ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

கே.பாலமுருகன்


சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய முடியாத ஒரு பெருஞ்சுவரிலிருந்து வழியும் பாவத்திற்குரிய குறியீடுகளின் பரிதவிப்புக் குரல்கள். இந்தக் குரலைக் கேட்கும் நீங்கள் நிச்சயம் சேரப்போகும் இறுதிக்கட்டம் குற்றம் என்கிற வெளிக்குள் பதியப்பட்டிருக்கும் அவர்களின் சிதைந்த வாழ்வின் அடையாளங்களைத்தான்.

ரேனிகுண்டா தெருவில் இருளின் மஞ்சள் விளக்குகள் திட்டு திட்டாக எரிந்து பரவ, ஜானி ஓடிக் கொண்டிருக்கிறான். காவல்துறையினர் துரத்த மழையிலிருந்து தன்னை அகற்றி ஓடிக் கொண்டிருக்க, கீழே விழும் அவன் மீது மீண்டும் மழைத் தூரலைப் போடுகிறது. அங்கிருந்து ஜானி என்கிற இளைஞன் பேசத் துவங்குகிறான். இந்த முதல் காட்சி பதிவுகளுக்கே ஒளிப்பதிவாளர் சக்தியைக் கண்டிப்பாக தமிழ் இரசிகர்கள் பாராட்டியாக வேண்டும். அத்துனை அற்புதமான பரபரப்பு என்கிற எல்லையை இலாவகமாக மீறும் வசீகரம் ஏற்படுகிறது.

“மழை. . இந்த மழைக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்கு.
நான் பிறந்ததுகூட ஒரு மழை நாள்லன்னு என் அம்மா சொல்லிருக்காங்க
என் வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டது எல்லாத்துலையும் இந்த மழை இருக்கும்.
இன்னிக்கு பேயறெ இந்த மழை நல்லதா கெட்டாதான்னு எனக்குத் தெரியலை.
கண்டிப்பா நல்லதாதான் இருக்கும். ஏன்னா எனக்காக அங்க ஒரு பொண்ணு காத்திருக்கா. இந்தச் சின்ன வயசுலெ எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்கனும்? எவ்வளவு சாவு, எவ்வளவு இரத்தம். . எவ்வளவு அடி. . நான் என்ன செஞ்சேன்?”

இளம் குற்றவாளிகளின் உலகை அவர்களின் வாழ்வின் கொடூரங்களையும் வாழ்வியல் பரப்பையும் ஒரு வெறுமையான வர்ணங்களைக் கொண்டு ரேனிகுண்டாவில் பூசப்பட்டிருப்பது, கதையின் களத்தில் வெகுஜன இரசிகர்கள் வெறுனமே கடக்க முடியாத ஒரு பெருஞ்சுவராக எழும்பி நிற்கிறது. கதைச் சொல்லியான குற்றத்தின் அடிவேரிலிருந்து எழும் ஜானியின் குரல் படம் முழுக்க இளம் குற்றவாளிகளுடன் அவர்களின் தெருக்களில் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

“ஜெயில். . இந்த 19 வயசுலெ பார்க்கக்கூடாத இடம், பழகக்கூடாத மனிதர்கள். .இன்னிக்குத் தேதி 15, காற்பந்து போட்டிலெ ஜெயித்ததுக்காக என் பேரை காலேஜ்ல அறிவிப்பு செஞ்சிகிட்டு இருந்தாலும் இருப்பாங்க… ஆனா என் வாழ்க்கை என்னெ இங்க கொண்டு வந்து சேர்த்திருச்சி”

ஜானியின் குரல், காட்சிகளுடன் அவனின் இறந்த காலத்தின் நிலப்பரப்பிற்குக் கொண்டு வருகிறது. மதுரையில் இருக்கும் ஒரு ரௌளடி அவனின் அப்பாவையும் அம்மாவையும் நடுசாலையில் காரில் மோதி சாகடிக்கப்படுவதைக் கண்டு துடிக்கிறான். அப்பா என்கிற இருப்பு அவனது வாழ்வில் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. தன் அப்பாவின் கொடூரமான ஒரு கொலையை நேரில் பார்ப்பதிலிருந்து அவனது வாழ்வும் அகமும் சிதையத் துவங்குகிறது. அப்பொழுது மழையும் பெய்கிறது.

சிறை என்கிற குற்றத்தின் வலிகளை மேலும் உக்கிரமாக்கும் கொடூரமான தண்டனை களத்திற்கு பக்குவப்படாத வயதில் வந்து சேர்கிறான். அங்கு அவனுக்கு அறிமுகம் ஆகும் இளம் குற்றவாளிகளான நால்வர் படத்தில் மிக முக்கியமான அசல்கள். இவர்கள் யாவரும் கதாநாயகர்கள் கிடையாது. தோற்றத்திலும் உடல்மொழியிலும் படைப்பாற்றலிலும் ஒரு இளம் குற்றவாளிகளாகவே இயல்பாகவே வந்து போகிறார்கள். இந்தச்சமூகமும் சக மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்காத அன்பையும் ஆதரவையும் அடைய இயலாத விரக்தியின் சாயல் அவர்களின் முகங்களில் ஒட்டிக் கிடக்கிறது. கொஞ்சமும் நேர்மையற்ற அவர்களின் வாழ்வின் பின்புலம் அவர்களின் அசைவுகளிலும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் உள்ளார்ந்து ஒளிந்து கிடக்கின்றன.

பெயர்: டப்பா அல்லது பிரேம்குமார்
வயது : 19
குற்றம்: 4 கொலைகள் மற்றும் வழிப்பறி

பெயர்: மாரி
வயது: 20
குற்றம்: 3 கொலை மற்றும் 3 கொலை முயற்சி

பெயர்: பாண்டுரங்கன்
வயது: 24
குற்றம்: 8 கொலை மற்றும் பல வழக்குகள்

பெயர்: மைக்கேல்
வயது: 21
குற்றம்: 4 கொலை மற்றும் 2 ஆள் கடத்தல்

அந்த நால்வரும் அறிமுகம் ஆகும் காட்சிகளில் திரையில் உருவாகும் எழுத்துகள் இப்படித்தான் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குற்றம் அவர்களின் மூன்றாவது கையைப் போல எப்பொழுதும் எந்தவித முரண்பாட்டையும் வெளிப்படுத்தாமல் இயல்பான ஓர் உறுப்பாக பதிந்து கிடக்கிறது. சிறையில் அவர்களின் அரவனைப்பில் ஜானியும் 5 ஆம் நண்பனாக அவர்களுடன் இணைந்து சிறையிலிருந்து தப்பித்து, நண்பர்களின் துணையுடனும் உந்துதலுடன் அவனது அம்மாவையும் அப்பாவையும் கொன்ற ரௌளடியைக் கொள்வதற்குத் திட்டமிடுகின்றான்.

படத்தில் இந்தக் கொலைத்திட்டம் மிக ஆபத்தானது. உங்களை(பார்வையாளர்களை) உளவியல் ரீதியில் பாதிக்கக்கூடிய வலிமை அந்தக் காட்சிக்கு உண்டு. உங்கள் மன அடுக்குகளில் எங்கோ சிறு புள்ளியாகப் பதுங்கிக் கிடக்கும் வன்முறை உணர்வு திடீர் உக்கிரத்தை அடையக்கூடிய வகையில் நடைப்பெறும் அந்தக் கொலை, பக்குவம் பெறாத பார்வையாளர்களுக்கு ஒருவித சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். நம்மையறியாமல் பெருகத் துவங்கியிருக்கும் நமது வன்முறை உணர்வால் அந்த ஐந்து இளைஞர்களுடன் இணைந்து அந்தக் கொடியவனை நாமும் கொலை செய்து கொண்டிருப்போம். ஜானியின் கத்தி பிடித்திருக்கும் கை, நமதுடையதாக மாறி, அது அந்தக் கெட்டவனின் மார்பைத் துளைக்க வேண்டும் என்கிற அவசரத்தை ஜானியின் மீது பாய்ச்சுவதற்கு முன்னகர்ந்து வந்திருப்போம். கொலை முடிந்தவுடன் நம் மனம் நிம்மதியடையும். ஜானியின் அம்மா அப்பா மரணம் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய சலனம் நம்மை ஒரு கொலை முயற்சிக்குக் கொண்டு வந்திருக்கும். அந்த ஐவருடன் இணைந்து அந்தக் கொலையை நாமும் செய்திருப்போம். அதை உணராத நம் மனம் அந்தக் கொலைக்கான நியாயங்களை அவதானிக்கத் துவங்கியிருக்கும். இப்படியொரு கொலை சம்பவத்தைத் துணிவான உளவியல் சாத்தியபாடுகளையும் புரிதலையும் விளைவையும் முன்வைத்து எடுக்கப்பட்டு, பார்வையாளனைச் சலனப்படுத்திய விதத்தை எந்த வகையில் சேர்ப்பது என மனம் பதற்றம் அடைகிறது.

அந்தக் கொலைக்குப் பிறகு அங்கிருந்து மும்பைக்குச் சென்று பெரிய கொலையாளியாக வேண்டும் என்கிற கற்பனைகளுடன் புறப்படுகிறார்கள். இடையில் இரயிலிருந்து இறங்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் ஆந்திராவிற்குள் நுழைகிறார்கள். அங்கே பழைய சிறை நண்பன் ஒருவனைச் சந்தித்து ரேனிகுண்டாவிற்கு வருவதோடு படம் மேலும் பரப்பரப்பின் எல்லையை அடைகிறது. ரேனிகுண்டாவின் தெரு அங்குள்ள ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலையும் வாழ்க்கைமுறையையும் பிரதிபலிப்பதாகவே அமைக்கப்பட்டிருப்பது படத்தில் ஏற்படும் மேலுமொரு தற்செயலான அபூர்வம்.

ஜானியின் நகர்வில் தொற்றியிருக்கும் நீண்ட வெறுமையின் ஒரு பகுதியில் புதிய மலர்ச்சியாக, ரேனிகுண்டா தெரு மக்களின் துணிகளைத் துவைத்து உலர்த்தும் பெண் வருகிறாள். இவர்களின் முதல் சந்திப்பு ஒரு மழை நாளில் நிகழ்கிறது. சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டும் ஓர் அழகான காதலை ரேனிகுண்டா தெருவில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் காதலில் சொற்கள் இல்லை, வெறும் மௌளனம் மட்டுமே அவர்களின் மழைநாட்களை நிரப்புகிறது. இருவரின் காதலும் எந்தவிதமான அதீத பகிர்வும் இல்லாமல் மிக அடர்த்தியான ஓர் உறவாக மாறுவதுதான் ஏதோ அதிசயம் போல ரேனிகுண்டா தெருவில் நிகழ்கிறது. அவ்வப்போது ஏற்படும் இருவருக்கிடையிலான சந்திப்பில் அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ளப்படும் அன்பும் சொற்களற்ற பாவனையும் பார்வையாளனுக்குள் நெருக்கமாகுகிறது.

மாற்று சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் தமிழ் சினிமாவில், பெரும்பாலும் உடல் ஊனமற்ற கதைப்பாத்திரத்தை கதைக்குள் நுழைப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுவது கவனிக்கத்தக்கது. ரேனிகுண்டா படத்தில் வரும் டப்பா கதைப்பாத்திரத்திற்கு இரு கால்களும் ஊனமானவை. கோணலான வடிவமைப்பில் அவன் நடக்கும்போது அவனது இயலாமையைக் காட்டும். இது அந்தக் கதைப்பாத்திரத்தின் மூலம் பரிதாபத்தைச் சேகரிக்கும் முயற்சியாகவும் ஒரு தேர்ந்த பார்வையாளனால் நிர்ணயம் செய்ய இயலும் என நினைக்கிறேன். ஆனால் கதையோட்டத்தில் அவனையே ஆங்காங்கே ஒரு நகைச்சுவையாளனாகவும் கொலை உணர்வு ஏற்படும் போது வெறிப்பிடித்தவனாகவும் காட்டியிருப்பது, அந்தக் கதைப்பாத்திரத்தின் மீது குவிக்கப்படும் பார்வையாளர்களின் கவனம் கதையின் மையப்புள்ளிக்கு மிக அவசியமானதாகக் கருதப்பட்டிருக்கலாம். டப்பா என்கிற அந்த இளைஞனுக்கும் அதே தெருவில் வசிக்கும் மணிமேகலைக்கும் இடையே படத்தின் சிறு பாகமாகத் துளிர்க்கும் காதலும் வலி நிரம்பியதாகப் பேசப்பட்டிருக்கிறது.

“2 ஆம் வகுப்பு படிக்கும்போது சரோஜா டீச்சர் மகளைக் காதலிச்சேன், அது பேய்லியராச்சி. அதுக்கப்பறம் இப்பெத்தான் தெரியுமா திரும்பவும் வந்திருக்கு” எனும் டப்பா சொல்லும்போது அவனது வாழ்வு தொலைக்கப்பட்ட ஒரு பொருள் போல, மீண்டும் எங்கோ திடீரென்று ஒரு காதல் மூலம் தட்டுப்படுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி டப்பா என்கிற கதைப்பாத்திரம் ஒரு முழுமைப் பெறாத வடிவமாக கதையின் முன் கொண்டு வந்து நிறுத்தும்போது, பல இளைஞர்களின் வாழ்வு நேர்மையற்ற இந்தச் சமூகத்தின் மூலம் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை குறியீட்டின் புரிதலின் மூலம் உணரக்கூடும். இந்தச் சமூகத்தின் அலட்சியமும், புறக்கணிப்பும் சேர்ந்த மீதங்களான பாத்திரத்திலிருந்து வழியக்கூடிய ஒரு கொடூரமான குறியீடுதான் டப்பா என்கிற கதைப்பாத்திரம்.

படத்தின் கடைசி காட்சியில் ரேனிகுண்டா தெருவில் வைத்து அந்த 5 இளம் குற்றவாளிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுவதுதான் இந்தச் சமூகம் குற்றவாளிகளின் மீது காட்டும் எதிர் வன்முறையின் உச்சத்தைக் காட்டுகிறது. பெரும் புள்ளி ஒருவன் இன்னொரு முக்கிய நபரைக் கொலை செய்யச் சொல்லி அந்த இளைஞர்களை ஏவிவிடுகிறான். இதுதான் கடைசி கொலை முயற்சி எனவும் அதன் பிறகு ஜானியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மும்பாய்க்குச் சென்று அங்கே அடைக்கலம் ஆகலாம் என்கிற கற்பனையுடன் இந்தக் கொலைக்கு ஒத்துக் கொள்கிறார்கள். வாய்ப் பேச முடியாத அந்த ரேனிகுண்டா தெருவில் சந்திக்கும் அந்தப் பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஜானி அன்று தீர்மாகிக்கிறான். அவள் ரேனிகுண்டாவிலிருந்து 3 இரயில் நிலையம் தள்ளி இன்னொரு நிலையத்தில் காத்திருக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆனால் அந்த நால்வரும் கொலை முயற்சியில் தோல்வியடைய பாண்டுரங்கனையும் மாரியையும் மிகவும் பரிதாபமாக அங்கேயே அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். மீதம் இருக்கும் மூவரில் இருவர் ஏற்கனவே அவர்களைக் கொலை வெறியுடன் தேடி வரும் காவல் அதிகாரியால் ரேனிகுண்டா தெருவில் வைத்து சாகடிக்கப்படுகிறார்கள். அதில் நம்மால் பார்த்துச் சகிக்க முடியாத அளவில் சாகடிக்கப்படுவது டப்பா என்கிற ப்ரேம்குமார்தான். நீண்ட சுவர் கொண்ட ஒரு காலி இடத்தில் சிக்கிக் கொண்டு அந்தச் சுவரை ஏறுவதற்கு அவன் செய்யும் போராட்டமும், வெளியே அந்தக் காவல் அதிகாரி கையில் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதை ஓடி வந்து பார்த்துவிட்டு மீண்டும் சுவரை ஏற முயற்சிப்பதும், என உயிர் வாழ்வதற்காக டப்பா செய்யும் முயற்சிகளுக்கு முன் குற்றவாளிகள் மீதான காரணமற்ற நமது வெறுப்பு உடைந்து சிதறக்கூடும். டப்பா தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதத்திலும் உதவாத அந்த உயரமான சுவர்தான் இந்தச் சமூகமும் அவனுக்குக் கிடைத்த வாழ்க்கையும். அவனது வாழ்வின் முன் அவன் ஓர் இயலாமையைக் கண்டடைகிறான். இறுதியில் அங்கேயே சுடப்பட்டு மரணமும் அடைகிறான். குற்றவாளிகளுக்கு சட்டமும் அதிகாரமும் கொடுப்பது வெறும் தண்டனையை மட்டும்தான் என்பதைக் காட்சிப்படுத்தி உணர வைக்கும் இந்த உத்தி மிக அபாரமானது.

மூன்றாவது இரயில் நிலையத்தில் தனக்காகக் காத்திருக்கும் அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காகக் கடைசியான ஒரு நம்பிக்கையுடன் ஜானி தப்பி ஓடி இரயிலையும் அடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தனது உயிரையாவது காப்பாற்றிக் கொண்டோம் என்கிற ஆறுதலில் அங்கிருந்து வெளியேறி இரயிலின் கதவிலிருந்து தலையை வெளியே நீட்டி நம்முடன் மீண்டும் ஒரு கதைச் சொல்லியாகப் பேசத் துவங்குகிறான். அவனது வார்த்தைகளில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீதான பிடிப்பும் வெளிப்படுகிறது. மறு கணத்தில் பின்னாலிருந்து அதே காவல் அதிகாரியால் சுடப்பட்டு இரண்டாவது நிலையத்தின் பிளாட்பாரத்தை நோக்கி விழும்போது மீண்டும் அவனது குரல் ஒலிக்கிறது.

“எல்லாம் முடுஞ்சி போச்சி. . நான் என்னா தப்பு செஞ்சேன். . நடுரோட்டுல எங்க அம்மா அப்பாவெ ஒருத்தன் அடிச்சி கொன்னப்பெ அதைச் சுத்தி நிண்டு வேடிக்கைப் பாத்த ஜனங்க மேல கோபப்பட்டு கத்தியெ எடுத்துட்டுப் போய் நிண்டனெ அது தப்பா? ஜெயில்லெ என்னெ கொடூரமா அடிச்சப்பெ ஆதரவு கொடுத்த இந்தப் பசங்கக்கூட சேர்ந்தென அது தப்பா? யார் தப்பு எது தப்புன்னே தெரியாமெ இங்க நடக்குது என்னோட மரணம். என் மரணத்தைவிடக் கொடுமை, நான் வருவேன்னு அங்க காத்திருக்கற அந்தப் பொண்ணு. பாவம். . எங்கப் போகும். . என்ன பண்ணும். . எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? யாராவது அந்தப் பொண்ணெ பாத்தா சொல்லிடுங்க, நான் வரமாட்டேன்னு, என்னெ இவுங்க கொன்னுட்டாங்கன்னு.” என்கிற கடைசி வரியுடன் ஜானி இறக்க, அந்தப் பெண்ணின் காத்திருப்பைக் காட்டியபடி படம் நிறைவடையும் போது பார்வையாளன் என்கிற முறையில் அந்த மரணத்திற்கான குற்றவுணர்ச்சியும் பரிதாபமும் நமது உடலில் நெளிந்து கொண்டிருக்கும். இது உறுதி.

ஜானி நம்மை நோக்கி சொல்லும் அந்த வரியில் படத்தின் ஒட்டு மொத்த பயணத்துடன் நாம் இணைந்து அவர்களுடன் ஒரு குற்றவாளிகளாக நின்றுகொண்டிருப்போம். இதென்ன இப்படியொரு படம்? எந்தப் போலித்தனமும் அற்ற அந்த ஜானியின் குரலில் நாம் வெறும் பரிதாபத்தையும் கேள்விகளையும் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அதையும் மீறி அந்தக் குரலின் கொடூரம், பரிதவிப்பு, வாழத்துடிக்கும் எதிர்பார்ப்பு, இழப்புகளின் புலம்பல் என உங்களைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்து எறிந்திருக்கும். ரேனிகுண்டா தெருவிலிருந்து நீங்க முடியாமல் தோல்வியுற்று எங்காவது விழுந்து கிடக்கும் உங்களைத் தேடிப் பாருங்கள். அது ஜானியின் முகமாகவோ, பாண்டுரங்கனின் முகமாகவோ, மாரியின் முகமாகவோ, டப்பாவின் முகமாகவோ அல்லது மைக்கலின் முகமாகவோ இருக்கக்கூடும்.

குறிப்பு: படத்தின் இயக்குனர் பண்ணிர் செல்வம் அவர்கள் ஒருவேளை மனச் சிதைவுக்கு உட்பட்ட ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. காரணம் படத்தைப் பார்ப்பவனையும் படத்தில் ஒரு கதாபாத்திரமாக இணைக்க வைக்கும் காட்சிகளில் துல்லியமான உளவியல் விளைவுகளை உக்கிரமான சிதைவுகளாகக் உபயோகித்திருப்பதைக் காணும்போது சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு தமிழ் திரைப்படம் இத்துனை ஆழமாகச் சென்று குற்றங்களின் வேரைப் பிடித்துக் கொண்டு சிறுக சிறுக ஒரு படிமமாக மாறக்கூடுமா என்பதில் தமிழ் சூழலில் அதிசயமே. வாழ்த்துக்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation