லோராவின் பொருளாதாரக் கோட்பாடு

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

என் எஸ் நடேசன்


( அவுஸ்திரேலியா )

எழுவைதீவுக் கடல், காலையில் ஒரு தோற்றத்தையும் மாலையில் பிறிதொரு தோற்றத்தையும் காண்பிக்கும் விசித்திரமான கடல்.

காலைவேளையில் அலைகள் குறைந்து நீர் வற்றி கற்பாறைகள் வெளியே தெரியும். அந்தக் கரிய பாறைகளுக்கு இடையே நண்டுகள் நடமாடுவதைப் பார்க்கலாம். அந்த காட்சியை ரசித்தவாறு கரிய கற்பாறைகளுக்கிடையே நடமாடித்திரிவேன்.

மாலையானதும் கற்பாறைகளை மூடியவாறு கடல் பெருக்கெடுத்துவிடும். ஏதோ அதிக தூரம் நடந்து சென்றுதான் இந்தக்கடலின் இயற்கை அழகை ரசித்தேன் என எண்ணாதீர்கள்.

எழுவைதீவில் வீட்டிற்கு சமீபமாகத்தான் கடல். நடந்தே போய் கால் நனைக்கலாம். கிழக்குப்பக்கம் நடந்தாலும், மேற்குப்பக்கம் நடந்தாலும் கடல்தான்.

சிறிய வயதில் அங்கே கடலில் காலையும் மாலையும் நிகழும் மாற்றத்தைப் போன்று இங்கே மெல்பனில் பாடசாலைகளின் விடுமுறைகாலங்களிலும், பாடசாலை நாட்களிலும் வாகனப் போக்குவரத்தில் நிகழும் மாற்றத்தை அவதானித்துள்ளேன்.

பாடசாலைகள் ஆரம்பிக்கும் வேளையில் வீதிகளில் வாகனங்கள் நிரம்பி வழியும். பாடசாலைகள் விடுமுறைகள் முடிந்து ஆரம்பிக்கும் முதல் தினத்தன்று வேவைகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் தாமதமாகவே சென்று கடமையை தொடங்குவார்கள். தமது தாமதத்திற்கு வீதிப்போக்குவரத்து நெருக்கடியைக் காரணமாகக் கூறுவார்கள்.

இவ்வாறு தாமதமாகச் சென்ற ஒரு நாள் எனது கிளினிக்கின் கார்ப் பாக்கிங்கில் எனது வரவுக்காக ஒரு கார் காத்திருந்தது.

தமது செல்லப்பிராணியுடன் யாரோ வந்திருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டு, உள்ளே சென்றேன். பரிசோதனை மேடையில், Blue Heeler இனத்தைச் சேர்ந்த நாயொன்று படுத்திருந்தது. தலையை அசைக்காமல் கரிய விழிகளைச் சுழற்றி என்னைப் பார்த்தது. ஏதோ கடுமையான நோயாக இருக்க வேண்டும் என அனுமானித்தேன்.

“ஐஸ்வர் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. எதனை உண்ணக் கொடுத்தாலும் வாந்தி எடுக்கிறது.” அவுஸ்திரேலியாவின் நாட்டுப்புறத்திற்கே உரித்தான தொனியோடு பேசியவரை திரும்பிப் பார்த்தேன்.

அளவுக்கு அதிகமான உடல் உறுப்புக்களுடன் உயரமான அந்தப் பெண் தன்னை “லோரா” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நாயின் முன் வயிற்றை கைகளினால் அழுத்தினேன். ஜஸ்பர் முனகியது.

“நானும் ஒரு மிருக வைத்தியரிடம்தான் வேலை பார்க்கிறேன்.” என்ற லோறாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.

தனது வசம் ஒருவைத்தியர் இருக்கும் போது, ஏன் என்னிடம் தனது செல்லப்பிராணியை அழைத்து வந்தாள் ? லோராவின் செயல் எனக்கு விநோதமாகப்பட்டது.

லோறா, எனது கிளினிக்கிற்கு சமீபமாக புறநகரப் பகுதியில் தொழில் செய்யும் அந்த மிருக வைத்தியரின் பெயரை சொன்னதும் அதிர்ச்சியுடன், “ஏன் அவரிடம் காண்பிக்கவில்லை” என்ற எனது நியாயமான கேள்வியை நான் கேட்டேன்.

“அவர் மிருகங்களை கையாளும் முறை எனக்குப் பிடிக்கவில்லை” என்று சட்டென்று சொன்னாள்.

வைத்தியர்கள் நோயாளிகளை கையாளுவதை Bedside Manners என்பார்கள். மிருகங்களை கையாளும் அந்த Manners தேவை. அது அந்த வைத்தியரிடம் இல்லாததால் லோரா என்னிடம் வந்தாரோ தெரியவில்லை.

அவுஸ்திரேலிய மாட்டுப் பண்ணைகளில்தான் பெரும்பாலும் இந்த Heelers இன நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

நீல நிற நாய்களை Blue Heeler எனவும், சிவப்பு நிற நாய்களை Red Heelers எனவும் அழைப்பர்.

பண்ணைகளில் வரிசையாக செல்லத் தவறும் மாடுகளை அவற்றின் கீழ் கால்களில் மெதுவாக கடித்து அவற்றை வரிசையில் செல்ல வைக்கும். இந்த நாய்கள் பண்ணை விவசாயிகளுக்கு உதவும் குணமுடையவை. நம்பிக்கையும் கீழ்ப்படிவுமுள்ள இந்த நாய் இனங்களை Autralian Cattle dogs என்பார்கள்.

அத்தகையதொரு இனம் இன்று எனது பரிசோதனை அறையில் அசையாமல் படுத்திருக்கிறது.

“ஏதும் கொழுப்பான சாப்பாடு கொடுத்தீர்களா ?” என கேட்டேன்.

“மாட்டு எலும்புடன் கொடுத்தேன்”

“எப்பொழுது ?”

“இரண்டு நாட்களுக்கு முன்பு.”

எனது சந்தேகம் ஊர்ஜிதமாகியது.

“உங்கள் ஜஸ்பருக்கு Pancreatitis நோயின் அறிகுறி தென்படுகிறது. இரத்த பரிசோதனை தேவைப்படுகிறது. இங்கேயே விட்டுச் செல்லுங்கள்” என சொன்னேன்.

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியில் 2004 இல் தலைவராக இருந்த மார்க்லெத்தம், பொதுத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாக பங்கிரியரைரிஸ் நோயினால்

பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமானார். தேர்தலில் தோற்றார். தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மீண்டும் அந்த நோய் வந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வெளியே வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில், சுனாமி கடல் கோள் அனர்த்தம் வந்தது. தனது உடல் நலன் குறித்து எண்ணிக்கொண்டிருந்ததனாலோ என்னவோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவிக்கவில்லை. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் விட்டகன்றது.

அவருக்கு வந்த பங்கிரைற்றஸ் நோயினால் அவுஸ்திரேலியா எதிர்காலத்தில் சிறந்ததொரு பிரதமரை இழந்துவிட்டது.

ஜஸ்வர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமாகியது.

ஜஸ்வரை எடுத்துச் செல்ல வந்த லோராவிடம், “உணவு முறையில் மாற்றம் வேண்டும். பங்கிரியஸிலிருந்துதான் நொதியங்கள் மாமிசம், கொழுப்பு போன்ற உணவுப் பதார்த்தங்களை சமிபாடு அடைய செய்கின்றன. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பங்கிரியாசால் கொழுப்பு உணவு வகைகளை சமிபாடு அடையசெய்ய முடியாது. இதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பக்கற்றுகளில் உள்ளன. சற்று விலை அதிகம்” என்றேன்.

“எனக்கு அதனையிட்டு கவலை இல்லை. எங்களுக்கு பிள்ளைகளும் இல்லை. அநாவசிய பணச் செலவுகளும் இல்லை. செல்லப்பிராணிகளின் ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம்.” என்றாள் லோறா.

“எத்தனை பிராணிகளை வளர்க்கிறீர்கள் ?” என கேட்டேன்.

“மூன்று நாய்கள், இரண்டு பூனைகள். பிள்ளைகள் இருந்தால் பாடசாலை, மருத்துவ செலவுகள் அதிகம். ஆனால் இந்த பிராணிகளுக்கு அப்படி இல்லை” என்று லோரா அதிர்ச்சியடைய வைத்தாள்.

பிள்ளைகளுக்காக ஏங்குபவர்களை பார்த்திருக்கிறேன். பிள்ளைகள் இருந்தால் செலவு அதிகமாகுமே எனச் சொல்லி பிராணிகளுக்கு செலவிடும் லோறா வித்தியாசமானவள்தான்.

லோறாவிற்கு முப்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். குழந்தை பெறுவதற்கு இயற்கை வழியுண்டு இல்லையேல் in-vitro-fertilisation இருக்கிறது. ஏன் இவருக்கு குழந்தைகள் மேல் இவ்வளவு வெறுப்பு, என நினைத்து முகத்தை திருப்பிக் கொண்டேன்.

“மன்னிக்க வேண்டும் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்” என்று லோறா கேட்டாள். அவள் முகத்தில் வெட்கம் படர்ந்திருந்தது.

“எனக்கு இரண்டு பிள்ளைகள். எல்லோரும் ஒரே விதமாகத்தான் வாழவேண்டுமென்றில்லைத்தானே” எனக் கூறி லோறாவை வழியனுப்பி வைத்தேன்.

நாய் பூனைகளின் மீது அவளுக்கிருந்த நேசம் புரிந்து கொள்ளத்தக்கதாயினும் அவளுடைய பொருளாதாரக் கோட்பாடு மனதில் நெருடியது.

—-

uthayam@optusnet.com.au

Series Navigation