பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

பாவண்ணன்


(பிராந்து – சிறுகதைத்தொகுதி. நாஞ்சில் நாடன். வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோவை-641 001. விலை ரூ100.)

கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் தனித்த அடையாளம் கொண்டவை. நேர்ப்பேச்சின் சித்தரிப்பு வேகத்தையும் எள்ளலையும் அவற்றின் நுட்பம் குலையாமல் எழுத்திலும் பதிவுசெய்பவை இவர் படைப்புகள். எக்கட்டத்திலும் படைப்பின் அடிப்படைக்குணமான சுவாரசியத்தைக் கைவிடாதவை. அளவுமீறிப் போகும் மனக்கசப்பையும் வெறுப்பையும் வக்கணையான ஒரு மொழிப்பயன்பாட்டின் வழியாகவும் எள்ளலின் வழியாகவும் எதார்த்தமாகக் கடந்துசெல்லும் பாத்திரங்களைச் சிறிதும் ஒப்பனையின்றிப் படைக்கிறார் நாஞ்சில் நாடன். வசைமொழிகளும் கேலியும் கிண்டலும் கொண்ட ஒய்யாரமொழிகளும் ஒரு சூழலில் ஏன் தேவைப்படுகின்றன என்னும் ஆய்வை நாஞ்சில் நாடனுடைய கதைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்திவிடலாம். அந்த வசைகளுக்கும் ஒய்யாரங்களுக்கும் மறுபுறம் இருப்பதெல்லாம் துக்கம். வெக்கை. இயலாமையின் ஆத்திரம். காரியமாக்க முடியாத கோபம். ஒருவித சுயபரிதாபம்.

நாஞ்சில் நாடனுடைய சமீபத்திய கதைத்தொகுப்பான ‘பிராந்து ‘ நூலில் பதினெட்டுக் கதைகள் அடங்கியுள்ளன. கடந்த எட்டாண்டுகளாக எழுதி வெளிவந்தவை இவை. இக்கதைகளைப் படிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் மிகச்சுருக்கமான ஒருசில வரிகளிலேயே கதைப்புலத்தை அமைத்துச் சட்டென தளமாற்றம் நிகழ்த்தும் நாஞ்சில் நாடனுடைய திறமை அசாதாரணமானது. ஒரு வசதிக்காக இத்தொகுப்பின் கதைகளை ‘பொருந்தாமையின் துக்கம் ‘ என்று உருவகப்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

உலகின் சகல துறைகளிலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒன்றும் புதிதாக அறிமுகமாகும் ஒன்றும் மோதி முரண்படும் தருணமும் பொருந்தாமையின் துக்கமும் ஏற்பட்டு விடுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம். நாடி பிடித்து மருந்து கொடுத்த நாடு இது. இன்றோ இதயத்தையே கழிற்றித் தனியாக வைத்து வைத்தியம் செய்து மீண்டும் பொருத்திவிடலாம். ஆங்கில வைத்தியமுறை பிரபலமானதும் நாட்டுவைத்திய முறை நிற்க இடமின்றிப்போனது. நாடே ஆங்கில மருத்துவத்தின் பின்னால் போனபோது, பொருந்தாமையின் துக்கத்தால் அத்துறையினர் உணர்ந்த வேதனையும் அதிகம். முரண் இல்லாமல் வளர்ச்சி இல்லை. வளரும் போக்கில் பழையன உதிர்வதும் தவிர்க்கவியலாதவை.

பாக்கெட்டுகளில் தயிரும் மோரும் கிடைக்கத்தொடங்கியதும் மோர் ஊற்றிக்கொடுத்த கையோடு பானையின் விளிம்பிலிருந்து வெண்ணெயை வழித்து உள்ளங்கையில் அழுத்தி ‘தின்னுடா பேரான்டி ‘ என்று செல்லமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் தயிர்க்காரப் பெரியம்மாக்கள் நமக்குத் தேவையில்லாமல் போய்விட்டார்கள். பாக்கெட் உப்பு விற்பனையைத் தொடர்ந்து முத்துக்குவியலைப்போலப் பளபளக்கும் கல்உப்பைத் தள்ளுவண்டியில் கொண்டுவந்து ரூபாய்க்கு ஐந்துபடி அளந்துபோட்டுச் சென்ற உப்புவண்டித்தாத்தாமார்கள் காணாமல் போய்விட்டார்கள். ஆயத்த ஆடை அங்காடிகளின் பெருக்கத்துக்குப் பிறகு ‘அப்பா சொன்னமாதிரி தைக்காதீங்க மாமா, கொஞ்சம் புடிப்பா தைங்க மாமா ‘ என்று ரகசியக்கோரிக்கையை முன்வைக்க எந்தப் பிள்ளைக்கும் தையல்கார மாமாக்கள் தேவையில்லாமல் போனார்கள். உறவாடாவும் இடமளித்தபடி இருந்த நுட்பமான வணிகமுறை போய்விட்டது. இன்று எல்லாத்தட்டு மக்களும் வெறும் நுகர்வோர்கள் மட்டுமே. தேவையானவற்றைத் தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான இடங்களுக்குக் கொண்டுவந்து தருகிற விற்பனைப் பிரதிநிதிகளும் விற்பனை மையங்களும் மட்டுமே இந்த நுகர்வாளர்களுக்குப் போதும் என்னும் அளவுக்கு மாறிவிட்டது வணிகச்சூழல். பழைய தயிர்க்காரப் பெரியம்மாக்களும் உப்புவண்டித் தாத்தாக்களும் தையல்கார மாமாக்களும் தேவையற்றவர்கள். இவர்கள் காலம் ஓய்ந்துவிட்டது. வளரும் உலகத்தோடு ஒட்ட ஒழுக இயலாதவர்களாகி விட்டார்கள் அவர்கள். எக்கட்டத்திலும் புதிய விற்பனைப் பிரதிநிதிகளுடன் இவர்கள் போட்டியாளர்களாக மாறமுடியாது. பொருந்தமையின் துக்கத்தோடும் ஆற்றாமையின் வேதனையோடும் காலத்தைக் கழிப்பது தவிர்க்கவியலாதது. இன்றைக்கு இவர்களுக்கு நேர்ந்த இதே நிலைமை நாளை விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் நேரலாம். அவர்களை ஓரம் கட்டி ஒதுக்கிவைக்க இன்னொரு வலுத்த ஆள் வந்து சேரலாம். இந்த ஒதுக்கலும் ஒதுங்கலும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை.

தன் வாழ்க்கை முறையாலும் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழில்களாலும் மதீப்பீடுகளின் மீது உள்ள பிடிமானத்தாலும் புற உலகத்தோடு ஒட்டமுடியாமல் ஒதுக்கப்பட்டும் ஒதுங்கியும் வாழ்கிற கிராமத்து மனிதர்களை ‘பிராந்து ‘ தொகுப்பில் சித்தரிக்கிறார் நாஞ்சில் நாடன். தலைப்புக் கதையான பிராந்துவில் இடம்பெறும் மந்திரமூர்த்தி மிக உயர்ந்த மனிதர். அவரது எண்ணங்கள் உயர்வானவை. ஒருமுறை யாரோ எந்தக் காரணத்துக்காகவோ எழுப்பிய ஒரு மோதலால் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் இருந்த இடமே போர்க்களாமாகிவிடுகிறது. அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வேலையையே துறந்துவிடுகிறார். பிராந்து என்கிற பட்டப்பெயரைத் தேடித்தந்த மந்திர்மூர்த்தியின் இச்செய்கையில் அவரது அடிப்படைக்குணம் புலப்படுகிறது. தான் அணிந்திருக்கிற ஆடைகளில் எந்த அளவுக்குத் தூய்மைக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறாரோ, அதே அளவுக்குத் தான் வசிக்கும் வீடு, தெரு, வேலை செய்யும் இடம் எல்லா இடங்களிலும் தூய்மை நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்குள் இருக்கிறது. கால்களில் தட்டுகிற வழிப்பாறையைக் கல்லாச்சாரியை வரவழைத்து அப்புறப்படுத்துவதில் அவர் காட்டும் முனைப்புக்கும் இதுவே காரணம். வராத டவுன்பஸ், வெட்டுப்படுகிற புறம்போக்கு மரங்கள் ஆகியவற்றைப்பற்றி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அவர் எழுதும் புகார்க்கடிதங்களும் அவர் குணத்தைத் தெரிவிப்பவை. திருவிழாவில் இசைத்தட்டு நடனத்தைக் காணவந்த மனைவியைக் கடிந்துகொள்வதற்குக் கூட அவர் கொண்டிருக்கிற உயர்வான மதிப்பீடுகளே காரணம். துரதிருஷ்டவசமாக கிராமத்தில் யாரும் இதைப்புரிந்து கொள்வதில்லை. எல்லாருடைய பார்வையிலும் அவர் ஒரு பிராந்து. எவ்வளவு பெரிய துக்கம் இது. எந்த ஊரும் உலகமும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்கிற அக்கறையோடும் மதிப்பீட்டு நம்பிக்கைகளோடும் அவர் இருக்கிறாரோ, அதே ஊரும் உலகமும் கூடி அவருக்குப் பைத்தியக்காரன் பட்டம் சூட்டும் அவலம்தான் நிறைவேறுகிறது. இதுதான் பொருந்தாமையின் துக்கம்.

‘சைவமும் சாரைப்பாம்பும் ‘ கதையில் இடம்பெறும் சுப்பையாபிள்ளை சந்திக்கநேரும் அவலம் வேறொரு விதமானது. ஓட்டல்வைத்து வாழ்க்கையை நடத்துகிற அவருக்குச் சைவப்பழக்கத்தின் மீது ஈடுபாடும் பக்தியும் அதிகம். சாயங்கால வேளைகளில் கடையில் முட்டை ஆம்லெட் போட்டால் வருமானத்தைப் பெருக்கலாம் என்று சொல்லப்படுகிற ஆலோசனையைக்கூட சைவத்தின் மீது இருக்கிற பிரியத்தால் நிராகரிக்கிறார். இந்த ஈடுபாடுதான் அவரைப் பொருந்தாத ஆளாக மாற்றி விடுகிறது. கட்டிக்கொடுத்த இடத்தில் பெண்ணைப் பார்க்கப்போய் மருமகனுக்கு மாட்டுக்கறி சமைக்கிறவளாக மாறிய பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து மனக்குமறலோடு சாராயம் குடித்துத் துக்கத்தை ஆற்றிக்கொள்கிறார்.

துக்கத்தோடும் ஆற்றாமையோடும் உலவ நேர்ந்த பலருடைய சித்திரங்களை நாஞ்சில் நாடனுடைய தொகுப்பில் காண முடிகிறது. இரவுப் பேருந்தைத் தவறவிட்டு நடந்துவரும்போது ஊர்த்தோப்பில் தென்னங்குலையைத் திருடுகிற கூட்டத்தைப் பிடித்துவிடுகிற லட்சிய ஆவேசத்துடன் புகார்சொல்ல ஓடித் தோல்வியடைந்து திருடனிடமே இளநீர் வாங்கிக் குடித்துவிட்டுத் திரும்புகிற வீராணமங்கலத்து இளைஞன் (நள்ளென்று ஒலிக்கும் யாமம்) அகாதெமி விருதை ஏற்க மறுத்ததால் கவனத்தை ஈர்த்த எழுத்தாளரைப் பேட்டிகாண வந்த இளைஞர்கள் முன்னிலையில் எழுத்தாளர் கும்பமுனியிடமிருந்து வெளிப்படும் பொருமல்கள் (நேர்காணல்) உழவுக்குப் பொருந்தாத கிடாவைப் பணம்கொடுத்து வாங்கிவந்துவிட்டுப் பரிதவிக்கிற விவசாயி (எருமைக்கடா) எனப் பலரும் இத்தகையோர்களே.

பொருந்தாமையின் துக்கத்தால் தவிப்பவராக இருந்தாலும் தற்செயலாக அத்துக்கத்திலிருந்து மீள்கிற ஒரு வழியைக் கண்டடைவராக விளங்கும் ஓதுவாரின் சித்திரம் ‘பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர் ‘ கதையில் தீட்டிக்காட்டப்படுகிறது. இத்தொகுப்பின் முக்கியமான கதை இது. ஆலயத்தில் சிவபெருமான் முன்னிலையில் திருவாசகம் படிப்பவர் ஓதுவார். ஆதிநாட்கள் தொட்டு கடைபிடிக்கிற பழக்கம். வாசக வரிகளைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள் இருந்த காலம் அது. தட்சணையால் வாழ்க்கையை ஓட்டவும் முடிந்தது. கோயிலில் நுழைந்த மின்சாரம் பல விஷயங்களை நவீனப்படுத்திவிட்டது. இப்போது முரசு முழங்கவோ மத்தளம் கொட்டவோ கூட ஆட்கள் தேவையில்லை. மின்சாரம் என்னும் உயிர்பாய்ந்ததும் அதுஅதுவும் தானாகத் தன்வேலையைப் பார்க்கும் அளவுக்குக் கச்சிதமாக எல்லாமே வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதே மின்சாரமும் ஒலிநாடாவும் ஒலிபெருக்கியும் ஓதுவாரின் குரல் எட்டமுடியாத தொலைவுக்கு திருவாசக வரிகளை ஒலிபரப்பத் தொடங்கிவிட்டது. நயத்தோடும் குழைவோடும் உருக்கத்தோடும் பாடல்களைப் பாடுகிறவருக்கு நவீனப்பண்பாட்டில் இடமற்றுப்போனது பெருந்துக்கம் அளிக்கிற விஷயம்.

அப்படிப்பட்ட சூழலில்தான் பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படிக்க வேண்டிய காலக்கட்டாயத்துக்கு ஆளாகிறார் ஓதுவார். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதும் பிராந்து மந்திரமூர்த்தியைப்போலவும் ஓட்டல்கடை சுப்பையாபிள்ளையைப்போலவும் ஓதுவாரும் முதலில் பதற்றம் கொள்கிறார். தலையசைத்து மறுக்கிறார். உள்ளுக்குள்ளேயே மருகுகிறார். ஆனால் அந்த எல்லைகளுக்குள்ளேயே நிற்காமல் ஒருபடி தாண்டி அக்கோரிக்கைக்கு உடன்பட்டு பிணத்தின் முன் திருவாசகத்தைப் பாடவும் செய்கிறார்.

அதற்கு அவருக்குக் கிடைத்த தொகை ஆயிரம் ரூபாய். ஒருகணம் சிவபெருமானைச் செத்தபிணத்துக்கு விற்ற காசென்ற போதம் மனத்தைக் காந்துகிறது. மறுகணம் சிவனுக்கும் சிவலோகபதவியை அடைந்தவனுக்கும் பேதமொன்றும் இல்லை என்று அதேமனம் கற்பித்துக்கொள்கிறது. அடுத்தகணமே மாதம் இரண்டு பணக்காரக் கிழவர்கள் திருவாசகம் கேட்டுப் பாடை ஏறினால் தன் தரித்திரத்தைத் தொலைக்கமுடியுமே என்கிற யோசனையும் எழுகிறது.

இவையெல்லாம் காலம் உருவாக்கிவிட்ட பொருந்தாமையை வெல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. முற்றிலும் ஒடிந்து விழாமல் சந்தர்ப்பங்களைத் தமக்கும் தோதாகப் பயன்படுத்தி சற்றே நிமிர்ந்து நிற்கச் செய்கிற முயற்சிகள் என்றே சொல்லலாம். மந்திரமூர்த்திக்கு இருந்த நிலபுலன் வசதியும் சுப்பையா பிள்ளைக்கு இருந்த ஓட்டலும்போல ஓதுவாருக்கும் இருந்திருந்தால் அவரும் பிடிவாதமாக மறுத்திருக்கக்கூடும். அவரது இல்லாமையும் வறுமையுமே அவர்மீது விதிக்கப்பட்ட நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்படும் சூழலைத் திணித்துவிட்டது. பொருந்தாமையால் ஒதுங்கி நின்று மூச்சுவிடும் அவகாசத்தைக்கூட இல்லாமையும் வறுமையும் கொடுப்பதில்லை. ஓட்டத்தோடு ஓட்டமாக இழுத்துச்சென்று புழுதியையும் சேற்றையும் அப்பிக்கொள்ள வைக்கிறது. பொருந்தாமையைவிட மாபெரும் துக்கம் இது.

நாஞ்சில் நாடனுடைய எல்லா நூல்களையும் வெளியிட்டுள்ள விஜயா பதிப்பகம் எடுத்ததும் படிக்கத்தூண்டும் அளவுக்கு அழகாக இந்த நூலை அச்சிட்டுள்ளது.

***

Series Navigation