வாடிய செடி

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

ஹெச்.ஜி.ரசூல்கலீபா காலத்து சாட்டையொன்றை
தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள்
பத்வாக்களின் பேரிரைச்சல்களில்
ஏற்கெனவே மூர்ச்சையற்றுக் கிடந்த
கவி இக்பாலும்
சர்சையத் அகமதுகானும்
எழும்பவில்லை இன்னும்
அனல் ஹக்கென்று பேசிய
சூபிமன் ஸுர் ஹல்லாஜை
வெட்டி துண்டு துண்டாக்கிய
வாள்களின் முனையில்
உலராமல் உறைந்திருக்கும் ரத்தம்
பல்லக்கு தூக்கிகள் சூழ்ந்து நிற்க
கலீபாக்களின் நகர்வலம்
விட்டுவிடாமல் தொடர்கிறது.
நேசித்த மனைவி குழந்தைகளிடமிருந்து
பிடுங்கி எறியப்பட்ட வாடிய செடியொன்று
இனங்காண முடியாத துன்பவலிகளுடன்
தன் ஹிஜ்ரத்தை தொடர்கிறது.
சாட்டைகளை வீசிய கைகளில்
கூர்வாள் மின்னுகிறது.
அது விரல்களை துண்டிக்கிறது.
தலைகளை வெட்டுகிறது.
பிணமாகிவிட்டால் கூட
மையவாடி தர மறுக்கிறது.
பத்வாக்களுக்கு என்றுமே
இதயம் இருந்ததில்லை..


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்