பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

பா.சத்தியமோகன்


1808.

அழிக்கும் நஞ்சானது முறையே

தலைக் கொண்ட ஏழாம் வேகத்தை அடைந்தது

அது புறத்திலும் தெரியும்படி-

பற்களும் கண்களும் மேனியும் கருகித் தீய்ந்து

விரிவாகப் பேசும் சொற்கள் குழறி

உயிர் விடும் நிலை ஏற்படவும்

மயங்கி வீழ்கின்ற மகன்

உணவு உண்பதற்கான குருத்திலையைத்

தாயாரிடம் வைத்து நிலத்தில் வீழ்ந்தான்.

1809.

தளர்ந்து வீழ்ந்த மகனைக் கண்டு தாயாரும் தந்தையாரும்

உளம் பதைத்து உற்று நோக்கினர்

உதிரம் வடியும் வடிவத்தையும்

மேனியில் விளங்கும் மற்ற குறிகளையும் கண்டு

நஞ்சினால் இறந்தான் என்று நடுங்குதல் இன்றி

அடியவர் அமுது செய்வதற்கேற்ற பணிகளை ஆராய்ந்தார்.

1810.

பெறுவதற்கரிய புதல்வன் தன்னைப் பாயினுள் வைத்து மூடி

வெளி முற்றத்தில் ஒரு பக்கம் மறைத்து வைத்து

இது சிறிதும் தெரியா வண்ணம் வந்தவர்க்கு அமுது செய்விப்போம் என்று

ஆற்றலுடைய திருநாவுக்கரசரிடம்

விருப்பத்தோடு விரைந்து வந்தார்.

1811.

விரைவாய் வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்று

அடிசிலும் கறிகளும் முதலான எல்லாமும்

அழகுற அருகில் வைத்துக் கொண்டு

ஒப்பிலாச் சிறப்புடைய தொண்டர் பெருமான் முன்

பணிந்து எழுந்து நின்று

இங்கு அமுது செய்து

எங்கள் குடி முழுதும் உய்யுமாறு அருள்வீர் என்று கூறக் கேட்ட நாவுக்கரசர்-

1812.

அரிய தவமுடைய திருநாவுக்கரசர் எழுந்து

செம்மையான தம் அடிகளை விளக்கிக் கொண்டு

வேறொரு ஆசனத்தில் அமர்ந்து உண்ணும் இலையைத் திருத்தி

அமுது இடுவதற்கு முன்னம் ஆசனத்தில் அமர்ந்து

தாம் வெண்ணீறு அணிந்து

இயல்புடைய அப்பூதியார்க்கும் அவர் துணைவிக்கும்

பொருந்திய திருநீறு நல்கி புதல்வர்க்கும் திருநீறு அளிக்கும் போதில்-

1813.

பழைய நான்மறைகளிலும் நூல்களிலும்

பயின்ற வாய்மையுடைய அப்பூதியாரை காதலுடன் நோக்கி

இவருக்கு மூத்த பிள்ளையையும் காட்டுக முன்னே வெண்ணீறு சாத்த என்றதும்

விளைந்த நிகழ்ச்சியின் தன்மை யாதொன்றும் உரையாதவராய்

இப்போது இங்கு அவன் உதவான் என உரைத்தனர்.

1814.

அத்தகு சொல்லைக் கேட்டவுடனேயே

அங்கத்தில் கண்ணுடைய சிவனாரின்

செவ்வி அருள் பெற்றஅன்பரான நாவுக்கரசர்

உள்ளத்தில் தடுமாற்றம் சேரவே

அதனை நோக்கி

இவ்வுரையை என் உள்ளம் பொறுத்துக் கொள்ளாது

அவன் என்ன செய்தான் இதற்கு உள்ளுறை ஒன்று உண்டு

உண்மையை விரித்து உரையும் என விளம்பினார்

அவர்கள் உடல் நடுக்கம் உற்று அஞ்ச-

1815.

பெரியவரான நாவுக்கரசர் உணவு உண்டு அருளும்

இப்பெரும் பேறு கிடைக்காமல் பிழைக்குமாறு

இவ்வாறு வருவது ஏனோ என உரைக்கவில்லை

ஆயினும் பெரும் தவத்தவரான அவர் வினவும் போது

வாய்மையை உள்ளவாறு உரைக்க வேண்டும் என்ற சீலத்தால்

உள்ளம் நொந்து பரிவோடு வணங்கி

மகனுக்கு நேரிட்டதை அப்போதே பகர்ந்தார்கள்.

1816.

அவர் உரைத்ததைக் கேட்ட திருநாவுக்கரசர்

நன்றாக இருக்கிறது நீங்கள் செய்தது!

யாரால் இவ்விதம் செய்யமுடியும் என்று முன்னதாக எழுந்து சென்று

ஆவி தீர்ந்த சவத்தை நோக்கி

இறைவரின் அருள் செய்யுமாறு

பாவின் இசையுடைய திருப்பதிகம் பாடி

பாம்பின் விஷத்தைப் போக்கி அருளினார்.

1817.

தீ போன்ற விஷம் நீங்கப்பெற்று உய்தி அடைந்தார்

மறை ஓதும் அந்தணர் அப்பூதியின் மைந்தன்

பொருந்திய உறக்கம் நீங்கி விரைவாய் எழுபவனைப் போல எழுந்தான்

காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானார் ஆட்கொண்ட

திருநாவுக்கரசர் திருவடிகளை வணங்கினான்

அதை பார்த்து நாவுக்கரசர் புனிதமான திருநீறை அவனுக்கு அளித்தார்.

1818.

பிரிந்த உயிரைத் திரும்பவும் பெற்ற பிள்ளையைக் காண்பவர்கள் எல்லோரும்

தெய்வத் தொண்டின் செம்மையான நெறியைப் போற்றி வாழ்வு அடைந்தார்

அங்கு நின்ற பெற்றோர்கள்-

அறிவதற்கு அரிதான பெருமையுடைய அன்பர்

திருவமுது செய்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான்

என்று சிந்தை நொந்தனர்.

1819.

அவ்விதம் அவர்களது மனவாட்டம் அறிந்த நாவுக்கரசர்

அவர்களுடன் ஓங்கிய இல்லத்தினை அடைந்து

அமுது செய்து அருளும் பாங்குடன் இருக்க

முப்புரிநூல் மார்பையுடைய அப்பூதி அடிகளும்

தாங்கிய மகிழ்ச்சியோடும் தக்கன எல்லாம் அமைத்தார்.

1820.

புகழும் கோமயம் கலந்த நீரால்

நிலத்தை விளங்க மெழுகி

விளங்கும் வெண் சுண்ணத்தையும் கோலம் பெற இட்டு

தீபமேற்றி நிகழ்ச்சிக்குக் கருவியாக இருந்த வாழையின் நீண்ட குருத்தினை

அரிந்த பக்கம் வலப்பக்கம் இருக்குமாறு முறைமையாய் வைத்தார்.

1821.

திருத்தமான வாசநன்னீர் அளித்ததும்

பெருந்தவத்தவரான நாவுக்கரசர்

அப்பூதி அடிகளைப் பிள்ளைகளுடனே நோக்கி

அரிய மைந்தர்களும் நீவீரும்

இங்கு பக்கத்தில் அமர்ந்து உணவு உண்பீராக

என்று விரும்பிய உள்ளத்தோடு கூற

அவர் பணித்தபடி செய்தார் அப்பூதி அடிகளும்.

1822.

மாதவம் செய்த மறையோர் அப்பூதியும்

அருகில் அமர்ந்து அமுது செய்தார்

அன்புடன் மனைவியார் திருவமுது படைக்க

பலநாள் அவர்தம் இல்லத்தோடு ஒருமை கலந்து இருந்தபின்

மேன்மிகு நாவின் மன்னர்

அருட்பெரும் கூத்தாடும் சிவனார் விளங்கும்

திருப்பழனம் எனும் மூதூரில் இறைவர் பதம் சேர்ந்து

நற்றமிழ்ப் பதிகம் பாடினார்.

1823.

அப்பூதி அடிகளாரின் பெருமைமிகு திருத்தொண்டைச் சிறப்பித்து

நிலைத்த பெருமையுடைய திருமேனியில் திருநீறு அணிந்த இறைவரை

விரும்பும் சொல்மாலையினைத் தொடுத்து வேய்ந்த

இந்தப்பெரும் செல்வத்தைப் பெறும்பேறு பெற்ற நல்லவரான அப்பூதிஅடிகள்

“திருநாவுக்கரசர் பாதமே பொருள்” என்று

எந்நாளும் அன்பால் துதித்தார்.

1824.

இவ்வகையாக திருநாவுக்கரசரின் நாமமே துதித்து

எந்நாளும் அடைய வேண்டியது அருந்தவத்தரான

நாவுக்கரசின் பொற்பாதமே என உணர்ந்து

செம்மையான வழி அதுவே எனக் கொண்டு

தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற

மான் போன்ற அழகிய கண்களுடைய உமையின் பாகமுடையவரின்

நல்ல பொற்பாதங்களை அடைந்தார்.

1825.

மான் கன்று கையிலுடைய சிவனாரின் பொன்னடிகளைத்

திருநாவுக்கரசர் அடைவாலே பெற்ற

மேன்மையுடைய அப்பூதியார் எனும் அந்தணர் பாதம் போற்றிக்

காடுபோல தாமரைகள் உடைய பொய்கைகள் சூழ்ந்த

திருச்சாத்தமங்கையில் தோன்றியருளிய

நான்மறையில் வல்ல “திருநீலநக்கர்” செய்த

திருத்தொழிலை சொல்லப் புகுவேன்.

(அப்பூதி அடிகள் நாயனார் புராணம் முற்றிற்று)

-இறையருளால் தொடரும்.

Series Navigation