முரளி இராமச்சந்திரன்
‘அடுத்தது ‘, கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவாின் சப்தத்தையும் நிறுத்தியது. அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான். அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும்,
உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்க்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.
அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூாியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.
‘இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் ஓவியத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூாிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டு மிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காாியத்திற்க்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிருவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாிடம் தரப்படும்.”
“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“
அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாக ஆகிவிட்டது.
கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து ‘2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் ‘ என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.
இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.
பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் ‘ உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொியவில்லை. ஒரு நல்ல காாியத்திற்க்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும் ‘ என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.
பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.
ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.
பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூாியின் சார்பில் ரூ.25,000/- க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.
திரு. மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.
அனைவாின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.
“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பொிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காாில் ட்ராப் செய்யட்டுமா ?”
“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.
மோகன் கல்லுாியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காாில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காாியம் என்னங்க ஆச்சு ?” என்றான்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, அந்த எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாாியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளீ இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.
அப்போது அவருடைய செல் ஃபோன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,
“சொல்லு!”
“ம், ம், அப்படியா!, வொிகுட்”, என்றார்.
பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ஃபோன் செய்து விட்டாயா ?”
“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா ?”
“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”
ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.
—-
murmal@gmail.com
- மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்
- டாவின்சி கோட்
- நாகூர் ரூமியின் கருத்துகள் பற்றி (ஆங்கிலம்)
- குறுந்திரைப்படப் பயிற்சிப் பட்டறை
- கடிதம்
- சுராவுக்கு அஞ்சலி
- அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி
- கடிதம் – (ஆங்கிலம்)
- ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்
- கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்
- புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி
- கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
- ‘காலம் ‘ இலக்கிய மாலை!
- கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை
- டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்
- சுந்தர ராமசாமியின் மறைவு
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )
- தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி
- இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
- பந்தம்
- பேரிடர்கள்
- பொறுப்பு !
- மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்
- பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- சுவாசலயம்
- கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அட்லஸ்
- வயது வரும்போது. .
- பங்குச் சந்தை வீழ்ச்சி
- திசைமாறும் போராட்டக்களங்கள்
- மனிதாபிமானம்