வரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

சுகுமாரன்


எழுத்து நாட்களில் செய்யுள் என்ற இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்து எழுதப் பட்ட துணுக்குகள் எல்லாம் கவிதையாகக் கருதப் படிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம் வெற்று விவரணைகள் கூட சாதுர்யத்துடன் சொல்லப் பட்டு கவிதைக்கான கெளரவத்தைப் பெற்றிருக்கின்றன. துள்ளல், கருணை போன்றவை வெறும் வார்த்தைக் கூடுகள் உள்ளீடு அற்றவை. இந்த செய் பொருட்களை கவிதையென்று வைதீஸ்வரன் இன்றும் நம்புகிறார் என்பது வருத்தம் தர்க் கூடியது. அறுபத்து மூன்றில் எழுதப்பட்ட ‘பூமி ‘யும் (பக் 56) எழுபத்தைந்தில் எழுதப் பட்ட ‘ஸ்டிரா ‘வும் (பக் 9) கவிதைத் தன்மையைப் புறக்கணித்த வார்த்தை வலை.

தனது கவிதையின் பொது இயல்புக்குப் பொருந்தாத வரிகளையும் வைதீஸ்வரன் எழுதியிருக்கிறார். உதாரணம் ‘கடல் ‘ (பக் 61). இந்த வார்த்தை ஜாலம் கவிதையல்ல. ஆபாசம்.

வைதீஸ்வரனின் அனுபவமும் மொழியும் சிறு கவிதைகளில் மெருகேறித் தெரிகின்றன. வார்த்தச் சிக்கனம், படிமம், நேரடிக் குரல், என்ற கட்டமைப்புக்குள் அடங்கும் சிறு கவிதைகள் வைதீஸ்வரனின் சுயார்ஜிதம். புதிய கவிதை மரபுக்கு அவரது பங்களிப்பு. ‘மாமிச வண்டி ‘, ‘திகைப்பு ‘, ‘வலை ‘ போன்றவை உதாரணங்கள்.

சாதாரண நிகழ்ச்சியை கவிதையில் அசாதாரண நிலைக்கு உயர்த்துவதை சிறு கவிதைகளில் நேர்த்தியுடன் செய்கிறார்.

இருட்டுக்கு பயந்து

கண்ணை மூடினேன்

உள்ளே புது இருட்டு

‘உர் ‘ரென்றது.

நான்கு வரிக் கவிதை பல வரிகள் பேச இடம் அளிக்கிறது.

வைதீஸ்வரனின் கவிதை மொழி சிடுக்குகள் இல்லாதது. எளிமையானது. சாதாரண உரையாடலுக்கு மெருகு கொடுத்த தொனியில் அவரது கவிதை இயங்குகிறது. இந்தக் குரல் இயற்கை மீது கரிசனம் கொண்டு வியக்கிறது. அரசியல் வியாபாரம் பற்றி எரிச்சல் கொள்கிறது. காதலில் ரகசியம் பேசுகிறது. சுய நிந்தனை செய்து கொள்கிறது. கேள்வி கேட்கிறது. ஆனால் எந்த எல்லையிலும் உச்சத்திற்குச் செல்வதில்லை, வெடிப்புறப் பேசுவதில்லை.

‘உதய நிழல் ‘ தொகுப்பின் முன்னுரையில் வைதீஸ்வரன் தனது கவிதை இயல் நோக்காக நம்பக் கூடிய வாசகங்களை முன் வைக்கிறார்.

‘பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து

போய்க் கிடக்கிற ஒரு பாறாங்கல்லை,

சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால்

புரட்டி விட , அடியிலிருந்து திடாரென்று

கொப்பளிக்கும் நீரூற்றையோ , நெளியும்

அனேக ஜீவ ராசிகளையோ , கண்டு

பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் —

எனக்குக் கவிதையுணர்வுகளாகத் தோன்றுகின்றன.! ‘

எழுபதுகளில் எழுதப்பட்ட வாசகம் இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. வைதீஸ்வரன் கவிதைகளில் இந்தப் பிரமிப்புக் கணங்களே எஞ்சியிருக்கின்றன.சில வரிகளாகவும், சில படிமங்களாகவும் தேங்கியிருக்கின்றன. அந்தக் கணங்கள் நீட்சி பெற்று கவிதைத் தருணமாக நிலைப்பதில்லை.

வைதீஸ்வரனின் தொடர்ச்சியான இயக்கத்தில் ந்கீரோட்டம் தென்படுவதில்லை. அங்கங்கே திட்டாக நீர்ப் பரப்புகள் தோன்றுகின்றன. அவ்ற்றில் மெல்லிய சலங்களே உருவாகின்றன. கால வேறுபாடின்றி வரது ஆரம்ப காலக் கவிதைகளும் சமீஅப்த்திய கவிதைகளும் ஒரே போல அமைந்திருக்கின்றன. சரியாகச் சொன்னால் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் அவர் எழுதிய கவிதைகள் ஆரம்பகாலக் கவிதையின் உயிர்ப்பைக் கொண்டிராதவை.

ஒரு கவிஞனின் மொத்த உலகைத் துப்பறிய நூற்றைம்பது கவிதைகள் கொண்ட தொகுப்பு வலுவான சான்று தான். அதன் மூலம் பொதுவான கவிதை மரபில் கவிஞனின் மரபில் கவிஞனின் இடம் எது என்று நிர்ணயித்துவிட இயலும். ஆனால் வைதீஸ்வரனின் முழுத் தொகுப்பு எதிர்மறையாகவே விடை அளிக்கிறது.சமீபத்திய மறு வாசிப்பில் எனக்குக் கிடைத்தது வைதீஸ்வரனின் கவிதை உலகைப் பற்றிய முழு அறிவல்ல. அந்த உலகின் வரைப் பட விபரம் மட்டுமே. இது காலத்தின் நிர்த்தாட்சண்யமா ? கவிதையின் குறையா ? என்பது விரிவான விமர்சனத்தை நோக்கும் கேள்வி.

(நகரச் சுவர்கள் — எஸ் வைதீஸ்வரன் விலை ரூ 35/- கிடைக்குமிடம் ஸ்நேகா 948 டி டி கே சாலை, (முதல் தளம்) . இராயப் பேட்டை , சென்னை 14)

(நன்றி : புதிய விருட்சம்)

Series Navigation