வரட்டு அறிவுக்கு அப்பால்!

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சுப்பிரமணியம் தம் முப்பதாம் வயது வரையில் நாத்திகராக இருந்தார். அதன் பின் அவர் எவ்வாறு ஆத்திகராக மாறினார் என்பது கீழே சொல்லப்படுகிறது.

சுப்பிரமணியனுக்கு ஒரு மகள் உண்டு. அவளும் பிஞ்சிலே பழுத்தவளாய்த் தன் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு நாத்திகவாதியாகத் திகழ்ந்தாள். முற்பிறவி சார்ந்த வாசனையாலோ என்னவோ அவள் மிகச் சிறு பெண்ணாக இருக்கும் போதே ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால், இத்தனை

ஏழைகள் இருப்பானேன் ?’ என்று சிந்தித்தாள். தனது இந்த எண்ணத்தை அவள் தன் அப்பாவிடம் தெரிவித்த போது அவர் ஒரே ஒரு புன்னகை மட்டுமே புரிந்தார்.

“என்ன அப்பா, பதில் சொல்லாமல் சிரிக்கிறீர்கள் ?” என்று அவள் வினவியபோது அவர் தமது நாத்திக எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஓர் ஆத்திகராக மாறியவராக இருந்தார். தன் அப்பாவும் ஒரு காலகட்டத்தில் நாத்திகராக இருந்ததோ, பின்னர் ஓர் அதிசய நிகழ்வால் அவர் மாறியதோ அந்தப் பெண்ணுக்கு அப்போது தெரியாது.

“பதில் சொல்லுங்கள், அப்பா!” என்று அவள் மீண்டும் கேட்க, அவர் சொன்னார்: “இதோ பாரம்மா! இந்தக் கேள்விக்கெல்லாம் நான் சொல்லும் பதிலை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. உனக்கு இன்னும் பன்னிரண்டு வயது கூட நிரம்பவில்லை. போகப் போக நீயே புரிந்து கொள்ளுவாய்!” (ஆனால், ‘நான் புரிந்துகொண்டதைப் போல’ என்று அவர் சொல்லவில்லை.)

அவர் கோவிலுக்கெல்லாம் போக மாட்டார். வீட்டிலும் பூசை, வழிபாடு போன்றவற்றைச் செய்ய மாட்டார். எனவே அவரும் நாத்திகரோ என்கிற ஐயம் அவளுக்கு இருந்தது. எனவே, “உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா, அப்பா ?” என்று அவள் ஆர்வத்துடன் வினவினாள்.

“அதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய் ? அது நீயாகவே சிந்தித்தும், உன் அனுபவங்களிலிருந்தும், நம்பகமான பிறரின் அனுபவங்களிலிருந்தும் நீயே உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். கடவுள் நம்பிக்கை இருப்பதை விடவும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அதிக முக்கியமானது.” – இவ்வாறு அவளுக்குப் பதில் சொன்ன காலகட்டத்தில் அவர் நாத்திகத்தைக் கைவிட்ட – ஆனால் சடங்குகளில் நம்பிக்கையற்ற – ஆத்திகர் என்பது பின்னாளில்தான் அவளுக்குத் தெரிய வந்தது.

நாள்கள் நகர்ந்தன. அவள் வளர வளர, நாத்திகச் சிந்தனைகளும் அவளிடம் வளர்ந்தன. இவ்வளவுக்கும், அவள் நாத்திக வாதம் புரிந்துகொண்டிருந்த எந்த மனிதருடையவும் சொற்பொழிவைக் கேட்டதோ, அத்தகையோர் எழுதிய நூல்களைப் படித்ததோ இல்லை.

தன் பதினாறாம் வயதில், மறுபடியும் அதே கேள்வியை அவள் தன் தந்தையிடம் கேட்ட போது அவர் தம் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்.

“நான் கூட உன்னைப் போலத்தான் சின்ன வயதில் நாத்திகச் சிந்தனைகள் உள்ளவனாக இருந்தேன். முப்பது வயது வரையில் அச்சிந்தனை என்னிடம் தொடர்ந்தது. பின்னர்தான் என்னை மாற்றிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. நீயாகவே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று அன்று நான்

சொன்னதுண்டுதா னென்றாலும், இப்படியே உன்னை விட்டு விட மனமின்றி அதைப் பற்றி இப்போது சொல்லப் போகிறேன்.”

அவள் ஆவலே உருவானாள்: “என்ன நடந்தது, அப்பா ?”

“ உன் பாட்டி – அதாவது என்னுடைய அம்மா – கடவுள் நம்பிக்கை நிறைந்தவர். அப்போது எங்கள் குடும்பம் பழநியில் வசித்து வந்தது. உன் பாட்டி பக்தி நிறைந்தவர் மட்டுமல்லாது மிக, மிக நல்லவரும் கூட! சடங்குத்தனமான பூஜைகளில் ஈடுபட்டாலும், ஏழைகளிடம் இரக்கமும் அவர்களுக்கு உதவும் ஈகையும் உள்ளவர். நாள்தோறும் முருகணையும் மீனாட்சி அம்மனையும் வழிபடுவது அவர் வழக்கம்.

நான் சாரணத் தலைவராகப் பணி புரிந்துகொண்டிருந்த வேளை. அடிக்கடி நான் காடு, மலை என்று சுற்றுவேன். வீர, தீரச் செயல்களும், இவ்வாறு மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் சுற்றுவதும்

எனக்குப் பிடித்த விஷயங்கள். உன் பாட்டி என்னை ஏதேனும் துஷ்ட மிருகங்கள் அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுவார். எனவே நான் கிளம்பும் போதெல்லாம் அழுது மாய்வார். நான் பொருட்படுத்தவே மாட்டேன்.

“ஒவ்வொரு ஞாயிறன்றும் வீட்டில் ரணகளம்தான். பாட்டி அழுது மாய்ந்ததை என்னால் தடுக்கவே முடியவில்லை. ஆனாலும் என் சுற்றுலாவை நான் நிறுத்துவதாக இல்லை. பின்னர், திடாரென்று உன் பாட்டி அழுவதை நிறுத்தினார். வரிசையாக இவ்வாறு சில ஞாயிற்றுக்கிழமைகள் கழிந்தன.

எனக்குள் வியப்பான வியப்பு.

“. . . ‘என்ன, அம்மா, இது! இப்போதெல்லாம் நீங்கள் என்னைத் தடுப்பதே இல்லையே! என்ன விஷயம் ? இவனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்று நிறுத்தி விட்டார்களா ? ‘ என்று ஒருநாள் அவரிடம் வினவினேன்.

‘ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அதைச் சொன்னால் நீ சிரிப்பாய்!’ என்றார் என் அம்மா.

‘பரவாயில்லை. சொல்லுங்கள்,’ என்று நான் தூண்டியதும் அம்மா சொன்னார்: ‘ கொஞ்ச நாள்களுக்கு முன் ஒருநாள் என் கனவில் மீனாட்சி அம்மன் வந்தாள். ‘நீ ஏண்டி இப்படி அழுது புலம்புகிறாய் ? அவன் பின்னால் நான் எப்போதும் போகிறேனாக்கும். நீ கவலையே படாதே’ என்றாள். அன்றிலிருந்து நான் உன்னைப் பற்றிக் கவலைப் படுவதை நிறுத்திவிட்டேன்,’ என்றார் அம்மா.”

“நீங்கள் விழுந்து விழுந்து சிரித்திருப்பீர்களே!” என்றாள் அவர் மகள்

“பின், சிரிக்காமல் இருப்பேனா ? அம்மாவின் மனம் புண்படும் என்கிற நிலையிலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீ சொன்னது போல் விழுந்து விழுந்துதான் சிரித்தேன்.‘எப்போது பார்த்தாலும் காமாட்சி, மீனாட்சி என்று நீ வணங்கும் தெய்வங்களைப் பற்றியே

நினைத்துக்கொண்டிருக்கிறாயல்லவா ? அதனால் தான் உன் நினைவே அப்படி ஒரு கனவாக மாறியது!’ என்று மனத்தத்துவரீதியில் உன் பாட்டியைக் கேலி செய்தேன். உன் பாட்டி, ‘சரிதானடா. அப்படியே இருக்கட்டும். ஆனாலும் நீயே ஒருநாள் ஒரு மகா சக்தி இருப்பதைப் புரிந்துகொள்ளுவாய்!’ என்றார்.

“நாள்கள் சென்றுகொண்டிருந்தன. ஒரு நாள் உன் அத்தை, பெரியப்பா, இரண்டு சித்தப்பாக்கள், நான் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தோம். உனக்குத்தான் தெரியுமே, மிக, மிக மெதுவாய்ச் சாப்பிடும் வழக்கம் உள்ளவன் நானென்று! நான் ஒரு குத்துச்சண்டை வீரனாதலால், ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துபவன். என்றுமே எல்லாரும் சாப்பிட்டு எழுந்து போனதன் பிறகும் கால் மணி நேரமாவது நன்றாக மென்று சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். அன்றும் அப்படித்தான். எல்லாரும் எழுந்து போய்விட்டபிறகு நான் இலைக்கு முன் உட்கார்ந்திருந்தேன். உன் பாட்டி என் கலத்தில் சாதம் பரிமாறிவிட்டுத் தயிர் ஊற்றக் காத்துக்கொண்டிருந்தார். சாதத்தை மையாகப் பிசைந்த பிறகுதான் அதில் தயிர் விட வேண்டும் என்பது என் விருப்பமாதலால் உன் பாட்டி என் எதிரே தயிர்க் கிண்ணத்துடன் காத்துகொண்டிருந்தார்.

‘உம். இப்போது தயிரை விடுங்கள், அம்மா,’ என்று நான் சொன்னதும், அதைச் செய்யாமல், உன் பாட்டி, திடாரென்று பெருங்குரலில், ‘ எழுந்து தள்ளிப் போ, சுப்பிரமணி!’என்று கூவினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேளோ பாம்போ பக்கத்தில் வந்துவிட்டதோ என்று கவனித்தேன். ஒன்றையும் காணோம். அப்படி இருந்தால், ‘ பாம்பு, பாம்பு’, என்றோ, ‘தேள், தேள்’ என்றோ கூப்பாடு போட்டுவிட்டுத்தானே உன் பாட்டி என்னை எழச் சொல்லி யிருப்பார் என்கிற எண்ணமும் வந்தது.

‘டேய்! நான் எழுந்து போ என்று சொன்ன பிறகும் உட்கார்ந்திருக்கிறாயே! எழுந்திரடா!’ என்று உன் பாட்டி மறுபடியும் சத்தம் போட்டார். ‘என்ன அம்மா, இது ? உங்களுக்கு என்ன ஆயிற்று ? இன்னும் நான் சாப்பிட்டு முடிக்காத நிலையில் எழச் சொன்னால் எப்படி ?’ என்றேன்.

‘திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாயே, அட அறிவு கெட்டவனே!’ என்று கூப்பாடு போட்ட உன் பாட்டி சட்டென்று எழுந்து என் தோள்களுக்குக் கீழே பற்றி என்னைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு கூடத்தின் எதிர்ப் பக்கத்துக்குப் போனார். மறு வினாடி அப்படியே மல்லாந்து மயக்கமானார். அதே விநாடியில் நான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்துக்கு நேராக மேலேயிருந்து

உத்திரக்கட்டை ஒன்று மடேர் என்கிற பலத்த ஓசையுடன் என் இலைமீதும் மணை மீதும் மேல் முகட்டிலிருந்து பெயர்ந்து விழுந்தது! நான் திகைத்துப் போனேன். என் சகோதரர்களும் அக்காவும் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். நடந்ததை நான் சொன்னதும், ‘அம்மாவுக்கு ஏதோ தோன்றியிருக்கிறது. அதுதான் உன்னை இழுத்து அப்பால் போட்டிருக்கிறார்கள்’ என்று எல்லாருமே ஒட்டுமொத்தமாய்க் கருத்துச் சொன்னார்கள். நானோ திகைப்பிலிருந்து மீளாமல் அம்மாவின் மயக்கத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். சற்றே நேரத்தில் கண் விழித்த அம்மா முதலில்

மிரள மிரள விழித்தார். பிறகு, ‘உனக்கு ஒன்றும் ஆகவில்லையே! உத்திரக் கட்டை உன் தலையில் விழவில்லையே!’ என்றார்.”

“நம்பவே முடியவில்லையே, அப்பா!”

“நம்ப முடியாதுதான். அனால் நடந்ததே! உன் அத்தை, பெரியப்பா, சித்தப்பாக்களிடம் நீயே இதைப் பற்றி விசாரி. நான் ஒரு குத்துச்சண்டையாளன் என்பது உனக்குத் தெரியும். என்ன எடை

தெரியுமா நான் ? எவ்வலவு பலசாலி தெரியுமா! என்னை இழுத்து அப்பால் தள்ளிச் சென்றாரே உன் பாட்டி! அப்படி ஒரு வலிமை எப்படி வந்தது அவருக்கு!”

“அப்புறம் ? பாட்டிக்குத் திடாரென்று எப்படி அப்படி ஓர் எண்ணம் வந்ததாம் ?”

“உன் பாட்டி விவரித்ததைக் கேட்டதும் பழைய சுப்பிரமணியனாக இருந்திருந்தால் நான் வழக்கம் போல் விழுந்து விழுந்துதான் சிரித்திருப்பேன்! ஆனால், அன்று எனக்குச் சிரிப்பு

வரவில்லை. மாறாகத் திகைப்பே வந்தது.”

“அப்படி என்ன சொன்னார் பாட்டி ?”.

“எனக்குத் தயிர் ஊற்ற இருந்த போது, ‘ அவனை எழுப்பு! உடனே எழுப்பு! தள்ளிப் போகச் சொல். இல்லாவிட்டால், உத்திரக்கட்டை விழுந்து, அவன் மண்டை பிளந்து போகும்!’ என்று மீனாட்சியம்மன் உன் பாட்டியின் முன் தோன்றிச் சொன்னாளாம்!”

“நம்பவே முடியாத ஆச்சரியமாக இருக்கிறதே!”

“ஆச்சரியம்தான்! ஆனால் நான் எப்படி நம்பாமல் இருப்பது ?”

“ஆக, அன்றிலிருந்து நீங்கள் மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும்அப்பாற்பட்ட மாபெரும் சக்தி ஒன்று இருப்பதாய்ப் புரிந்துகொண்டார்கள். இல்லையா ?”

“அதேதான். நான் ஏதோ கதை சொல்லுகிறேன் என்று உனக்கு அவநம்பிக்கையாக இருந்தால், நீயே பக்கத்துத் தெருவில் இருக்கும் உன் அத்தை, பெரியப்பா ஆகியோரிடம் கேட்டுக்கொள். சித்தப்பா யாத்திரையிலிருந்து திரும்பியதும், அவரிடமும் கேட்டுக்கொள்! அந்த மகா சக்தியை ஒருவன் என்ன வடிவில் கற்பனை செய்துகொண்டு வழிபடுகிறானோ அந்த வடிவில் அது அவனுக்கு அருள் புரியும்

என்பதாய் நான் புரிந்து கொண்டேன். உருவமற்ற நிலையிலும் ஒரு ஞானத்துடன் ஆண்டவனை வழிபடலாம். அதுதான் சிறந்த வழிபாடு. கடவுளை வேதம் உருவிலி என்றுதானே சொல்லுகிறது! ஆனால், அந்தப் பக்குவம் இல்லாதவர்கள் உருவ வழிபாட்டில் ஈடுபடுகிறர்கள். ஆயிரமாயிரம்

ஆண்டுகளாய் இந்தப் பழக்கம் தொடர்வதால் அது நிற்க வாய்ப்பில்லை! ஆனால், ஒன்று. உன் பாட்டி நல்லவராகவும் இருந்ததால்தான் கடவுளின் அருள் அவருக்கு இருந்தது. கடவுளை நம்புவது என்கிற நிலையை

விடவும் ஒருவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் எனக்குத் தோன்றியது.”

அந்த இளம் பெண்ணின் குழப்பம் பெருமளவு நீங்கியது. எனினும் உடனே அத்தை, பெரியப்பா ஆகியோரிடமும் கேட்டுச் செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டாள்! அன்றிலிருந்து அவளும் கடவுள்

நம்பிக்கை உள்ளவள் ஆனாள்!

(ஆசிரியையின் பின் குறிப்பு:

இக் கட்டுரையில் வரும் அந்த நாத்திகப் பெண் நான் தான். திரு சுப்பிரமணியன் என்னுடைய தந்தை. எனது வாழ்க்கையிலும் வேறோர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. என்னதான் இது என் அப்பாவின் அனுபவம்

என்றாலும், எல்லாருமே பேசி வைத்துக்கொண்டு பொய் சொல்லி என்னை ஏமாற்றி யிருக்கக்கூடுமோ என்னும் குதர்க்க எண்ணம் எனக்கு வந்துவிடக் கூடாது என்று அம் மகா சக்தி நினைத்ததோ என்னவோ, எனக்கு அது வேறு வகையில் அதிசயம் நிகழ்த்திக் காட்டியது. ஆனால் அதை நான் யாருக்கும் சொல்லப்போவதில்லை. ஏனெனில் யாரும் என்னை நம்பவே மாட்டார்கள். நான் பொய் சொல்லுவதாகவே நினைப்பார்கள். வேறு எவரேனும் ‘இப்படி நடந்தது’ என்று என்னிடம் அதே நிகழ்வு பற்றிச் சொல்லியிருந்தால், நானும்தான் நம்ப மாட்டேன்! எனவே அது வேண்டாம்!)

jothigirija@vsnl.net

Series Navigation