மடியில் நெருப்பு – 29

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

ஜோதிர்லதா கிரிஜா


29.

ஐ.ஜி. விரும்பியபடியே சத்தியானந்தம் அன்று மாலை அவரைக் காணச் சென்றார். பொதுவாகச் சற்று நேரம் பேசிய பின் ஐ.ஜி. விஷயத்துக்கு வந்தார்.

“சத்தியானந்தம்! ஒரு முக்கியமான விஷயம் பத்திப் பேசறதுக்குத்தான் உங்களை வரச் சொன்னேன்.”

“சொல்லுங்க, சார்.’

“நான் சொல்றேனேன்னு நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. உங்களோட நியாய உணர்ச்சி, மனச்சாட்சி, கடமை உணர்வு இதையெல்லாம் ஓரங்கட்டி வைக்க வேண்டிய ஏரியா இது! உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கிற போலீஸ் ஸ்டா·ப் உங்களை வரவேற்கல்லே. ஏன்? ரவுடிப் பசங்களும்தான்! (சிரிப்பு) அதனால, நான் என்ன சொல்றேன்னா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடுங்க, எதையும் கண்டுக்காதீங்க. அவங்களோட கூட்டு சேராட்டியும், கண்டுக்காமயாச்சும் இருந்துடுங்க. அது போதும்!”

சத்தியானந்தம் சிரமப்பட்டுப் புன்னகை செய்து, “நானே அப்படி ஒரு முடிவுக்கு வந்தாச்சு, சார். போலீஸ் ஸ்டா·ப்லே ஒரு அம்பது பெர்செண்ட் ஆளுங்களாச்சும் நேர்மையா இருந்தாத்தான் நாடு நல்லாருக்கும்கிறதையும், என்னை மாதிரி பதினஞ்சு இருபது பெர்செண்டை வச்சுக்கிட்டு நாட்டுக்கு நல்லது செய்யமுடியாதுங்கிறதையும் நான் கண்டுக்கிட்டேன். எல்லாரையும் போல நானும் மாறிட்றதுன்னு நேத்துதான் நானே முடிவு பண்ணினேன். இன்னைக்கு எங்க ஹெட் கான்ஸ்டபிள் கிட்ட கூட என்னோட முடிவைப் பத்திப் பேசினேன், சார். நீங்களும் அதுக்கு ஏத்த மாதிரி என்னைக் கூப்பிட்டுப் பேசறீங்க! எனக்கும் பொஞ்சாதி பிள்ளைங்க இருக்காங்க, சார். நான் மட்டும் வித்தியாசமா யிருக்கிறதுலே அர்த்தமே இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்!” என்றார்.

ஐ.ஜி.-யின் முகத்தில் வியப்புக் கீறல்கள் தோன்றியிருந்தன. அவர் சத்தியானந்தத்தின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, “தட்ஸ் குட். ஊரோட ஒத்து வாழறதுதான் எப்பவுமே புத்திசாலித்தனம்! வேலையிலே சேர்ந்த புதுசுலே நானும் உங்களை மாதிரித்தான் கடமை, மனச்சாட்சி அது இதுன்னு பினாத்திக்கிட்டிருந்தேன். கிடைச்சது அடிக்கடி ட்ரான்ஸ்·பரும் மத்த ஸ்டா·போட விரோதமும் தான்! நானும் மாறிட்டேன்.. .. ..” என்று சிரித்தார்.

உள்ளுக்குள் பொங்கிய எரிச்சலைப் பாடுபட்டு விழுங்கிக்கொண்டு சத்தியானந்தம் உதடுகளால் மட்டுமே புன்சிரிப்புக் காட்டினார். “ஆமா, சார்! நானும் புரிஞ்க்கிட்டேன்.”

“இப்பவாவது புரிஞ்சுதே! . . . சரி,. இதைச் சொல்றதுக்குத்தான் கூப்பிட்டேன். ஆல் ரைட். ஆல் த பெஸ்ட். . . “ – சத்தியானந்தத்துக்கு விடை கொடுத்துவிட்டு ஐ.ஜி. தமது பைக்கில் ஏறிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போனதும், சத்தியானந்தம் கமிஷனருடன் தொலைபேசினார். கமலாவின் தற்கொலை, அதன் பின்னணி ஆகிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சுருக்கமாய்க் கூறியபின் அவருடன் ஒரு சந்திப்புக்கு நேரம் கோரினார். அன்றிரவே தமது வீட்டுக்கு ம·ப்டியில் வரச் சொல்லிக் கமிஷனர் பணித்ததும் சத்தியானந்தத்துக்கு உற்சாகம் பொங்கியது. தாம் பேசிக்கொண்டிருந்தது ஒரு பொதுத் தொலைபேசி கூண்டில் என்பதை அறவே மறந்தவராய், சத்தியானந்தம் ஒரு ‘சல்யூட்’ அடித்தார். பின்னர், தம்மால் ஒரு பொது நல விரோதக் கும்பல் பிடிபடப் போவது பற்றிய பெருமிதத்துடன் வீடு நோக்கிப் புறப்பட்டார்.

. . . “என்னையா, ஏட்டு? நீங்க சொல்றது நெசந்தானா? என்னமோ ரொம்ப நேர்மையானவராக்கும், அதாக்கும், இதாக்கும்ன்றாங்க ஊர்ல உள்ளவங்க? நீங்க என்னடான்னா அந்தாளுக்கும் தனியா மாமூல் வேணும்ன்றீங்க? அவரு பேரென்ன சொன்னீங்க?” என்ற தண்டபாணி, உடனே, தானாகவே, “சத்தியானந்தம் இல்லே?” என்றான்.

“ஆமா, தலைவரே. சத்தியானந்தம் தான். நேத்து வரையில் யோக்கியமானவரு மாதிரிதான் தெரிஞ்சாரு. . . அவரால தாக்குப் பிடிக்க முடியல்லேன்னு தோணுது. முக்காவாசிப் பேரு நம்மள மாதிரி இருக்குற எடத்துலே ஒண்டி ஆளா என்ன செய்ய முடியும்? அதான் மாறிட்டாரு!” என்ற முத்துவின் மீது ஓர் ஆழமான பார்வையைப் பதித்த தண்டபாணி, “இன்ஸ்பெக்டருக்குன்னு சொல்லிக் கேட்டு வாங்குற மாமூலை உங்களுக்குள்ளே பங்கு போட்டுக்கிட மாட்டீங்களே?” என்று அவநம்பிக்கையாய் வினவினான்.

“சேச்சே! நீங்க வேணும்னா நேரடியா ·போன் போட்டுப் பேசி நான் குடுத்தேனா, இல்லியா, எம்புட்டுக் குடுத்தேன்றதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க!”

“அதெல்லாம் இப்ப வேணாம். முதல்ல இந்தப் பணத்தை அவரு கிட்ட கொண்டு போய்க் குடுங்க. நீங்க சொல்றாப்ல, நானே அந்தாளோட ·போன் போட்டுப் பேசறேன். . ஒருக்கா, எதானும் ட்ரிக் பண்ணிப் பிடிக்கப் பாக்கிறானோ அந்தாளுன்னு கூட எனக்குச் சந்தேகம் வருது. ஏன்னா, கெட்டவனால எப்படி சீக்கிரம் நல்லவனா மாற முடியாதோ, அதே மாதிரி ஒரு நல்லவனாலேயும் சட்னு கெட்டவனா மாறிட முடியாது! அதான் கொஞ்சம் யோசனையா யிருக்கு.”

“அப்படி யெல்லாம் இருக்காது, சார். அப்படியே இருந்தாலும் நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்? அந்தாளு உங்க கிட்ட லஞ்சம் வாங்கினதாச் சொல்லி மாட்டி விட்ற மாட்டோம்?” என்று இளித்த முத்துவின் கையில் நூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றைத் தண்டபாணி கொடுத்தான்.

அவன் அகன்றதும், “ஏண்ணே! நீ சொல்றாப்ல இதுல எதாச்சும் சூது இருந்திச்சுன்னா?” என்று நாகதேவன் கவலையோடு தண்டபாணியை வினவினான்.

தண்டபாணி மீசையைத் தடவியவாறு, “அதெல்லாம் ஏங்கிட்ட பலிக்காது, நாகு! ஏட்டு கிட்ட குடுத்தனுப்பின அஞ்சாயிரம் வந்து சேந்திச்சான்னு கேட்டு ·போன் போடுவேனில்ல? அப்படியே ரெண்டு நிமிசம் பேச்சுக் குடுப்பேன். அவனோட பதிலை டேப்பிலே பதிஞ்சுடுவேன், நாகு! அப்பாலே? அவனோட சிண்டு நம்ம கையிலே! என்ன சொல்றே?” என்று சிரித்தான்.

. . . ராஜாதிராஜனிடமிருந்து வந்திருந்த தகவலை லில்லிக்குச் சொல்லுவதற்காக ஜகந்நாதன் தொலைபேசியருகே உட்கார்ந்தார்: “ஹல்லோ! யாரு? லில்லியா?

“ஆமாங்க. நானே கூப்பிடணும்னு நெனச்சேன். உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு? தம்பி கிட்டேர்ந்து தகவல் வந்திச்சா?”

“அதைச் சொல்றதுக்குத்தான் கூப்பிட்டேன், லில்லி. தம்பி கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் பேசினான். கல்பனாவுக்குக் கவலைப் படும்படியா ஒண்ணும் இல்லியாம். குழந்தை செத்துப் பொறந்ததுலே கொஞ்சம் அதிர்ச்சி ஏற்பட்டிருந்திருக்கு. இப்ப பரவாயில்லியாம். எனக்கு உடம்பு சரியில்லாததால உடனே கெளம்பி வரானாம். ரெண்டு நாள் கல்பனாவோட அவளுக்கு ஆறுதலா இருந்துட்டு வாடான்னா கேக்க மாட்டேங்கிறான். . .”

“பெத்த பிள்ளையாச்சே! அதான் உங்களைப் பத்திக் கவலைப் பட்றான்! தன்னைப் பத்திக் கவலைப் பட்றதுக்கு ஒரு மகனோ மகளோ இருக்கக் குடுத்து வச்சிருக்கணும்! ஹ்.ம்!”

“என்ன, பெருமூச்செல்லாம் பலமா வருது? பிள்ளை பெத்துக்கக் கூடாதுன்னு நான் சொல்லி நீயும் சம்மதிச்ச விஷயம் தானே? இப்ப என்ன புதுசா இந்தப் பெருமூச்சும் இன்னொண்ணும்?” என்ற ஜகந்நாதன் அவளை மேற்கொண்டு பேசவிடாது தொடர்பைத் துண்டித்தார்.

மறு வினாடியே தொலைபேசி மணியடிக்க, ‘அவதான்’ என்று முனகிய வண்ணம் அவர், “ஹல்லோ!” என்றார்.

“என்னங்க, பட்டுனு வெச்சுட்டீங்க? நான் பேசி முடிக்கலியே? . . . அப்புறம் என்னோட தங்கச்சி தங்கத்தைப் பத்திச் சொன்னேனில்ல? அந்த மாப்பிள்ளை அநேகமாத் திகைஞ்சுடும் போல இருக்கு. காசு, பணம் எதுவு§மே வேணாம்னுட்டாங்க. சிம்ப்பிளாக் கல்யாணத்தை முடிச்சாப் பத்தும்னுட்டாங்க. . . . லண்டன் கம்பெனிக்குக் கால் போட்டு சித்தி பேசிச்சாம். சேதுமாதவன்கிற தமிழ் ஆளு வேலையா யிருக்குறதும், கல்யாணத்துக்குப் பொண்ணு தேடி இந்தியாவுக்கு லீவ்லே போயிருக்குறதும் உண்மைதான்னு சொன்னாங்களாம்! அநேகமா பத்துப் பன்னண்டு நாளுக்குள்ளே கல்யாணம் நடந்துடும்னு நெனைக்கிறேன். . . . அப்புறம் . . . அந்த தத்து எடுக்கிற விஷயமா என்ன சொல்றீங்க?”

“அதெல்லாம் வீண் வேலை, லில்லி! வேண்டாத தலை வேதனைம்மா. . . அப்பால உன்னிஷ்டம்! உன்னோட சுதந்திரத்துலே தலையிட இதுக்கு மேல நான் விரும்பல்லே!”

“என்னங்க, பட்டுக்காம பேசறீங்க?. . . நீங்க போட்ட நிபந்தனையை நான் ஏத்துக்கிட்டது மெய்தான்னாலும், ஒரு மனிதாபிமானத்தோட நீங்க மறு பரிசீலனை பண்ணலாமில்ல? இப்பவும் என்னால ஒரு குழந்தையைப் பெத்துக்க முடியும். . எம் மனசு கிடந்து தவிக்குதுங்க! என்னோட ஏக்கமும் துக்கமும் உங்களுக்குப் புரியல்லீங்க. . ராஜாதிராஜன்கிற ஒரு மகன் உங்களுக்குப் பிறக்கவே இல்லே, உங்களுக்கு சந்ததியே இல்லே அப்படின்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப் பாத்தீங்கன்னா, என்னோட ஏக்கம் உங்களுக்குப் புரியும்! . . . உங்களுக்குக் கல்லு மனசுங்க! உங்க குழந்தையை நான் பெறணும்ங்க. உங்க சொத்துல ஒரு பைசாக் கூட எனக்கு வேணாம்னு நான் எழுதி வேணும்னாலும் குடுத்துடறேங்க!”

“இதென்ன லில்லி, நீ இப்படி அறுக்குறே? இதெல்லாம் ·போன்ல பேசித் தீர்க்கிற விவகாரமா? நேர்லே பேசுவோம்.”

“இப்ப வீட்ல தானே இருக்கீங்க? ஒரு நடை வாங்களேன்.”

“ரெண்டொரு நாள் கழிச்சு வறேன், லில்லி. கோவிச்சுக்காதேம்மா. . .:

மறு முனை ஒரு விசும்பலுக்குப் பின் மவுனமாயிற்று.

. . . . இரவு பத்தரைக்குத் தரை இறங்கவேண்டிய விமானம் பதினொரு மணிக்குத்தான் வந்தது. டாக்சி பிடித்து ராஜாதிராஜன் வீட்டுக்கு வந்த போது மணி பதினொன்று நாற்பது ஆயிற்று. அவனுக்காக உறங்காமல் காத்திருந்த ஜகந்நாதன், “ கல்பனா எப்படி இருக்கா?” என்றுதான் எடுத்த எடுப்பில் விசாரித்தார்.

“எல்லாம் நல்லாத்தாம்ப்பா இருக்கா. அவளுக்கு ஒண்ணும் இல்லே,” என்று அவன் சொன்ன பதிலில் ஓர் ஒட்டாமையை அவர் கவனித்தார். மனைவியின் மீது அன்பும் அக்கறையும் உள்ள ஒருவனின் குரல் அப்படி உணர்ச்சியற்று இருக்காது என்று அவர் எண்ணினார்.

. . . ராஜாதிராஜனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. சூர்யாவுடன் தான் மறு நாள் கழிக்க இருந்த உல்லாச நேரம் பற்றிய கற்பனையில் அவன் ஆழ்ந்தான்.’ கல்பனா செத்துத் தொலைத்திருந்தால், சின்ன வீடு வைக்காமல் இருக்கலாம். மேள தாளத்தோடு நாலு பேர் அறியவே ஜாம் ஜாமென்று சூர்யாவைக் கல்யானமே செய்துகொள்ளலாம். அவள் பிழைத்துக் கொண்டதால் எல்லாமே பாழாகிவிட்டது. சே! கல்யாணம் ஆகாதவன் என்று சூர்யாவிடம் பொய் சொல்லுவதும், அப்பாவுக்குத் தெரியாமல் சின்ன வீட்டில் அவளை வைப்பதும் ஆபத்தான விளையாட்டுதானே? நேர்மையும் உண்மையும் நிறைந்த அப்பா அதைக் கண்டு பிடித்தால், அதற்குப் பிறகு என் முகத்தில் கூட விழிக்க மாட்டார்! . . .’ – – இப்படி யெல்லாம் யோசனை செய்துகொண்டிருந்த ராஜாதிராஜன் வெகு நேரம் கழித்துக் கண்ணயர்ந்தான்.

. . . மறு நாள் அலுவலகத்தை யடைந்ததும் ராஜாதிராஜன் செய்த முதல் வேலை சூர்யாவுடன் தொலைபேசியதுதான்.

அவர்களுக்குள் செய்துகொண்டிருந்த உடன்படிக்கைப்படி, ராஜாதிராஜன், மறைமுக மொழியில், “ராஜாம்மா வந்தாச்சு. போன ஜோலி உடனே முடிஞ்சுட்டதாலே, நேத்து ராத்திரியே ப்ளேன்ல வந்துட்டாங்க. அதனாலதான் இப்ப ·போன் பண்றாங்க. வரச் சொன்னாங்க,” என்றான்.

சூர்யா தனது படபடப்பைக் கட்டுப் படுத்தியபடி, “வறேன்னு ராஜம்மா கிட்ட சொல்லிடுங்க. பெர்மிஷன் போட்டுட்டு நாலு மணிக்கெல்லாம் வந்துடறேன்!” என்று கூறிவிட்டு ஒலிவாங்கியைக் கிடத்தினாள். நெற்றியில் சூடாக உணர்ந்தாள். இருக்கையை யடைந்ததும் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தாள்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு புறப்பட்டு ராஜாதிராஜனின் காரையடைந்து அவனுடன் புறப்பட்ட சூர்யா அடிக்கடி தன்னையும் அறியாமல் தினத்தந்தி செய்திதாளின் நறுக்கு மடித்து வைக்கப்பட்டிருந்த கைப்பையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆழமான அவனது பார்வையை அதே ஆழத்துடனும் ஆர்வத்துடனும் தன்னால் சந்திக்க முடியவில்லை என்பது சூர்யாவுக்குப் புரிந்தது.

“என்ன! உம்னு இருக்கே? கோவமா? அதான் ஓடி வந்துட்டேனில்ல? உண்மையைச் சொல்லப் போனா நான் போன ஜோலி முடியவே இல்லே. வேற ஒரு ஆள் கிட்ட அதை ஒப்படைச்சுட்டுக் கிளம்பிவந்துட்டேன். எப்ப பாரு, எனக்கு உன் நெனப்பாவே இருக்கு, சூர்யா!” என்று அவன் கார்க் கண்ணாடியில் அவளை பார்த்துச் சிரித்த போது அவள் பதிலுக்குச் சிரிக்க முடியாமல், “ . . . உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும். . .” என்று தொடங்கினாள்.

“பேசு. என்ன பேசப்போறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாலும் ராஜாதிராஜனுக்கு அடி வயிற்றில் கலக்கம் விளைந்தது.

“என் தங்கையோட சிநேகிதி ஒருத்தி உங்க தெருவிலே குடியிருக்கா. . .” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் மவுனமாக இருந்தாள். ஆனால் அவளது பார்வை அவனைக் கார்க் கண்ணாடியில் துளைத்துக் கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஒரு மாற்றம் – வெளிறல் போன்றது – உடனே தோன்றியதாக நினைத்த சூர்யாவுக்கு அது தன் பிரமையாக இருக்கலாம் என்னும் அவநம்பிக்கை வரவில்லை.

ஆனால், ராஜாதிராஜன், “அதுக்கென்ன? யாரு அந்தப் பொண்ணு? அவளைப் பத்தி எதுக்கு எங்கிட்ட பேசறே?” என்றான். அவன் வாய் பேசிக்கொண்டிருந்தாலும், அவள் கேட்கப் போகிற கேள்வியை ஊகித்துவிட்ட அவனது தந்திர மூளை தன் வழக்கத்தை விடவும் அதிக் விரைவுடன் வேலை செய்யலாயிற்று.

“அந்தப் பொண்ணைப் பத்தி உங்ககிட்ட ஏன் சொல்றேன்னா, அது உங்களைப் பத்தி ஒரு முக்கியமான விஷயம் சொல்லிச்சு. அதைக் கேட்டதுலேர்ந்து எனக்கு மனசே சரியில்லே. . .”

“அட! இதென்ன சுத்தி வளைச்சுக்கிட்டு. நேரடியாப் பேசு! என்ன சொல்லிச்சு அந்தப் பொண்ணு என்னைப் பத்தி?”

“உங்களுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடிச்சாமே?”

இதற்குள் என்ன பொய் சொல்லி எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கான உத்தியை அவனது மூளை தீர்மானித்து விட்டதால், ராஜாதிராஜன் ஏதோ நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டவன் போல் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

அவனது மிகவும் இரைந்த சிரிப்பு அவளை வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஒரு முனைப்பான கேள்விக்கு எப்படி இவ்வளவு சத்தமாய்ச் சிரிக்க முடியும் என்று அவள் திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

jothigirija@vsnl.net
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா