைத்தலிலிருந்து வைப்பு வந்து அது வெப்பாகி இருக்கலாம். அல்லது வெப்பப் படுத்துவதாலா ?

மனிதன் சமுதாயத்தோடு கலந்து உறவாட ஏற்பட்ட ஊடகமான மொழி ஒரு static சமாசாரமாக ல்லாமல் வளர்சிதைமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு மேலே கண்டது உதாரணம்.

மொழியை ஊடகமாகப் பார்க்கும் போது வியத்தலும், இகழ்தலும் நீங்கிப் போகிறது. ஊடகம் என்பதால், ஆதிக்கம் செய்கிறவர்கள் மொழியை வழங்குவதிலும், அடிமைப் படுத்தப் பட்டவர் வழங்குவதிலும் (வழங்க வைக்கப்பட்டதிலும்) புலப்படும் வேறுபாடுகள் சமூகவியல் ஆய்வுக்கு உரியன.

***

சிலிக்குயில் பொதியவெற்பனின் பொன்விழா மலரைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, கோவை திரு ஆனைமுத்து, திரு பெ.சு.மணி ஆகியோரின் கட்டுரைகள் கண்ணில் பட்டன. அவற்றிலிருந்து :

1878 ‘ல் சென்னையில் ‘தத்துவ விசாரணி ‘ என்ற பெயரில் வார இதழாகத் தமிழில் முதல் நாத்திக இதழ் தோன்றியது. இந்த இதழின் பெயர் 1882 சூலையில் ‘தத்துவ விவேசினி ‘ என்று பெயர் மாற்றம் அடைந்தது. ஞாயிறு தோறும் வெளிவந்த இதன் பதிப்பாளரும் ஆசிரியரும் பு.முனுசாமி நாயக்கர் என்பவராவார். சென்னை கெங்கிச் செட்டித் தெருவில் ஆதிகலாநிதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

பத்திரிகையின் உள்ளடக்கத்துக்கு மாதிரி (1882 – டிசம்ப்ர் 30 இதழ்

கட்டுரைகள்)

1. வறுமையை வெறுமையாக்குவது எப்படி

2. மறுமை தோற்றுமா ?

3. விதவா விவேக நிரூபணம் சுவஞானச் சாதனை

4. மோசேயின் சில தவறுகள்

1885 செப்டம்பர் 30-ல் வெளிவந்த கட்டுரையின் வரிகள் –

‘எக்காலத்திலும் எத்தேசத்திலும் சுயஞ்ஞான அனுபோகத்தைப் பரவச்செய்யப் பாடுபட்டாருமுண்டு. பாடுபடுபவருமுண்டு. இப்போது ஆங்கிலேய நாட்டில் திடகாத்திர சிங்கமாகிய பிராட்லா துரையும், அமெரிக்கக் கண்டத்தில் ஞான முனியாகிய கர்தல் இங்கர்சால் துரையும், பிரான்சு நாட்டில் மெய்யோகியுமாகிய அட்கின்சன் துரையும், இன்னும் பற்பல தேசங்களில் பற்பலரும் தத்தம் சுயபாஷையில் தத்தம் கருத்தை வெளிப்படுத்திச் சிறு புத்தகங்களையும் பிரசங்க ரூபியாகவும் பிரசனோத்ர ரூபியாகவும் வெளிப்படுத்தி அஞ்ஞான பிரஜைகளுக்கு மெய்ஞான தீபச்சுடர் விளக்கிப் பேரும் புகழும் பெற்றனர். அம்மாதிரியை அனுசரித்தே, இச்சென்னையில் ‘தத்துவ விசாரிணி ‘ எனும் பெயர் கொண்ட பத்திரிகை பிரசுரஞ் செய்யப்பட்டது. ‘

நாத்திகப் பிரசாரத்திற்காக இசைப்பாடல்களையும் தத்துவ விவேசினி வெளியிட்டது. 1884=ல் ‘நாத்திகப் பெருமை கீர்த்தனம் ‘ எனும் தலைப்பில் வெளிவந்த பாடல் பின்வருமாறு :

பல்லவி

நயந முடையவரே நாடிக் கொள்வீரே

நாஸ்திகரா மெங்கள் நளிமதியை

அநுபல்லவி

பயமுடன் பக்தி பண்ணுவோரை யிடிப்போம்

பரமேசனையும் வென்று பறை யடிப்போம்

சுயஞான மாமெங்கள் சூரியனுக்கு முன்னே

சுருதியா முங்கள் மதிசுடர் விடுமோ ?

இப்பாடலுக்குச் சரணங்கள் இல்லை. பாடலின் ராகம் இந்துஸ்தானி காபியென்றும் தாளம் ஆதியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்றியவர் ‘கிருஷ்ணகிரி உண்மை விளம்பி ‘

கட்டுரையைக் கட்டுடைத்து (deconstruct) ‘ஞானமுனி – இங்கர்சால் ‘, ‘மெய்யோகி – அட்கின்சன் ‘, ‘மெய்ஞான தீபச்சுடர் ‘ போன்ற மதம் சார்ந்த சொல்லாடல்களையும், படிமங்களையும் அவற்றை வைத்து எதிர்மறையான கருத்தோட்டங்களைத் தெளிவாக முன்வைப்பதையும் பார்ப்பதற்கு முன், இதன் சுவையில் முமுக்க அமிழலாம்.

***

eramurug@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts