மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

சுப்ரபாரதிமணியன்



காஞ்சீவரம் பற்றி ” இனி ஒரு”வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமத‌மாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன்.

நான் எழுதிய ” பட்டு ” திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான பெண் கவிஞர், ஒரு மலையாள இயக்குனர் , ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார்யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. “ஒரு ரவுண்டு ‘போய் விட்டு வந்து இந்த ரூப‌மூம் அடைந்திருக்கலாம். “சினிமாமாவுலே இதெல்லாம் சகஜமப்பா ” என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு. எனது திரைக்கதை சுதந்திரப்போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண் பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

மலர் மன்னன் நான் குறிப்பிட்ட ” முதல் மரியாதை ‘ அனுபவம் பற்றி கேட்டிருந்தார். ” முதல் மரியாதை” படம் எனது ” கவுண்டர் கிளப் ” குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் “தீபம்” இதழில் வந்தது.இயக்குனர் பாரதிராஜா, கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன்.இரண்டு முறை திரும்பி வந்தன. மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: ” கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் . சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ” ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது. அப்போது தீபம் பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் ” வெறும் மண் ‘ என்ற நாடகத்தைத் தழுவி பாலச்சந்தர் ‘ அபூர்வ ராகங்கள் ” எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர்.அவரின் அனுபவத்தைச் சொன்னார்:
” முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அப‌ராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா ” . நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன். எனவே வழக்கை விட்டு விட்டேன்.

எனது ” கவுண்டர் கிளப் ” மையம் இது; கவுண்டர் ஒருவர் கிராமம் ஒன்றில் கிளப்‍‍=டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் ‍=தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள்.ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள்.அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும்.தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி, ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை, சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. .படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.

எனது ” சாயத்திரை “நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில் “ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை ” ஆன் லைனில் ” எழுதி முடித்தேன்.அது என்ன பாடுபடப் போகிறதோ.

திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: ‘பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க.”

சினிமாவுலே இதைல்லாம் சகஜமப்பா..

= சுப்ரபாரதிமணியன்

subrabharathi@gmail.com

Series Navigation