பொன்னம்மாவுக்குக் கல்யாணம்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

செங்காளி


(என் தாயார் அவர்களின் நினைவாக)

நான் கடைசியாக இந்தியாவுக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது பெற்றோர்கள் இரண்டு தடவையும் என் துணைவியின் பெற்றோர்கள் ஒரு தடவையும் டெட்ராய்ட் வந்து சில மாதங்கள் தங்கியிருந்தனர். நடுவிலே ஒரு தடவை என் மனைவி குழந்தைகளுடன் இந்தியா வந்து திரும்பினார். இந்தத் தடவைதான் எல்லாருமாகச் சேர்ந்து ஊருக்கு வந்துள்ளோம்.

ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்கு வரும்போதெல்லாம் இப்படிச்செய்வது வழக்கம்: சென்னையைச் சேர்ந்தவுடனே வடபழனி கோவிலுக்குச் சென்று முருகனை வழிபடுவது. அன்று இரவே இரயிலில் புறப்பட்டுச் சேலம் செல்லவேண்டியது, சேலம் இரயிலடிக்கு வந்து எங்கள் வருகைக்காகக் காருடன் காத்திருக்கும் ஓட்டுனர் நசீருடன் நாமக்கல் போய்ச் சேருவது, எங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் என் பெற்றோர்களின் அன்பான வரவேற்பு, பிறகு கொஞ்ச நேரம் ஒய்வு, குளியல், காலை உணவு இவைகளை முடித்துக்கொண்டு எங்கள் கிராமமான பரளிக்குச் செல்வது, முன்பே ஏற்பாடு செய்து வைத்துள்ளபடி கோவில் பண்டாரம் பழனித்தாத்தா எங்கள் குலதெய்வத்திற்குத் திருமுழுக்காட்டி, பொங்கல் படைத்துச் செய்யும் பூசைக்குப் போய்ச்சேருவது, பூசைமுடிந்து கிராமத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து கோவிலிலேயே பிரசாதமும் விருந்தும் சாப்பிட்டு முடிப்பது.

பிறகுதான், நீண்ட தூக்கம், ஓய்வு மற்றவை எல்லாம்.

அதேமாதிரி இந்தத் தடவையும் நாமக்கல்லிலிருந்து கிராமத்து அம்மன் கோவில் பூசைக்காகக் காரில் போய்க்கொண்டிருந்தோம். குழந்தைகள் இருவரும் அசதியினால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தூங்க ஆரம்பித்துவிட்டனர். வழியில் ஊர் விவகாரம் பற்றியெல்லாம் சொல்லிகொண்டுவந்த அம்மா திடாரென்று, ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி நடனு, நம்ம பொன்னம்மாவுக்குக் கல்யாணம்; வர்ற வெள்ளிகிழமைதான் நடக்கப்போவுது ‘ என்றார். ‘அட பொன்னம்மாவுக்கா, அவ்வளவு பெரிய பெண்ணாயிட்டுதா..யாரு மாப்பிள்ளை..எங்க கல்யாணம் ‘ என்றேன் நான். ‘மாப்பிள்ளை அங்கெ பாஸ்டன்லதான் வேலையில இருக்காறாம்..கல்யாணம் இங்க பரளிலதான்; அதுவும் நம்ம வீட்டிலதான்..எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டிருக்குது. எல்லாத்தையும் திடார்னு முடிவு செஞ்சதினாலத்தான் முன்னாடியே உங்களுக்கெல்லாம் சொல்ல முடியல ‘ என்று சொன்னவர், ‘பொன்னம்மாவும் அதன் அம்மாவும் நம்ம தோட்டத்துச் சாலைக்கு மொதல்ல குடிவந்தது ஞாபகமிருக்கா.. ‘ என்று கேட்டார். அம்மா இப்படிக் கேட்டவுடனே பதினைந்து, பதினாறு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் என் மனத்திரையில் தோன்றின.

அன்று புதன் கிழமையோ அல்லது வியாழனோ எனக்குச் சரியாக ஞாபகமில்லை. காலையில் அப்பா அலுவலகத்திற்குப் புறப்படுகின்ற நேரம். திடாரென்று எங்கள் கிராமத் தலைவரான திருமலை வீட்டிற்கு வந்தார். முக்கியமான வேலை இருந்தாலொழிய அவ்வளவு காலையில் வரமாட்டார். அம்மா கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு நேராக வந்த காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘மேக்குத்தெரு முத்துசாமிக்கும் அவரு பொஞ்சாதி காளியம்மாளுக்கும் ஏதோ விவகாரமாம். அதை ஞாயம் பேசித் தீர்ப்புச் சொல்லனும்ணு அவரு எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டாரு. என்னக்கி சபையைக் கூட்டிப் பேசரதுன்னு உங்க வசதியைக் கேட்டுக்கிட்டுப் போகலாமுனு வந்தேங்க ‘ என்றார். நாங்கள் நாமக்கல்லில் குடியிருந்தாலும் கிராமத்தில் எந்த வழக்கென்றாலும், அப்பா, திருமலை மற்றும் பரமசிவம் மூவருமடங்கிய குழுதான் விசாரிக்கும். கிராமத்திலேயே இருக்கும் திருமலை பரமசிவம் இருவருக்கும் அறுபது வயதுக்குமேல் இருக்கும். இவர்களிடமும் அப்பாவிடமும் கிராமத்து மக்கள் மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்வார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, ‘ரெண்டுபேரும் ரொம்ப ஒத்துமையாத்தான் இருந்தாங்க..என்னமோ தெரியல இப்ப.. நான் போன வாரம் தோட்டதுக்குப் போனப்பக்கூட காளியம்மா வந்து கொஞ்சம் கொறப்பட்டுக்கிச்சு..நாந்தான் ஒண்ணும் கவலைப்படாதே.. எல்லாம் சரியாப்போயிடும்னு ஆறுதல் சொன்னேன் ‘ என்றார். பிறகு திருமலையைப் பார்த்து, ‘ஏங்க ஊரையெல்லாம் கூட்டி நியாயம் பேசிக்கிட்டு, நீங்களே அவிங்க ரெண்டு பேருகிட்ட மாத்தரம் பேசிப்பார்க்கப்படாது ‘ என்றார் அம்மா. ‘நான் சொல்லிப்பார்த்தேங்க..முத்துசாமி கேக்கலைங்க ‘ என்றார் திருமலை. அப்பா, ‘சரி இந்த சனிக்கிழமையே வச்சுக்கலாங்க.. நாங்க நேரத்திலேயே வந்திடறோம் ‘ என்று சொல்ல, திருமலையும் புறப்பட்டுவிட்டார்.

அப்பா சொன்னபடியே அந்தச் சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு கிராமத்திலுள்ள எங்கள் வீட்டிற்குப் போய்ச்சேர்ந்தோம். எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்த எங்கள் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளும் பெரியசாமியுடன் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். இரவு எட்டு மணிக்கு, வரும்பொழுதே கொண்டுவந்த உணவை உண்டு முடித்தோம். வழக்கம்போல பெரியசாமியும் உடன் சாப்பிட்டார். சற்று நேரத்தில் திருமலையும் பரமசிவமும் வர எல்லாரும் ஊருக்கு முன்னால் உள்ள அரசமரத்துப் பிள்ளையார் மேடைக்கு வந்து சேர்ந்தோம். ஊர்மக்கள் எல்லாரும் அங்கே கூடியிருந்தனர். ஒருசிலர் தரையில் உட்கார்ந்திருந்தனர். மற்றவரெல்லாம் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அப்பா, திருமலை, பரமசிவம் மூவரும் ப்ிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு, கூடியிருந்த மக்களைப் பார்த்தபடி மேடையில் அமர்ந்தனர். நானும் அம்மாவும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், இரண்டு பேர் ஒரு கட்டிலைக் கொண்டுவந்து ஒரு ஓரமாகப்போட்டு எங்களை அதில் அமரும்படி செய்தனர். இதுவும் வழக்கமாக நடப்பதுதான்.

பண்டாரத் தாத்தா அம்மன் துதிபாடி முடித்தபின் விசாரிப்பு ஆரம்பமாகியது. முத்துசாமி ஒருபக்கம் நின்றுகொண்டிருந்தார். காளியம்மாள் கலங்கிய கண்களுடன் முந்தானையால் வாயைப்பொத்தியபடி மறுபக்கம் நின்றுகொண்டிருந்தார். அவர்களின் ஐந்து வயதுக் குழந்தையான பொன்னம்மா, அம்மாவைப் பார்த்தவுடன் ஓடிவந்து அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டது. அம்மா கிராமத்திற்கு வந்துள்ளார் என்று தெரிந்தால் அது எங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அம்மா திரும்பும்வரை ஆயா ஆயாவென்று அவரையே சுற்றிக்கொண்டிருக்கும்.

திருமலை எழுந்து நின்று சுருக்கமாக வழக்கைப்பற்றிச் சொன்னார். முத்துசாமிக்கு தன்னுடைய மனைவியான காளியம்மாளுடன் வாழப்பிடிக்கவில்லையென்றும் அதனால் அவரைத் தள்ளிவைக்க அனுமதி கேட்கின்றார் என்றும் கூறிவிட்டு ‘முதலில் முத்துசாமி என்ன சொல்லப்போறார்னு கேப்போம் ‘ என்றார். பின்னர் முத்துசாமியைப் பார்த்துக் கேட்டார், ‘நீங்க ஏன் காளியம்மாளைப் பிடிக்கலேன்னு சொல்லுறீங்க ? ‘

‘காரணம் ஓண்ணுமில்லே.. ‘

‘காரணமே இல்லாம பிடிக்கலேன்னு சொன்னா எப்படி ? ‘

‘அது என்னமோ அதை எனக்குப் பிடிக்கலெ.. ‘

‘சமையல் சரியாச் செய்யறதில்லையா ? ‘

‘அதெல்லாம் இல்ல ‘

‘தோட்டத்தில சரியா வேலை செய்யறதில்லையா ? ‘

‘இல்ல ‘

‘குழந்தைய நல்லாப் பாத்துகிறதில்லையா ? ‘

‘இல்ல ‘

‘பின்ன ஏன் பிடிக்கலை ? ‘

‘நான் வேற கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் ‘

இதைக்கேட்டவுடன் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ‘அடப் பாவி ‘ என்று சொல்லிக்கொண்டே பெண்களில் சிலர் ஆத்திரத்தோடு முத்துசாமியைப் பார்த்தனர். காளியம்மாளோ பொலபொலவென்று கண்களில் நீர்வடிய தலைகுணிந்து நின்றுகொண்டிருந்தார். கூட்டத்தினரை அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மறுபடியும் திருமலை பேச ஆரம்பித்தார்.

‘உங்க கொழந்தையப் பத்தி நெனைச்சுப் பாத்தீங்களா ? ‘

‘அதப்பத்தியென்ன…நான் பாத்துக்குவேன் ‘

‘நீங்க சொல்லறதெல்லாம் எங்களுக்கு ஒண்ணும் சரியாப்படலே..இருந்தாலும் காளியம்மா என்ன சொல்லுதுன்னு கேட்டுட்டு அப்புறம் முடிவைச் சொல்லுவோம் ‘. இதைக் கூறிவிட்டு அவர் காளியம்மாளைப் பார்த்துச் சொன்னார், ‘அவரு சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்த இல்லையாம்மா..இப்ப நான் கேக்கறதுக்கெல்லாம் கொஞ்சம் பதில் சொல்லும்மா ‘

‘உன்ன முத்துசாமி ஏதாவது திட்டினாரா ? ‘

காளியம்மாள் ‘இல்லீங்க ‘ என்று அழுதுகொண்டே மெதுவாகச் சொன்னார்.

‘அடிச்சாரா ? ‘

‘இல்லீங்க ‘

‘செலவுக்கெல்லாம் பணம் கொடுக்கறாரா ? ‘

‘கொடுக்கறாருங்க ‘

‘சரியாப் பேசறாரா ? ‘

‘அதாங்க இல்ல. அப்பப்ப எங்காயோ போயிட்டு ஒருநாள் ரெண்டுநாள் கழிச்சுதான் வீட்டுக்கு வருவாரு. ஏன்னு கேட்டா ஒண்ணும் சொல்லமாட்டாரு. நான் இதப்பத்தி நம்ம மிட்டாதாரர் வீட்டு அம்மாகிட்டக்கூடச் சொன்னேங்க ‘ என்று அம்மாவைப் பார்த்துக்கொண்டே சொன்னார். தொடர்ந்து, ‘அம்மா, பாவம் அவருக்கு என்ன கவலையோ..கொஞ்சம் பொறுத்துக்கோ, எல்லாம் சரியாப்போயிடுமினாங்க ‘ என்று கூறிவிட்டுப் பேசாமல் இருந்தார்.

‘அவரு பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றாரே..உனக்குச் சம்மதமா ? ‘

இதற்கு காளியம்மாள் ஒன்றும் பதில் சொல்லாமலே நின்றுகொண்டிருந்தார்.

‘சொல்லும்மா.. ‘

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு காளியம்மாள் மெதுவாகப் பேச ஆரம்பித்தார், ‘நான் எந்தவிதமான தப்பும் செய்யலீன்னாலும் என்னை இங்கே கொண்டுவந்து நிக்க வச்சிட்டாரு. அதோட அவரு வேற ஒரு நெனப்பிலேயும் இருக்கிறாரு. இப்படி இருக்கிறவருக்கிட்ட நான் எப்படாங்க தொடர்ந்து குடும்பம் நடத்தறது ‘

‘அப்படான்னா அவரு கேக்கறதுக்கு நீ ஒத்துக்கிறயாம்மா ? ‘

‘ஒத்துக்கிறேன்..ஆனா நான் கேக்கப்போற ஒண்ணுக்கு அவரு சரீன்னுட்டா அவரு கேட்டதுக்கு ஒத்துக்கிறேன் ‘

‘அது என்னான்னு சொல்லும்மா ‘

‘எனக்கு வேற ஒண்ணும் வேண்டாங்க. பொன்னம்மாவை மாத்தரம் என்னோட அனுப்பணும். அதை நாந்தான் வளப்பேன் ‘

இதைக்கேட்டு எல்லாருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் பொன்னம்மாள் காளியம்மாள் பெற்ற குழந்தையல்ல.

‘அது அவருடைய மூத்த தாரத்துப் பொண்ணாச்சே..உங்கூட எப்படி அனுப்புவாரு ? ‘

‘ஆமாங்க அது மூத்தவ பொண்ணுதான்..அதைப் பெத்துப் போட்டுட்டுத்தான் அந்த மவராசி போயிட்டா. அந்தப் பச்சைக் கொழந்தையப் பாத்துக்கத்தானே என்னைக் கட்டிக்கிட்டாரு. அதை நல்லா வளக்கணும்னுதானே நானும் எனக்குன்னு ஒண்ணும் பெத்துக்கல.. ‘

சிறிது நேரம் பேசாமலிருந்துவிட்டு காளியம்மாள் கண்களில் நீர் வடிய கரகரத்த குரலில் தொடர்ந்து சொன்னார், ‘பெத்தாதான் புள்ளீங்களா..நான் அஞ்சு வருசம் பாத்துப்பாத்து வளத்ததுங்க..அதை விட்டுட்டு என்னாலெ இருக்கமுடியாது.. ‘. இதைச் சொல்லிவிட்டு தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவரின் சோகத்தைப் பார்த்து, முத்துசாமியைத்

தவிர எல்லாரும் மிகவும் பரிதாபப்பட்டார்கள்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு, திருமலை முத்துசாமியைப் பார்த்துக் கேட்டார், ‘நீங்க இதுக்கு என்ன சொல்லுறீங்க ? ‘

‘அது எப்படாங்க… நான் எங்கொழந்தைய எப்படி விடறது… ‘

இதற்குள் கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் எழுந்து ‘அந்தக் கொழந்தையையே நீ யாருக்கிட்ட இருப்பேன்னு கேட்டிட்டாப் போச்சு ‘ என்றார். திருமலை சிறிது யோசித்துவிட்டு, ‘அது சின்னக் கொழந்தை, அதுக்கு என்ன தெரியும்..இருந்தாலும் குப்புசாமி அண்ணார் சொன்னமாதிரியே செஞ்சுப் பாப்போம் ‘ என்றார்.

அம்மாவின் மடியில் அமர்ந்திருந்த பொன்னம்மா, ஏன் தன் அப்பாவும் அம்மாவும் மட்டும் மாறிமாறி ஏதோ பேசிக்கொண்டிருக்கின்றார்கள், அதுவும் அம்மா ஏன் அழுதுகொண்டிருக்கின்றார் என்று ஒன்றும் புரியாமல் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதைத் தன்னிடம் அழைத்துவரும்படி எங்களுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமலை சொல்ல, அந்தப் பெண் பொன்னம்மாவின் கையைப் பிடித்து அவரிடம் கூட்டிச் சென்றாள். கொஞ்சம் பயப்பட்ட பொன்னம்மாவைத் தூக்கித் தன்மடியில் வைத்துக்கொண்ட திருமலை, அதன் தலையைப் பரிவோடு வருடிக்கொடுத்தவாரே ‘உங்க அப்பா எங்கம்மா ‘ என்றார். பொன்னம்மா தன் அப்பா இருந்த பக்கத்தை நோக்கிக் கையைக் காட்டியது. ‘உங்க அம்மா ‘ என்றார். அழுதுகொண்டிருக்கும் காளியம்மாவைப் பார்த்ததோ இல்லையோ, பொன்னம்மா உடனே அவர் மடியிலிருந்து இறங்கி ஓடிப்போய் காளியம்மாவின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டது. அதை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார் காளியம்மாள்.

இந்தக் காட்சியைப் பார்த்து அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார். கூட்டத்திலிருந்த எல்லாருடைய கண்களும் கலங்கிவிட்டன. இப்படி சில நிமிடங்கள் கழிந்தபின், திருமலை காளியம்மாளைப் பார்த்துக் கேட்டார், ‘அப்படித் தனியாப் போறதுன்னா நீ எங்கம்மா போவ ? ‘ என்றார். ‘நான் பொறந்த ஊருக்கே போயிருவேங்க ‘ என்று காளியம்மாள் சொல்ல, திருமலை கூட்டத்திலிருந்த எல்லோரையும் பார்த்துச் சொன்னார், ‘நாங்க தீர்ப்பச் சொல்லறதுக்கு முன்னாடி வேற யாராவது ஏதும் சொல்ல விரும்பறீங்களா ‘ என்றார்.

எல்லாரும் அமைதியாக இருந்தார்கள். அம்மா மெதுவாக எழுந்து நின்றார். அதைப் பார்த்த திருமலை, ‘என்னங்கம்மா ? ‘ என்றார்.

‘நம்ம அய்யாக்கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும் ‘ என்று அம்மா சொன்னதைக் கேட்டு அப்பா எழுந்து வர, இருவரும் கூட்டத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளிச்சென்று சிறிது நேரம் பேசினர். பிறகு அப்பா திரும்பிச்சென்று திருமலையிடமும் பரமசிவத்திடமும் ஏதோ சொன்னார். மூவரும் ஒரு கால்மணி நேரம் தங்களுக்குள்ளேயே ஆலோசனை செய்தபிறகு, திருமலை கூடியிருந்தோரைப் பார்த்துப் பின்வருமாறு சொன்னார், ‘முத்துசாமி காளியம்மாளைத் தள்ளி வைப்பதற்கு வேண்டிய காரணங்களைச் சரியாகச் சொல்லவில்லை. காளியம்மாள் மேல் எந்தவிதமான குற்றமும் இல்லை. இப்படிபட்ட நிலையில் சாதாரணமாக நாம் முத்துசாமி கேட்டதற்கு ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனாலும் காளியம்மாளே இதற்கு ஒத்துக்கொண்டதால் இருவரும் பிரிந்துபோக சம்மதிக்கின்றோம்.

முத்துசாமி தான் சொன்னபடி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அப்படி வரும் பெண் கொழந்தையை எப்படி நடத்துமோ என்றும் நாம் பயப்படவேண்டியிருக்கின்றது. இதுவரை அதை காளியம்மாள் நல்லபடியாகவே வளர்த்து வந்திருக்கின்றார். இனிமேலும் அதை நன்கு பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கின்றது. ஆகையால் குழந்தை காளியம்மாளிடமே இருக்க அனுமதிக்கின்றோம் ‘.

இதைக்கேட்டவுடன் காளியம்மாள் பொன்னம்மாவை இன்னும் இறுக அணைத்து அதன் கன்னத்தில் அன்போடு முத்தமிட்டார். முத்துசாமியின் முகமோ கறுத்துப்போய்விட்டது.

திருமலை தொடர்ந்து சொன்னார், ‘குழந்தை காளியம்மாளிடம் இருக்கலாம் என்று நாம் சொல்லிவிட்டதினால் அதைப் படிக்கவைக்கவும் மற்றும் இதர செலவுகளுக்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது நமது கடமை. ஆகவே நமது மிட்டாதாரர் தோட்டத்தையொட்டி இருக்கும் முத்துசாமியினுடைய ரெண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தையும் அவர் காளியம்மாவின் பேருக்கு எழுதிவைக்க வேண்டியது. ஒரு ஜோடி எருதுகளையும், ஒரு கறவை மாட்டையும் கொடுத்துவிட வேண்டியது. மேலும் முத்துசாமிக்கு நிறைய நிலங்களும் பிற சொத்துக்களும் இருப்பதினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மாதாமாதம் எரநூறு ரூபாயும் அதற்குப் பிறகு பொன்னம்மாவுக்குக் திருமணம் முடியும் வரை தலா முன்னூறு ரூபாயும் காளியம்மாளுக்குக் கொடுத்துவிடுவதுமல்லாமல், பொன்னம்மாவின் திருமணத்திற்கு வேண்டிய செலவுகளையும் முத்துசாமியே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் தீர்ப்பு சொல்லுகின்றோம். அப்படி பொன்னம்மாவின் திருமணத்திற்கு முன்பே முத்துசாமி காலமாகிவிட்டால் அவருடைய அனைத்துச் சொத்துக்களிலும் பாதி பொன்னம்மாவுக்குச் சேரவேண்டுமென்றும், காளியம்மாள் காலமாகிவிட்டால் அவருடைய எல்லா உடமைகளும் பொன்னம்மாவையே சேரும் என்றும் முடிவு சொல்லுகின்றோம்.

மேலும் காளியம்மாள் நமது கிராமத்திற்கு மருமகளாக வந்தவர். அவரைத் தக்க காரணமின்றி அவர் பிறந்த ஊருக்கு அனுப்புவது நமது கிராமத்திற்கே கெட்டபெயரைத் தரும் என்று நமது மிட்டாதாரர் வீட்டு அய்யாவும் அம்மாவும் நினைப்பதினாலும், காளியம்மாள் விருப்பப்பட்டால் குழந்தையுடன் தங்களது தோட்டத்துச் சாலையிலேயே குடுயிருக்கலாமெனவும் அவர்களை தாங்கள் நன்கு கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளித்தமையினாலும் அதற்கும் சம்மதிக்கின்றோம் ‘

இதைக்கேட்டவுடன் காளியம்மாள் வேகமாக நடந்துவந்து, குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு அம்மாவின் காலைத்தொட்டு கும்பிடப்போக அம்மா அவரைத் தடுத்துவிட்டு குழந்தையையும் அவரையும் அன்போடு அணைத்துக்கொண்டார்.

திருமலை தொடர்ந்து சொன்னார், ‘காளியம்மாளைப் பொறுத்தவரையில் முத்துசாமி எப்பொழுது தன்னுடைய குழந்தையைப் பார்க்க விரும்பினாலும் அதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் தீர்ப்புச் சொல்லுகின்றோம். இறுதியாக முத்துசாமி அம்மன் கோவிலுக்கு எரநூறு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் சொல்லி அம்மனை எல்லாருக்கும் அருள் புரியும்படி வேண்டிக்கொண்டு முடிக்கின்றோம் ‘

அடுத்த இரண்டு நாட்களில் முத்துசாமி அவர் செய்யவேண்டியதையெல்லாம் முறைப்படி செய்தார். அம்மாவும் கிராமத்திலேயே தங்கியிருந்து காளியம்மாவும் பொன்னம்மாவும் எங்கள் சாலையில் குடிவருவதற்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்துவிட்டு வந்தார். ஒரு வாரம் கழித்துத் திடாரென்று முத்துசாமி நாமக்கல்லில் எங்கள் வீட்டிற்கு வந்து தான் செய்தது மிகப்பெரிய தப்பு என்றும் மீண்டும் காளியம்மாளும் குழந்தையும் தன்னுடனேயே வந்து இருக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் காளியம்மாவோ முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

என்னவோ தெரியவில்லை, முத்துசாமி அவர் சொன்னபடி மறுபடியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பொன்னம்மா கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துப் பின்னர் அணியாபுரத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியிலும் படிப்பை முடித்து, திருச்சியிலுள்ள பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமும் பெற்று இப்பொழுது மணமகளாகப் போகின்றாள்.

நினைவுகளிலிருந்து திரும்பிய நான், ‘எல்லாம் நல்லா ஞாபகத்துக்கு வருதுங்கம்மா ‘ என்றேன். பதினைந்து வருடங்களாகத் தன் கணவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருந்த காளியம்மாள் இப்பொழுது அவருடன் சேர்ந்து மிகவும் மும்முரமாக மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதாக அம்மா கூறினார். அதைக் கேட்க மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

———————————————————

natesasabapathy@yahoo.com

Series Navigation