வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

மத்தளராயன்


முன்னைக்கிப்போது தமிழ்ப் பதிப்பாளர்கள் கொஞ்சம் பூசினது மாதிரிக் கூடுதல் செழுமையோடு இருப்பதாகக் கேள்வி. மத்தளராயனின் பதிப்பாளர், பதிப்பாசிரியர் ஆகியோர் ஏற்கனவே ரெட்டைநாடி சரீரம் கொண்டவர்கள் ஆனதால் இந்த வட்டத்துக்குள் வரமாட்டார்கள்.

தலையணை கனத்துக்கு நாவல்களை மட்டுமில்லை, தொகுப்புகளையும் வாங்க உள்நாட்டில் ஒரு பெரிய வாசகர் கூட்டமும், கல்லூரி, பல்கலை நூல்நிலையங்களும் புலம் பெயர்ந்த இளைஞர்களும் தயாராக இருப்பதால், பதிப்பாளர்கள் மேட் ஃபினிஷ் அட்டை, இறக்குமதி காகிதம் போன்றவற்றிலும், கட்டுமானத்திலும், போனால் போகிறதென்று விஷய கனத்திலும் மும்முரமாக இறங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். அப்படியே எழுதுகிறவர்களையும் கவனித்துக் கொண்டால் – வந்துட்டான் ‘யா ஃபேவரைட் சப்ஜெக்டுக்கு.

விஷயம் ஒன்றும் பிரமாதம் இல்லை. அதாவது புத்தகம் போடுகிறவர்களுக்கு. பழைய இலக்கியப் பத்திரிகைகளில் (சரிப்பா சரி, இலக்கியம் பற்றிப் பழைய பத்திரிகைகளில்) வந்ததை எல்லாம் சிரத்தையாகக் கவிதை, குறுநாவல், சிறுகதை, கட்டுரை, பேட்டி என்று வகை பிரித்து அட்டவணை இட்டுத் தொகுப்பாகப் போட்டு முன்னூறும் நானூறும் விலைவைத்து விற்பதெல்லாம் சரியோ சரிதான். அப்படி வெளியிடும்போது எழுதியவர் இருக்காரா, சிவலோக பதவி அடைந்தாரா என்று விசாரித்து அறிந்து, அவர் இன்னும் ஜீவித்திருக்கும் பட்சத்தில் ஒரு போஸ்ட் கார்டாவது போட்டுத் தகவல் தெரிவித்து, புத்தகம் வெளிவந்தபிறகு அன்னாருக்கு ஒரு காப்பி பதிவுத் தபாலிலோ, சாதா அஞ்சலிலோ ஸ்டாம்ப் ஒட்டியோ ஒட்டாமலோ அனுப்பினாலே போதும். ஏமாளித் தமிழ் எழுத்தாளன் சிக்கிம் பம்பர் லாட்டரியில் ஒன்றுக்குப் பக்கம் ஏகப்பட்ட சைஃபர் போட்ட தொகை கிடைத்தது போல மகிழ்ந்து போவான். இந்த இலக்கியத் தேங்காய்மூடிக் கச்சேரி நடக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

உலகச் சிறுகதைகள் என்று தொகுதி போட்டு அதில் நண்பர் பா.ராகவனின் கதையைச் சேர்த்து, புத்தகம் முழுக்க விற்றுப் போனதற்கு அப்புறம் தான் மூன்றாம், முப்பதாம், முன்னூறாம் மனிதர் மூலம் தனக்கு விஷயம் தெரிய வந்ததாகப் பா.ரா சொன்னார். சாரி சார் என்று வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு பதிப்பாளர் தன் கார் பக்கம் நடக்க இவர் பான்பராக்கை மென்றபடி வெறுங்கையோடு மோட்டார்சைக்கிளை உதைத்திருக்கிறார் – உதைக்க வேறே என்ன இருக்கு ?

மத்தளராயனுக்கும் இந்த அனுபவம் உண்டு.

இரண்டு வருடத்துக்கு முன்னால் சுபமங்களா தொகுப்பைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, என்னடா, நாம எழுதின மாதிரி இருக்கே என்று பார்த்தால் அதேதான். கதை மற்றும் கவிதை. போனவாரம் சென்னைக்குப் போனபோது புக்லேண்டில் கணையாழி புதுத் தொகுப்பைப் புரட்டினால் குறுநாவல், சிறுகதை – அட இதுவுமதே ரகம்.

சம்பந்தப்பட்ட பதிப்பகமும் மாம்பலத்திலேயே இருப்பதால் சனிக்கிழமை மத்தியானம் உச்சிவெய்யில் நேரத்தில் அங்கே அழையா விருந்தாளியாக நுழைய, மிரண்டு போன விற்பனையாளர் பெண்மணி ‘ஓனர் மண்டேதான் சார் வருவார். அவர் கிட்டே பேசிக்குங்க ப்ளீஸ் ‘ என்று கெஞ்ச, வெற்றிகரமான வாபஸ்.

திங்கள்கிழமை அந்தப் பெண்ணைக் காணோம். உள்ளே சரித்திர நாவல் குவியல்களுக்கு இடையே இருந்து பெரிய பழுவேட்டரையருக்குப் பேண்ட் மாட்டிய மாதிரி வந்தவர் என்ன விஷயம் என்று விசாரிக்க, அடியைப் பிடிப்பா ஆழ்வார்க்கடியா என்று ஆரம்பிக்க, பழுவேட்டரையர் பாதியிலேயே நிறுத்தி ஒரு எம்பு எம்பி மேல் அலமாரியிலிருந்து கணையாழித் தொகுதியை எடுத்துக் கவரில் போட்டுப் பவ்யமாக நீட்டினார்.

வாங்கிக் கொண்டு நன்றி சொன்னபடி மத்தளராயன் விசுமத்தனமாகக் கேட்டது – ‘அது சரி, இப்படி சட்டமா வந்து நின்னு கேட்டா, உடனே கொடுத்திடுவீங்களா ? இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும் ? நாளைக்கு ஒருத்தர், நாளை மறுநாள் ஒருத்தர் இதை எழுதினது நான்தான்னு வந்து நின்னா அவங்களுக்கும் கிடைக்குமா ? ‘.

ஒரு நம்பிக்கைதான் சார். எழுத்தாளர்களோட எல்லாம் மோதலே வச்சுக்கறதில்லே.

பரவாயில்லே, மோதுங்க சார். கலகம் பிறந்தால் நியாயம் வருமோ என்னமோ ராயல்டியாவது மணியார்டர்லே வரும்.

****

ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகத்துக்கு.

தமிழில் நூல் எழுதி வெளியிட்டு அதை விளம்பரப்படுத்தி ப்ரமோட் செய்ய எழுத்தாளர்களைப் பொதுவாக நாடுவதில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியில் சுஜாதா ஓரிரு தடவை கூட்ட நெரிசலுக்கும் தூசிப் படலத்துக்கும் நடுவே நாற்காலியில் உட்கார்ந்து, வாசகர்கள் வாங்கிய புத்தகங்களில் பொறுமையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். புக்பாய்ண்டில் ஒரு தடவை தன் ஆங்கிலப் புத்தகத்தை ப்ரமோட் செய்ய கமலாதாஸ் என்ற மாதவிக்குட்டி என்ற கமலா சுரையா வந்திருந்தார். மற்றப்படி விளையாட்டு வீரர்களின் சுயசரிதை என்று மாவு அரைத்து இட்லி வேகவைக்கும் பரிசுத்தமில்லாத ஆவி எழுத்தாளர்கள் எழுதி வெளியிட்ட காப்பி மேசைப் புத்தகங்களை ப்ரமோட் செய்ய மேட்டுக்குடித் தன்மையோடு வந்து உட்கார்ந்து விமானமேறிப்போன கிரிக்கெட் வீரர்கள் உண்டு.

இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் எழுதியவர்களே புத்தகங்கள் விற்பனைக்கு உதவுவது சகஜமான ஒன்று. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தற்போது எழுதியிருக்கும் சுயசரிதையை அவர் தொலைக்காட்சியில் புரமோட் செய்ய இருப்பதாக அறிகிறோம்.

இந்த வேலையின் முதல்படியாகக் கிளிண்டன் சொல்வது – புத்தகத்தை நானே, நானே தான் எழுதினேன். மண்டபத்துலே யாரும் எழுதிக் கொடுத்து வாங்கிட்டு வரலை சொக்கா.

சான்றாக அவர் காட்டுவது வீட்டில் ஆறடி உயரத்துக்கு அடுக்கி வைத்திருக்கும் நோட்டுப் புத்தகக் குவியலை. எல்லாம் சொந்தக் கையெழுத்தில் பில் கிளிண்டனே எழுதியது. அதுதான் சுயசரிதையாக அச்சானதாம்.

கிளிண்டன் என்றதும் முகம் நினைவு வராதவர்களுக்கும் மோனிகா லெவின்ஸ்கி ஞாபகம் வராமல் போகமாட்டார். அந்தக் கால இந்து நேசன், இந்தக்கால சினிமாப் பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் நானறிவேன் ரகப் பசுமைப் புரட்டுக்கதைகளைவிட உலகமெங்கும் பொதுஜனத்தைக் கிளுகிளுப்பூட்டிய வெள்ளை மாளிகை விவகாரம் கிளிண்டனும் மோனிகாவும் சம்பந்தப்பட்டது.

மோனிகா விவகாரத்தைப் பற்றி கிளிண்டன் இப்போது சொல்வது – என்னால் முடிந்தது. செய்தேன். அம்புட்டுத்தான்.

கிளிண்டன் சார் இதுக்கும் மேல் ஒரு படி தாண்டிக் குதித்து அடித்து விட்டிருக்கும் ஸ்டேட்மெண்ட் –

இந்த விவகாரத்தை சுருட்டு மாதிரி ஊதி ஊதிப் பலூன் மாதிரிப் பெரிசாக்கினது வலதுசாரிகளின் சதி. பெர்லின் சுவர் விழுந்த பிறகு, சோவியத் ஒன்றியம் ஒண்ணுமில்லாமல் போனபிறகு, பனிப்போர் என்ற கோல்ட் வார் முடிவுக்கு வந்த பிறகு வலதுசாரிகளுக்கு மெல்ல அவல் கிடைக்காமல் என்னைப் பிடித்துக் கொண்டு, அந்த சின்னப் பொண்ணோட நான் கொஞ்சம் நெருக்கமா இருந்ததைப் பஞ்ச மாபாதகமாக்கிட்டாங்க. அவங்களுக்கு எப்பவுமே சண்டை போட ஒரு எதிரி வேணும். நான் வசமா மாட்டிக்கிட்டேன்.

அது சரி, அமெரிக்க அதிபர்களிலும் வலதுசாரிகளை வசைபாடும் இடதுசாரிகள் உண்டா என்ன ? வலதின் காவல் பிசாசான சகுனிமாமா டொனால்ட் ரம்ஸ்பெல்ட் என்ன சொல்கிறார் ?

****

என்னதான் சிவந்த மண்ணாக இருந்தாலும் வங்காளத்தில் புனிதப் பசுக்களும், ‘கலாச்சார ஜார் மன்னர் ‘களும் அதிகம் தான்.

ரவீந்த்ரநாத் – மன்னிக்கவும் – ரொபிந்த்ரநாத் தாகூருக்குக் கிடைத்த நோபல் பதக்கத்தையே சாந்திநிகேதனத்திலிருந்து அபேஸ் செய்து கொண்டுபோக விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாலும் மூலக் கச்ச வேட்டியணிந்த, கனத்த ஷெல் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி போட்ட வயதான வங்காளி பாபு மோஷாய்களும், பருத்திப் புடவையணிந்த ஸ்தூல சரீர அறிவுஜீவி நாரிமணிகளும் ரொபீந்தர் சங்கீத் விஷயத்தில் படு கறார். தாகூரின் கவிதைகளை இசையமைத்துப் பாடப்படும் இந்த ரொபீந்தர் சங்கீத்தை யார் எந்த மூலையில் பாடினாலும் இவர்கள் காதுகள் நிமிர்ந்து கொள்ளும். அதை ஒலிப்பதிவு செய்து ஒலிப்பேழையாக வெளியிட வேண்டும் என்றால் முதலில் இவர்கள் பார்த்து, கேட்டு, இங்கே அப்படிப் பாடு, அங்கே அப்படி வார்த்தையை இழு, இந்த ஸ்வரத்தை நிறுத்திப் பிடி என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து – ரொபீந்தர் சங்கீதத்தின் தரத்தைக் காப்பாற்றுகிறார்களாம் – இவர்கள் உத்தரவுகளை எறிய கத்துக்குட்டி பாடகர், பாடகிகளிலிருந்து ஆனானப்பட்ட ஹேமந்த் குமார் (இவருடைய இந்தி சினிமாப் பாடலான ‘தும் புகார் லோ தும்ஹாரா இந்தசார் ஹை ‘ கேட்டிருக்கிறீர்களா ?) வரை கூட அதையெல்லாம் சிரமேற்கொண்டு வாயினால் பாடி, மனதினில் மதித்து அட்சரம் பிசகாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

வங்காள மூலக்கச்ச கல்ச்சுரல் ஜார்களின் தட்டுச் சுற்று வேட்டி சோதரர்கள் தமிழ்நாட்டிலும் இருப்பதாகச் சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், இடைக்கால இலக்கியம் என்று காப்பிரைட் இல்லாத எதற்கு யார் உரை எழுதிப் பதிப்பித்தாலும் இவர்கள் ஒப்புதல் ஏதாவது விதத்தில் தேவை போல் இருக்கிறது.

ஒரு பக்கம் கட்டற்ற போக்கில் முன்நோக்கிப் போகும் புத்திலக்கிய வளர்ச்சிக்கு கைகாட்டிக் கொண்டு, இன்னொரு பக்கம் பழசை யாராவது தொட்டால், ஜார் மன்னர்களையும் மன்னிகளையும் கூட்டி வந்து மிரட்டும் இலக்கியப் பத்திரிகைப் போக்குகளைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

****

அரசுத் துறை தொலைக்காட்சியில் மலையாளம் தூரதர்ஷன் கொஞ்சம் தூக்கலாக அரசாங்க வாசனை வீசுவது. சம்பளம் வாங்கினோமா, வேலையைச் செய்தோமா என்று அதது பழகிப் பதிந்த தடத்திலேயே நடக்க, திருவனந்தபுரம் குடப்பனிக்குன்னு தூர்தர்ஷன் கேந்திரத்தில் பிள்ளை, குருப்பு, நம்பியார், நாயர், நம்பூத்ரி வகையறாக்கள் கடியாரத்தைப் பார்த்து வேலை செய்து சாயந்திரம் மழை வரும்போது குடையைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் போகிற ஸ்தலம் இது.

ராத்திரிகளில் தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியாக – லைவ் ஃபோன் இன் – நிசாகந்தி என்று ஒரு பரிபாடி. சினிமாவையே பெரும்பாலும் நம்பி இருப்பது இது. மலையாளத் திரைப் பாடலில் முத்திரை பதித்த காலம் சென்ற வயலார் ராமவர்மாவின் மகனான சரத்சந்திர வர்மா போன்ற இளம் பாடலாசிரியர்கள், பூவச்சன் காதர் போன்ற பழைய பாடலாசிரியர்கள், சுவாமி என்று எல்லோராலும் பிரியமாக அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி போன்ற முதுபெரும் இசையமைப்பாளர்கள், லெனின் ராஜேந்திரன் போன்ற கலைப்பட இயக்குனர்கள் என்று அவ்வப்போது நிசாகந்தியில் வந்தாலும் மற்ற நாட்களில் சினிமாக்காரர்கள் யாரையாவது பிடித்து வந்து நிகழ்ச்சி நடத்தி முடிக்கிற அரசாங்க அலுப்பு தெரிகிறது.

இப்படி மாட்டிய விருந்தாளிகளிடம் தொலைபேசி உரையாடுகிறவர்கள் பெரும்பாலும் இவர்களுடைய பந்துமித்திரர்களும் நண்பர்களுமே. நீங்க செளக்கியமா, உங்க வீட்டுலே எருமைக் கண்ணுக்குட்டி, மாமியார், மச்சினி செளக்கியமா என்று போஸ்ட் கார்டில் எழுதிக் கேட்கிற சமாச்சாரங்கள் தான் பெரும்பாலும். அண்ணாச்சி, போன மாசம் என்கிட்டே கைமாத்தா வாங்கிட்டுப் போன நூத்துப்பத்து ரூபாயை எப்பத் திருப்பப் போறீங்க என்று எப்போது யார் யாரைப் பார்த்துக் கேட்கப் போகிறார்கள் என்று ஆவலாக எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

இது இருக்கட்டும். பாரப்புரத்து எழுதிய ஒரு கதை – யாத்ரயுடெ அந்தம். கே.சி.ஜியார்ஜ் அதை தூர்தர்ஷனுக்காக ஒரு நல்ல தொலைக்காட்சிப் படமாக்கினார் ஐந்தாறு வருடம் முன்பு. எம்.ஜி.சோமன், விஜயராகவன், கரமன ஜனார்த்தனன் நாயர் போன்ற நடிகர்களின் அற்புதமான நடிப்பில் மிளிர்ந்த படம் இது. திருவனந்தபுரம் தூரதர்ஷன் மகிழ்ச்சியோடு திரையிட, நல்ல திரைப்படங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். சந்தோஷம்தானே, அப்ப இன்னொரு தடவை பாருங்க. தூரதர்ஷன் திரும்பத் திரையிட்டது யாத்ரயுடெ அந்தம் படத்தை. மறுபடி மகிழ்ச்சி. அப்புறம் திருவனந்தபுரம் தொலைக்காட்சியில் யாருக்குத் தோன்றியதோ – யாத்ரயுடெ அந்தம் படத்தை ஒளிபரப்பினால் மலையாளபூமியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடும் என்று. இப்போதெல்லாம் மாதம் ஒருதடவையாவது படம் அந்தச் சானலில் வரத் தவறுவது இல்லை.

இது கூடப் பரவாயில்லை.

ஏழு வருஷத்துக்கு முன்னால் மத்தளராயன் இங்கிலாந்து போவதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷனைப் போட்டால் பழைய மலையாளச் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி. ஜெயபாரதி வாத்து மேய்த்தபடி வாய்க்காலைக் கடக்க முற்படும்போது பாடிக் கொண்டே நனைவார். இங்கிலாந்திலிருந்து வந்து இங்கே கொஞ்சம் நாள் குப்பை கொட்டி விட்டு தாய்லாந்தில் அடுத்த வருடம் முழுக்க மசாஜ் செய்து கொண்டு திரும்பி வந்து டிவியைப் போட்டால் அதே ஜெயபாரதி, வாத்து, வாய்க்கால். அப்புறம் யு.எஸ், இங்கிலாந்து என்று துரைகளோடும் துரைசானிகளோடும் வருடக் கணக்கில் இழைந்து மறுபடி சென்னைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை புலர்காலைப் பொழுதில் ரிமோட்டை அழுத்தி மலையாள தூரதர்ஷனுக்குப் போனபோது தெரியவந்தது யாதெனில், ஜெயபாரதியும் அவர் மேய்க்கும் வாத்துக்களும் இன்னும் வாய்க்காலைக் கடந்து அக்கரைக்குப் போகவே இல்லை.

மத்தளராயன்

Series Navigation