’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ரிஷி


’ரிஷி’ யின் கவிதைகள்

1) மக்கள் சேவை

பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த வயிறுகளைத்
திரட்டியெடுத்து,
அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட
அழகான உறைகளில் மடித்துப்போட்டு,
அவசரம் என்று மேற்புறம் அடிக்கோடிட்டு,
ஆற அமர விலாசம் எழுதி
அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்
அயல்நாடுகளுக்கு.
இப்படிச் செய்வதன் மூலம்
பாதிக்கப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில்
பயன் பெறுவார்கள்
என்று காரணங் கூறப்பட்டது.
வயிறில்லாத நிலையில்
பசியால் இனி அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்
என்று ஆறுதல் கூறப்பட்டவர்களாய்,
நம்பிக்கையளிக்கப்பட்டவர்களாய்
அப்பாவி மக்கள்
வயிற்றுப் பகுதியின் வெற்றிடத்திற்குள்
செயலற்று முடங்கிக் கிடக்க,
வாகாய் துண்டாடப்பட்ட அவர்களுடைய
சிறுகுடல்கள், பெருங்குடல்கள், கணையங்கள்
கல்லீரல்களெல்லாம்
கடல் கடந்தும் கடக்காமலும்
கொழுத்த லாபத்திற்குக்
கடைவிரிக்கப்பட்டவண்ணமே…

0

2) ஆட்சித்திறன்

எழுதுகோல்களால் நிரப்பட்டுவருகின்றன சிறைகள்.
முனைகள் முறிக்கப்பட்டவை,
ஒரு துளியும் மிச்சமின்றி
மசி வெளியேற்றப்பட்டவை,
வெள்ளைத்தாள்களுக்கு
வெகுதூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டவை…
கூடவே, வெட்டியெறியப்பட்ட சில
கட்டைவிரல்களும்,
ஆள்காட்டிவிரல்களும் கூட
விசியெறியப்பட்டிருந்த அந்த இருட்பெட்டியறையில்
காலத்தின் தூசி வேகமாகப் படர ஆரம்பித்துவிட்டது.
வாடிக்கையாக அவற்றைக் கணக்கெடுக்க வரும்
மேற்பார்வையாளர்
அசைவற்றுக் கிடந்த அவற்றை நோக்கி
வசைமொழிந்தார் எள்ளலோடு:
”வாளை விட வல்லவராமே நீங்களெல்லாம்!
நல்ல வேடிக்கை!”
பின்-
தன் அன்றைய அலுவலை முடித்துக் கொண்டு கிளம்பியவரின்
கால்கள் நகரவியலாமல் பின்னுக்கு இழுக்கப்பட,
திரும்பிப் பார்த்தார்.
கட்டைவிரல்களும், ஆள்காட்டிவிரல்களும்
இறுகக் கோர்த்து இரு வளையங்களாகி
அவருடைய கணுக்கால்களைப் பிணைத்திருக்க,
இறைந்துகிடந்த எழுதுகோல்முனைகள்
ஒன்றன்மேலொன்றாய்ப் பொருந்தி
ஆர்த்தெழுந்து கொண்டிருந்தன அரிய
எறிகணைகளாய்!

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation