மிஸ்டர் ஐயர்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

கவிஞர் புகாரி


குதூகலமாய்க் கொண்டாடும் மனோ நிலையில் இன்று நான் இருக்கின்றேன். என் மென்மனப்பூவின் சின்னஞ்சிறு இதழ்களை இப்போது எவரும் வம்பாய்க் கிள்ளினாலும் கிச்சுக்கிச்சு மூட்டியதாகவே உணர்வேன்… சிரிப்பேன்…. காரணம்…. 2006 கோடையில் ஒரு கொடை வருகிறது. டொராண்டோபல்கலைக்கழகம் தமிழையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள அங்கீகரித்திருக்கிறது. இந்தத் தித்திப்புச் செய்தி டொராண்டோபல்கலை தென்னாசியா மையமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கிய திரு பத்மநாப ஐயரின் இயல் விருது விழாவில் செவியில் சாக்லெட் ஐஸ்கிரீம்போல் சொட்ட நான் கனடா தேசக் கோபுர உச்சிக்கும் டொரண்டோகீழ்த்தள ரயிலடிக்கும் எகிறி எகிறிக் குதிக்கிறேன்.

ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி வாழும் சூழலின் வினோத விசயங்கள் அனைத்தையும் நகைகூட்டி எளிமையாய் எழுதும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் என்னைத் தமிழ் இலக்கியத் தோட்டம் திரு. பத்மநாப ஐயருக்கு வழங்கும் இயல் விருது விழாவிற்கு அழைத்தபோது எப்படியும் போயே தீரவேண்டும் என்று நான் என் மன ஏட்டின் மடியாத பக்கங்களில் மூன்று முறைக்கும்மேல் குறித்துவைத்தேன். உடன் செல்ல கனடா உதயன் தமிழ் வார ஏட்டின் ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கத்தையும் அழைத்திருந்தேன்.

அவர் அவரின் பங்குக்கு முன்னாள் கல்லூரி முதல்வர் கனகசபாபதி அவர்களை அழைக்க, இப்படியாய் அழைப்புகள் அதிகரித்து ஆறுபேர்ப் பட்டாளமாய் டொராண்டொ பல்கலைக்கழகம் விரைந்தோம். பொய்…. எங்கள் வாகனம் விரைந்தது. விழாவிற்குச் செல்லும் முன்பாகவே விழாவை அசைபோட்டதில், மூன்று விமரிசனங்கள் எனக்குள் முந்திரிக்கொட்டைகளாய் முந்திக்கொண்டு வந்துவிட்டன.

இந்த விசயத்தில் என்னால் அவசரப் படாமல் இருக்க முடியவில்லைதான். என்ன செய்வது ? அதுதானே என் இயல்பு! 1. ஐயர் என்று சாதிப் பெயர் கொண்டு ஒருவரை அழைத்து அவருக்கு விருதும் கொடுப்பதா ? 2. தமிழ் இலக்கியத் தோட்டத்தில் தமிழ் இல்லையா ? 3. அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இந்த ஐயர். பலருக்கும் இவர் பெயரைக்கூடத் தெரியவில்லையே ? இந்த என் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்குமா என்ற ஆர்வம் கையில் ஒளிப்பந்தம் திணித்து உற்று உற்றுத் தேடச்சொல்லி என்னை அணுவிசையாக முடுக்கிவிட்டிருந்தது. கவனமாகக் கவனித்துவந்தேன் வலைத்தளங்களில் எதை மட்டும் வாசிக்கலாம் என்று கணியெலி தேடுவதைப்போல. ஐயர் என்று தன்னைக் குறுக்கு நூலில் விரல் ஊஞ்சல் ஆட்டிச் சொல்லிக்கொண்டு, தானே உயர்ந்தோன் என்ற கர்வத்தில் இந்த பத்மநாப ஐயர் ஒருநாளும் வாழ்ந்ததில்லை. அப்படியான ஒரு சமூக அமைப்பும் அவருக்கு இல்லை. முன்பு தமிழகத்தில் இருந்த அப்படியொரு நிலை என்றுமே யாழ்ப்பாணத்தில் இருந்ததில்லை என்று யாழ்ப்பாணர்கள் ஈழத்தின்மீதே சத்தியம் செய்து ஒப்புவித்தார்கள். ஐயர் ஐயர் என்று அழைத்து அழைத்து அப்படியே அதுவும் ஒரு பெயராகிப் போனதேயொழிய அதனால் அவருக்குத் துளித்தேன் அளவுக்கும் பலனுமில்லை; சுண்டுவிரல் நகநுனி அழுக்களவுக்கும் அகந்தையுமில்லை.

விழாவினைத் தொடங்கி நடத்திச்சென்ற டொராண்டோபலகலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர் செல்வ கணகநாயகம் அவ்வப்போது அழகிய ஆங்கிலத்தில் குழைந்தார். தமிழ் தேடிச்சென்ற என்னை ஆதங்கத்தில் ஆழ்த்தினார். அடுத்து வந்த சத்தியபாமா மகேந்திரன் கொஞ்சம் பேசினாலும் கொஞ்சும் தமிழில் பேச அடடா என்று சோம்பியவன் எழுந்தமர்ந்து சமாதானமானேன். இயல் விருது வழங்க வந்த டொரண்டோபல்கலைக்கழகத்தின் புதுக்கல்லூரி முதல்வர் டேவிட் கிளன்பீல்ட் மட்டுமே தமிழ் அறியாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே பேசினாரே தவிர, மேடையேறிப் பேசவந்த ஏனைய தமிழர்கள் ஆங்கிலத்தில் துவங்கினாலும் அமுதத் தமிழிலேயே அதிகம் பேசி வானவெளி நட்சத்திரங்களை வாஞ்சையாய்த் தொட்டு தமிழமுத முத்தமிட்டு உயர்ந்தார்கள். கனடாவில், பல்கலைக்கழக வளாகத்தில் நிகழும் விழாவில் இப்படித் தமிழ் மழை பொழிவதைக் கேட்க எனக்கு எத்தனை ஆனந்தம் என்கிறீர்கள் ? விழுவதறியாமல் நயாகராவில் நழுவிவிழும் தங்க மீனின் பரவசச் சிலிர்ப்புத்தான். தமிழைப் போற்றவும் தமிழை வளர்க்கவும் தமிழ்த் தொண்டர்களுக்கு விருது வழங்கவும் அமையும் விழாக்களில் தமிழ் இல்லாவிட்டால் அங்கே கூடுவதில் பொருளுண்டா தேடலுண்டா அல்லது சொற்ப சுகம்தான் உண்டா ? அழைப்பிதழைப் பார்த்தேன். Asian Institute, University of Toronto என்று முகப்பில் எழுதி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அதன் உள்ளேயும் கூட ஆங்கிலத்தில்தான் அச்சிட்டு இருந்தது. தமிழிலும் எழுதி இருக்கலாமே என்ற என் பற்று பற்றியெரிய என் கண்கள் கருகியதை என் இதயம் கவனித்தது. தமிழ் இலக்கியத் தோட்டம் என்று அற்புதமாய்ப் பெயரிடப்பட்ட அமைப்பை Tamil Literary Garden என்றே தாழ்ந்த விழிகளுடன் எனக்கு வாசிக்க நேர்ந்ததை நான் வரவேற்கவில்லைதான், ஆனால் அதற்கு ஆறுதலாகவோ என்னவோ, டொராண்டோபல்கலைக்கழக விழா மேடையில் தொங்கிய தோரணம், ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ என்று தமிழில் கொட்டை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்கள் தராதது, விழாபற்றி எழுத விரும்பிய எனக்குச் சில சங்கடங்களைத் தந்தது.

அழைப்பிதழில் மாலை ஏழு மணி தொடங்கி ஒன்பது மணிக்கு முடியும் என்றிருந்தது. வழக்கமாய், ஏதேதோ காரணங்கள் சொல்லி ஒரு பத்து நிமிடமாவது நம் தமிழர்கள் விழாவைத் தாமதித்துவிடுவார்கள். ஆனால் அதிசயமாய் அத்தனை வருகையாளர்களும் அரைமணி நேரத்திற்கு முன்பே வந்து குவிந்திருக்க, பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே விழா தொடங்கிவிட்டது. என் ஞாபக இழைகளின் சின்னச் சின்ன இடுக்குகளிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு வந்து போனதாய் எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை. நேரத்தோடு ஒரு விழாவைத் தொடங்குவதற்கு வருகையாளர்கள் எந்த அளவுக்கு பொறுப்பாகிறார்கள் என்ற இன்னொரு கோணத்தையும் அன்று நான் தெளிவாகவே புரிந்து கொண்டேன். விழா முடிந்தும் எவரும் எழுவதாய் இல்லை. விழா முடிந்தது…. விழா முடிந்தது… விடைபெறுவோம்… விடைபெறுவோம்… என்று நடத்துனர் மீண்டும் மீண்டும் உறுதிசெய்தார். அப்படியோர் அருமையான விழாவாய் இயல் விருது விழா அமைந்தது,

டொராண்டோபல்கலைக்கழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெரும் பெருமைதான். 2005 ஜூன் மாதம் பனிரெண்டாம் தேதியின் வசந்தமாலையில் துவங்கிய விழா முதலில் வருகையாளர்களின் கலந்துரையாடல்களைச் சிறப்பாய்ச் செய்தது. தரமான வரவேற்பில் தங்கத் தமிழ்மணம் வீசியது. எதிர்பாராத சீதோசண வெப்பம், செயற்கைக் குளிர்ச்சி ஊட்டப்படாத அரங்கில் சென்னையின் சித்திரை வெயிலை அப்படியே முத்திரை மாறாமல் கொண்டுவந்து நிறுத்திவைத்துப் போரிட்டது. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு நான் என் மே மாத சென்னை விழாவில் கலந்துகொண்ட அந்தச் சூட்டைவிட இந்தச் சூட்டை உக்கிரமாகவே நான் உணர்ந்தேன். இயல்புக்கு எதிரான வெப்பம் எல்லொரையும் நீர் தேடும் பாலைவன ஒட்டகங்களாய் அடிக்கடி அலைய விட்டது. முந்நூறுக்கும் மேற்பட்ட வருகையாளர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். ஆச்சரியமும் ஆனந்தமும் ஆரத்தழுவிக்கொள்ளும் வைபவம்போல் அவர்கள் அத்தனை பேரும் தரமானவர்களாய் இருந்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்கு வந்து குவிந்திருந்தார்கள். கோட்டு சூட்டுகளுக்குள் திடார் வெப்பத்தால் அவர்கள் புழுங்கினாலும், முகத்தில் ஊட்டிமலைத் தோட்டங்களைக் காட்டி அன்பும் அறிவும் வழிய கதைத்துக் கதைத்துப் பேசினார்கள். எப்படிப்பட்டவர்களுக்காக இந்த விழா என்பதை முன்பே திட்டமிட்டு அவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ்கள் அனுப்பி வரவழைத்த விழா நெறியாளரின் சாதுர்யம் பாராட்டுக்குரியது. விழாவின் சிறப்பான விசயங்களுள் ஒன்று, லண்டன் திரு. நித்தியாநந்தன் அவர்கள் குறுகிய காலத்திலேயே தொகுத்து வழங்கிய பத்மநாப ஐயரின் குறும்படம். அதனைக் கண்ட அனைவரும் உள்ளத்தில் புத்துணர்ச்சி விதைக்கப் பெற்றார்கள். அதற்குக் கிடைத்த கைத்தட்டல்கள் அரங்கை அதிரவும் செய்தது. பலரும் ஐயரின் சேவையில் உள்ள விடாப்பிடியான குணத்தைப் பாராட்டிய வண்ணமிருந்தனர். ஒரு பைசாகூட இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கான காரியத்திலும் உடனடியாய் ஈடுபடுவதில் ஐயர் மகா வல்லவர் என்றார்கள். அவரின் தமிழ்த்தாகமும் ஈழத்தமிழர் வாஞ்சையும் அப்படியாம்! கையே இல்லாமல் முழம்போடும் வித்தகரோ நம் ஐயர் என்ற கற்பனை விரிய நான் இதழ் அவிழ்த்துச் சிரித்தேன். வெற்றித் தமிழா நீ வாழ்க என்று கர்வப்பட்டேன்! ஐயரின் நகைச்சுவை உணர்வு பற்றியும், திறந்த மனப் பேச்சு பற்றியும் திறந்த மனத்துடன் அரங்கில் குறிப்பிடப்பட்டது. புதிய புத்தகங்களை அவ்வப்போது வாங்குவதும், வாங்கியவற்றை நண்பர்கள், உறவினர்கள் என்று மட்டுமின்றி காண்பவர்கள் மூலமெல்லாம், அனைவருக்கும் அனுப்பிவைப்பதும் என்று மிகுந்த சிரத்தையோடு தமிழ்ப்பணி செய்து வந்திருக்கிறார் ஐயர். இவர் தொல்லை தாங்காமல், ஊருக்குப் போவதையே இவரிடம் சொல்லாமல் ஓடிவிடுவர் பலர் என்று நகைச்சுவையாகவும் கூற அரங்கம் சிரிப்புச் சுனாமியால் குலுங்கியது. ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழ் இலக்கியங்களை வளர்க்கும் பணியிலும் இவர் ஆற்றிய பங்கை வேறு எவருமே ஆற்றியதில்லையோ என்ற உணர்வுதான் எனக்கு விழாவில் ஊட்டப்பட்ட இனிய அமுதம். விழாவின் அடுத்த சிறப்பென்று சொல்வதென்றால், திரு. சிவதாசன் அவர்களின் சொற்பொழிவு. தமிழும் சரி ஆங்கிலமும் சரி, பருவம் சிதையாத திராட்சைகள் பாலில் நழுவி விழுவதைப்போல் விழுந்தன அவரின் உதடுகளிலிருந்து.

ஐயரை தமிழ் இலக்கியத் தூதர் என்று புகழ்ந்து மகிழ்ந்தார் சிவதாசன். ஐயர் எழுதாமல் இருந்ததே நலம், அவர் எழுதியிருந்தால் அவரின் தமிழ்ப் புத்தகத் தொண்டுக்கு மாசு நேர்ந்திருக்கலாம் என்ற தன் ஐயத்தை ஐயமின்றி அறிவித்தார். எனக்கென்னவோ ஐயரின் திட்டவட்டமான சேவையை நினைக்கும்போது அவர் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவரிடம் மிதமிஞ்சி நிற்கப்போவது, தன் சமூகத்தினரின் எழுத்துக்களைக் கரைசேர்க்கும் உயர்ந்த எண்ணமே என்று தெளிவாகவே பட்டது. அப்படியே நின்றுவிடாமல், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலுள்ள எழுத்தாளர்களையும் இவர் உற்சாகப்படுத்தி வளர்த்துவந்திருக்கிறார். அதோடு சிவதாசன், ஒரு சில ஈழத்தவரைப்போல் தமிழகத்தின் பதிப்பகங்களை வன்மையாகச் சாடினார். இந்திய மற்றும் தமிழ்நாட்டுச் சட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டிய அவர்களின் கட்டாயங்களை மீறி தனக்கிருக்கும் எதிர்பார்ப்புகளை மட்டுமே உணர்வுபொங்க வெளியிட்டார். டொராண்டோபல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை மாணவர் தலைவர் திரு அஸ்வின் ஆங்கிலத்திலேயே பேசியது என் செவிகளுக்கு வினோதமாய்ப் பட்டாலும், அழகாகப் பேசினார். தன்னை அவர் தமிழோடு வளர்த்துக்கொண்டால், பொன்மேடைகள் பல அவரை நிச்சயம் வரவேற்கும்.

சரளம் அவர் பேச்சில் நடனமாடிக்கிடந்ததை கண்டு நான் அப்போதே அவரை வாழ்த்தினேன். அக்கரை இலக்கியம், மரணத்துள் வாழ்வோம் போன்ற தரமான நூல்களின் அன்புத் தாயாக இருந்திருக்கிறார் ஐயர். டொராண்டோபல்கலைக்கழக புதுக்கல்லூரி முதல்வர் திரு டேவிட் கிளன்பீல்ட் தன் எளிமையான பேச்சுக்கிடையில் அந்தத் தேனில் மிதந்த கற்கண்டுச் செய்தியை அறிவித்தார். 2006 முதல் தமிழ் அங்கே ஒரு பாடமாகும் என்று. கைதட்டியவர்கள் பிரமாண்டமான அந்தக் கட்டிடத்தையே அசைத்துப் பார்த்துவிட்டார்கள். தமிழ் உணர்வுகள், தமிழோடு வாழும் உணர்வுகள் அன்றைய வெப்பத்தையும் விஞ்சி பேரனல் பாய்ச்சியது. உள்ளங்களோ குளிர்ந்து குதித்தன. பின்னர்தான் அந்த மிக முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. திரு பத்மநாப ஐயரை வாழ்த்தி அவருக்கு இயல் விருது வழங்கப்பட்டது, ஆயிரத்து ஐநூறு கனடிய டாலர்களுடன். அதைத் தொடர்ந்து ஒரு பொற்கிழியும் வழங்கப்பட்டது. பொன்னும் அல்லாத பெரும் கிழியும் அல்லாத பொற்கிழியைப் பெற்ற ஐயர் உயிர்க் கிளியாய்ச் சிறகடித்தார் தன் மாறாத மறையாத புன்னகையால். அதனைத் தொடர்ந்து, இயல் விருதுக்கு முழு தகுதியும் பெற்ற ஐயர் நன்றிகூற எழுந்தார். பேசினால் மனிதர் நிறுத்தவே மாட்டாராம். தமிழர்களுக்குச் சொல்ல ஒரு கோள் நிறைய தகவல்களைக் குவித்து வைத்திருக்கும் அவர் தமிழின் வளர்ச்சியையும் ஈழத்தமிழரின் சிறப்புகளையும் பெருமையோடு கூறிய வண்ணமிருப்பார் என்பதால் இவ்வளவுதான் உங்கள் நேரம், அதோடு நாம் அரங்கை விட்டுவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருப்பார்கள்போல் தெரிந்தது.

தன்னால் இந்தக் குறுகிய நேரத்தில் சடில்ல நினைப்பதை எல்லாம் சொல்ல இயலாதென்றும், காலம் இதழில் ஒன்பது பக்கக் கட்டுரையில் விவரித்து இருப்பதாகவும் கூறினார். எத்தனை எத்தனை இலக்கியங்கள் யார் யாரால் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்ற நீண்ட பட்டியலைத் தந்தார். நேரடியாகவே தமிழர்கள் இப்போது ஐரோப்பிய மொழிகளில் எழுதிவருவதையும் மார் நிமிர்த்திக் கூறினார். தமிழ் இன்று உலக அளவில் நிறைந்து மணம் பறப்புவதற்கு இலங்கையிலிருந்து 1983ல் வெளியேற்றப்பட்ட ஆறு லட்சம் தமிழர்கள் ஒரு காரணம் என்று கூறிப் பெருமைப்பட்டார். ஆனால் இப்படி வெளிநாடுகளில் புகலிடம்தேடி வந்து வாழும் தமிழர்களின் நாளைய நிலை என்ன என்று எண்ணி கவலை கொண்டார். இன்று எழுதவும் வாசிக்கவும் அறிந்த தமிழர்கள், நாளை பேசமட்டுமே செய்வார்கள். அதன்பின் அதுவும் அழிந்துவிடும் என்று தன் கவலையைத் துயரத்தோடு பகிர்ந்துகொண்டார். அதைத் தடுக்கும் வழியாகவே அவரும் அவர்போல் பலரும் பாடுபடுவதாகக் கூறி, நல்ல தமிழனாய் உயர்ந்தார். மேற்குலக நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையாக சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் வாழும் டொராண்டடாவில், உலகத் தமிழ் ஆய்வுத்துறை ஒன்று நிறுவுதல் வேண்டும் என்ற தன் ஆசையைக் கூறி அரங்கத்தில் பூத்திருக்கும் அததனை முகங்களையும் நோக்கினார். அதில் பூத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்துப் பூரித்தார். அப்போதுதான் அவர் முகத்தில் உண்மையான விருதுபெற்ற நிறைவு நிறைந்ததைக் கண்டேன். இறுதியாக வந்த காலம் செல்வம், உணர்வுபொங்க ஐயருடன் தன் பத்தாண்டு பந்தத்தை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண்டு, அவரை மனமார வாழ்த்தினார்.

அனைவருக்கும் அன்போடு நன்றியறிவித்தார். லண்டன் ஐயரின் நாற்பதாண்டுகால இலக்கியச் சேவையை நினைத்தால் என் கண்களில் வெண்ணிற நீர்க் குண்டுமணிகளாய் உருள்கின்றன. படைப்பாளிகளைக் கெளரவிப்பதால் இலக்கியம் செழிக்கும்தான். ஆனால் படைப்பாளிகளுக்குப் பக்கபலமாய் இருக்கும் எண்ணற்ற இலக்கியத் தொண்டர்களைக் கெளரவிப்பதால் இலக்கியமே நன்றியோடு தன்னை வளர்த்தப் பெருமனக்காரர்கள்முன் தலை வணங்கும் என்பதை இந்த விழா சத்தமாகவே எடுத்துக் கூறிவிட்டது. பெற்றவள் அம்மாவா வளர்ப்பவள் அம்மாவா ? விடை கிடைத்த நிறைவோடு நான் வெளியேறினேன். அது மட்டுமா, விழாவுக்கு வரும்முன் என்னிடம் உதித்த விமரிசன முந்திரிக் கொட்டைகளெல்லாம் உடைந்துபோயின. அதன் சிறப்பான பருப்பை விருப்போடு உண்டு நான் களிப்போடு விடுபட்டேன். வீடு வந்து சேரும்போது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அமைப்பையும் அதன் சேவையையும் எண்ணி என்னால் நெகிழ்ந்து வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை.

அடடா… எத்தனைப் பெரிய தொண்டு இது ? தமிழுக்கு வளம் வழங்கியவர்களில் விடுபட்டுப் போனவர்களையும் விடுபடாமல் விசாரித்து இயல் விருது கொடுத்து அன்புடன் கெளரவிப்பதென்பது சும்மாவா ? தமிழ் இலக்கியத் தோட்டம்பற்றி ஒரு தவறான எண்ணம் உலகளவில் நிலவி வருவதை என் செவிகள் கேட்டு முன்பு சிதைந்திருந்தன. ஆனால் உண்மை நிலையைக் கண்டறிந்ததும் உள்ளம் உற்சாக நடனம் இட்டது. பலரும் எண்ணுவதுபோல் இந்தத் தமிழ் இலக்கியத் தோட்டம், ஈழத்தமிழர்களுக்கே உரித்தானதல்ல. அது ஈழத்தமிழ் பரப்பவோ ஈழத்தமிழர்களை மட்டுமே வளர்க்கவோ ஏற்பட்ட அமைப்பு அல்ல. உலகளாவி இதில் பல்வேறு நாட்டினரும் அங்கம் வகித்திருக்கின்றனர். வெறுமனே இயல் விருதுகளை இலங்கைத் தமிழர்களுக்கே கொடுத்து ஒரு சின்ன வட்டமாய் முடங்கிக்கொள்ளும் அமைப்பல்ல தமிழ் இலக்கியத் தோட்டம். உலகத் தமிழர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு தரமான பரிந்துரைகளின் மூலமே இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதோடு, தமிழுக்கு விடை சொல்லிப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களை முழுமையாய்த் தமிழுக்குள் ஈடுபடுத்தவும், தமிழ்ச்சுவை ஊட்டி, தாய்மொழி உணர்வுகளை ஊட்டி, நாளைய உலகையும் திடமான தமிழ் உலகாக ஆக்க, ஆவன செய்யும் அற்புதத் தோட்டம்தான் இந்தத் தமிழ் இலக்கியத் தோட்டம். 2001ல் சுந்தர ராமசாமிக்கும் 2002ல் கே. கணேசுக்கும், 2003ல் வெங்கட் சாமிநாதனுக்கும் 2004க்கானதை இப்போது லண்டன் பத்மநாப ஐயருக்கும் என்று இதுவரை நான்கு இயல் விருதுகளை பாரபட்சம் பாராமல் நடுநிலையுடன் வழங்கியுள்ளது என்பது தித்திப்பான செய்தி. இனிவரும் ஆண்டுகளிலும் தமிழ் இலக்கியத் தோட்டம் அடையாளம் காட்டப்போகும் தமிழ்த் தொண்டர்கள் ஏராளம் ஏராளம். அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள் இன்றே…. இப்பொழுதே….!

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி