மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

தொ. பரமசிவன்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1939 ஜூலை 10ஆம் தேதி அரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. மதுரை நகரத்தில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதையர் இதனை முன்னின்று நடத்தி னார். தேசிய இயக்கத்தவரால் ‘மிகப் பெரிய சமூகப் புரட்சி ‘ என்று அன்றும் இன்றும் பெருமையோடு பேசப்படும் நிகழ்ச்சி இது.

தமிழ்நாட்டில் அரிசனங்களுக்கும் பெருந்தெய்வ ஆலயங்களுக்கும் உற்ற உறவினை ஏறத்தாழக் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நந்தன் கதையின் மூலம் முதன்முதலாக அறிகிறோம். அதன் பின்னர் வைணவப் பெரியாரான இராமாநுசர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கருநாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் (திருநாராயணபுரம் என்று வைணவர் வழங்குவர்) திருமால் கோயிலுக்குள் அரிசனங்களை அழைத்துச் சென்ற செய்தியினை ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவத்தால் அறிகிறோம்.

1939இல் மதுரையில் பரபரப்பூட்டிய அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சியின் மறுபக்கத்தினை அதாவது, அதற்கு மேல்சாதியினர் காட்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வரலாற்றுக் கட்டுரைகளிலும் நூல்களிலும் முழுமையாகக் காணமுடியவில்லை. இந்நிகழ்ச்சி ஒரு அரசியல்வாதியின் தனிமனித முயற்சியாகவே காட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு எதிரான அரசியல், சமூகப் பின்னணி பற்றிய செய்திகள் பின்வந்தவர்களால் அறியப்படவே இல்லை எனலாம். 1963இல் மதுரைக் கோயிலில் பி. டி. இராசன் முயற்சியால் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட இ. பழனியப் பன் எழுதிய ‘கோயில் மாநகர் ‘ என்ற திருக்கோயிலாரால் வெளியிடப் பட்ட 300 பக்கங்களையுடைய நூலில் கோயில் வரலாற்றில் முக்கிய மான இந்த நிகழ்ச்சி ஓரிடத்தில்கூடக் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் இந்நுழைவு நடந்த காலத்தில் அரிசன ஆலயப் பிரவே சத்தைக் கண்டித்தும் எதிர்த்தும் பிராமணப் பெண்கள் இருவர் பாட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். 1939இல் ‘மதுரை பேச்சியம்மன் கோயில் ரஸ்தா லேட் பத்மனாபய்யரவர்கள் பாரி பாகீரதி அம்மாள் ‘ என்பவர் ‘ஆலய எதிர்ப்பு கும்மி பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 16 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 1940இல் ‘மதுரை கமலத் தோப்புத் தெரு எஸ். தர்மாம்பாள் ‘ என்பவர் ‘ஆலயப் பிரவேச கண்டனப் பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 28 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிமயமான இந்தப் புத்தகங்களின் பெயர்களில் ஒரு ‘தெளிவின்மை ‘ காணப்படு வது கவனிக்கத் தகுந்தது.

1937 மார்ச் தொடங்கி மதுரைக் கோயிலில் ஆர். எஸ். நாயுடு என்பவர் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்கிறார். மதுரையில் புகழ்பெற்று விளங்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும் காங்கிரஸ் தலைவருமான வைத்தியநாதையரும், ஆர். எஸ். நாயுடுவும் மதுரைக் கோயிலில் ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ நடத்தத் தீர்மானித்தனர். 1939இல் வைத்தியநாதையர் இது குறித்துப் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஜூன் மாதத்தில் இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மதுரை நகருக்குள் சில பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தினார்.

நுழைவுக்குப் பத்து நாள் முன்பிருந்தே மதுரையில் தனது இல்லத் தில் (இப்போதுள்ள காலேஜ் ஹவுஸ் விடுதியின் பின்புறம்) சுமார் 50 பேர்களுக்கு சத்தியாக்கிரகப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் ஆலயப் பிரவேச நாளை அவர் வெளியிடவில்லை. வைத்திய நாதையரின் முயற்சியினை அறிந்த ஆலயத்தின் பிராமணப் பணியா ளர்கள், சனாதனிகள் ஆகியோர் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி திடாரென்று 6 பேரை உடன் அழைத்துக்கொண்டு வைத்தியநாதையர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த அறுவரில் மதுரை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் தமிழக அமைச்சராக இருந்தவர்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிசனர். ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார். 1 (அக்காலத்தில் நாடார்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப்பட்டிருந்தது).

இதைக் கண்ட ஆலய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் ‘அத்யயன பட்டர் ‘ என்ற பிரிவினரும் இந்தத் திடார் முயற்சியைக் கடுமையான சொற்களால் (மட்டும்) எதிர்த்தனர். இருப்பினும் அன்றும் மறுநாளும் ஆலய பூசைகளை முறைப்படி செய்தனர். 10.7.39 அன்று காலை பூசை முறைகாரர் சுவாமிநாத பட்டர் என்பவர். மீண்டும் 10ஆம் தேதி பெருமளவில் அரிசனர்கள் கோயிலுக்குள் நுழையப் போவதைப் பிராமணர் அறிந்து மதுரை (தானப்ப முதலித் தெருவில் இருந்த) ‘மங்கள நிவாசம் ‘ என்னும் பங்களாவில் கூடினர். வைத்தியநாதை யரைப் போலவே அக்காலத்தில் மதுரையில் புகழ் பெற்றிருந்த வழக்கறிஞர்கள் கே.ஆர். வெங்கட்ராமையர் என்பவரும் ஆறுபாதி நடேச ஐயர் என்பவரும் இவர்களுக்கு உதவினர். இவர்களில் ஆறுபாதி நடேச ஐயர் ஏற்கெனவே ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ‘ மதுரை நகரத் தலைவராகவும் இருந்தார். வழக்கறிஞர் களின் ஆலோசனைப்படி பிராமணர்கள் 9ஆம் தேதி இரவு முதல் கோயிலைப் பூட்டிவிட முடிவு செய்தனர். 10ஆம் தேதி அர்ச்சக முறைகாரரான ழ்வாமிநாத பட்டர் இதற்கு உடன்படவில்லை. எனவே 9ஆம் தேதி இரவு பூசை முடிந்ததும் அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி, சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர்.

‘கோயில் நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடு சனாதனிகள் செய்யவிருந்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்பார்த்து அதற்குத் தகுந்த காரியங்களைச் செய்தார் ‘ என்கிறார் ஒரு தகவலாளி. இதன்படி 10ஆம் தேதி காலையில் மேஜிஸ்டிரேட் ஒருவர், சுவாமிநாத பட்டர் ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ். நாயுடு பூட்டியிருந்த கோயிற்கதவுகளைத் திறந்தார். திட்டமிட்டிருந்தபடி அன்று ஏராள மான அரிசனங்கள் ஆலயப் பிரவேசம் செய்தனர்.

கே. ஆர். வெங்கட்ராம ஐயரும் ஆறுபாதி நடேச ஐயரும் போட்ட திட்டங்கள் தோற்றுப் போயின. வெங்கட்ராமையர் வன்முறையை எதிர்பார்த்துத் தன் கட்சிக்காரரும் நண்பருமான பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. ஆனால் தேவர் உதவி செய்ததாகத் தெரியவில்லை.

ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த 10ஆம் தேதி முதல் சுவாமிநாத பட்டர் தவிர மற்ற அர்ச்சகர்களும், கோயிலில் வேதம் ஓதும் அத்யயன பட்டர் பிரிவினரும் கோயிற்பணிகளில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல் வெளியேறிவிட்டனர். கோயில் நிர்வாகத்தின் மீது பல வழக்குகளைத் தொடுத்தனர். கோயிலில் பிராமணரல்லாத மற்றப் பணியாளர்கள் வழக்கம் போலத் தம் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவரான ஆறுபாதி நடேச ஐயரும் கோயில் நிர்வாகத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் விளைவாக வைத்தியநாதையர் கைது செய்யப் படலாம் என்ற நிலை உருவானது.

இதற்கிடையில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, அரிசன ஆலயப் பிரவேசம் சட்டத்துக்கு எதிரானதல்ல என்று ஒரு அவசர சட்டத்தை அறிவித்தார். இதன் விளைவாக வைத்தியநாதையர் கைதாகும் நிலை தடுக்கப்பட்டது.

ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் முதல் கோயிலின் பிராமணப் பணியாளர்களும் சனாதனிகளும் ‘மங்கள நிவாசம் ‘ பங்களாவிலே தொடர்ந்து கூடினர். அதையே மீனாட்சி அம்மன் கோயிலாகக் கருதி பூசை வழிபாடுகளை அங்கேயே நடத்தி வந்தனர். சில நாள் களுக்குள், ஆறுபாதி நடேச ஐயர் வீட்டின் முன் இருந்த காலி மனையில் (இப்போது தமிழ்ச் சங்கம் சாலையில் செந்தமிழ்க் கல்லூரியை அடுத்துக் கீழ்புறமாக உள்ள காலி மனை) ஒரு ‘புதிய மீனாட்சியம்மன் கோயிலை ‘ச் சிறியதாகக் கட்டினர். அங்கேயே வழிபாடுகளும் பூசைகளும் நடத்தினர்.2

இந்தப் புதிய கோயில் வடக்குவெளி வீதியிலிருந்த (இப்போதுள்ள ஸ்பென்சர் கம்பெனி) வெங்கட்ராமையர் வீட்டுக்கு அருகில் இருந்தது. அரிசன ஆலயப் பிரவேசத்தைக் கண்டித்துப் பாட்டுப் புத்தகங்கள் எழுதிய இரண்டு பெண்களின் வீடும் இவர் வீட்டை அடுத்த வலப்புறத் தெருவிலும் இடப்புறத் தெருவிலும் இருந்தன.

எனவே 1939இலும் 40இலும் வெளியிடப்பட்ட இந்த இரண்டு பாட்டுப் புத்தகங்களும் ஆறுபாதி நடேச ஐயர் தலைமையில் இயங்கிய, கே. ஆர். வெங்கட்ராமையரும் பங்குகொண்ட வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ஆதரவுடனேயே வெளிவந்திருக்க வேண்டும்.

இனி இப்பாட்டுப் புத்தகங்கள் தரும் செய்திகளைக் காண்போம்.

ஆஸேது ஹிமயமலை வரையில் அ அங்கே

எத்தனையோ ராஜாக்கள் ஆண்டார் அ அவாள்

ஆலயப் பிரவேசமென்ற அநீதிகளைக்

கனவிலும் நினையார் மனந் துணியார்

அந்த நாளில் இந்த சண்டாளர்கள் இல்லையோ

அவாள் இன்றுதான் பூமியில் குதித்தனரோ

(எதிர்ப்புக் கும்மி)

பாகீரதியம்மாள் புத்தகத்தில் (1939) இவ்வகையான கடுமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

ஆறுபேர் சண்டாளர்களை

அன்புடனே அழைத்துக்கொண்டு

ஒருவருக்கும் தெரியாமல்

உள் நுழைந்தார் திருடனைப்போல்.

இந்த வரிகள் 8.7.1939இல் நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கின்றன. இதே நிகழ்ச்சியை 1940இல் வெளிவந்த தர்மாம்பாள் பாட்டு, நிகழ்ச்சிக்குக் காரணமான நபர்களின் பெயர்களுடன் குறிப்பிடுகிறது:

ஆர். எஸ். நாயுடும் வைத்யநாதரும் அக்ரமங்கள் செய்தார்கள்

அக்ரமமாய்ப் பஞ்சமரை ஆலயத்தில் புகுத்திவிட்டார்

(கண்டனப்பாட்டு)

பாகீரதியம்மாள் புத்தகத்தில் ஒரு பாட்டு ‘அரிசனங்கள் ஆலயத் துக்குள் புகுந்தவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்ட மீனாட்சியம் மனை மதுரை நகர்த் தெருக்களில் தேடுவதாக ‘ அமைந்திருக்கிறது.

அத்துடன் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி முயற்சியில் அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சிக்கு ஆதரவாக வெளியிட்ட அவசர சட்டத்தினையும், அவரையும் கண்டித்து பாகீரதியம்மாள் பாடுகிறார். (காங்கிரஸ் கட்சிக்குள் தன் ஆதரவாளரான மதுரை வைத்தியநாதையரைக் கைதாகாமல் காப்பாற்ற வேண்டி அப்போது ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மாநில ஆளுநரிடம் அவசர மாகக் கையெழுத்து வாங்கி இராஜாஜி அவசரச் சட்டத்தை வெளியிட்டார்.)

என் தாயைப் பறையர் கையில் ஒப்புவித்துப்

பவிஷுடன் மார்தட்டுகிறார் பிரதம மந்திரி (எ.கு)

என்று அவரைக் கண்டிப்பதோடு, ‘பக்க பக்க மெம்பர்களுக்கு காசு கொடுத்து ‘ இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும் குற்றஞ் சாட்டுகிறது. பாகீரதியம்மாளின் மற்றொரு பாடல் ‘மங்கள பங் களாவுக்குப் போவோம் வாருங்கள் ‘ என்று சனாதனிகளும் கோயிற் பிராமணர்களும், வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தாரும் மங்கள நிவாசம் பங்களாவிலே கூடி ஆலோசனையும் பூசைகளும் நடத்தி யதைக் குறிப்பிடுகிறது.

இந்தக் காலகட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு சாமியாரும் இந்த முயற்சிகளுக்கு ‘ஆசி ‘ வழங்கியிருக்கிறார். இவரை ‘பூரிமடத்துச் சாமியார் ‘ என்று களஆய்வுச் செய்திகள் தெரிவிக் கின்றன. ஆனால் தர்மாம்பாளின் பாடல்கள் இவர் பத்ரிநாத் திலிருந்து வந்ததாகக் குறிப்பிட்டு, இவரை வாழ்த்தி இவரிடம் ‘ஆலோசனைகளும் ‘ கேட்கின்றன. ‘சத்குருவே எங்கள் சமயமறிந்து வந்தீர் தேசிகமூர்த்தி ‘ என்றும், ‘ஆலய அபரிசுத்தம் ஆக்கிவிட்டார் கள் அ ஐயோ அனுக்கிரஹம் செய்யுங்களேன் தேசிகமூர்த்தி ‘ (க.பா.) என்றும் தர்மாம்பாள் இவரைப் பாடுகிறார்.

10ஆம் தேதி பெருமளவில் அரிசனங்கள் ஆலயத்துள் நுழைந்த பிறகு ‘மங்கள நிவாசம் ‘ பங்களாவில் கூடி எடுக்கப்பட்ட முடிவினைப் பாகீரதியம்மாள் பாடல் தெரிவிக்கிறது.

ஆலயமொன்று இயற்றி

ஆடவர் ஸ்திரீ பாலருக்கு

ஆகமவித்தை பயிற்சி

அரும் உபன்யாஸம் இயற்றி

வித்வத் கோஷ்டிகளுடன்கூட

வேகமுடன் தெரிசித்து

பக்தியுடன் ஸத்காலேட்சபம்

செய்துதான் வசிப்போம் (எ.கு.)

இந்த முடிவின்படிதான் தமிழ்ச் சங்கம் சாலையில் ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவர் ‘ ஆறுபாதி நடேசய்யர் பங்களா வளாகத் தில் காலி மனையில் சிறியதாக ஒரு ‘புது மீனாட்சியம்மன் கோவில் ‘ கட்டப்பட்டு பூசை, வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. கோயி லுக்கு முன்னர் சிறிய ஓலைப்பந்தலும் போடப்பட்டிருந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து வெளியேறிய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் பட்டர்களும் இங்கு வழிபாடு நிகழ்த்தினர்.

1945 வரை இந்தக் கோயில் நீடித்திருந்தது. அதன்பின் பூசைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு, பின்னர் சுவடு தெரியாமல் இடிக்கப் பட்டும்விட்டது. கோயிலின்மீது வழக்குத் தொடுத்திருந்த அர்ச்சகர் களும், வேதம் ஓதும் பட்டர்களும் தங்கள் முயற்சியில் தோற்று மீண்டும் கோயிற் பணிக்குத் திரும்பினார்கள்.

1939ஐ ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவுமில்லை; திரண்டெழுந்து போராடவுமில்லை. அந்த நிலையில் மதுரை வைத்தியநாதையர் இந்தப் பிரச்சனையை ஏன் முன்னெடுத்துச் சென்றார் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான விடை காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது.

காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரம்பற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கார் காங்கிரஸ் இயக்கத்தோடு ‘புனா ஒப்பந்தத்தை ‘ 1932 செப்டம்பர் 24இல் செய்துகொண்டார்.3 ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்பட வில்லை. 1933 பிப்ரவரி 4ஆம் நாள் நிகழ்ந்த காந்தியடிகள் அ அம் பேத்கார் சந்திப்பின்போது மத்திய சட்டசபையில் ஸ்ரீரெங்க ஐயரும் தமிழகச் சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனும் கொண்டுவரவிருந்த ‘தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச மசோதா ‘வுக்கு ஆதரவு தருமாறு காந்தியடிகள் அம்பேத் காரைக் கேட்டுக் கொண்டார். அம்பேத்கார் இணங்கவில்லை.4

‘கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப் பட்டோர் முன்னேறும்போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் ‘ என்பது அம்பேத்கார் கருத்து. மறு வாரம் 11 பிப்ரவரி 1933 காந்தி யடிகள் புதிதாகத் தொடங்கிய ‘ஹரிஜன் ‘ இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கார் செய்தியாக அனுப்பியிருந்தார்.5 இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்துகொண்டு வந்தன.

புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர் களில் அம்பேத்காரைத் தவிர மற்ற இருவரும் தமிழ்நாட்டவர் ஆவர். ஒருவர் ராவ்பகதூர் (ரெட்டைமலை) சீனிவாசன்; மற்றவர் எம். சி. ராஜா. இவர்களில் சீனிவாசன் வட்டமேசை மாநாட்டின் முதல் சுற்றில் அம்பேத்காரோடு கலந்துகொண்டவர்.

மிக விரைவில் புனா ஒப்பந்தத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடை முறையில் கைகழுவி விட்டனர். அரிசனர் கோயில் நுழைவைக் கடுமையாக வங்காள இந்துக்கள் எதிர்த்தனர். அதற்கு முசுலீம்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயன்றனர்.6 1933இல் வங்காளத்தைச் சேர்ந்த கவி ரவீந்திரநாத் தாகூர்கூட புனா ஒப்பந்தத்துக்கு அளித்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.7

புனா ஒப்பந்தத்துக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு பரவலாக இருந்தது. 1932 அக்டோபரில் சென்னையில் ஜே. சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு புனா ஒப்பந்தத்தைக் கண்டித்தது. அத்துடன் ‘இம்மாநாடு கோயில் நுழைவு அவ்வளவு அவசியமல்லவென்று கருதுகிறது ‘ என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.8 காந்தி தாழ்த்தப்பட்டோருக்கு அரிஜன் என்று பெயரிட்டு, இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோர் எழுதினர். மணிநீலன் (எ. முத்துக்கிருஷ்ணன்) என்பவர்

சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் அ அது

தாழ்ந்தவரைக் கை தூக்குமோ

என்று பாடல் எழுதினார்.9 அவரெழுதிய நூலின் பெயரே ‘காந்தி கண்டன கீதம் ‘ என்பதாகும். 1937 தேர்தலில் காங்கிரஸ் அம்பேத் காருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் அவர் வென்றார்.

இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ் இயக் கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால் முதலமைச்சர் இராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த் துத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.

மதுரை வைத்தியநாதையர் காங்கிரஸ் கட்சிக்குள் இராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே உள்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு இவர் மதுரைக் கோயிலில் ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ நடத்திக் காட்டி னார். இராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசர சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாதையரின் முயற்சியினை வெற்றியாக்கிவிட்டார்.

இனி, ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ என்ற நிகழ்ச்சியை முன்னிறுத்தி ‘கோயில் ‘ என்ற சமூக நிறுவனமும் அதை மையமிட்ட பண்பாடும் எவ்வாறு தோற்றுப் போயின என்பதை வரலாற்றுரீதியாகக் காண வேண்டும்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் கோயில் என்பது மிகப்பெரிய சமூக நிறுவனமாக வளரத் தொடங்கியது. பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழ் நாட்டுப் பொருளாதாரமே அதைச் சார்ந்து நிற்கும் நிலை உருவானது. விளைநிலங்களின் பெரும்பகுதியும் கோயிலைச் சார்ந்ததாக மாறிவிட்டது. (கி. பி. 1010ல் கட்டி முடிக்கப் பட்ட இராசராசனின் தஞ்சைப் பெரிய கோயிலின் அக்கால வருமானம் குறித்துப் பேராசிரியர் நா. வானமாமலை எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இங்கு நினைவிற்குரியது.) நிலவுடைமையின் விளைபொருள்களில் ஒன்றான சாதி இறுக்கங்களும், தீண்டாமையும் பத்தாம் நூற்றாண்டிலேயே மிகவும் வளர்ந்துவிட்டதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் நன்கு உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வ தானால் அரசுக்குத் தேவையான பண்பாட்டு வடிவங்களைச் கோயிலின் மூலமாக மதம் நிறைவேற்றி வந்தது. சோழப் பேரரசு சரிந்து பிற்காலப் பாண்டியப் பேரரசிலும் இந்நிலைமை நீடித்தது.

பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியின்போது 1310இல் நிகழ்ந்த மாலிக்காபூரின் படையெடுப்பும் கோயிற் கொள்ளைகளும் ‘கோயில் ‘ என்ற சமூக நிறுவனத்தின்மீது பெருந்தாக்குதலாக அமைந்தன. 14ஆம் நூற்றாண்டில் பெருங்கோயில்கள் பல தம் செல்வாக்கை இழந்து நின்றன. மீண்டும் விஜய நகரப் பேரரசின் எழுச்சிக் காலத்தில் ‘இந்து மதமும் ‘ கோயில்களும் மறுவாழ்வு பெற்றன. இருப்பினும், பல்லவ, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்திய செல்வாக்கினை மீட்க முடியவில்லை. அரசுக்குத் தேவையான பண்பாட்டு முயற்சிகளில் மதமும் கோயிலும் பின்தங்கிப் போயின. ஆட்சியாளர்கள் பிறமொழியாளர்களாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மீண்டும் 1752இல் ‘கும்பினியார் ‘ படைகளும் நவாபின் படைகளும் தமிழ்நாடு முழுவதும் கோயில்களை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அதைத் தொடர்ந்து அரசின் நேரடி ஆதரவைக் கோயில்கள் இழந்தன. தம் ஆதிக்கத்திலிருந்த நிலங்களைக் காப்பாற்றத் திணறின. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிய ஆங்கிலக் கல்வியும் வாழ்க்கை நெருக்கடிகளும் கோயிலின் தலைமையான பிராமண சமூகத்தினரை நகர்ப்புறங்களுக்கும் புதிய நாகரிகத்துக்கும் கொண்டு வந்து சேர்த்தன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலங்களின்மீதும், கலாசாரத்தின்மீதும் தான் கொண்டிருந்த மேலாதிக்கத்தைக் கோயில் சிறிதுசிறிதாக இழந்து கொண்டிருந்தது. தேசிய இயக்கத்தின் புதிய அலைகள் இப்போக்கை விரைவுபடுத்தின. 1920 முதல் இந்தியா வெங்கும் ‘கல்வி, குடியுரிமைகள், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்து தல், கோயில்களில் நுழைவதற்கான அனுமதி, இன்ன பிறவற்றுக்கான போராட்டங்கள் நகர்ப்புறங்களில் நடந்தன ‘ என்கிறார் கெய்ல் ஓம்வெட்.10

இந்தப் பின்னணியில் 1939இல் நடைபெற்ற வைத்தியநாதையரின் முயற்சியை எல்லா நிலையிலும் தளர்ந்திருந்த கோயிமூ கலாசாரத்தால் எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவேதான் கோயிமூ பிராமணப் பணியாளர்கள் ஆறு ஆண்டுகள் கழித்து 1945இல் மீண்டும் கோயிற் பணியில் திரும்ப வந்து சேர்ந்தனர். இதனை மற்றுமொரு நிகழ்ச்சி யாலும் உறுதிப்படுத்தலாம். நாட்டு விடுதலைக்குப் பின்னர் வந்த ஜமீன்தாரி இனாம் ஒழிப்புச் சட்டத்தினால் கோயில் நிலங்களை வைத்திருந்த பிராமணர், வேளாளர் ஆகிய இருமேல் சாதியினரும் அந்நிலங்களை இழந்தபோது அரசாங்கம் கொடுத்த நட்ட ஈட்டை ‘மனமுவந்து பெற்றுக்கொண்டு ‘ ஒதுங்கிவிட்டனர். பாகீரதியம்மாள், தர்மாம்பாள் இருவரது பாடல்களிலும் ஒலிக்கும் ‘தீண்டாமை உணர்வு ‘ கால ஓட்டத்தில் பலவீனப்பட்டு, தோற்றுப்போனதும் இப்படித்தான்.

குறிப்புகள்

கள ஆய்வில் முக்கியமான தகவல்களை ஆளித்து உதவியவர்கள்

1. காங்கிரஸ் தலைவர் அ. வைத்தியநாதையர் மகன், வழக்கறிஞர் திரு. வை. சங்கரன் (66), மதுரை

2. திரு. எஸ். சுப்பிரமணியம் (62), மதுரை

3. (காலஞ்சென்ற) இராகவையங்கார் (61), மதுரை

4. திரு. கி. செயராமன் (60), மதுரை

5. செல்வி. எஸ். ஆனந்தி, மதுரை

ஙு

1. விடுதலை, (தமிழ் நாளிதழ்), 27 அ 2 அ 1989, ப.3

2. ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் ஏற்பட்ட எதிர்விளைவினை வைத்தியநாதையர் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு குறிப்பிடுகிறது :

‘நடேச அய்யரும் சனாதனிகளின் ஏனைய தலைவர்களும் ஆவேசத்துடன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு விரைந்தனர். உடனே ஒரு பொற்குடத்திற்கு ஏராளமாகச் சடங்காச்சாரங்களைச் செய்து பூஜை செய்தனர். அந்தப் பொற்குடத்துடன் சனாதனிகளனைவரும் நடேச அய்யர் வீட்டிற்குச் சென்றனர். மீனாட்சியம்மன் இக்கோயிலை விட்டு வெளியேறிவிட்டாள் என்றும், தமது வீட்டில் அருள் பாலித்தி ருப்பதாகவும் நடேச அய்யர் அறிவித்தார். நடேச அய்யர் வீட்டில் பொற்குடம் வைக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்பட்டன. மீனாட்சி யம்மன் தன் கோயிலை விட்டு வெளியேறி நடேச அய்யர் வீட்டில் இருக்கிறாள் என்ற செய்தி பொது மக்களிடையே மீண்டும் திகைப்பை ஏற்படுத்தியது. ஏராளமான பிராமணர்கள் நடேச அய்யர் வீட்டிற்குச் சென்று வழிபட ஆரம்பித்தனர். ‘

பி. எஸ். சந்திரபாபு, ஹரிஜனத் தந்தை அமரர் அ. வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம், மதுரை.

3. M. L. Shahare, Dr. Ambedkar – His Life and Work, NCERT, 1988, p.53

4. Ibid., p.58

5. Ibid., p.58

6. Ibid., p.56

7. Ibid., p.62

8. கழஞ்சூர் செல்வராஜ் (தொ. ஆ.) டாக்டர் அம்பேத்கார் அறிவுக்கொத்து, ப. 87 (குடியரசு 23.10.1932, ப. 13)

9. மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்), காந்தி கண்டன கீதம், உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, ப.11 (பி. யோகீசுவரன், தமிழ்க் கவிதையில் சமுதாயச் சிக்கல்கள், பக்.171அஇல் மேற்கோள்)

10. கெய்ல் ஓம்வெட், வர்க்கம் சாதி நிலம் (தமிழ் மொழி பெயர்ப்பு : இராஜாராம்), 1988, ப. 7

****

‘பண்பாட்டு அசைவுகள் ‘ நூலிலிருந்து சில கட்டுரைகள்

பண்பாட்டு அசைவுகள்

ஆசிரியர் : தொ. பரமசிவன்

பக்கம் : 200; விலை ரூ.80

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: 91-4652-222525, 223159

தொலைநகல் : 91-4652-231160

இ-மெயில்: kalachuvadu@vsnl.com

Series Navigation

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)