மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

தமிழாக்கம் :புதுவை ஞானம்.


பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும்
சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும்
இருக்கின்றன.

பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும்
சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும்
இருக்கின்றன.

உறங்கும் போது அலைகின்றன அவர்களது ஆன்மாக்கள்
விழித்திருக்கும் போது பதறுகின்றன அவர்களது உடல்கள்
சிக்க வைக்கிறார்கள் உறையாடுகையில் மற்றவர்களை
சூழ்ச்சி வலை பின்னுகிறார்கள் நாள் முழுவதும்.

திட்டமிட்டுப் பேசுகின்றனர் சிலர்
வார்த்தைகளால் வலை விரிக்கின்றனர் சிலர்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றனர் சிலர்
சிறிய அச்சமானது மிரள வைக்கிறது அவர்களை
பெரும் அச்சமானது பீதியடையச் செய்கிறது அவர்களை.

சீறி வருகின்றன அவர்களது வார்தைகள்
வில்லில் இருந்து விடுபட்ட அம்புகள் போல்
மற்றவர்களின் பலவீனமான பகுதிகளைக் குறிவைத்து
பலத்த காயம் ஏற்படுத்தும் விதத்தில்.

ஏதோவொரு உறுதிமொழி எடுத்துக் கொண்டதைப் போல
அவர்கள் மவுனம் காக்கும் போது கூட
காத்திருக்கின்றனர் வெற்றி வாய்ப்புக்காகவே.
தோல்வியுறும்போது தோன்றுகின்றது
இலையுதிர் காலமாகவும் உறைபனிக்காலமாகவும்.

நம்மால் சொல்ல முடியும் நாளுக்கு நாள்
அவர்கள் நலிந்து வருகிறார்கள் என்பதாக.
திரும்பவே முடியாது சுயநிலைக்கு அவர்களால்
இந்நச்சுச் சூழலில் சிக்கி இருக்கும் வரை.

கட்டுண்டது போலொரு தடை ஏற்படின்
மிரண்டு உதிர்ந்து போகிறார்கள்.
உயிர்ப்பினையும் வலிமையையும்
மீண்டும் பெற இயலாது
சாவினை நோக்கி விரையும் இதயம்.

இன்பம் துன்பம் கோபம் பெருமகிழ்ச்சி
கவலை துயரம் அச்சம் சபலங்கள்
கட்டுக்கடங்காமை ஒழுக்கமின்மை
முரட்டுத்தனம் வீண்பெருமை அனைத்தும்
ஓட்டைகளில் இருந்து வெளிவரும் ஓசைகள்
ஈரத்தில் படரும் பாசிகள்.

மோதுகின்றன இவை நம் கண்ணெதிரே
இரவும் பகலுமாக….எனினும் இவற்றின்
தோற்றுவாய் என்னவெனத் தெரியாது இவர்களுக்கு,.
போதும்போதும் இவர்களுக்கு இது புரிந்து விட்டால்
விளங்கிக் கொள்வார்களா ?
வாழ்க்கையின் தத்துவத்தை….*1
அது இல்லாமல் நான் இருக்க முடியாது
நான் இல்லாமல் யாரும் மதிப்பிட முடியாது
எனவே அதற்கு நான் நெருக்கமாக இருக்கிறேன்.
ஆனாலும் கூட ஆட்சி செய்வது எதுவென
எனக்குத் தெரியாது.

பெரும் ஆட்சியாளராக ஒன்று இருக்கக்கூடும்
ஆனாலும் அதன் அடிச்சுவடு கூட
எனக்குத் தெரியவில்லை.
அதன் செயற்பாடுகள் வாயிலாக
அது இருப்பதாக நான் நம்புகிறேன்.
அதன் வடிவம் எனக்குப் புலப்படவில்லை.
இயற்பியல் வடிவம் ஒன்று இல்லையாயினும்
அதற்கு என்றொரு இருப்பு இருக்கிறது.

மூலம் :க்ஷுவாங்ட்சு

தமிழாக்கம் :புதுவை ஞானம்.

Series Navigation