பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஸ்ரீமங்கை


இிரு வாரங்களுக்கு முன்பு இவ்விணையத்தில் பேரழிவுச் சீரமைப்பில் உளவியல் கண்ணோட்டம் குறித்து எழுதியிருந்தேன். இது குறித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் மின்மடல் மூலம் தொடர்பு கொண்டு சீரமைப்புப் பணிகளில் உளவியல் பங்கு குறித்து தகவல் தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் எனது நன்றிகள்.

மும்பையில் மகரிஷி தயானந்த் கல்லூரியில் உளவியல் துறைப் பேராசிரியை திருமதி. சுந்தரி அவர்களுக்கு வந்த அழைப்பின் பேரில், பதினெட்டு மாணவர்கள், இரு பேராசிரியைகள் கொண்ட குழு குளச்சல் நோக்கி உளவியல் சீரமைப்பிற்காகப் புறப்பட்டிருக்கிறது. இப் பதினெட்டு மாணவர்களில் பதின்மர் உளவியல் துறை மாணவர்கள்.மற்ற ஆறு மாணவர்கள் மற்றத் துறைகளைச் சார்ந்தவர்கள். கல்லூரி இயக்குனர் திருமதி.வர்மா அவர்கள் முயற்சியால், கல்லூரி நிர்வாகம் ,இக்குழுவின் போய்வரும் செலவை ஏற்றுக்கொண்டிருக்க, தனியார் நிறுவனங்கள் மற்ற செலவுகளை ஏற்க முன்வந்திருக்கின்றன.

பேராசிரியை திருமதி சுந்தரி அவர்கள் , இக்குழுவின் உளவியல் சீரமைப்புப் பணி குறித்துத் தந்த தகவல்கள் இவை.

உளவியல் சீரமைப்பை இக்குழு இரு வழிகளில் கையாளுகிறது.

1. உளவியல் ஆலோசனை (counselling). பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் , ஊக்கம் அளிக்கவும், தெளிவாக வாழ்க்கையை எதிர்நோக்கவும் , தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவன்/மாணவியையும் இக்குழுவின் அங்கத்தினர் அருகி, ஆலோசனை வழங்குவர். முக்கியமாக, 10 வது, 12-வது வகுப்பு மாணவ/மாணவியரை கூர்ந்து கவனித்து ஆலோசனை வழங்குவது என்பது திட்டமிடப்பட்டிருக்கிறது.

2. உளவியல் மருத்துவம் (therapy). மிகப்பாதிக்கப்பட்ட மக்கள் ( சிறு குழந்தைகள், பெண்கள்) அடையாளம் காணப்பட்டு, உளவியல் ரீதியான மருத்துவம் அளிக்க இக்குழு தயாராக இருக்கிறது. இதற்கு தேவையான உளவியல் மருந்துகள் சேகரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற நாடுகளில் நிகழ்ந்த பேரழிவில் தேவைப்பட்ட மருந்துகள், மருத்துவ முறை, ஆலோசனைமுறை முதலியன கவனமாக ஆராயப்பட்டு, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இடத்தின் கலாச்சார, சமூக,பொருளாதார அடிப்படையில் மாற்றப்பட்டு இச் சீரமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த டாக்டர்.திருமதி. சுந்தரி அவர்களும், மும்பையின் Instititute of Psycho therapy ‘-ஐச் சார்ந்த முதுவியல் மாணவர்கள் ஆறு பேரும் , தனித்தனியான ( one to one) ஆலோசனையும், சிகிச்சைக்கான ஆயத்தங்களும் மேற்கொள்வர். ஒரு நாளைக்கு நூறு பேர் சீரமைப்புப்பணியில் சிகிக்சை அளிக்கப்பட வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இச்சீரமைப்புப்பணியில் எடுத்துக்கொள்ளப்படும் முறைகள்:

1. இசை மூலம் அமைதிப்படுத்துதல்.

2. மன அமைதிப்படுத்தும் பிற முறைகள் ( இது குறித்து விளக்கம் கிடைக்கவில்லை.சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது)

3.EMDR ( Eye Movement Desensitisation and Re processing ) என்ற உளவியல் முறை சிகிக்சையாக PTSR ( Post Trauma Stress Disorder ) என்னும் மனச் சோர்விற்காக அளிக்கப்படும். பெரும்பாலான சீரழிவுகளின் சீரமைப்பில் இவ்வணுகுமுறை கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நேரக்குறைவால், இவ்வணுகுமுறை குறித்து பேராசிரியை. சுந்தரி அவர்களிடம் கேட்டுப் பின் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்.

இது தவிர சிறுகுழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள், உணவு, மாணவ/மாணவியருக்கான எழுது கருவிகள் முதலியன நன்கொடையாக வசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

இக்குழுவின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

தகவல் திரட்டித் தந்ததற்கு நன்றிகள் – பேராசிரியை. திருமதி. ஸ்ரீவரமங்கை, கணனித்துறை,மகரிஷி தயானந்த் கல்லூரி, லோவர் பரேல்,மும்பை

இக்குழுவின் அனுபவங்களை , விரிவாகப் பின் பகிர்ந்துகொள்வோம்

அன்புடன்

ஸ்ரீமங்கை ( க.சுதாகர்)

kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை

பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ஸ்ரீமங்கை


—-

நாச அலைகளின் கோரத்தாண்டவதின் அழிவை சீரமைக்கும் பணி தீவிரமாகியுள்ளது. உளவியல் ரீதியான சீரமைப்பு குறித்து விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இங்கு தன்னார்வக் குழு நண்பர்களைக் கேட்டபோது, அதன் முக்கியத்துவத்தை பல பரிமாணங்களில் சொன்னார்கள்

1. உணவு, உடை, இருப்பிடம் போன்ற இன்றியமையாதவற்றின் சீரமைப்பின் கூடவே, உளவியல் சீரமைப்பு உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வேறுவேறு வகையில் தாக்கப்பட்டிருப்பதால், உளவியல் சீரமைப்பு என்பது தனிமனிதனுக்குப் பொறுத்து அமைவதென்பது இயலாத காரியம். எனினும் பல குழுக்களாக வகுக்கப்பட்டு முயலப்படவேண்டும். சமூகவியல் வல்லுனர்களின் பங்கு இத்தொண்டில் குறைவாகவே காணப்படுகிறது.

முக்கியமாக, பெற்றோர் இழந்த குழந்தைகள் – அரவணைப்பும், ஊக்கமும் மிகத் தேவை. குழந்தைகள் இரவில் அலறுகின்றன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது ( 1 ஜனவரி 2005 மும்பை பதிப்பு ). சில குழந்தைகளை தீவிர சிகிக்சை நடைபெறும் இடங்கள், கடுமையாகப்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இருக்கும் தலங்களிலிருந்து அப்புறப்படுத்தி, பராமரிக்கவேண்டும் என்கின்றனர்- குஜராத் நிலநடுக்கத்தில் சீரமைப்பில் ஈடுபட்ட தன்னார்வக்குழுவில் இருந்தவர்கள். இது சாத்தியமாகவேண்டுமெனில், தக்க கூட்டமைப்பும், தகவல் தெடர்பும் சீரமைப்புக் குழுக்களிடையே அவசியம்.

2. ‘we need to empathize NOT sympathize with them for long ‘ என்றார் ஒரு நண்பர். இரக்கம் தேவைதான். ஆயின், பாதிக்கப்பட்டவர்களை வலுவேற்ற முயலவேண்டுமே தவிர, இரந்துண்டு வாழும் நிலையில் வைத்துவிடக்கூடாது. முக்கியமாக மீனவ நண்பர்கள் தங்கள் வலுவில் வாழ்ந்து வந்தவர்கள்.அவர்களது உறுதியைக் குலைக்கும் அளவிற்கு நடந்துவிடக்கூடாது . இந்த இலக்குமண எல்லைக்கோட்டை வரைவது யார் ? எங்கு இரக்கம் கரைந்து உற்சாகமூட்டும் பணி தொடங்கவேண்டும் என்பதை யார் நிர்ணயிப்பது ?

3. நெடுங்காலப் பாதிப்பை மனதில் கொண்டு, தன்னல இயக்கங்களை பாதிக்கப்பட்டவர்களைக்கொண்டு நிறுவ வேண்டும். பல தன்னார்வக் குழுக்கள் இதில் சிறப்பாகப் பணியாற்ற இயலும். அரசாங்க உதவிகளை எப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விதத்தில் எடுத்துச்செல்வது என்பதை இவ்வியக்கங்களுக்கு , தன்னார்வக் குழுக்கள் பயிற்சியளிக்க முடியும். இல்லாவிட்டால், சில ஓநாய்கள் உதவித் தொகையினைச் சுருட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஒரிசாவின் கொடுஞ் சூறாவளி ஒரு உன்னத உதாரணம்.

4. வெறும் பயமும் பீதியும் மட்டும் கொண்டு அலறுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். இங்கிலாந்து , இரண்டாம் உலகப்போரில் தாக்குண்ட போதிலும், மக்கள் பொறுமையாக வலுவிழக்காது எதிரியை எதிர்நோக்கியது போல, வலுவோடு உதவிக்கரம் நீட்டுவது அவசியம். வதந்திகளால் பீதியடைந்து ஓடுவதென்பது புழுக்களுக்கும் சாத்தியம்.

5.பெரும்பாலானவர்கள் , உதவி செய்யுங்கள் என்றால் வீட்டிலுள்ள பழைய துணிகளைக் களையும் சந்தர்ப்பமெனக் கருதுகின்றனர். ‘அஞ்சோ பத்தோ கொடுத்துவிடுவோம் ‘ – என்ற பரந்த நோக்கும் அலுவலகத்தில் நிதி திரட்டும் நோட்டுப்புத்தகத்தில் காணப்பெறுகின்றது. எங்கள் அலுவலகத்தில் மனித வள மேம்பாட்டுத்துறையினர் , முதலிலேயே கண்டிப்பாக எல்லோரும் 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு கொடுக்கவேண்டும் என அறிவித்து, பெரிய பெட்டிகளை அலுவலக வளாகத்தில் வைத்துவிட்டனர். முணங்கிக்கொண்டே சிலர் போனாலும், செய்தாகவேண்டும் என்பதால் உதவி உருப்படியாக போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை.

6 ஆன்மீகம், மனவியல் ரீதியான சீரமைப்பில் பெரும் பங்காற்ற முடியும். பல மதங்களைசேர்ந்த தொண்டு நிறுவனங்கள் சீரமைக்கச் சென்றிருப்பினும், உளவியல் ரீதியாக அவர்களது மதக் கொள்கைகள் பாதிக்கப்பட்ட மக்களது மனதில் ஆறுதலும், வலுவும் ஏற்ற முடியும்.

அன்புடன்

ஸ்ரீமங்கை (க.சுதாகர்.)

kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை