மேட் ரிக்ஸ் டே..

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

புதியமாதவி, மும்பை


-நிஜாமாவே வர்றியாம்மா..வருண் கேட்டான்

-ஆமாண்டா..எனக்கும் இன்னிக்கி ரொம்பவே போரடிச்சு போச்சுடா

நானும் வர்றேண்டா..

-அம்மா.. இங்கிலிஸ் படம். முதல் இரண்டு பார்ட் பார்த்தவுங்களுக்குத்தான் புரியும்

அப்புறம் நீ வந்துட்டு ஏன் வந்தோம்னு வீட்டில் வந்து புலம்பக் கூடாது.

– மாட்டேன் டா.

காட்டன் புடவையை எடுத்து கட்டிக் கொண்டேன். எங்கும் வெளியில் கூட்டிச் செல்வதற்கு இப்போதெல்லாம் சிவாவுக்கு நேரம் கிடைப்பதில்லை. பதவி கூட கூட வேலைப் பளுவும் கூடிக் கொண்டு போனது. ஆனால் மாதத்திற்கு ஒரு நாளாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது மனைவியுடன் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே இப்போதெல்லாம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

டூ வீலரில் மகன் பின்னால் உட்கார்ந்து அந்த வெயிலில் போவது கூட ஒரு தனி வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.

அவன் வேகமாக ஓட்டும் போது ‘பாத்து போடா.. என்ன அவசரம்.. 3.30 க்குத் தானே ஷோ. இன்னும் நேரமிருக்கு. வீக் டேசில் கூட்டமிருக்காதுடா.. ‘ என்று சொன்னாலும் அவன் வேகத்தில் சின்னதாக ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது.

ஆர்மால் (R-MALL) ஷாப்பிங் செண்டரில் 3வது மாடியில் இருக்கும் அட்லப் சினிமா திரை அரங்குகளில் கூட்டமே இல்லை. அவர்கள் பார்க்க வந்த மேட் ரிக்ஸ் படம் திரை எண்: 4 ல் ஓடியது.

டிக்கெட் வாங்கிவிட்டு கடை கடையா சுத்தலாம்மா..

சரிடா..

அப்படியே இரண்டாவது மாடிக்கு வந்து கோன் ஐஸ்கீரிம் வாங்கி இருவரும் கைகளில் வைத்துக் கொண்டு படிகளில் இறங்கும்போது கூட்டம் கூட்டமாக பசங்கள் ..

அப்போதுதான் காலேஜ் விட்டிருக்கும் போலிருக்கின்றது.

படம் பார்க்க வந்தவர்கள்.., ஷாப்பிங் வந்தவர்கள், ஷாப்பிங்கில் கம்பேனி கொடுக்க வந்தவர்கள்.. நுழைவுக் கட்டணமில்லாததால் கொஞ்ச நேரம் ஏ.சி.யில் உட்கார்ந்து போக வந்தவர்கள்.. செட் செட்டாக இளசுகள்.. ஆணும் பெண்ணுமாய். இவ்வளவு நல்லாயிருக்கும் ஷாப்பிங் காம்ளெக்ஸில் லூ எப்படி இருக்கும் என்று பார்க்கலாமேனு தோன்றியது.

வருணைப் பார்த்தவுடன் ‘எங்கே வந்தாலும் உனக்குப் போயி ஆகணுமே.. சரி போய்ட்டு வாம்மா.. நான் இந்த புக் செண்டரில் இருக்கேன் ‘

உள்ளே போனால் அப்படியே பைஃவ் ஸ்டார் ஹோட்டலின் லூ மாதிரி இருந்தது. பிரம்மாதம்.. ஒவ்வொரு லூவிலும் டாய்லெட் டிஸ்யு பேப்பர்கள்.. ஹேண்ட் டிரையர்.. சுவரெல்லாம் கண்ணாடி.. சரிதான் அதுதான் இங்கே 5 ரூபாய் பாப்கார்ன் கூட 25 ரூபாய்.. கணக்கு சரிதான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் டிஸ்யு பேப்பரை கிழித்து ஹேண்ட் பேக்கில் அவசரத்திற்கு முகம் துடைத்துக் கொள்ளலாம்னு எடுத்து வைத்துக் கொண்டு பளிச்சுனு வெளியில் வந்தாள்.

புத்தகக் கடையில் வருண் அனிமேஷன் பற்றிய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். வந்திட்டியா..மம் இந்தப் புக்கைப் பாரேன். இதுதான் நான் தேடி அலைந்த புத்தகம். வாங்கிடலாமா.. மாஸ்டர் கார்ட், விசா கார்ட் வச்சிருப்பியே..

புக்கை வாங்கி பின்பக்கம் திருப்பினாள்.

முதலில் விலையைத்தான் பார்த்தாள். 750 ரூபாய்.

ஏன் டா.. விலை அதிகமில்லை..

என்னமா இது புரியாதமாதிரி பேசறே.. புத்தகமெல்லாம் எல்லா இடத்திலும் ஒரே விலைதான்..இந்தப் புத்தகம் புதுசு.. உன் வி.டி, சர்ச்கேட் சைட் விண்டோ ஷாப்பிங் மால் இல்லை.

சரிதான் அவன் சொல்வதும் சரிதான்.. புத்தகம்தானே கேட்கிறான். மாஸ்டர் கார்டை எடுத்து நீட்டினாள்.

அம்மா படம் முடிந்து போகும் போது மற்ற கடைக்கு எல்லாம் போகலாம். இங்கே பாம்பே பஜார் கூட இருக்கு.. வீட்டுக்கான பருப்பிலிருந்து சோப் வரைக்கும் வாங்கலாம்.

அப்படியா..

இருவரும் நேரமாகிவிட்டது என்று மூன்றாவது மாடிக்கு லிஃப்டில் போனார்கள். உள்ளே அவர்கள் நுழையும்போது வருண் வேகமாக முன்னால் சென்றுவிட்டான். டிக்கெட் என்று வாசலில் கேட்டவுடன் ‘வருண் ‘ சத்தமாகக் கூப்பிட்டதை வாசலில் சீருடையில் நிற்பவன் ஒரு மாதிரி பார்த்தான்..

‘சரியான கிறாக்க்கு ‘ என்று நினைத்துக் கொண்டேன்.

வருண்.. டாடிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் மெசஜ் அனுப்பிடுடா. நம்ம ரண்டுபேரும் மேட் ரிக்ஸ் பார்க்கப்போறோம்னு தெரியட்டும்டா.. ‘

‘ரொம்ப சைல்டிஸ்ஸா பிஹேவ் பண்றே மம்மி.. டாடி இப்போ மீட்டிங்கில் இருக்கிற நேரம்.. ‘

‘இருக்கட்டுமேடா.. அனுப்பு அனுப்பு.. ‘

சரி அனுப்பறேன்.

தியேட்டரில் இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்து விட்டது.

படம் ஆரம்பிக்கும் முன் தேசியகீதம்..பரவாயில்லையே.. எழுந்து நிற்கும்போது எல்லோரையும் பார்த்தா.. எல்லாம் இளசுகள்..இளசுகள்….

சே இன்னிக்கி பார்த்து இந்தப் புடவையைச் சுத்திக்கிட்டு வந்திட்டேனே.. என் கூட வரும் போதாவது புடவைக் கட்டிட்டு வாடானு அவர் சொல்லும் போதெல்லாம் ஜீன்ஸ்சும் சூடிதாரிலும்.இன்னிக்கிப் போய் வருண் கூட மேட் ரிக்ஸ் பார்க்க வரும் போது இப்படி புடவையைச் சுத்திக்கிட்டு வந்திருக்க வேண்டாம்..ம்ம்

படம் ஆரம்பித்தது..சுத்தமா ஒன்னும் புரியலை. வருண் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்தான். படம் பார்க்கும் போது பேசினால் அவனுக்கு கோபம் ‘ வரும்..சே பேசாமா படம் பார்த்தா அது படம் பார்த்த மாதிரியா இருக்கு.. பிதாமகனோ திருமலையோ ஆஞ்சநேயரொ போயிருக்கலாம்.

புது தியேட்டர் என்பதால் சவுண் எபெஃக்ட்..காது ஜவ்வை யாரோ அரிவாள்மனையில் வைத்து அறுப்பது மாதிரி இருந்தது.

முன்பக்கம்.. ஆணும் பெண்ணுமாய்..எல்லாம் ரசனையில் மூழ்கி வலப்பக்கம் ஆணும் பெண்ணுமாய்.. காதல் ரசனையில்..ரண்டும் காதைக் கடிச்சிக்கிட்டு ஒருவர் வாயில் ஒருவர் பாப் கார்னை ஊட்டிக்கொண்டு.. சத்தத்தில் அவள் பயந்து போய் அவன் தோளில் சாய அவனும் அதற்காகவே காத்திருப்பது போல் அவளை அணைக்காமல் அணைக்க.. ம்கூம் இனி வலப்பக்கம் திரும்பிடவே கூடாது..

அப்பாடா.. இடைவேளை வந்துவிட்டது..

‘ஹாய் வருண்.. ‘ ஒரு கூட்டம் வருணைப் பார்த்து கை அசைத்தது. வருணும் பதிலுக்கு கை அசைத்து விட்டு அமைதியாக சீட்டில் உட்கார்ந்திருந்தான். இந்தப் பிள்ளைக்கு என்னாச்சு..

ஏன் இப்படி முகத்தை சீரியஸாக வச்சிக்கிட்டு இருக்கான் ?

அவன் எழுந்துபோய் பாப் கார்னோ லேய்ஸ் பாக்கெட்டோ இல்லை தம்ஸ் அப்போ வாங்கிட்டு வர்ற மாதிரி தெரியலை.

ஒருவேளை பர்ஸ் வீக்கா இருக்குமோ.. கைப்பையைத் திறந்து இரண்டு 50 ரூபாய் நோட்டுகளை நீட்டினேன்.

‘ஸோ சூவிட்.. தேங்ஸ் மம்ம்ம்ம்ம்.. ‘ என்று சிரிக்கும் முகம் இன்று எந்தச் சலனமும் இல்லாமல்..

இவனுக்கு என்னாச்சு.. லைட்டைப் போட்டவுடன் இவன் ஏன் இப்படி பேய் அறைந்த மாதிரி இருக்கான் ? படத்தை நல்ல ரசிச்சுதானே பார்த்தான்ன்..படம் புரியலை என்பதை விட இவனே இன்று புரியாமல் போய்விட்டதைத் தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

படம் ஆரம்பித்தது. எத்தனை தடவைதான்.. இதே காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டுவார்களோ.. காமிரா பல கோணத்தில்.. ஆகாயத்தில் பறந்து பறந்து சண்டை.. பி.ஸி.யில் விளையாட்டு விளையாடற மாதிரி திரையில் எல்லோரும் ஸ்பேஷ்ஷிப்பில் பறந்து கொண்டிருந்தார்கள். ஒரே மிஷின்களின் சத்தம். மிஷின்களின் அறிவியல் தனமான இந்தக் கற்பனைகளை ரசிக்க முடியவில்லை.

அய்யோ படம் முடிந்து விட்டது போலிருக்கின்றது. இந்தப் படம் முடிந்தவுடன் எழுத்துப் போடாவிட்டால்.. அதுதான் யாரு டைரக்ஷன், யார் நடித்தது என்ற ஸ்லைடு.. ஓடாவிட்டால் படம் இந்த இங்கிலிஷ் படம் முடிந்துவிட்டது என்பது யாருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. ?

முடிக்கும்போது வணக்கம். சுபம்.. என்றெல்லாம் போட்டு நடித்தவர்கள் கை அசைச்சா தானே நாமும் பை சொல்லிட்டு வர வசதியா இருக்கும் ? ஏற்கனவே இந்தப் படம் பார்த்தவர்களுக்குத் தான் தெரிந்தது. படம் முடிந்துவிட்டது என்று. மற்றவர்கள் எல்லாம் நம்ம கேசுதான்.. எழுத்துப் போட்டு லைட்டை ஆன் செய்தவுடந்தான் சீட்டை விட்டு எந்திருச்சாங்க.

எப்படியோ.. பிள்ளையுடன் மேட் ரிக்ஸ் பார்த்தாச்சு.. தியேட்டரை விட்டு வெளியில் வரும் போது கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது. என் வயதினர் யாருமே தியேட்டர் பக்கம் வந்த மாதிரி தெரியலை. வருண் என்னைக் கண்டும் காணாமல் வேகமாக நடந்தான்.

‘டேய் ஷாப்பிங் பண்ணலாம்னியே ‘

ம்ம்..

அவன் எதுவும் வாய் திறந்து பேசாமல் நடந்தான்.

‘வருண் தலை வலிக்குதுடா. சவுண்ட் எபெக்ட்.. ‘ எதோ சொல்ல வந்து அவன் முகத்தைப் பார்த்து சொல்வதா வேண்டாமானு பயம் வந்திடுச்சி..

அவனே வேண்டாம் வெறுப்பா ஸ்நாக்ஸ் சாப்பிட அழைத்துச் சென்றான். என்ன மெனு என்று பார்த்தால்.. கண்ணில் பட்டது ரசம் வடா.. விலையைப் பார்த்தால்.. அடப்பாவிகளா.. 35 ரூபா.. வடைக்கும் ரசத்திற்குமா இல்லை. ஏ.ஸிக்கும் இந்த வெளிநாட்டு செட்டப்புக்குமா..ம்கூம் வேண்டாம்..

‘வருண் காபி போதும்டா..உனக்கு என்ன வேணும் ‘

வருண் கவுண்டரில் போய் ரூபாய்க் கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டான்.

காபி கவுண்டரில் போய் காபியை வாங்கிட்டு வரும் போது வேறு ஒரு குரூப் ‘ஹேய் வருண் ‘ என்றார்கள்.

அவர்களிடம் சின்னதா ஒரு ஹேய் சொல்லிட்டு வந்து என்னிடன் காபியை நீட்டினான்..

காபியைப் பார்த்தவுடன் பாதி உயிர் வந்த மாதிரி இருந்தது.

அவன் டேபிளில் வைத்தவுடன் எடுத்தேன்..

ஐஸாக குளிர்ந்து இருந்தது..

‘என் ஜாய் தி ஐஸ்-கோல்ட் காபி.. ‘ என்று ஆணும் பெண்ணுமாய் இளசுகள் சுவரில் கண்ணாடி சட்டத்திற்குள் ச்ிரித்தார்கள்.

காபி என்றாலே ச்சூடா.. மணக்க மணக்க சூட்டை ஊதி ஊதி குடிக்கும்போது தலைவலிக்கு ஒத்தடம் கொடுக்கின்ற மாதிரி இருக்கும்.. இது என்ன குளிர்ந்த காபி.. ‘

‘வருண்.. இந்தப் பில்லோ கவர்ஸ் நல்லா இருக்கு.. வா போய் பார்க்கலாம் ‘

-வேண்டாம்..டாடிக்கூட வரும்போது போய் பார்த்துக்க

‘வருண்..இந்த ஜிம் கடைக்குப் போகலாம் வா.. என்ன விலைனு விசாரிச்சிட்டு போகலாம் ‘

வேண்டாம்மா.. பேசாமா வா

‘வருண்.. நல்ல டிசைனில் பொட்டு வச்சிருக்கான். அம்முவுக்கு வாங்கிட்டுப் போகலாம் ‘

-வேண்டாம்மா.. உன் டேஸ்ட் அவளுக்குப் பிடிக்காது..

‘வருண்..உனக்கு ஸூ பார்ப்போமா.. ‘

-ப்ச்ச்..வாம்மா..இன்னொரு நாள் பாத்துக்கலாம்..

‘வருண்.. அந்த பாம்பே பஜார் பாத்திட்டு போவோமா.. ‘

அதெல்லாம் நீயும் டாடியும் ஒரு நாள் வந்து சாவகாசமா பாருங்க…

வருண் ஆர்மால் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்தான். டு வீலரில் அமர்ந்தான்.

காற்றில் பறந்த புடவை முந்தானையை இழுத்துச் சொருகிக்கொண்டு பின் ஸீட்டில் அமைதியாக ஏறினேன்.

ஓர் ஆணும் பெண்ணும் டூவிலரில்.. பின்னால் உட்கார்ந்திருந்த பெண் வருணைப் பார்த்து ‘ஹாய் வருண்ன்ன் ‘ என்று கை அசைத்தாள்.

வருணும் சுரத்தில்லாமல் ‘ஹய் ‘ சொல்லுவது போலிருந்தது.

இரவில்.. சிவா

‘என்ன மேட் ரிக்ஸ் மதர்.. படம் எப்படி இருந்திச்சு.. அம்மாவும் பிள்ளையும் என் ஜாய் பண்ணியிருப்பீங்களே.. வயசுப் பிள்ளைக்கூட மேட் ரிக்ஸ் பார்க்கப் போன ஹய் டெக் மதர் நீங்க.. ‘

‘போடா.. உனக்குப் பொறாமை.. இனிமே எங்க போகனும்னாலும் என் பிள்ளை இருக்கான்.. ‘ .

சிவா.. கேலியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். ‘சே பாவம் என் பிள்ளை..எங்கே வேண்டுமானாலும் போகலாம்.

ஆனா என் பிள்ளைக் கூட தியேட்டருக்கு மட்டும் அதுவும் ஆங்கிலப் படம் பார்க்க..ம்கூம்… போகவே கூடாது.. பாவம் என் வருண்.. ‘

எத்தனை மேட் ரிக்ஸ் வந்து என்னத்துக்கு..

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சேர்ந்து மே ட் ரிக்ஸ் டே வருமா ?

puthiyamaadhavi@hotmail.com

திண்ணை பக்கங்களில் புதிய மாதவி

  • தீபாவளிப் பரிசு
  • கண்ப்பதி பப்பா.. மோரியா…
  • புகையில் எரியும் ராமன்கள்

    Series Navigation