முரசொலி மாறன்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஞாநி


முரசொலி மாறன் உயிருடன் இருந்தவரை பொதுவாகப் பத்திரிகைகள் அவரை இந்த அளவு புகழ்ந்ததில்லை. கட்சித் தொண்டர்களிடம் உறவும் செல்வாக்கும் இல்லாமல் திரை மறைவில் கலைஞரை இயக்கி வந்த முசுடுப் பேர்வழி என்றுதான் அவர் சித்திரிக்கப்பட்டு வந்தார். அபூர்வமாக அவர் தி.மு.கவின் மனசாட்சி என்று புகழப்பட்டார்.

மரணத்துக்குப் பின் அவரிடம் எல்லாவிதமான நற்குணங்களும் கண்டு பிடிக்கப்பட்டு பக்கம் பக்கமாக எழுதப்படுகின்றன. உலக அளவில் ஏழை நாடுகளின் பாதுகாவலராக அவர் செயல்பட்டார் என்ற அளவுக்குப் புகழுரைகள் இப்போது குவிகின்றன.

இருவிதமான சித்திரிப்புகளுமே முழுமையானவையோ முழு உண்மைகளோ அல்ல. மிகையாகக் கொச்சைப்படுத்துதல், மிகையாகப் புகழுதல் இரண்டும் ஊடகங்களின் இயல்புகளாகிவிட்டதே இதற்குக் காரணம்.

மாறன் நிஜ வாழ்க்கையில் மிகைகளை விரும்பாத யதார்த்த மனிதர். மலர்க்கிரீடம், ராஜராஜ சோழனின் வாரிசு போன்ற தி.மு.கழக மிகைகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது. உணர்ச்சியை விட அறிவைப் பயன்படுத்துவதே அவருடைய இயல்பாக இருந்தது. எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதை ஆதரிக்காதவர் அவர் என்பது வெளியே பரவலாகத் தெரியாத விஷயம். அது கட்சிக்கு பலவீனமாகத்தான் முடியும் என்ற அவருடைய கணிப்பே சரி என்று காலம் நிரூபித்தது.

எழுபதுகளில் அவருடன் எனக்கு நேரடியான ஒரு சிறு மோதல் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக நான் கலைஞர் கருணாநிதியுடன் தேர்தல் சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக அதிகாலையில் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றேன். அன்று காலை எக்ஸ்பிரஸ் ஏட்டில் கலைஞரும் எம்.ஜி.ஆரும், ஜாதி- இன அரசியல் நடத்துவதாக என் தலைமை நிருபர் இராம.திரு.சம்பந்தம் ( தற்போது தினமணி ஆசிரியர்) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது.

நான் மாடிக்குச் சென்று புறப்படத் தயாராக இருந்த கலைஞரை சந்தித்து வணக்கம் சொன்ன உடனே, அவர் கோபமாக “ என்னய்யா, ஜாதியை வெச்சு அரசியல் பண்றேன்னு சம்பந்தம் எழுதியிருக்கான். நீ ஒண்ணும் என்கூட வரவேணாம் போய்யா” என்றார். நான் பதட்டப்படாமல் சிரித்தபடி “ அது அவர் கருத்து. நான் வந்திருக்கறது நியூஸ் கவரேஜுக்கு” என்றேன். வரவேண்டாம் என்றார் கலைஞர் மறுபடியும். “ நான் வராட்டி எங்க பேப்பருக்கு ஒரு நஷ்டமும் இல்ல. இந்த நியூஸ் இல்லாட்டியும் நாளைக்கும் வழக்கம் போலதான் விக்கும். கவரேஜ் வராட்டி உங்களுக்குதான் நஷ்டம்” என்று நான் பதில் சொன்னேன். உடனிருந்த முரசொலி மாறன் வெகுண்டு “ என்னடா சொன்னே ?” என்று என்னை முறைத்தார். நான் வெளியேறிவிட்டேன்.

சுமார் பத்தாண்டுகள் கழித்து முரசொலி மாறனின் நேரடிப் பார்வையில் நான் ஓராண்டு பணியாற்றினேன்.அப்போது இந்த பழைய சம்பவத்தை அவரிடம் நினைவு கூர்ந்தேன். பலமாக சிரித்தார். “அதெல்லாம் அந்த நேரத்துல உடனடியா ரியாக்ட் பண்ணிடறது. அதுக்கு அர்த்தம் கெடயாது.” என்றார்.

அவரிடம் நான் பணியாற்ற நேர்ந்ததே தற்செயலானதுதான். 1987ல் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வெளியான பிறகு மறைமலை நகரில் ஒரு அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது.அதைக் கிண்டல் செய்து “ அகில இந்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் ரசிகர் மன்ற சிறப்பிதழ் “ ஒன்றை வெளியிட வேண்டும் என்று நானும் என் நண்பன் நாகார்ஜுனனும் முடிவு செய்தோம். அதை அச்சிட்டுத் தர பல பெரிய அச்சகங்களில் கேட்டோம். அவர்கள் சம்மதிக்கவில்லை. முரசொலி அச்சகத்தில் அச்சடித்துத் தர முடியுமா என்று கேட்க மாறனை சந்தித்தேன். அவர் எத்தனை பிரதிகள் அடிப்பீர்கள் என்று கேட்டார். ஐந்தாயிரம் என்றோம். நான் முப்பத்தைந்தாயிரம் அடித்தால் உங்களுக்குப் பரவாயில்லையா என்றார் மாறன். எப்படிஎன்றோம். முரசொலி இப்போதுஅத்தனை பிரதிகள் அடிக்கிறோம். அத்துடன் இலவச இணைப்பாகத் தந்துவிடுவோம் என்றார். அப்படியே செய்யப்பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பையடுத்துஎன்னை அழைத்து வாரந்தோறும் ஞாயிறு இணைப்பாக ராஜீவ் அரசை விமர்சித்து இந்த மாதிரி உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டார். ஒப்புக் கொண்டு அடுத்த ஓராண்டு காலம் ‘புதையல் ‘ என்ற தலைப்பில் வார இணைப்பைக் கொண்டு வரும் பணியைச் செய்தேன்.

அதில் ராஜீவ் அரசை விமர்சிக்கும் செய்திக் கட்டுரைகளும் தேசிய முன்னணியின் தேவையை வலியுறுத்தும் கட்டுரைகளும் மட்டுமே இடம் பெறலாம் ; தி.மு.க பற்றி புகழ்ந்து எழுதுவதெல்லாம் அதில் வரக் கூடாது என்று நான் சொன்னதை மாறன் ஏற்றுக் கொண்டு அப்படியே செய்ய என்னை அனுமதித்தார். ( 1988ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்ததும், நான் இனி உங்களால் பழையபடி ராஜீவ் எதிர்ப்பு செய்யமுடியாத நிலையில் நான் விலகுகிறேன் என்று அவரிடம் சொல்லிக் கொண்டு விலகிவிட்டேன்.)

மாறனின் முக்கியமான பலம் எதிரில் இருப்பவரின் கருத்தை முழுமையாகக் கேட்டுக் கொண்டு தன் கருத்துக்கு மாற்றாக சொல்லப்படுவதையும் கேட்டுக் கொள்ளும் இயல்புதான். பல முறை விவாதத்துக்குப் பின் தன் கட்டுரையில் மாற்றங்களை செய்யத் தயங்காதவர்..

தி.மு.க, தலைவர்களில் நான் பார்த்து முழுமையாக எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியையும் செமினாரையும் படிக்கிற பழக்கம் இருந்தவர் அவர்தான். திராவிட இயக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய படித்து நிறைய எழுதும் மரபில் எஸ்.ராமநாதன், குத்தூசி குருசாமி, அண்ணா ஆகியோரின் வரிசையில் வந்தவர் மாறன்.

மாறன் கட்சி அமைப்பு வேலைகளிலும், டெல்லி அரசியலில் தி.மு.கவின் செல்வாக்கை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தாமல், நேரத்தை அதிகமாக எழுத்திலேயே செலவிட்டிருந்தால் குத்தூசி குருசாமி போன்று சிறந்த அரசியல் நையாண்டி எழுத்தாளராகியிருப்பார். 1987ல் மூப்பனாரையும் சிதமபரத்தையும் ‘புதையல் ‘ இணைப்பில் கார்ட்டூனிலும் கட்டுரையிலும் தொடர்ந்து கிண்டல் செய்ய இருவருக்கும் மூப்ஸ், சிப்ஸ் என்று அவர்தான் பெயர் சூட்டினார். மாறனின் நையாண்டிக்கு நல்ல உதாரணம், அவர் எழுதிய ‘எங்கள் தங்கம் ‘ படத்தில் சந்திரனுக்கு இந்தியா ஆளனுப்புவது பற்றி எம்.ஜி.ஆர் செய்யும் பகுத்தறிவுக் கதா காலட்சேபம்.

நவீன இலக்கியம் பற்றி அவருக்கு கலைஞர் போல அலட்சியப் பார்வை இருக்கவில்லை. பாவை சந்திரன் பொறுப்பில் வந்த குங்குமம் இதழில் புதுமைப்பித்தன் தொடங்கி சம கால நவீன இலக்கியவாதிகள் வரை எல்லாருடைய படைப்புகளும் இடம் பெற மாறனின் லிபரல் பார்வை முக்கியக் காரணம்.

மாறன் ஒரு வலதுசாரி லிபரல் சிந்தனையாளர். அதனால்தான் அவரால் வெகுஜன பத்திரிகை, டி.வி இரண்டிலும் ஒரு பெரிய நிறுவனத்தைக் கட்ட முடிந்தது.

அறுபதுகளுக்குப் பிந்தைய நவீன காலத்துடன் முதலில் தன்னைப் பொருத்திக் கொண்ட தி.மு.க தலைவர் அவர்தான். அவருக்கு தமிழனின் கடந்த காலத்தின் பொற்காலம், கண்ணகி மரபு இவற்றிலெல்லாம் ஈடுபாடு கிடையாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்து 1987ல் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் மு.மேத்தா, சுபவீ, குகநாதன், சாலையார், நான், நாகார்ஜுனன், இன்னும் சிலர் கலைஞர், வைகோ, மாறன் ஆகியோரை சந்தித்து போராட்ட வடிவம் பற்றி விவாதித்தபோது நான் போடோலேண்ட் போராளிகளின் எதிர்ப்பு வடிவங்கள் பற்றி சொன்னேன். அப்போதுமாறன் வடகிழக்கில் இன்னும் அவர்கள் பழங்குடித் தன்மையோடு இருக்கிறார்கள், ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டார்.

அவர் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்தது வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோதுதான்.திமு.கவுக்கு மக்களவையில் ஒரு இடம் கூடக் கிடைக்காதபோதும், அமைச்சரவையில் தன் ஜனதா தள் கட்சியினரின் எதிர்ப்பை மீறி வி.பி.சிங் தி.மு.கவுக்கு (மாறனுக்கு) கேபினட் அமைச்சர் பதவி அளித்தார். ஃபெடரலிசத்தை நாம் மதிப்பதன் அடையாளம் அது என்று வி.பி.சிங் கூறினார். அந்த ஆட்சி மண்டல் பிரச்சினையில் கவிழ்க்கப்பட்டதும் உடனடியாக வி.பி.சிங் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஒரு கூட்டம் விடாமல் எல்லா ஊரிலும் மாறன் வி.பி.சிங்கின் பேச்சை மொழிபெயர்த்தார். ( அதற்கு முன்பு நானோ, வைகோவோ மாறி மாறி மொழிபெயர்ப்பது வழக்கம்) அப்போது மாறன் அதைத் தான் சிங்குக்குத் தெரிவிக்கும் நன்றி அறிவிப்பாகக் கருதிச் செய்தார்.

இனி மாறன் இல்லாத வெற்றிடத்தை தி.மு.க எப்படி நிரப்பும் என்று பத்திரிகைகள் யூகங்களை எழுதி வருகின்றன.

வைகோ தன் கட்சியை தி.மு.கவில் இணைப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் பேசப்படுகிறது. அது டெல்லி அரசியலில் வைகோவை பலப்படுத்த உதவுமேயன்றி தமிழகத்தில் அவருக்கு உதவாது. ஏனென்றால் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்து விட்ட சன் டிவி நெட் வொர்க்கின் நலனை அரசியல் ரீதியில் பாதுகாத்துக் கொள்ள மாறன் குடும்பத்திலிருந்து இளைய மகன் தயாநிதி மாறன அரசியலில் இறங்க முடிவு செய்தால், தி.மு.கவுக்குள் ஸ்டாலின் தலைமையுடன் கை கோர்த்தால்தான் முடியும். அப்படிப்பட்ட இணைப்பு வைகோவுக்கு சாதகமானதல்ல.

டெல்லி அரசியலைப் பொறுத்த மட்டில் மாறன் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையில் செயலிழந்த நிலையில் இருந்து வந்த போதும் தி.மு.கவின் நிலையில் எந்த பாதிப்பும் வந்து விடவில்லை. காரணம் தி.மு.கவின் டெல்லி அரசியல் பற்றிய அணுகுமுறை மாநில சுயாட்சி, சமஷ்டி அமைப்பு, பகுத்தறிவு போன்ற திராவிடக் கோட்பாடுகள் சார்ந்ததாக இல்லாமல், உள்ளூர் எதிரி ஜெயலலிதாவை சமாளிப்பதற்கு யாரோடு சேர்ந்தால் நல்லது என்ற ஒற்றைப் பார்வையிலேயே அண்மைக் காலமாக இருந்து வருகிறது. அதுவேதான் தொடரும் என்பதால், அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலு போதுமானவர்தான். எனவே இன்றைய நிலையில் மாறனின் மரணம் கட்சியை விடக் கலைஞருக்கே மிகப் பெரிய இழப்பு. தனி மனித சோகங்களிலேயே மோசமானது புத்ரசோகம். மாறன் மறைந்து தான் வாழ்வது கலைஞருக்கு மகனை இழந்து தந்தை வாழ்வதற்கு நிகரான சோகம் என்பதில் சந்தேகமில்லை.

———————–

மாறன் பற்றி திண்ணையில்

  • காஞ்சனா தாமோதரன்
    Series Navigation

  • ஞாநி

    ஞாநி