பேச மறந்த குறிப்புகள்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

திலகபாமா


இரண்டு நாட்கள் நாடார் மகாஜன மாநாடு 18, 19 நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஆலோசனை கூட்டங்கள் இந்த வருடம் தொடக்கம் தொட்டு நடந்தன. சாதிச் சங்கங்களோடு முரண்படுகின்ற ஆள்தான் நானென்றபோதும் ஒரு பொதுப்பணிக்காக ஒன்று கூடலை நிகழ்த்துவதற்கு இன அடையாளம் ஒரு காரணமாக இருந்து விட்டுப் போகட்டுமே என்ற அபிப்பிராயத்தில் நானும் பல கூட்டங்களுக்கு அழைப்பு வந்த போது மறுக்காது போயிருந்தேன். கூட்டங்கள் நெடுக அரசியல் அதிகாரம் ஒரு இனம் வளர்வதற்கு தேவையான ஒன்றென்பதும் அதை நோக்கி நகலுவது மட்டுமே அவ்வாலோசனைக் கூட்டங்களின் முக்கிய நோக்கமாகவும் இருந்த்து
அது மட்டுமல்லாது அவர்களது அதாவது இந்த ஒன்று கூடலை ஒருங்கிணைக்கும் முதலாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள் தொழிற்கூடங்கள் இவற்றுக்கான அதிகார வேலைகளை செய்து கொடுக்க டெல்லியில் ஒரு தங்களுக்கான அரசியல் வலுவுள்ள ஆள் வேண்டுமென்பது தான் உள்நோக்கமென புரிந்தது

எனக்கு அங்கு பேச வாய்ப்பு அளிக்கப் பட்ட போதெல்லாம் பதவிகளைத் தேடிப் போவது அரசியலை நிர்வாகம் என்ற இடத்திலிருந்து நகர்த்தி வெறும் தரகர்களாக மாற்றி விடும் என்பதையும் , இன்று நமக்கு தெரிந்த வார்த்தையில் சொன்னால் லாபிஸ்ட்( lobbiest) ஆக மாற்றி விடும்.என்று சொன்னேன். அதை விட இந்த இனத்திற்கான தேவைகளைக் கண்டறியுங்கள் அதை நோக்கிய கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள் செயல்படுங்கள் மாநாட்டுத் தீர்மானங்களாக அவற்றை முன் மொழியுங்கள் 1910ல் நாடார் மஹாஜன மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்துப் பார்த்தீர்களானால் அன்று அவற்றின் முக்கியத்துவமும், அவை இன்று காலாவதி யாகுகின்ற அளவுக்கு அதை உழைப்பால் செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் அதனாலேயே அரசியலும் பதவிகளும் தேடி வந்தது. என்பதும் புரியும். அதையெல்லாம் விட்டு விட்டு வெறுமனே பதவிகளில் இனத்தவர் இல்லையென்று புலம்புவதும், இனத்தில் பெயரால் ஒதுக்கீடுகளையும் சலுகைகளையும் கோருவதும், முன்னேறுவதற்காக பாடுபடாது ”பிற்படுத்தப் பட்டவராக” அறிவிக்கக் கோருவதும் அபத்தமானது என்று சொல்லி மாநாட்டுத் தீர்மானங்களையும் வடிவமைத்து அந்த மாநாட்டின் முக்கியப் பிரமுகர்களான கரிக்கோல் ராஜ் , ஏ.எம்.எஸ் அசோகன், ஏ.பி செல்வராஜன் அவர்களுக்கு அனுப்பினேன்
ஆனால் இன்று லாபிஸ்ட் என்ற புதுச் சொல்லுடன் நாடே கலங்கிக் கொண்டிருக்கின்ற வழியில் அவர்கள் சரியாகச் செல்லத் தாயாராக இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதுவும் நான் தான் அரசியல் என்பது நிர்வாகம் என்பதான புரிதலில் தவறுதலாக யோசித்து பேசியிருக்கிறேன் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது இன்று . யாரும் உழைக்கத் தயராக இல்லை, அரசியல் மக்களுக்கான நாட்டுக்கான உழைப்பு அல்ல , உழைப்பின் வழி மக்களால் உருவாக்கப் படுவது வழங்கப் படுவது சட்டமன்ற , மாநிலங்களவை மந்திரி பதவிகளல்ல, வெறும் தரகு வேலைக்கார்களாக எம். எல். ஏக்களும் எம். பிக்களும் மாறியிருக்கிறார்கள் . தேர்தலில் விதைப்பதை முதலீடாக்கி பதவிகளை கைப்பற்றி அதன் வழியே விளைச்சலை அறுவடை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இதில் மக்கள் உப்புக்குச் சப்பாணி என்பதை சொல்லப் படுகின்ற கோடிகளுக்கு எத்தனை சைபர் போட்டுப் பார்க்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க முடியாத பொது ஜனம் புரிந்தே மௌனமாய் இருக்கிறது
பசிக்கு திருடுகிறவன் 10 ரூபாய் திருடி விட்டால் கூட காவல் துறையும் அல்லது மக்களும் அவனைப் பிடித்து அவனது உடைமைகளை பிடுங்கி வைத்துக் கொள்கிற போது ,கோடி கோடிகளாய் திருடி விட்டு சந்தேகங்கள் சாட்சியங்கள் இவ்வளவு நிரூபணம் ஆன பின்னரும், பதவி பறிப்பு, வங்கி கணக்கு முடக்கம் இது எதையும் செய்யாது ஆமை வேகத்தில் நகன்று துப்பறிவது இதுதான் யதார்த்தம் என்று நம்பி விட பொது ஜனத்திர்கு பழக்கப் படுத்தும் ஒரு செயலாக அமைந்து விடுகிறது
நாமெல்லாம் ஓட்டுக்கள் போட்டு ஒன்றும் யாரும் மந்திரியாகவில்லை நாம் தேர்ந்திடுக்கின்ற பிரதமர் முதலமைச்சர்களோ பதவிகளைத் தீர்மானிக்கவில்லை. பதவிகளும் அதிகாரங்களும் நாட்டின் நிர்வாகத்திற்காக அல்ல அவர்கள் சம்பாதிக்க ( இதற்கிடையில் மந்திரிகள் உறுப்பினர்கள் சம்பள உயர்வு வேறு, இந்த சம்பளமெல்லாம் அவர்கள் புரளுகின்ற கோடியில் எந்த மூலைக்கு) என்பதெல்லாம் அறிந்த பிறகு அதிக அளவில் வெட்ட வெளிச்சமான பிறகு பொது ஜனமும் அவர்கள் தரகர்கள் என்ற மனோ நிலைக்கு தயாராகி விட்டார்கள்.
ஒரு வேலை ஆகனுமா எந்த மந்திரி அல்லது சட்டமன்ற உறுப்பினரை அல்லது கட்சி முக்கிய பிரமுகராவது (இதில் ஆளும் கட்சி எதிர்கட்சி பேதமெல்லாம் கிடையாது,) காசு கொடுத்தால் அவரே ஆளுங்கட்சியோடு தொடர்பு கொண்டு தனக்கும் பங்கு கிடைத்தால் சந்தோசமாக செயல்படுத்தி விடுவார். கம்யூனிச தோழர்களுக்கு பணம் வேண்டியதில்லை அவர்கள் இதை முடித்தார்கள் என்ற பேனர் கொடுத்தால் போதுமானது. மேலே முதலமைச்சர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்குத் தான் எதிர்கட்சி , நம் கட்சி, கூட்டணிக் கட்சி வேறுபாடெல்லாம். கீழ் தட்டில் கட்சிப் பணி ஆற்றுவதாய் சொல்லிக் கொள்பவர்களுக்கு பொது மக்களுக்கு அதிகார மையத்தில் வேலை ஆக வைக்கக் கூடிய தரகர்களே
தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டிருந்த தரகு வேலைகளும் காசு கைமாறுவதும் ஊடகங்களினால் அடுத்த அடுத்த நொடிகளில் அதிர்ச்சிகளாக வந்து விழுந்த மாத்திரத்தில் பொது சனம் அதிர்வுகளை இயல்பாக்கி இதுவே தொடர்வதை கேள்வி எழுப்பாமல் போகக் கூடிய மொன்னை மனோநிலைக்கு தள்ளி விடுகின்றது. இதற்குச் சான்றுதான் இவ்வளவு பதவிகள் யார் யாரோ தீர்மானித்து தெரிந்தும் கோடிகள் இலட்சங்களில் பலர் கைகளில் வங்கிக் கணக்குகளில் புரள்வது தெரிந்தும் ஒரு மிகப் பெரிய நாட்டின் அரசால் தட்டிக் கேட்டு, இனி நடக்காது தவிர்க்க ஒன்றும் செய்ய முடியாது கையாலாகாதிருப்பதுவும் எல்லாரும் எல்லா வகை ஊழலுக்கும் இயல்பு என பழக்கப் படுத்தப் பட்டு பார்த்துக் கொண்டே அடுத்த வேலைக்கு நகலுவதும்
தண்ணீரற்ற கிணற்றுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் சுவற்றில் ஊறும் பெரிய பாம்பைப் பார்த்து பயந்து போய் கண்ணை மூடிக் கொள்வதாய்
கோடிகளின் வரிசைகளையும் , உரையாடல்களை ஒட்டுக் கேட்ட திருப்தியிலும் அரசியல் பதவிகள் எல்லாம் தரகு வேலை பார்க்கத் தான் என்ற பெரும் பள்ளத்துள் விழுந்து கொண்டே இருப்பதை மறந்து போய் விடுகின்றோம். ஊறுகின்ற பாம்புகளை விடுங்கள் , எலி போனால் கூட வேடிக்கை பார்க்கிற மனோநிலைக்கு வந்து விட்டோம். புலி அச்சுறுத்தல்கள், தீவிரவாதம் என்று புதிது புதிதாய் நரிகளும் யானைகளும் கூட கண்ணில் பட நேர்ந்து பள்ளம் மறந்தே போகக் கூடும்
எனது மண்டை குடைச்சலில் கேள்விகள்
• நாடார் மஹாசன மாநாட்டின் ஆசை தானும் தரகு வேலைக்கு எப்போ போவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதா?
• வருகின்ற தேர்தலில் நல்ல தரகர்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் போகிறோமா?
• இடுக்கன் வருங்கால் நகுக என்ற வள்ளுவன் வாக்கை நம்பி சிரித்த முகமாய் இருக்க வேண்டியதுதானா பொது ஜனம்

• அரசியல் நாட்டின் நிர்வாகம், பதவிகள் அவற்றை நிர்வகிப்பதற்கு என்பதை யாரேனும் உணர முடியுமா?

அல்லது
வருங்காலம் அதை மறந்தே போகுமா?

Series Navigation

திலகபாமா

திலகபாமா