யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

துவாரகன்


திருடர்கள் களவெடுக்கிறார்கள்.
தாம் வைத்த இடத்தில்
தம் பொருட்களை எடுத்துச் செல்வதுபோல்.

என் உணர்வு
என் இருப்பு
எல்லாம்
யார் யாரோ களவாடிச் சென்றபின்
யாருமறியா இருளில்
திருடர்கள்
என் பொருட்களையும் களவாடிச் செல்கிறார்கள்.

என் இனத்தவர்கள்
என் உறவினர்கள்
அவர்களின் சாவில்கூட
நானும் பங்குகொள்ள வேண்டியவன்.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதும்
பார்க்காதபோதும்
என்னை வருத்தி நான் சேகரித்த
என் பொருட்களையும்
களவாடிச் செல்கிறார்கள்.

பட்டுப்போன ஒரு பனைமரக் கொட்டுப்போல்
நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

களவு பற்றிக் கதைப்பதிலும்
கணக்குப் பார்ப்பதிலும்
எங்கள் காலங்கள்
வெகு இலகுவாகக் கழித்து கொண்டிருக்கின்றன.
மிகச் சாதாரணமாய்
ஒரு மனிதனின் சாவு போலவே.


mskwaran@yahoo.com

Series Navigation