மெய்மையின் மயக்கம்-10

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

மனத் திறப்பு

கதை-கவிதைகளின் வாசிப்பினால் நமக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று கேட்ட தமது ஆசிரியருக்கு மறு கேள்வி ஒன்றினால் விடை இறுத்தாராம் ஜெய மோகன்—-உடையின் வேலையைச் செய்வதற்கு எந்தத் துணியும் போதாதா ? எனினும், பல் வேறு வண்ணத் துணிகளில் உடைகளை நாம் அணிந்து கொள்கிறோமே, ஏன் ? என்று!

இந்தப் பதிலைக் கேட்டு ஜெய மோகனின் ஆசிரியர் திகைத்துப் போய் இருக்க வேண்டும். அவரது வாய் அடைத்துப் போனதில் வியப்பும் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர் கேட்ட கேள்விக்கும் இவர் அளித்து இருந்த பதிலுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

பல் வேறு வண்ணங்களை மனிதர்கள் விரும்புவதற்கும் கதை-கவிதைகளை அவர்கள் வாசிப்பதற்கும் இடையே அப்படி என்ன ஒரு தொடர்பு, அதுவும் ஒற்றுமையான ஒரு தொடர்பு இருந்திட முடியும் ? நமது மனத்தில் தோன்றுகின்ற வண்ணங்களின் விளைவுகளையும் கதை-கவிதைகளின் விளைவுகளையும் ஒப்பிட்டு நாம் பார்த்திட முடியுமா ? இரண்டு விளைவுகளும் ஒன்றானவைதாமா ?

நாம் கேட்டுக் கொண்டே இருந்திட வேண்டியதுதான்; பதில் எதையும் ஜெய மோகன் கூறிட மாட்டார்! ஏனென்றால், ‘கலைத் தவத்தினால் ‘ அவரது மனத்தில் ஏற்படுகின்ற ஒரு வகையான திறப்பில் இருந்து—- ‘மனத் திறப்பில் ‘ இருந்து—-பொங்கித் ததும்புகின்ற கருத்துகள் இவை! இவற்றிற்குக் காரண-காரியங்களைத் தேடிக் கொண்டு இருப்பவர்கள் வறட்டுத் தனமானவர்கள்—-உள்ளம் வறண்டு போன பரிதாபப் பிறவிகள்!

இந்த ‘மனத் திறப்பு ‘ என்பதைப் பற்றி ஜெய மோகன் பேசுகின்ற பொழுது ஒரு மாய்மையாக நமக்கு அது தோன்றும்; அவருக்கு மட்டும்தான் இத் தகு மனத் திறப்புகள் ஏற்படுமோ என்று ஒரு மருட்சியாகவும் அது இருக்கும்.

ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஏற்படுவதுதான் இந்த மனத் திறப்பு என்பது! வளர, வளர வயதிற்கு ஏற்பவும் சூழ் நிலைகளின் நெருக்கடியிலும் ஏற்படுகின்ற இந்த மனத் திறப்பினை அனுபவித்து வந்திடாத மனிதர் யாரும் உலகத்தில் இருந்திடவும் முடியாது.

திடும் என்று மனிதர்கள் எடுக்கின்ற முடிவுகள்—-முடிவுகளின் திருப்பங்கள், அவர்களுக்கு ஏற்படுகின்ற திகைப்புகள்—-திகைப்புகளில் இருந்து எழுகின்ற கோப-தாபங்கள், ஆவேசங்கள்—-ஆவேசத்தின் எழுச்சிகள், வீழ்ச்சிகள், என எத்தனையோ வேளைகளில் ஒவ்வொரு மனிதன் இடத்தும் மனத் திறப்புகள் ஏற்படாமல் இருப்பது இல்லை; கதை-கவிஞர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

எழுதுவதற்கு ஒரு கிளர்வு, அதாவது, மனக் கிளர்வு வேண்டும் என்று கதை-கவிஞர்கள் சொல்கிறார்களே, அந்தக் கிளர்வு (மூஃட்) என்பது கூட ஒரு வகையில் ஒரு மனத் திறப்புதான் ஆகும்.

ஜெய மோகனைப் பொறுத்த வரை, தம்மை அறியாமலே உலகத்தைக் கடவுள் படைத்து விடுகிறார் என்று ஹே:கல் கூறுவதைப் போல, தம்மை அறியாமலே அவர் உதிர்த்துத் தள்ளி விடுகின்ற கருத்துகள் இவை, அதுவும், எதிர்க் கேள்விகளாக! இவற்றை விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள்தாம் விடைகளைத் தேடிக் கொண்டு ஆக வேண்டும்.

வண்ணமும் அழகும்

வண்ணங்களிலும் வண்ணக் கலவைகளிலும் அழகினைக் காணாதவர் யாரும் இருந்திட முடியாது என்பது உண்மைதான். ஆனால், அழகு என்பதும் கதை-கவிதைகளது வாசிப்பின் விளைவு என்பதும் ஒன்றுதானா ? என்பதுதான் நமது கேள்வி.

வண்ணங்களில் ஏன் அழகினை மனிதர்கள் காண்கிறார்கள் என்பது தெரிய வில்லை. உளவியல் ஆர்வலரான அரவிந்தன் நீல கண்டன் போன்றவர்கள் இது குறித்து நமக்கு விளக்கம் அளித்திட முன் வருவார்கள் என்றால் விரிவாக இது பற்றி நாம் தெரிந்து கொள்ளுகின்ற வாய்ப்புகள் நமக்குக் கிடைத்திடலாம்.

ஆனால், நமது பிழைப்பின்—-உயிர் வாழ்க்கையின்—-தேவைகளுக்கும் அழகு ஆனவையாக நாம் கருதுகின்ற பொருள்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இல்லாமல் இருந்திட முடியாது என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. பொதுப் படையான அழகிற்குப் பொதுப் படையான தேவைகளும் தனித் தன்மையான அழகிற்குத் தனித் தன்மையான தேவைகளும் காரணமாக இருந்திடலாம், அவ்வளவுதான்!

கோயில்களுக்குச் சிவப்பு வண்ணம் பூசப் படுவது ஏன் ? என்று பி. :டி. சீனிவாசனாரைக் கேட்டால், அங்கே பலி கொடுக்கப் பட்ட மிருகங்களது அரத்தத்தின் அடையாளம்தான் அது என்று அவர் விளக்கம் அளிப்பார். வேட்டையில் மிருகங்களையோ போரில் மனிதர்களையோ கொன்று விட்ட அடையாளமாகத்தான்—-வெற்றியின் சின்னமாகத்தான்

—-நெற்றியில் நாம் வைத்துக் கொள்ளுகின்ற சிவப்புப் பொட்டும் இருந்திட வேண்டும்.

அடிமைகளின் மூக்கில் வளையங்களை மாட்டி வைத்து, அவ் வளையங்களுக்குள் கயிற்றை நுழைத்து, வரிசையாக அவர்களை இழுத்துச் செல்கின்ற வழக்கம் அசிரியாவில் இருந்து பரவிக் கொண்டு வந்து இருந்ததாம்! அவ் வழக்கத்தின் தொடர்ச்சிதான் இன்றும் பெண்கள் அணிந்து கொண்டு வருகின்ற மூக்குத்திக்குக் காரணம் என்று :பி. எஸ். உபாத்யாயா கூறுகிறார்.

வீரத்தின் நிறத்தையும் வறுமையின் நிறத்தையும் புரட்சியின் நிறத்தையும் சிவப்பு என்று மனிதர்கள் கருதிக் கொண்டு வந்து இருப்பதற்கு, தங்கள் வாழ்க்கையின் உயிர் ஓட்டமாக அவர்கள் எண்ணிக் கொண்டு வந்து இருக்கின்ற அரத்தத்தின் நிறம் சிவப்பு என்பதுதான் காரணம்.

பச்சை நிறத்தில்தான் பெரும்பாலும் பூமியின் விளை பொருள்கள் காணப் படுகின்றன என்பதனால்தான், வளமையின் சின்னமாகப் பச்சை நிறம் கருதப் பட்டும் வந்து இருக்க வேண்டும்.

உயிருடன் இருப்பது, அதுவும், வளமுடன் இருப்பது அழகு ஆனதுதான் என்றால், சிவப்பும் பச்சையும் அழகான வண்ணங்களாகத்தானே நமக்குக் காட்சி அளித்திட முடியும்! ஆனால், இவையோ நமது பருமை (மெட்டாரியல்)த் தேவைகள்!

எப்படியும், அழகு ஆனவைதாம் வண்ணங்கள் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை. ஆனால், கதைகளும் கவிதைகளும் அழகு ஆனவைதாமா ? என்பதுதான் நமது கேள்வி. அப்படி இல்லை என்றால், கதை-கவிதைகளின் வாசிப்பினால் நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற விளைவின் தன்மை என்ன ? என்பதும் கேள்வி.

அழகும் நேர்த்தியும்

‘நன்றாக ‘ இருப்பதை எல்லாம் ‘அழகாக ‘ இருப்பதாக நாம் கூறிக் கொண்டு வருகிறோம் என்பது உண்மைதான். நன்றாக எழுதுகிறான் என்பதை அழகாக எழுதுகிறான் என்றும் நன்றாக நடிக்கிறாள் என்பதை அழகாக நடிக்கிறாள் என்றும் சுத்தமாக இருக்கிறது என்பதை அழகாக இருக்கிறது என்றும் குறிப்பிடுவது நமக்கு வழக்கமாகவும் ஆகி விட்டு இருக்கிறது.

இதனால், ‘நேர்த்தி ‘யும் ‘அழகு ‘ம் ஒன்று என்று நாம் கூறி விட முடியாது.

விண்ணும் மண்ணும் மழையும் மேகமும் மலையும் மரம்-செடி-கொடிகளும் அழகு ஆனவை; நமது உழைப்பும் உற்பத்தியும் நேர்த்தி ஆனவை! முன்னவை, இயற்கையின் தோற்றங்கள் என்றால், பின்னவை, மனிதனின் படைப்புகள்! மனிதனின் படைப்புகளிலும் அழகினை நாம் கண்டிடத்தான் செய்கிறோம் என்ற போதிலும், உண்மையில் அவற்றில் நாம் காண்பது மனிதனின் நேர்த்தியினைத்தான் ஆகும்.

இதனால்தான், ‘இயற்கை அழகு ‘ வேறு என்றும் ‘கலை அழகு ‘ வேறு என்றும் ஹே:கல் கூறிட நேர்ந்தது போலும்! (ஹே:கலின் சில நூல்களை 1-07-2004 அன்று எனக்குப் பெற்றுத் தந்த குரு மாணவர் மாரிஸ் அவர்களுக்கு என் நன்றி! இவற்றுள், கலை, மதம், மெய்ப் பொருண்மை, பற்றிய ஹே:கலின் சொற் பொழிவுகளும் அடங்கும்.)

அப்படி என்றால், கதை-கவிதைகளில் நேர்த்தி எதுவும் இல்லையா ? என்று நமக்குக் கேட்கத் தோன்றிடலாம்.

ஆனால், கதை-கவிதைகளில் நாம் காண்கின்ற நேர்த்தியோ நகல்களின் நேர்த்தி; நகல்களை நடமாட விடுகின்ற சித்தரிப்புகளின் நேர்த்தி—-நமது உணர்ச்சிகள், பான்மைகள், பாங்குகள், ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்ற புனைவின் நேர்த்தி! இந்த நேர்த்தியினால் நம் உள்ளத்தில் விளைவதோ அழகு அல்ல; மாறாக, சுவனம்!

அழகான பொருள்களை நாம் காண்கின்ற பொழுது நம் உள்ளத்தில் ஏற்படுவது ‘அழகு உணர்வு ‘தானே ஒழிய சுவனம் அல்ல! வேண்டும் என்றால், அழகையும் நாம் சுவனித்திடத்தான்—-ரசித்திடத்தான்—-செய்கிறோம் என்பதால், ‘அழகுச் சுவனம் ‘ என்றும் ‘புனைவுச் சுவனம் ‘ என்றும் இவ் விரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாட்டினை நாம் வரையறுத்துக் கொள்ளலாம்.

சாறு—சாரம் என்னும் சொல்லின் திரிபுதான் ரசம்! இதனால்தான், சோற்றில் கலந்து நாம் உண்ணுகின்ற ரசம், விண்ணவ மதத்தினைச் சேர்ந்த ஒரு சில வீடுகளில் ‘சாற்றமுது ‘ (சாறு + அமுது) என்று அழைக்கப் பட்டு வருகிறது. ஆனால், ரசனை என்பது சாரமும் அல்ல; சாரமானதும் அல்ல!

ரசிகன் என்பவன் அந்தக் காலத்தில் நயவன் என்று அழைக்கப் பட்டு வந்ததாகக் கூறுகின்ற தமிழ் லெக்சி:கன், அதற்கு ஆதாரமாக அக நானூற்றுப் பாடல்: 212-ஐ எடுத்துக் காட்டுகிறது.

ஆனால், கதை-கவிதைகளின் வாசிப்பினால் நம்முள் ஏற்படுகின்ற சுவையின் நயத்தினை, சுவை நயம்—-சுவனம் என்று குறிப்பிடுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், இந்தச் சுவனத்திற்கும் அழகு உணர்வுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? என்பதுதான் நமது சிக்கல்!

மூளைச் சோம்பல்

சிந்தனையில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்து விடுகின்ற பொழுதுகளில் எல்லாம் நமது மூளையில் ஒரு சோம்பல் ஏற்பட்டு விடுகிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

‘என்ன செய்வது என்றே தெரிய வில்லை ‘ என்று புலம்பி, எந்த முடிவுக்கும் வந்திட முடியாமல் நாம் கலங்கி நிற்கின்ற வேளைகளுக்கு, சூழ் நிலைகளின் சிக்கல் மட்டும் இன்றி நமது மூளையின் சோம்பலும் கூட ஒரு காரணமாக இருந்திடக் கூடும்.

இந்த மூளைச் சோம்பலை அனுபவித்துப் பார்த்திடாத எழுத்தாளர் யாரும் இருந்திட முடியாது எனலாம். கதை-கவிதை எழுத்தாளர்களை விட பிற ஆய்வாளர்களிடம்தான் இதன் திரட்சியும் அடர்த்தியும் அதிகம் என்பதும் வெளிப் படை!

நமது மூளையின் செயல் குறித்தும் அதன் சோம்பலைக் குறித்தும் நமக்கு எடுத்துக் கூறுவதற்கு அரவிந்தன் நீல கண்டன் போன்றவர்கள் முன் வருவார்கள் என்றால் நாம் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்!

எனினும், அளவிட முடியாததாம், நமது மூளையின் நினைவு ஆற்றல்!

நமது மூளையின் ஒரு சிறிய பகுதியைத்தான்—-ஒரு குண்டூசி முனையின் அளவுக்குதான்

—-நாம் பயன் படுத்திக் கொண்டு வருகிறோமாம்; புதிய செய்திகளை நமது மூளையில் நாம் பதித்துக் கொள்ளுகின்ற ஒவ்வொரு முறையும் அந்தச் சிறிய பகுதியும் விரிவு அடைந்து கொண்டு வருகிறதாம்!

வகுத்தும் தொகுத்தும் கொஞ்சம் ஆழமாக எதையும் தெரிந்து கொள்வதற்கு நாம் முயல்கின்ற பொழுது, மூளையின் புதியது ஒரு பரப்பிற்குள் நுழைவதற்கு நாம் முயல்கிறோமாம்; இந்தக் கடினமான முயற்சியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக நாம் உழைத்திடவும் வேண்டுமாம்! இந்த உழைப்பில் தொடர்ந்து ஈடு படுவதற்கு நம்மால் முடியாத ஒரு நிலைதான் மூளைச் சோம்பல் ஆகும்.

ஒன்றை ஒன்று சந்தித்திடாமல் வெறும் இணை கோடுகளாக எதிர்க் கருத்துகள் ஒதுங்கிச் சென்று ஓரம் கட்டிக் கொண்டு, தனி ஆவர்த்தனங்களாக ஒலிப்பதற்கும் வசை மாரிகளாக அவை மாறி விடுவதற்கும், எதிர்த் தரப்பாளர்களின் பண்பாட்டு நிலவரங்கள் மட்டும் இன்றி, இந்த மூளைச் சோம்பலும் கூட ஒரு காரணம் எனலாம்.

எனவே, கார்ல் மார்க்ஸ், அரிஸ்ட்டாட்டில், ஹே:கல், என, சிக்கலின் மையத்தில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்றிட நாம் முயல்வோம்.

அரிஸ்ட்டாட்டில், ஹே:கல், கார்ல் மார்க்ஸ்

‘முதலின் சுய-பெருக்கம்தான் ஆதாயம் ‘ என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். ஆதாயம் கிடைத்திட வில்லை என்றால் முதல் பெருகாது என்பதுதான் இதன் பொருள் என்பது வெளிப்படை! ஆனால், இது வல்ல இங்கே நமக்கு முக்கியம்; இதற்கு அடிக் குறிப்பாக கார்ல் மார்க்ஸ் குறித்து இருக்கின்ற அரிஸ்ட்டாட்டிலின் கூற்றுதான் முக்கியம்.

அரிஸ்ட்டாட்டிலின் கருத்தினைக் கார்ல் மார்க்ஸ் ஏற்றுக் கொண்டு இருந்தாரா, இல்லையா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. ஏனென்றால், தமக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளைக் கூட அவற்றின் பொருத்தம் கருதி ஆங்கு ஆங்கே மேற்கோள் காட்டிச் செல்வது மார்க்சின் இயல்பு. எனவே, அரிஸ்ட்டாட்டிலுக்கு நாம் வருவோம்.

‘….ஒரு விளைவுக்கான சாதனமாக இல்லாமல், தானே தன் விளைவாக விளங்குகின்ற கலையின் இலக்குகளுக்கு வரம்பு எதுவும் இல்லை. ஏனென்றால், அந்த விளைவினை நெருங்கிச் சென்றிட இடைவிடாமல் அது முயல்கிறது. ஆனால், ஒரு விளைவுக்கான சாதனங்களைத் தேடுகின்ற கலைகளோ, வரம்பு அற்றனவாக இருப்பது இல்லை. ஏனென்றால், அவற்றின் இலக்குதானே அவற்றின் மீது ஒரு வரம்பினைத் திணித்து விடுகிறது. (அரிஸ்ட்டாட்டில், மார்க்ஸ் மேற்கோள், முதல், தொகுதி-1, பக்.151.)

‘கலைக்காகக் கலை ‘ என்று அரிஸ்ட்டாட்டில் கூறினாலும், ‘மக்களுக்காகக் கலை ‘ என்று விளம்பரம் செய்யாமல் கலையை விற்பனை செய்வது எப்படி ? எனினும், ‘மிருகங்களுக்காகக் கலை ‘ என்று யாரும் கூறி இருப்பதாக நமக்குத் தெரிய வில்லை. —-சோதிப் பிரகாசம். ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, அடிக் குறிப்பு-4, பக்.43.) ‘

நோக்கம் எதுவும் இல்லாமல் எந்தக் கதையையும் கவிதையையும் யாரும் எழுதி விட முடியும் என்று நமக்குத் தோன்ற வில்லை. வாழ்க்கையின் எந்தச் சாயையினை ஒரு கதை வலியுறுத்துகிறதோ, அந்தச் சாயைதான் அந்தக் கதையின் நோக்கம் என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறும் இல்லை.

தன்னுள் இருந்து தானாக எப்படி முதல் பெருகிட முடியாதோ, அப்படித் தன்னுள் இருந்து தானாகக் கலைகள் வளர்ந்திடவும் முடியாது; ஆதாயத்தின் இடைப்பாடு இல்லாமல் எப்படி முதல் பெருகிட முடியாதோ, அப்படி வாழ்க்கைச் சிக்கல்களின் இடைப்பாடும் அவற்றினை வலியுறுத்தி மொழிகின்ற நோக்கத்தின் இடைப்பாடும் இல்லாமல் கலைகளும் வளர்ச்சி அடைந்து விட முடியாது.

உழைப்பு, உற்பத்தி, நுகர்ச்சி, காதல், குடும்பம், அரசு, ஆட்சி, என ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கின்ற பொழுது, கதை-கவிதைகளின் வாசிப்பிற்கு மட்டும் ஒரு நோக்கம் இல்லாமல் இருந்திட முடியும் என்று நாம் கொள்வதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. அதே நேரத்தில், அனைத்து நிகழ்வுகளுக்கும் வரம்பு கட்டுவனவாக அவற்றின் நோக்கங்கள் மாறி விடுகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு வரம்புக்கு உட்பட்டதுதான் என்கின்ற பொழுது, வரம்பு எதுவும் இல்லாமல் கலைகள் மட்டும் வளர்ந்து விட முடியுமா ? எனவே, நோக்கத்தின் விரிவிற்கு ஏற்பக் கலைகள் விரிவு அடைகின்றன என்றும் அந் நோக்கத்தின் வரம்பிற்கு ஏற்பக் கலைகளும் வரம்பு படுத்தப் படுகின்றன என்றும் நாம் கொள்வதுதான் சரியாக இருந்திட முடியும்.

கலை என்பது ஓர் ஏமாற்று என்றும் வெறும் தோற்றம்தான் என்றும் யாரோ கூறினார்களாம்!

இதற்கு மறுப்புக் கூறுகின்ற வகையில் ஹே:கல் கூறுகிறார்—-தோற்றம் (அப்பியரன்ஸ்) என்பதும் காட்சி (ஷோ) என்பதும் சாரத்தின் நிலைநிற்பிற்கு (எக்ஷிஸ்ட்டன்ஸ்)த் தேவை என்று; ஒரு தோற்றமாகத் தன்னை உண்மை வெளிப் படுத்தி ஆக வேண்டும் என்று; இல்லை என்றால், பிறருக்கும் பிறிதிற்கும் தனக்கும் மனத்திற்கும் ஆனது ஓர் உண்மையாக உண்மை என்பது இருந்திட முடியாது என்று!

ஹே:கலைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

உற்பத்தி ஆகின்ற ஒரு சரக்கு விற்பனை ஆகின்ற பொழுதுதான் அதன் உற்பத்தியாளரும் விற்பனையாளரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வேறு விதமாக இதனைக் கூறுவது என்றால், விற்பனையின் போதுதான் ஒரு சரக்கின் விற்பனை-மதிப்பு நமக்குத் தெரிய வருகிறது என்று நாம் கூறலாம். இன்னும் வேறு விதமாக இதனைக் கூறுவது என்றால், விற்பனை ஆகின்ற பொழுதுதான் ஒரு சரக்கின் மதிப்புத் தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறது என்று நாம் கூறலாம்.

ஆனால் மெய்ப் பொருண்மையாளர்களோ, ‘பணத்தின் தோற்றத்தில்தான் ஒரு சரக்கின் மதிப்பு நிலை நிற்கிறது ‘ என்று இதனைக் கூறுவார்கள்.

அதாவது, மதிப்பு என்பதுதான் ஒரு சரக்கின் உண்மை (ட்ருத்); அதுதான் அதன் சாரமும் (எசன்ஸ்) ஆகும். பணத்தின் தோற்றத்தில் (அப்பியரன்ஸ்) இந்த மதிப்பு என்பது வெளிப் படுத்தப் படுகின்ற பொழுதுதான், அது நிலை நிற்பதாக (எக்ஷிஸ்ட்டன்ஸ்) நாம் கூறிட முடியும்.

ஹே:கலியச் சிந்தனையின் அடிப்படைச் சூத்திரம் இதுதான். இதற்கு எந்த எதிரீடும் நமக்கு இல்லை. ஏனென்றால், முதலாண்மைச் சமுதாயத்தின் இயங்கு விதிகளுக்கு ஏற்ப மனிதர்கள் வளர்த்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு சிந்தனைச் சூத்திரம் இது. ஆனால், கலையை—-கதை-கவிதைகளை—-வாழ்க்கையின் தோற்றம் என்று அவர் கூறுவதுதான் வேடிக்கை!

ஏனென்றால், வாழ்க்கை என்பது எதன் தோற்றம் ? என்னும் கேள்வி ஒரு புறம் இருக்க, வாழ்க்கை என்பது ஒரு தோற்றம்தான் என்று நாம் வைத்துக் கொண்டாலும் கூட, கலை என்பது அந்தத் ‘தோற்றத்தின் தோற்றம் ‘தான் ஆகிட முடியுமே ஒழிய வாழ்க்கையின் உடனடியான தோற்றம் ஆகி விட முடியாது.

நமது எடுத்துக் காட்டின் படி, பணம் என்பதுதான் மதிப்பின் தோற்றமே ஒழிய, பரிசுச் சீட்டு அல்ல! ஆனால், கதை-கவிதைகளோ பரிசுச் சீட்டினைப் போன்றவை! ஐந்து ரூபாய்க்கு ஒரு பரிசுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாயை நாம் கனவு கண்டு கொள்ளலாம், அவ்வளவுதான்!

ஆக, வாழ்க்கையில் கதை-கவிதைகள் ஆற்றுகின்ற பங்கினை நாம் புரிந்து கொள்வதற்கு அவ்வளவாக நமக்கு ஹே:கல் உதவிட முடியாது என்பது தெளிவு. சுவனம் பற்றிய அரிஸ்ட்டாட்டிலின் கருத்துகளைப் பின்னர் நாம் பார்த்திடலாம் என்ற போதிலும், இது பற்றிய அண்மைக் காலத்து ஆய்வுகளை மொழிவதற்குக் காஞ்சனா தாமோதரன் போன்றவர்கள் முன் வருவார்கள் என்றால், அவர்களால் கொஞ்சம் நாம் பயன் அடைந்து கொள்ளலாம். நமக்கு உதவுவதற்கு நண்பர் ஜெய மோகன் கூட முன் வரலாம்.

இனி, அழகு என்பதும் சுவனம் என்பதும் ஒன்றாகிட முடியுமா ? என்னும் கேள்விக்குள் நாம் நுழைவோம்.

9-07-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்