மகிழ்ச்சியும் கவலையும்

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

பாரதிராமன்


நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கையில்
நான் எப்படி இருப்பேன் ?

நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள்
என்று நான் மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடும்
உங்களில் சிலர் ஏன் இன்னும் இதைப் படிக்கவில்லை*
என்று நான் கவலை கொண்டிருக்கவும் கூடும்

மேலும்
நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது
உங்கள் விளக்கு அணையக் கூடாதென்றும்
வெளிச்சம் குறையக் கூடாதென்றும்
நான் கவலை கொண்டிருக்கவும் கூடும்

அப்படியின்றி
விளக்கு அணைந்தாலும்
வெளிச்சம் குறைந்தாலும்
வேறெதையுமே நீங்கள் படிக்கமுடியாமல்**
போய் விடும் என்று நான் மகிழ்ச்சி கொண்டிருக்கவும் கூடும்.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருப்பதற்கும்
அல்லது படிக்காமலிருந்து கொண்டிருப்பதற்கும்
உள்ள சம்பந்தத்தை எண்ணி
நான் கவலையோ மகிழ்ச்சியோ கொண்டிருக்கவும் கூடும்
இறுதியில்.

* ‘படித்துக் கொண்டிருக்கவில்லை ‘ என்றும் பாடபேதம்
** ‘படித்துக் கொண்டிருக்கமுடியாமல் ‘ என்றும் பாடபேதம்

Series Navigation