மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கே.பாலமுருகன்


இறந்தவர்களைப் பற்றிய
குறிப்புகளுடன்
தொடங்குகிறேன்!

இறந்தவர்கள்
சுற்றி அமர்ந்திருக்க
மாயை உலகத்தில்
இறப்பைப் பற்றி
சம்பாஷிக்கிறேன்!

இறந்தவர்கள்
இல்லாமல் போனவர்களாக
மாறியிருந்தார்கள்!

அவர்களுக்கென
குறிப்புகள் தவறியிருந்தன
அவர்கள் காலியாகியிருந்தார்கள்!

முதலில்
பேசத் தொடங்கியது
அங்கம்மாள் கிழவிதான்!
கடந்த வருடம்
தூக்குப் போட்டு
இறந்து போனவள்!

கடைசிவரை
சிவப்பு அடையாளத்துடனே
ஜனநாயகக் கோட்டிலிருந்து
விலகியவள்!

ஏதோ ஒரு மூலையில்
அங்கம்மாள் என்ற
ஒரு வெற்றுடல்
இறுதிவரை
அங்கீகாரம் அடையாமலே
வேறோரு மூலையில்
புதையுண்டது!

புதையுண்ட
பூத உடலுடன்
எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்க
வந்து அமர்ந்திருந்தாள்!

அடுத்தபடியாக
முத்துசாமி கிழவன்
பேசத் தொடங்கினான்!

சென்ற மாதம்
லோரியில் தலை நசுங்கி
இறந்தவன்!
சம்பளம் உயர்வுக்காக
ஏங்கியே
கனவுகளுடன் கற்பனை
உலகத்தில் தலை நசுங்கியவன்!

மூலை பிதுங்கி
பற்கள் உடைந்து
சிதறுண்ட முகத்துடன்
எதிரில் அமர்ந்திருந்தான்!

சம்பளம் உயர்வு
எப்பொழுது நடக்கும்?
அதற்கென
விஷேசத் தினங்கள்
வர வேண்டுமா?
அல்லது
முதலாளிகளின்
வயிறு உப்ப வேண்டுமா?

அவனுக்குப் பக்கத்தில்
அமர்ந்திருந்த மற்றுமொரு
இறந்தவன் பேசத் தொடங்குகிறான்!

இரண்டு நாட்களுக்கு முன்பு
ஒரு கலவரத்தில்
இறந்து போனவன்!

கலவரத்தில் மாண்ட
மற்ற பிணங்களைக்
கிளர்த்தி வெளியேறிய
அசதியுடன் இருந்தான்!

நாட்டில்
சமாதானம் நிலவுதற்காக
முகமூடி அணிந்து
எமத் தூதர்கள்
ஊர்வலம் வரப் போகிறார்கள்
என்று கூறிக் கொண்டிருந்தான்!

புதைகுழியில்
கலவர மனிதர்களும் தலைவர்களும்
மூச்சு முட்டுகிறார்கள்
அவர்களின் சுவாசப் பைகளில்
தன்மூப்பு குருதி
கோர்த்துவிட்டதாம்!

நான்காவதாக
கூட்டத்திலிருந்து
மற்றுமொரு இறந்தவன்
பேசத் தொடங்கினான்!

நேற்று
தீயில் கருகி
இறந்தவன்!

உடல் முழுக்க
கருகிப் போய்
இருளாக மாறியிருந்தான்!

நான் மரணத்தைப்
பற்றி பேசப் போவதாகக் கூறினான்!

பேசத் தொடங்கினான்!
பேசிக் கொண்டிருந்தான்!

அவன் முகத்தில்
ஞான ஒளி
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!

மரணத்தைப் பற்றிய
வியாக்கியானங்கள்
மரணித்தவர்கள்
வாயிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன!

மரணித்தவர்கள்
ஏமாந்தவர்களாக
விடப்பட்டவர்களாக
கோமாளிகளாக
அடக்கப்பட்டவர்களாக
சுரண்டப்பட்டவர்களாக
ஒடுக்கப்பட்டவர்களாக. . . .

இறந்தவர்களின்
பெயருக்குப் பக்கத்தில்
அங்கம்மாள் கிழவி – ஏமாந்தவள்

முத்துசாமி கிழவன் – அடக்கப்பட்டவன்

கண்ணம்மாள் அக்காள் – ஒடுக்கப்பட்டவள்

சரவணன் – சமூக கோமாளி

சாந்தி – விடப்பட்டவள். . . . .

எல்லோரும். . . .
இறந்தவர்கள்
இறக்க போகிறவர்கள்
எல்லோரும் அமைதியாக
அமர்ந்திருந்தோம்!
எங்களுக்கு அருகில்
மரணம்
சலனமின்றி
படுத்துக் கிடந்தது!

மரணப் பெட்டியில்
அப்பாவி பிணங்கள்
அடையாளங்கள்
தொலைந்தவர்களாய். . . .


இனி
என்ன நடக்க போகிறது?
மாற்றத்தை நிகழ்த்த
இறந்தவர்களால் இயலாதே!
நாம் சந்தித்த கடந்த நுகர்ந்த
இந்தக் காலக் கட்டத்தில்
இறந்த அப்பாவிகளுக்காக
இனியாவது
ஒரு மலர்ச்சி பிறக்கட்டும்!


காத்திருப்போம் என்ற
தீர்மானத்துடன்
இறந்தவர்கள்
வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்!


ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்