வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

பாவண்ணன்


ஒரு கட்டுரையில் இடம்பெறும் ஒருசில வரிகளை கட்டுரைக்கு வெளியே எடுத்துப் பொருள் கொள்ள முயற்சி செய்யும்போது பல பிழைகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் பல நிலைகளிலிருந்து உருவாகின்றன என்கிற ஆச்சரியமே இரா.பாலசுப்பிரமணியம் அவர்களின் பதில் விமர்சனத்தைப் பார்த்ததும் (25.2.02, திண்ணை) முதலில் ஏற்பட்டது. என் கட்டுரை வெளிப்படுத்தாத ஒரு முடிவை வெளிப்படுத்துவதாகச் சொல்லும் அளவுக்கு இரா.பாலசுப்பிரமணிம் அவர்களைத் துாண்டியது எதுவென்று புரியவில்லை.

மரபின் முன்வைக்கப்படுகிற கேள்விகள் சரியாக எதிர்கொள்ளப்பட்டு விரிவான விவாதங்களாக உருமாறவில்லை என்பதையே என் கட்டுரையின் முடிவாகச் சொல்லியிருந்தேன். மீண்டும் இன்னொரு முறை கட்டுரையைப் புரட்டினாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். ‘தி.ஜா.வின் கதாபாத்திரங்கள் மரபை மீறாதவர்கள் ‘ என்று எந்த இடத்திலும் தனிக்குரலில் நான் சொல்லவே இல்லை. நான் முன்வைக்காத ஒன்றை என் குரலாகப் பாவித்துக்கொண்டு எனக்குப் பதில் சொல்பவரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘யத் கின்கா ஜகத்யம் ஜகத் ‘ என்னும் உபநிடத வரியைக் குறிப்பிட்டு அதிலிருக்கும் ‘ஜகத் ‘ என்னும் சொல்லை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். ‘ஜகத் ‘ என்னும் சொல்லின் நேர்ப்பொருள் உலகம். ஆனால் அது எப்படிப்பட்ட உலகம் ? நிலையானதாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத உலகம். தனித்தனியான இயங்குமுறைகள் கொண்ட பல இயக்கங்கள் இந்த உலகில் நடைபெற்றவண்ணம் உள்ளன. இயக்கங்களின் ஏற்றத்தாழ்வுக்குத் தகுந்தபடி அவற்றின் இயங்குமுறைகளின் விதிகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பார்வைக்கு நிலையானதாகக் காணப்படக் கூடிய ஒரு பெரிய பாறை கூட மாறிக் கொண்டே இருக்கிற பல மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மூலக்கூறிலும் பல அணுக்கள் நகர்ந்தபடியே உள்ளன. மாற்றம் ஒன்றே மாறாத விதியாக இருக்கிறது. அதனால்தான் உலகம் என்பதை மாறிக்கொண்டே இருக்கிற உலகம் என்று ஒரு முன்னொட்டோடு சுட்டிக் காட்ட முடியும். உலகம் என்ற ஒன்றைப் பார்ப்பது மாறிக் கொண்ேடு இருக்கிற உலகம் என்ற ஒன்றைப் பார்ப்பதுதான். மாறிக் கொண்டே இருக்கிற உலகம் என்பது ஓடிக் கொண்டே இருக்கிற தண்ணீர் போல. ஓடிக் கொண்டே இருக்கிற தண்ணீரில் எது உயர்வு ? எது தாாழ்வு ? எது முக்கியம் ? எது முக்கியமற்றது ? எப்படிச் சொல்ல முடியும் ? அதே போல மாறிக்கொண்டே இருக்கிற உலகிலும் எதுவுமே முக்கியமானதல்ல. எதுவும் நிராகரிப்புக்குரியதும் அல்ல. உலகைப் பார்க்கிற ஒரு ரிஷியின் பார்வையில் எல்லாமே வணக்கத்துக்குரியவை. மாற்றம் என்பதை வணங்கி ஏற்கும் போது மட்டுமே ஒரு ரிஷியால் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பேராற்றலின் பேரிருப்பை உணர முடியும். இது ஞானத்தின் ஒரு பாடம். ஜகத் என்னும் உலகம் என்னும் சொல்லுக்கு மாறிக் கொண்டே இருக்கிற உலகம் என்று விரித்துப் பொருள் கொள்ளும் நோக்கம் இதுதான். குறிப்பிட்ட உபநிடத வரியில் உள்ள ஒரே ஒரு சொல்லை மட்டுமே நான் எனது கட்டுரையில் கையாண்டிருக்கிற சூழலில் , அந்த வரிக்கு நான் தவறான பொருளைச் சொல்லிவிட்டதாக இரா.பாலசுப்பரிமணியம் பதற்றமுறுவதன் காரணம் புரியவில்லை.

மரபு சார்ந்த கேள்விகளால் அப்பு நிலைகுலைந்து விடுகிறான் என நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ‘பாவண்ணன் சொல்லுவது போல அப்பு இந்த இரண்டு கேள்விகளாலும் நிலை குைலுந்து போகிறானா ? சுக்கிலாம்பரதரம் குட்டிக் கொள்ளும்போதே பாவண்ணன் தி.ஜா.சொல்லாத ஒன்றைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார் ‘ என்று இரா.பாலசுப்பரிமணியம் எழுதியுள்ளார். நான் சொன்னதற்கு மாறாக அப்பு நிலைகுலையவில்லை என்று அவர் சொல்ல விழைவதைப் போலத் தெரிகிறது. அதை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருப்பினும் இப்படி ஒரு கூற்று முன்வைக்கப்பட்டுவிட்டதால் நாவலின் 128, 129ம் பக்கங்களிலிருந்து சில வரிகளைத் தர விரும்புகிறேன்.

‘மன்னி, சிவசு அடிக்கடி வருவாரா என்ன ? ‘ என்றான். அதைத் தைரியமாகக் கேட்க முடியவில்லை. வார்த்தைகள் துவண்டு நாக்கில் தள்ளாடித் தள்ளாடி வெளியே விழுந்தாற்போலிருந்தது. கேள்வியைக் கேட்கும் போதே உடல் நடுங்கிற்று.

மன்னி வழக்கம் போலப் பார்க்கிறாள். ஒரு நேர்ப்பார்வை. உடனே தரையை னோக்கி அடங்குகிறது.

இப்ப வந்த மாதிரி அடிக்கடி மத்யானம் வருவாரா ?

மன்னி தலையை அசைக்கிறாள். அர்த்தம் தெரியவில்லை.

‘என்ன ? ‘

தெரியாது என்று பதில் வந்தது. மன்னி நகர்கிறாள். இனிமேல் பேச இஷ்டமில்லை என்றுதான் அர்த்தம் அதற்கு.

நடுங்கிக் கொண்டே மாடிப்படி ஏறினான் அப்பு. பெஞ்சில் வந்து விழுந்தான். கண்ணை இறுக மூடிக் கொண்டான். வெடவெடவென்று உடல் நடுங்கிற்று. மார்பு அடித்துக் கொள்ளுகிறது கூடக் கேட்கிறது. தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது. கன்னத்திலும் மார்பிலும் கசிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டான் அவன்.

இது நிலைகுலைதல் அன்றி வேறென்ன ?

காட்டாமணக்குச் செடிக்குப் பின்னால் மறைவதைப் பற்றிய பகுதியையும் தி.ஜா சொல்லாத ஒன்றைச் சொல்லிவிட்டதாகக் குறிப்பிடுகிறார் இரா.பாலசுப்பிரமணியம்.

பக்கம் 7ல் வரும் நாவலின் பகுதி இது.

‘அப்புவுக்கு அழ வேண்டும் போலிருந்தது. அப்போது அழவில்லை. பாடசாலைக்குப் போயும் அழவில்லை. போய், அரிசி உப்புமாவும் கத்தரிக்காய் கொத்சும் சாப்பிடும் போதும் அழவசில்லை. மாலையில் சந்தியா வந்தனம் செய்வதற்காக காவேரிக்கு மற்ற பையன்களோடு போய், பையன்கள் கரையில் தனித்தனியாகப் பிரிந்து , ஆளுக்கு ஒரு காட்டாமணக்குச் செடி மறைவாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த போதுதான் உதட்டைக் கடித்தும் விசித்தும் விம்மியும் அழுது தீர்த்தான். ‘

பக்கம் 198ல் வரும் பகுதி இது.

‘நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தயும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே. இப்ப காசிக்குப் போய் இருக்கப் போறேன்

அப்பு பேச முடியாமல் உட்கார்ந்திருந்தான். துாரத்தில் வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ‘நிஜமாவாம்மா ? ‘ என்று உதட்டைக் கடித்துக் கொண்டான். கண் நிரம்பிக் கலங்கிற்று.

பிரச்சனையின் முன்னிலையில் உதட்டைக்கடித்து அழும் மனநிலை எட்டு வயதிலிருப்பதைப் போலவே 24 வயது வாலிபத்திலும் மாறாமல் இருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டத்தான் கட்டுரையின் வரிகள் அமைந்திருக்கின்றன என்பதை மிக எளிதாக வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும்.

கட்டுரை நெடுக இரா.பாலசுப்பிரமணியம் குற்றச்சாட்டு என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒரு படைப்பின் வாசிப்பனுபவத்தை ஒட்டிச் சொல்லப் படுகிற ஒரு கருத்தை வேறொருவர் குற்றச்சாட்டு என்று முத்திரை குத்துவது எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் முடக்கிவைக்க முயற்சி செய்வதற்கு இணையாகப் போகும் ஆபத்து உள்ளது. அம்மா வந்தாள் நாவல் பற்றிய என் கட்டுரை என் வாசிப்பு அனுபவம் சார்ந்து நான் எழுதிய ஒன்றாகும். நான் பெற்ற அனுபவத்துக்கு முற்றிலும் மாறான அனுபவத்தை முற்றிலும் மாறான தொனியில் இன்னொருவர் முன்வைப்பதற்கான இடம் எப்போதும் இருக்கிறது என்கிற எண்ணம் என் நெஞ்சில் எப்போதும் உண்டு. நான் சொல்வது மட்டுமே உண்மை அல்லது நான் கண்டடைவது மட்டுமே உண்மை என்கிற எண்ணம் எப்போதும் எனக்கில்லை. ஒரு கட்டுரையின் வரிகளைக் கேள்விகளாக்கிப் பதில் சொல்வதை விட இரா.பா. தன் வாசிப்பு அனுபவத்தை ஒட்டித் தன் கண்டடைதலை முன்வைப்பதே சிறந்த ஒன்றாக இருக்கும்.

***

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts