பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

பா.சத்தியமோகன்


“விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்”

(திருத்தொண்டர்தொகை – 7)

3990.

நிலைபெற்று

நீண்ட காலமாய் வருகின்ற

கதிரவன் வழியில் வந்த மரபான

பழமை மிகு குலத்தில்

முதன்மை பெற்றது சோழர்களின் குலம்

அக்குலத்தின்

உரிமையுடைய காவிரிநாடு அது

கற்பகப்பூங்கொடியில் மலர்ந்த மலர்போல

நன்மைகள் உடையது

நாகப்பட்டினம் எனும் நகரம்!

3991.

அழகிய பொன் ஒளி மின்னும் மாளிகையில்

முத்துமாலைகளின் வரிசை சரியுமாறு

தேன்மலர் கூந்தல் மங்கையர்கள் பந்தாடும் மேடைகளை

மலை என மயங்கிப்போன மேகக்கூட்டங்கள்

கரிய கடல் நீரை முகர்ந்து உட்கொள்ள

பக்கம் வந்து மேல் ஏறும்.

3992.

பெருமை மிக்கது கடலின் பெரிய பேரொலி;

திருமகள் உறைவிடமோ

அந்தக்கடலினும் பெரியது எனச் சொல்லும்படி

அலைபோல் யானைகள்

எண்ணிலாத குதிரைகள்,

மணிகள்,

ஆடைகள் ஆகியவற்றை

மரக்கலங்கள் கொண்டுவந்தன

அந்த நகரில் சேர்த்தன.

3993.

நீண்ட தொன்மையுடைய

பெரும் புகழுடைய

பதினெட்டு நிலங்களிலேயே

நிறைந்த புகழும் அதிக பெருமையும் உடைய

பல பொருள்கள் கொண்ட மாந்தர்கள்

அங்கே பெருகியிருந்தனர்

கோடியளவில் தாண்டிய

செல்வக்குடி மக்கள் அங்கே இருந்தனர்

அதனால்

அந்த அழகிய பழைய நகரம்

இந்தவுலகம்

தன்னையே பிரதிபிம்பமாய் காணுகிற

கண்ணாடி மண்டலம் போலிருந்தது !

3994.

நெடிய அந்தத் திருநகரின் பக்கத்தில்

அலை கடல் விளிம்பில்

பல நீண்ட அலைகளின் நுரை வந்து தவழும்;

அதன் பக்கங்களை அடுத்து

நிலையான தொன்மை மிகுந்த

வலைவீசி மீன்பிடிக்கும் தொழிலால்

வளமை மிகு மீன் உணவு பெருகிய இயல்பால்

வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளது

பரதவர் சேரி.

3995.

அங்கே

மேகங்கள் பரப்பியது போல இருந்தன வலைகள்;

சிறிய குடிகளின் அருகினில்

உலர்ந்து கொண்டிருக்கும் மீன்களை

விலை பேசுவோர் தருகிற பசும்பொன்குவியல்கள்

அடுக்கப்பட்டிருந்தன;

செலுத்தும் மீன்படகுத் தொழிலால் வாழும் பரதவர்கள்

கொண்டு வரும் கயல்மீன்களை

“இவ்வளவு விலை பெறும்” என அளந்தன

பரத்தியரின் கண்களெனும் கயல்மீன்கள்.

3996.

உலர்ந்த தலையுடைய மீன்களைக் கவர்ந்துபோக

ஆசையுடன் வரும் பறவைகளுடன்

அன்னப்பறவைகளும் வரும்;

நுட்பமான இடையுடைய

நுளைச்சியரின் அசையும் நடை அழகு நடை கண்டு

தோற்றுவிட்ட அன்னங்கள் –

கரிய கொம்புகளுடைய

வாசம் வீசுகிற புன்னை மரக்காட்டில்

மரக்கிளைகளிலிருந்து இறங்காமல்

மருண்டு மருண்டு பார்க்கும்.

3997.

நீண்ட தொடர்களை உடைய வடங்களை

வலைஞர்கள் இழுக்கும் ஒலி;

விலை எடுத்துக்கூறி விற்பவர் ஒலி;

வாங்குவோரை விளித்து அழைக்கும் ஒலி;

மிகச்சிறந்த வெண்சங்குகளைக்

கொண்டுவந்து குவிப்பவர்களின் ஒலி

இவை யாவும்

நெடுங்கடலின் எதிரொலிக்கு எதிரொலிகள்!

3998.

அத்தகைய இயல்புடையது அந்த நுளைப்பாடி;

அங்கு வாழ்ந்து –

மனை வாழ்வின் வளம்காணும்

நுளையர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர்;

இளம் பிறையினை முடியில் புனைந்த

சிவபெருமானின் தொண்டு புரியும் செயலில்

சிறந்து விளங்கியதால்

அதிபத்தர் என புகழப்பட்ட மேன்மை கொண்டார்.

3999.

அங்கு

அதிபத்தர் எனும் நாயனார்

நுளையரின் தலைவராகினார்

அவர்கள் –

ஒலி செய்கின்ற கடல் நடுவில்

பலவாறு தொழில் செய்தனர்

பக்கமெங்கும் விரியும் வலைகள் வீசி

மீன்களை வளைத்துப் பிடிப்பர்;

உயர்ந்த மீன் குவியல்கள்

அளவற்றதாக இருந்ததால் –

செல்வம் உடையவராகி உயர்ந்தவரானார்.

4000.

குறையிலாத மீன்களைப் பிடிப்பார்

அந்தக் கொலைத் தொழிலின்

வளத்தைப் பெறுவார்

வலைகளினால் வாரி

முகந்து எடுக்கும்போது அகப்படும் மீன்களில்

தலைமையான ஒரு மீன் சிக்கும்போதெல்லாம்

“இ·து ஐந்தொழில் கூத்தனாகிய

அருட்கூத்தனாகிய சிவபெருமானுக்கு ஆகுக”என

இடையறாத அன்புடன்

விருப்பமுடன்

நாள்தோறும்

குளிர்ந்த கடலிடமே விட்டு வந்தார் அதிபத்தர்.

4001.

ஒழுங்கான வலையில்

ஒரு சில நாட்களில்

ஒரே ஒருமீன் கிட்டியபோதும்

“இது

ஏக நாயகர் சிவபெருமான் திருவடிக்கே” என

விட்டுவிடும் இயல்பு கொண்டார்

அத்தகைய நாட்களில்

பல நாட்கள் கழிந்த பிறகு –

ஒரு ஒரு மீன் கிடைக்கும்

அதனையும் அவர் –

இறைவருக்கென கடலிலேயே விட்டுவிடுவார்

4002.

மீன்கள் விற்பனையால்

உணவுப்பண்டங்களால்

மிகுந்து பெருகிய அவரது செல்வம்

இப்படியாக சுருங்க ஆரம்பித்தது

உணவில்லாமல் உறவினர்கள் வருந்தியபோதும்

வருந்தவில்லை அவர்

கையினில் மான் கன்றை ஏந்திய

இறைவரின் திருவடிக்காக

வலையில் அகப்படும் ஒரே ஒரு மீனையும்

கடலில் விட்டு மகிழ்ந்தார்

4003.

பல நாட்கள் இப்படியே போயின

உணவு உண்பதையும் மறந்தார் அதிபத்தர்

உடல் வாடியது

அழகிய திருமேனி தளர்ந்து போனபோதும் –

தன் தொண்டில் குறையாத சீலம் காட்டினார்

அவரது இயல்பை அறிந்த இறைவன்

ஆல கால விஷம் அருந்திய இறைவன்

இதனை அறிந்தார்

அந்தத் தொண்டர் தரும்

அன்பெனும் அமுதத்தினை அருந்தினார்!

4004.

அப்படிப்பட்ட நாட்களில்

கிடைக்கும் அந்த ஒரு மீனும்

கிடைக்காத வண்ணம் செய்து –

தூய பசும் பொன்னாலும்

ஒளியுடைய மணிகளாலும்

மீனின் உறுப்புகள் அமைத்தார் இறைவர்

உலகங்களே அம்மீனின் விலை எனும்

அற்புதத் தன்மை கொண்ட அந்த மீன்

அதிபத்தர் வீசிய வலையில்

அகப்படச் செய்தார் இறைவர்

4005

மீனை இழுத்தது நீள்வலை

அலை கடலில் வந்து ஏறியது நீள் வலை

“ஓங்கு செஞ்சுடர் கதிரவன்தான் உதித்தானோ” என

உலகம் வியக்கும்படி

தாங்கிய பேரொளியுடன்

தழைத்து காணப்பட்டது சிக்கிய மீன் !

அதைக் கண்டதும்-

அருகிலிருந்த பரதவர்கள்

“ மீன் ஒன்றைப் பிடித்தோம்” என்றனர்

4006.

பரதவர்கள் இவ்வாறு இயம்பியதும்

புகழ்ப்பெருமை மிகு

தொண்டரான அதிபத்தர்

“ பொன் திரண்ட சுடர்கொண்ட

நவமணிகளும் விளங்கும் உறுப்புகள் கொண்ட

இந்த ஒரு மீனும்

என்னை ஆளுடைய

என்னை ஆளாகக் கொண்டவருக்கே உரியது” என்று

அதனையும் அலை கடலில் எடுத்து வீசினார்

4007.

“அகில உலகங்களும்

பொருளையே முதலாக உடையது” என்று கூறும்

அப்படிப்பட்ட

வலிமையான

பொருள் ஆசையை

பொன் ஆசையை

தூரத்தில் எறிந்த

ஒப்பிலாத மெய்த்திருத்தொண்டரின் முன்

காளையூர்தி மேல்

மேகம் தவழும் வானில் எழுந்தருளினார்

தேவர்கள் கற்பகப்பூ மழை பொழிந்தனர்

4008.

அப்போது –

ஐந்து வகை வாத்தியங்களும் ஒலித்தன

அதிபத்தர் நிலத்தில் வீழ்ந்து பணிந்தார்

எழுந்து –

அஞ்சலியாக

தனது கரங்களைத் தலைமீது குவித்து நின்றார்

அதிபத்தரை சிவலோகம் அடைவித்து

அழகிய சிறப்புடைய அடியார்களுடன்

இருக்கச்செய்தார் –

நஞ்சுண்ட

ஒளியுடைய

கழுத்தினை உடைய இறைவர்.

4009.

கொலைத்தொழில் புரியும் மரபினில்

எது பொருந்துமோ

அதனையே

பெருந்தொண்டாகச் செய்து

மெய்மையே புரிந்த அதிபத்த நாயனாரின்

பகழ்விளங்கும் திருவடி வணங்கினோம்;

அதன் துணையால்

மூன்று உலகங்களும் முறையோடு போற்றுகிற

செம்மையும் நீதியும் மிகுந்த

கலிக்கம்ப நாயனாரின்

திருத்தொண்டு பகர்வோம் இனி.

50. கலிக்கம்ப நாயனார் புராணம்

4010.

தமக்கு உரிமையான

நல் ஒழுக்கத்தில் நின்று

உயர்ந்த தொன்மையான மரபில்

இல்லற நெறியில்

தரும நெறியோடு வாழும் குடிமக்கள்

தழைத்தோங்கும் ஊர் பெண்ணாகடம் எனும் ஊர்

மேகங்கள் வந்து தங்குமளவு உயர்பூஞ்சோலைகளுடன்

உலகமே பெருமை கொள்ளும் தொன்மையான ஊர்

பெண்ணாகடம் எனும் ஊர்.

4011.

அந்தத் தலத்தில் வாழ்கிற

வணிகர் குலத்தில் தோன்றினார் கலிக்கம்பர்;

கற்றைச்சடையார் சிவபெருமானின் திருவடிகளில்

காதலுடன் வளர்ந்தார்

அந்தத் தலத்தில் –

தூங்கானை மாடத்தில் எழுந்தருளியுள்ள

சிவபெருமானின் திருத்தொண்டைப்

பற்றிக்கொண்டு பணிசெய்யும் கலிக்கம்பர்

சிவப்பற்று தவிர

வேறொரு பற்று எதுவுமிலாதவர்

4012.

கலிக்கம்பர் –

சிவபெருமானின் அடியார்களுக்கு

திருவமுது இடுவார்

அத்துடன்

அடியவர்கள் விரும்பும் கறிவகைகள்

நெய்

தயிர்

இனிய கட்டியெனக் காய்ச்சிய பால்

தேனினும் இனிய கனிகள்

அனைத்தும் இன்பமுற அளிப்பார்

4013.

அந்தவிதமாக

திருத்தொண்டு புரிந்து வரும் நாளில்

ஒரு நாள்-

நிலைபெற்ற தனது திருமனையில்

வீட்டில்

அமுது செய்ய

உணவு உண்ணுவதற்காக

வந்த தொண்டர்களையெல்லாம்

தொன்மையான முறைப்படி

அமுது உண்ண வைத்தார்

அதற்குமுன்

அடியார்களது திருவடிகளையெல்லாம்

நாயனார் நீரால் சுத்தம் செய்வார்

அப்போது –

4014.

மனைவியார் –

இல்லம் முழுதும் சுத்தம் செய்தார்

சுவையான திருஅமுதும்

கறிஅமுதும்

புனிதமான தண்ணீருடன்

அருந்தும்விதத்தில் உள்ள பிற பொருள்களையும்

எடுத்து வைத்தார்

பெரும் தவமுடைய

அடியார்களின் திருவடிகளையெலாம்

விளக்க வரும்போது –

4015.

முன் நாட்களில்

தொண்டு செய்யும் சுற்றமாக இருந்த ஒருவர்

கலிக்கம்பர் வீட்டில்

ஏவல் பணியை வெறுத்துச்சென்றவர்; பிறகு

எலும்பையும் பாம்பையும் அணிந்த

பிரானின் அடியவராகியிருந்தார்;

அவர்

அங்குவந்த அடியார்களுள் ஒருவராக

திருவேடம் தாங்கி வந்து தோன்றினார்

அவர் பாதத்தையும் விளக்கினார் –

4016.

“ முன்பு நம் ஏவலை

செய்யாமல் சென்ற சுற்றத்தினர்

இவர்தான் போலும்” என

அன்பு மனைவியார் நினைக்கிறார்போலும்;

“ அதனால்தான் மனைவியின் மலர்க்கரங்கள்

அடியார்களின் பாதம் சுத்தம் செய்ய வார்க்கும் நீரான

கரக நீர் வார்க்க

சில கணங்கள் தாமதப்படுத்துகின்றன

காலம் தாழ்த்துகின்றன” என்று

கரிய கூந்தல் கொண்ட மனைவியைப்பார்த்து

தமது மனதில் எண்ணினார் –

முதன்மைபெற்ற திருத்தொண்டரான கலிக்கம்பர்

4017.

“மணம்கமழும் கொன்றை முடியாராகிய

சிவபெருமானின் அடியார்கள் முன்பாக

அவரது

முன்நாள் நிலையை எண்ணி

நீர்வார்க்காமல் விட்டாள்” என

மனதில் எண்ணிக்கொண்டு

மனைவியின் கையை

வெட்டித் துண்டாக்கினார்

கரக நீரை

தாமே அடியாருக்கு வார்த்து

அடியார்களின் காலினைச் சுத்தம் செய்தார்

4018.

அவ்வாறு

காலில் நீர்விட்டு விளக்கிய பின்பு

அடியார்கள் அமுது செய்வதற்கான

மற்ற செயல்களைத் தாமே செய்தார்

மனைவிக்கு நிகழ்ந்தது பற்றி

அசைவற்ற மனநிலையுடன்

அத்தொண்டரை

அமுது உண்ணவும் செய்தார்

அளவிலாத பெருமையுடைய

அவரது திருத்தொண்டின் வழியே நடந்து

கழுத்தில் நஞ்சையுடைய

இறைவரின் திருவடிநிழலில்

அடியார்களுடன் கலந்தார் கலிக்கம்பர்

4019.

“குளிர்ந்த

நிறைவான

நீர் பொருந்திய கடலில் உண்டான நஞ்சைஉடையவரின்

அடியாரது திருக்கோலம் இது”என உணராத

மனைவியின் கையை வெட்டிய

கலிக்கம்பர் மலர்ச்சேவடி வணங்கினோம்

ஐம்பூதங்களின் தலைவரான

சிவபெருமானின் திருத்தொண்டு செய்து

எல்லா உலகிலும் விளங்கும்

காதல் கொண்ட அன்பரான கலியநாயனார்

பெருமையை இனி உரைப்போம்

( கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று )

51. கலியநாயனார் புராணம்

4020.

பெரிய உலகு இது !

இதில்

புகழினால் ஓங்கிய பெருமைகொண்ட

தொண்டை நாட்டில்

கங்கை நீர் உலவும் சடைக்கற்றை உடைய

நிருத்தர் சிவபெருமானின் தலம்தான் திருவொற்றியூர்

அது –

மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த

தேர் உலவுவதற்கு இடமான

நெடும் வீதிகள் கொண்டது.

4021.

பெருமையுடைய பெரிய தெருக்களின் தோற்றம்

பெளத்தர்களுடன்

மயில்பீலி உடைய

சமண கோலத்தவர்கள் கூறும் பொருள் போல

ஆகாயவெளியை இல்லை என மறைத்தது;

ஆடும் கொடிகளை உடைய

அழகிய பெரிய மாளிகையின் வரிசைகள்

நகரத்தை அடுத்துள்ள

அழகிய கமுகு மரங்களின் சோலைபோலுள்ளது;

நகரை அடுத்துள்ள கடலானது –

அசைகின்ற

பயிர்தோட்டம்போல இருந்தது

4022.

ஓதப்படுகின்ற பதிக இசையினை

மண்டபங்கள் நீங்காமல் கேட்டுக் கொண்டிருந்தன

அன்னநடை கொண்ட பெண்களின் ஆடல்கள்

எந்நேரமும் நீங்காமல் அரங்கம் வாழ்ந்தது

பலமுறை ஒலிக்கும் வாத்தியங்களின் இசை

வீதிகளை நீங்காமல் இருந்தது

செந்நெல் அரிசியால் சமைத்த உணவு மலையோ

திருமடங்களை நீங்காமல் இடம் கொண்டது.

4023.

நிறைந்த மலர்களுடைய மாதவி மரங்கள்

கிளைத்து வளரும் குங்கும மரங்கள்

இதழ்கள் அவிழும் முகம் கொண்ட சண்பக மரங்கள்

குளிர்ந்த செருத்தி மரங்கள்

தாழை மரங்கள் ஆகியவற்றின் மலர்கள்

கடல்நீரையே மணக்கச்செய்யும் மணத்தை வீசின

செழுமையான நிலவின் துகள் போல

மணல் பரப்பு மின்னியது

திருப்பரப்பாக விளங்கியது.

4024.

மதில்களைச் சேர்கின்ற மேகங்களின் ஒலி

வீசும் அலைகள் உடைய கடலின் ஒலி

பயிலப்படும் பலப்பல வாத்திய ஒலி

இவை அனைத்தும் மேலும் மேலும் கூடுவதால்

பிரித்து அறிய இயலாமல்

ஒலிகள் ஒலிக்கும் அந்நகரில்

தைலவினை எனப்படும்

செக்குத்தொழில் மரபு வாழும் தெரு

சக்கரப்பாடித் தெரு ஆகும்

ஒளி வீசும் மணிகள் முதலான தூய பொருள்களை

உற்பத்தி செய்யும் தெரு அது.

4025.

அக்குலம் செய்த தவத்தால்

உலகில் தோன்றினார் கலியனார்

மிக்கபெரும் செல்வம் ஓங்க விளங்கினார்

தகுந்த புகழுடன்

கலியனார் எனும் பெயர் கொண்டு

முக்கண் இறைவருக்கு உரிமையான

திருத்தொண்டு நெறிப்படி நடந்து வந்தார்.

4026.

எல்லை கூற முடியாத

பலகோடி செல்வத்துக்கு தலைவராகினார்

அச்செல்வத்தைப் பயனாகக்கொண்டு

திருவொற்றியூர் அமர்ந்த

இளம் காளையுடைய இறைவரின் கோயிலில்

உள்ளேயும் வெளியேயும்

இரவிலும் பெரிய பகலிலும்

திருவிளக்கு ஏற்றும் பணியை செயல்படுத்தினார்.

4027.

எண்ணமுடியாத அளவுடைய திருவிளக்குகள்

நாளெல்லாம் எரித்து வந்தார்

சிவபுண்ணியத்தின் மெய்த்தொண்டை

மெய்யான செயலை

உலகிற்குப் புலப்படுத்துவார்

பூமியில் அவரது இருவினைகளும் இறந்ததுபோல

அருளாலே உள்ளே நிறைந்த பெரும் செல்வமானது

மேலும் பெருகாமல் இறந்து ஒழிந்தது

அவரது பெருமைக்குரிய செல்வம்.

4028.

திருநிறைந்த செல்வப்பெருக்கம் தேய்ந்து

அழிந்த பின்பும் கூட

பெருமை நிலைத்த தம் திருப்பணியிலிருந்து

பெயர்ந்து போகாத பெருமையுடைய

பேராளர் பெருந்தகையாளர் கலியநாயனார்

தனது மரபில்

செல்வம் உள்ளோரிடம் எண்ணெய் பெற்று

விற்றுத் தரும் பணியினை மேற்கொண்டார்

அவ்வகையில் வரும் கூலியினைக் கொண்டு

திருப்பணியைச் செய்து வந்தார்.

4029.

செல்வ வளம் உள்ளவர்களிடம் கூலி பெற்று

திருப்பணி செய்யும் செயலும்

அவர்கள் கொடுக்காமல் விட்டதால்

இல்லையென ஆனது

நிலை மாறி போனது

மனம் தளர்ந்தார் கலிய நாயனார்

செக்கு ஆடும் இடத்தில் வரும் பணியைச்செய்து

அந்தக் கூலியைப் பெற விரும்பினார் —

4030.

செக்கு நிறைய எள் இட்டு ஆட்டுவார்

பதம் அறிந்து தைலம் (எண்ணெய்)

பக்கங்களில் வழியும் வரை

மிகவும் வருந்தி உழைப்பார்

வட்டமாக சுழன்று வரும் எருதுகளைச் செலுத்துவார்

தக்கவாறு பல சிரமங்கள் பட்டேனும்

கூலி பெறுவார்

தவறாமல் மிகுந்த திருவிளக்குகள் இட்டு வந்தார்

“தூய திருத்தொண்டு இது” என விளக்கிட்டார்.

4031.

அதே தொழிலில்

இளைஞர்கள் பலர் உள்ளதால்

அந்தப் பணியினால் வருகின்ற வருமானமும் நின்று போனது;

எவ்வகையாலும் பணம் கிட்டாமையால்

மிகவும் துன்பமுற்றார்

இடரில் உழன்றார்

ஒப்பிலாத பெருமையுடைய தம் வீட்டைவிற்றார்

விளக்குகள் எரித்ததால் அப்பொருளும் தீர்ந்தது

தீர்ந்த பின் –

சொல்வதற்கரிய சிறப்புடைய

தம் மனைவியாரை விற்று

பொருள் தேட வழி தேடுபவராக மாறினார்

4032.

மனம் மகிழ்ந்து மனைவியாரைக் கொண்டு சென்றார்

வளம் வாய்ந்த நகரில்

தனம் அளிப்பவர் எங்கும் கிடைக்கவில்லை

அதனால் தளர்வெய்தினார்

சினம் மிகுந்த காளையுடைய

சிவபெருமான் திருக்கோயிலில்

திருவிளக்கு இடும்பணி நின்று போவதை

இதற்குமுன்

கனவிலும் அறியாத நாயனர்

வேறு செயல் செய்ய எதுவுமிலாமல்

கோவில் வந்து சேர்ந்தார்.

4033.

“தம்மை ஆட்கொண்டு

தம் பணியை ஏற்றுக் கொள்ளும்

நாதர் சிவபெருமான் கோயிலுள்

அழகு மிகு திருவிளக்குத் திருப்பணி

நின்று போன அச்சமயத்தில் –

மணி போன்ற சுடர் விளக்கு ஒளிர்வது நின்றுபோனால்

இறந்து போனால்

நானும் இறப்பேன்” என்ற துணிவை

மனம் கொள்ளும்படி நினைத்துக் கொண்டார்

அச்செயலை முடிக்கத் தொடங்கினார்

4034.

திருவிளக்குகளுக்கு எல்லாம் திரி இட்டார்

அங்கு

அகல்களை முறையாகப் பரப்பி வைத்தார்

அச்செயல் நிரம்புவதற்கு

அச்செயல் முடிவு பெறுவதற்கு

எண்ணெய்க்கு ஈடாக

தம் உடலின் உதிரம் கொண்டு நிறைக்க முயன்றார்

இரத்தம் கொண்டு நிரப்புவதற்காக

கருவி கொண்டு

தனது குரல்வளையினை

அறுத்துக்கொள்ளத் துவங்கியதும் அதே கணம்

அவரது கையினை

கண்ணுதலார் சிவபெருமான்

பெருகும் திருக்கருணையுடன்

நேரில் வந்து பிடித்துத் தடுத்தார் –

அருள் புரிந்தார் –

4035.

கலிய நாயனார் முன்

இளமையுடைய காளையூர்தி மேல் எழுந்தருளினார்

அரிதலால் உண்டான அந்தப்புண் நீங்கி

ஒளி பெற்று விளங்கியது

தலை உச்சி மீது கைகுவித்து

அஞ்சலியாக நின்றவரைப் பார்த்து

அழகிய சிவலோகத்தில் விளங்க வீற்றிருக்கும்படி

அருள் புரிந்தார் பரமர்.

4036.

தேவர்பிரான் திருவிளக்குப்பணி

செயல் முட்டம் எனப்படும் செயல் தேக்கம் ஏற்பட்டதால்

தன் மிடறு வெட்டிக் கொண்ட

சொல்ல இயலாத செயலை முடித்த

கலிய நாயனாரின் கழல் வணங்கி

அத்துணையுடன்

வியப்புமிகு இவ்வுலகில் யாரேனும்

சிவனடியார் தம்மை இகழ்ந்து பேசினால்

பேசியவரின் நாக்கினை அரியும் சத்திநாயனார்

திருத்தொண்டின் நலங்களை உரைப்போம் இனி.

(அரிதல்- வெட்டுதல்)

( கலிய நாயனார் புராணம் முற்றிற்று )

52. சத்தி நாயனார் புராணம்

4037.

உழவர்கள் தமது வயலில்

களை என களைந்து எடுத்துவிட்ட

தாமரை மலர்கள் பொழிந்த தேன்

குளங்க¨ª நிறைக்கின்ற அளவு தேங்கும் ஊர் அது;

செங்கோல் வலிமையினால் –

எட்டுத் திசைகளிலும் வெற்றித் தூண்களை நாட்டி

அரசு செய்யும் சோழ மன்னனின்

காவிரி பாயும் நாட்டில் –

வரிஞ்சையூர் என்ற அந்த ஊர் உள்ளது.

4038.

வரிஞ்சையூரில்

வாய்மைப் பண்புடைய வேளாளர் குலம்

பெரும் சிறப்பு பெறுமாறு வந்து தோன்றினார் சத்தியார்

நான்முகன் முதலான தேவர்களும்

நினைப்பதற்கு கூட அரியதான

சிலம்பு அணிந்த சிவபெருமான் திருவடிக்கு

ஆளானவராகப் பிறந்தார் சத்தியார்

4039.

தலைவராகிய

சிவபெருமானின் அடியவரை

சிவபெருமானின் அன்பரை

யாரேனும் இந்த பூமியில்

இகழ்ந்து பேசும் சொல்லைக் கொண்ட

எவர் நாவையும் கத்தியால் வெட்டிவிடும்

சக்தி உடையவர்

“சத்தியார்” என்ற பெயர் கொண்டவர்.

4040.

சிவனடியாரை தீங்கு சொல்லி இகழ்ந்த

அறிவிலாதவரின் நாவைத் துண்டித்தலுக்காக

“தண்டாயம்” எனும் குறடு போன்ற

வளைந்த கருவியினால் இழுத்து

அங்கேயே கூர்கத்தியால் அரிந்து

அன்புடன் ஓங்கும் சிறப்புடைய தொண்டில்

உயர்வுடையவராக இருந்தார் சத்தி நாயனார்.

4041.

நிலை பெற்ற பெரிய உலகில்

அத்தகைய ஆண்மையுடைய திருப்பணியை

வலிமையோடு

பலநெடுங்காலமாக

பரிவுடன் அன்புடன் செய்து வந்தார்

தலையில் கங்கை ஆறு சூடிய இறைவரின்

செம்மை நெறித் தொண்டு செய்து வந்தார்.

4042.

மிகவும் அரிய இத்திருப்பணியினை

தன் உயிரினால் ஐயம் இல்லாமல் செய்த

வீரத் திருத்தொண்டரான சத்தியார்

வையம் உய்வதற்காக

வையம் வாழ்வதற்காக

அழகிய அம்பலத்தில் ஆடுபவரின்

செம்மை தரும் பாத நிழல் சேர்ந்தார்

4043.

சிவபெருமானின் தொண்டர்களை

நன்மை சொல்லாதவர்கள் வீழும்படி

அவர்கள் நாக்கினை வெட்டிவிடும்

சத்தியாரின் தாள் பணிந்து

அத்துணையுடன்

சிவநெறியான தவமுடைய “ஐயடிகள்” எனும்

தூய்மையான காடவரின்

அடிமைத் திறம் சொல்வோம்.

(சத்தி நாயனார் புராணம் முற்றிற்று)

53. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

4044.

உலகில்

பல்லவரின் குலமரபில் வழியிலே பிறந்தார்

கொடிய வறுமையும் பகையும்

அதன் துன்பங்களும் அடக்கினார் அவர்தான் –

சிவந்த சடையுடைய இறைவரின்

சைவத்திரு நெறி வழியின்படியே

அரசாட்சி செய்த ஐயடிகள்;

அரச நீதியால்

உலகமெல்லாம் தம் செங்கோல் ஆணைக்குக்

கட்டுப்படச் செய்யும் அரசாட்சி செய்து வந்தார்.

4045.

விரிந்த இவ்வுலகில் செல்வம் விளங்க

புகழ் விளங்க

எல்லா உயிர்களும்

பெருமையுடன் வாழச் செய்யும்நெறி தழைக்கும்படி

உலகில் சைவத்துடன்

வேதநெறியும் தழைத்தோங்கும்படி

பகைவர் புலங்களை ஒடுக்கி

தனக்குக் கீழே கொண்டு வந்தார்

அரசாட்சி செய்து வந்தார் அந்நாளில் –

4046.

ஐயடிகளுக்கு

பிற மன்னர்களும் கட்டுப்பட்டு ஏவல் செய்தனர்

வடமொழி தென்மொழி ஆகியவற்றின் கலைகள்

வசப்பட்டு நின்றன;

உலகினைக் காவல் செய்யும் அவர்

“அரசாட்சி புரியும் இத்தொழில் ஒரு துன்பம்”

என இகழ்ந்து அதனை விட்டு விலகினார்

தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு

நல்சிவநெறியில் நன்மை நெறியில் நின்று

திருத்தொண்டு அளித்து வந்தார்.

தொண்டினை உரிமையோடு காத்து வந்தார்.

4047.

கடல் சூழ்ந்த உலகில்

அண்டர்பிரானாகிய சிவபெருமான்

அமர்ந்து அருள் புரிகின்ற

எல்லா ஆலயங்களும் கண்டு துதிப்பார்

திருத்தொண்டின் கடமை முழுதும் முடித்து

வளமையுடைய தமிழினால்

வெண்பா ஒவ்வொன்றாகப் பாடித் துதித்தார்

4048.

பெருகி நின்ற காதலுடன்

பக்தியுடன் வணங்கி

பெரும்பற்றப்புலியூரின் சிற்றம்பலத்தில்

ஆடல் புரிந்து அருள்கின்ற

சிவந்த சடை கொண்ட

நிருத்தனாரின் திருக்கூத்தினை

நேரில் சென்று வணங்கினார்

விருப்பத்துடன் செந்தமிழ்கொண்டு

இனிய வெண்பாவாவினால்

மென்மலர்கள் புனைந்தார் பாடினார்.

4049.

அவ்வகையால் அருள் பெற்றார்

அங்கு

சில நாட்கள் தங்கிய பிறகு

இவ்வுலகில்

தம்பெருமானாகிய சிவபெருமானின்

கோவில்களுக்கெல்லாம் சென்றார்

செம்மையான அன்போடு பணிந்து

திருப்பணிகள் செய்தார்

எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும்

இனிய தமிழ் வெண்பாக்கள்

பாடிப் பொழிந்தார்

(ஷேத்திர வெண்பா எனப்படுகிற –

24 வெண்பாக்கள் உள்ள நூலைப்பாடியுள்ளார்;

ஷேத்திரம் – தலம்)

4050.

வெல்லப்பட முடியாத மதில் உள்ள காஞ்சியில்

அரசாட்சி புரிந்த ஐயடிகள் காடவர்கோன்

இவ்வித நெறியுடன்

சிவனடியார்கள் இன்பம் அடையும்படி

தொண்டுகள் பல செய்தபின்

பரமர் திருவடியின் கீழ்

சிவனுலகில்

வழிவழி நின்ற அன்பர்களுடன் சேர்ந்தார்.

4051.

நச்சுப்பை கொண்ட பாம்பினை

மாலையாக அணிந்த சிவனுக்கு

வெண்பாக்கள் அணிவித்த

ஐயடிகள் காடவர்கோனின்

பாத இணைத்தாமரைகள் வணங்கி

அவர் துணையால்

கையில் அணி கொண்ட

மழுஏந்திய

இறைவரின் திருவடியைப் பணிகின்ற சிந்தனை உடைய

தவம் உடைய

கணம்புல்ல நாயனாரின்

திருத்தொண்டினை விரித்துச் சொல்வோம்.

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

4052.

உலகம் உய்வதற்காக நஞ்சு உண்டதால்

இருண்டு போன கருமை உடைய

திருமுதுகுன்றவாணர் சிவபெருமான்அளித்த

பொன்னினை

திருமணிமுத்தாற்றில் வீசி

வளம் மிகுந்த ஏழுலங்களும் வணங்குகின்ற

திருவாரூர் குளத்தில் எடுத்தவரான நம்பி ஆரூரர்

வினைகளாகிய பெருங்குழியின் வாயிலிருந்து

என்னை வெளியே எடுத்துவிட்டார்

அதனால்

உள்ளத்தில் கவலை இல்லாமல் வாழ்வோம்

நடுக்கம் இல்லாமல் வாழ்வோம்

ஐயடிகள் காடவர்கோன் புராணம் முற்றிற்று.

பொய்யடிமையிலாத புலவர் சருக்கம் முற்றிற்று.

9. கறைக்கண்டன் சருக்கம்

54. கணம் புல்லநாயனார் புராணம்.

“கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் ( காரிக்கும்) அடியேன்”

( திருத்தொண்டத்தொகை – 8
)

4053.

செல்வம்பெருகும் சிறப்புமிகு மாடங்கள்

அதில்-

எங்கும் திருத்தமுடைய பெருங்குடிமக்கள்

வளம் வாய்ந்தது வட வெள்ளாறு

அதன் தெற்குக்கரையின் அழகிய சோலைகளில்

வடிகிற பலாக்கனியின் தேன் –

நீர்க்குளத்தை நிறைத்து

வயல்களை விளையச்செய்யும் ஊர்

“இருக்குவெள்ளூர்”

இவ்வுலகுக்கே இது தொன்மைமிகு தலம்

( “பேலூர்” என்பது தற்போதைய பெயர் )

4054.

அப்படிப்பட்ட நாட்களில்

வாழும் குடிமுதல்வர்களுக்கெல்லாம் அதிபராக

அளவிலாத எப்பொருள்களுக்கும் அதிபதியாய்

ஒப்பிலாத பெரும்குணத்திற்கும் அதிபதியாய்

மேன்மைமிக்கவராக உலகில் வாழ்ந்தார்

அவர்பெயர்

ஈசரின் திருவடி மட்டுமே உண்மைப்பொருள் என்கிற

“கணம்புல்ல நாயனார்” என்பதாகும்.

4055.

“ கெடாத பெரும் செல்வத்தின் பயன் இதுவே” என

இடைவிடாமல்

ஒளிதரும் விளக்குகளை

சிவன் கோயிலில் ஏற்றி

நாவாரத் துதித்துவந்த கணம்புல்லர்

வறுமை அடைந்தார்

அதன் பின் –

தேவாதிதேவர் பிரான் வாழும்

திருத்தில்லை சென்றடைந்தார்

4056.

தில்லை மாநகரில்

அழகிய அம்பலத்தில் ஆடும் சேவடிகளை

அன்புடன்வணங்கி

அங்கு விரும்பித் தங்கியிருந்தார்

மூன்று புரங்களும் எரித்த

வில்லினை ஏந்திய வில்லியார் சிவபெருமான்

“திருப்புலீச்சரம்” எனும் கோயிலில்

விளக்கு எரிக்கும் பணிபுரிவதற்காக

தன் இல்லத்தில் உள்ள

பொருள்களையெல்லாம் விற்று எரித்து வந்தார்

அத்தகைய நாட்களில் –

4057.

அந்தச் செயலும் செய்து முடிந்தாகிவிட்டது

பிறகு –

மற்றவர்களிடம் யாசிக்க அஞ்சினார்

உடல் முயற்சியால்

“கணம்புல்” எனும் ஒரு வகைப்புல்லினை

அரிந்து கொண்டு வந்தார்

அதனை –

கிடைத்த விலைக்குக் கொடுத்து

பெற்ற பணத்தினால் நெய் வாங்கி

அசைவற்ற

மெய்மையான தொண்டாகிய

விளக்கேற்றும் பணியைத் தொடர்ந்தார்

விளக்கு எரித்தார்.

4058.

இவ்வாறு

அந்த நாயனார்

விளக்கெரித்து வரும் நாட்களில்

உடல் வருத்தி

அரிந்து எடுத்துக் கொண்டு வந்து விற்கின்ற புல்

எங்கும் விலை போகவில்லை

அதனால் –

விளக்குப் பணியைக் கைவிடாமல்

வெட்டிக்கொண்டு வருகின்ற

அப்புல்லையே கொளுத்தி

அழகிய விளக்கெரித்தார்

4059.

இறைவரின் திரு உருவம் முன்பு

விளக்கெரிக்கும் முறைப்படி

யாமம் தவறாமல் விளக்கெரிக்க

அந்த மென்புல்

அவருக்கு போதவில்லை என்பதால்

மெய்மையான அன்பு புரியும் அந்த நாயனார்

அடுத்த விளக்கு எரிப்பதற்காக

தனது திருமுடியினையே

எலும்பு உருகுமாறு தீமூட்டி எரித்தார்

அதனால்

நன்மை தீமை எனும்

இருவினைகளின் தொடக்கத்தையே எரிப்பவர் ஆனார்.

4060.

இப்பணியை

தமது இறைவர் திருவுள்ளம் கொண்டு

தலையினால்

பொங்கிய அன்புடன் ஏற்றிய விளக்கை

ஒப்பிலாத திருத்தொண்டருக்கு

மங்கலமான பெரும் கருணையை

இறைவர் வைத்து அருளினார்

சிவலோகத்து எம்பிரானுடன்

கணம்புல்லர்

இனிதே வணங்கி வீற்றிருந்தார்.

4061.

வன்மையுடைய கடல் சூழ்ந்த உலகிது

கலி உலகில்

தம் தலையினையே

இறைவர் திருமுன்பு ஏற்றிய விளக்காக

கங்கை ஆறு அணிந்த சிவனுக்கென எரித்த

நாயனாரின் திருவடியினைத் துதித்து

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த

சோலைகள் சூழ்ந்த

திருக்கடவூரில் தோன்றிய

காரியார் நாயனார் புராணம்

கூறத் தொடங்குவோம்.

55. காரி நாயனார் புராணம்

“[கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும்] காரிக்கும் அடியேன்”

(திருத்தொண்டத்தொகை- 8 )

4062.

மறை ஓதும் வேதியர்கள் மிகுதியாக வாழ்கின்ற

திருக்கடவூரில் பிறந்தார்

வளமையுடைய தமிழின்

இனிய துறைகளின் பயன் தெரிந்து

சொல் விளங்கிக் கொண்டார்

ஆனால்

சொல்லின் உள்ளுறைப் பொருளான

வீடுபேற்றின் நிலை வெளிப்படாமல்

குறைவற்ற தமிழ்க்கோவையை

முறையாகத் தொகுத்து இயற்றினார்

அதனால் –

மூவேந்தர்களுக்கும் நட்பானார்

4063.

அந்த மூவேந்தர்களின் மனம் மகிழுமாறு

உரைக்கு ஏற்ற சொற்களை

நயம் பெற விளக்கிக் கூறுவார்

மணம் பரவும் பூமாலை சூடிய மன்னரிட,ம்

செல்வக்குவியல் பெறுவார்

கொடிய கண் உடைய பாம்புடன்

பிறைச்சந்திரன் அணிந்த தலையுடைய சிவபெருமான்

இனிதே வீற்றிருக்கும் கோயில்கள்

பலவும் உண்டாக்கினார்.

4064.

எல்லோரும் மனம் மகிழும் இன்பம் தருகின்ற

மொழியின் பயனையே எடுத்துக் கூறுவார்

தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவபெருமானின்

சிறப்புடைய அடியார்களுக்கெல்லாம்

பெரும் பொருள்களை மிகவும் அளித்தார்

காளை ஊர்தியுடைய இறைவரின்

சோலைகள் உடைய கயிலாயத்தை

எப்போதும் மறவாமல் நினைத்தார்.

4065.

பொருந்திய கடல் சூழ்ந்த உலகில்

எல்லா இடத்திலும்

தன் புகழை நிலை நிறுத்தினார்

ஆராய்ந்து உணர்ந்த உணர்விலே

இடையறாத அன்புடன் விளங்கும்

கங்கை தோய்ந்த நெடும் சடை உடைய

இறைவரின் அருள் பெற்றார்

அந்தத் தொடர்பினால்

மனதினால்

வடகயிலைமலை சேர்ந்தது போலவே

உடலாலும் வடகயிலை மலை அடைந்தார்.

4066.

தேனுடைய கொன்றைமலர் சடைகொண்ட

இறைவரின் திருவடிகளைப் போற்றி வணங்கிய

காரி நாயனாரின் அடிகள் வனங்கி

அவர் அளித்த கருணையைக்கொண்டு

கடல்போன்று வழியும் மதம்பொருந்திய

யானைப்படை கொண்ட

பாண்டியர்களின் மரபில் வந்த

சந்திரவம்சத்தில் தோன்றிய

நின்றசீர் நெடுமாற நாயனாரின்

திருத்தொண்டினக் கூறத்தொடங்குகிறோம்

( காரி நாயனார் புராணம் முற்றிற்று )

56. நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்

“ நிறைகொண்ட சிந்தையார் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கு அடியேன்”

( திருத்தொண்டத்தொகை – 8 )

4067.

தடுமாறும்நெறியையே தவம் என்று எண்ணி

தமது உடலைவருத்தும் செயல்செய்து

தீய நெறியில் செல்லும்

சமணர்களின் வலையில் அகப்பட்டு

அந்த வலையிலிருந்து வெளியேறவிடுமாறு

வினை மாற்றி

பிறவி அறுக்கும் தமிழ்வல்லுநர்

திருஞானசம்பந்தரின் திருவடிகளை அடைந்த

நெடுமாறனாரின் பெருமை

ஏழ் உலகங்களிலும் சிறந்து விளங்குவதாகும்

4068.

அக்காலத்தில்

ஆளுடைய பிள்ளையாராகிய

ஞானசம்பந்தரின் அருளாலே

பொன்மாலை சூடிய பாண்டிய அரசர்கள் –

தென்னாடாகிய பாண்டிய நாட்டின்

சைவத்திறம் பெருகுவதற்காக

செங்கோல் ஆட்சி புரிந்து

அறநெறி தவறாமல் காத்து

எடுத்துச் சொல்லப்படும் சிவநாமத்தின்

திருஐந்தெழுத்தின் நெறியாகிய

சைவநெறியைப் போற்றிக் காத்துவந்தனர்

4069.

அத்தகைய முறையில்

ஆட்சி செலுத்தியவர்களிடம்

போரினை வேண்டி வந்தனர் வடபுலத்தினர்

அவர்களை

திருநெல்வேலி போர்க்களத்தில்

பரந்த படைக்கடல் மூலமாகவும்;

வெள்ளம் போல பாய்ந்து வரும் குதிரைப் படையினை

சினம் கொண்டு அழிக்கும்

மதயானை வரிசைகள் மூலமாகவும்

போரினில் வென்றனர் பாண்டிய மன்னர்கள்.

4070.

படைதொடுத்துப் போரிட்ட களத்தில்

இரண்டு பக்க படைவீரர்களும் வீழ்த்திய

பெரிய யானைகளின் துண்டமான உடல்களும்;

குதிரைகளின் உடல் துண்டங்களும்;

எதிர்த்துப் போர் செய்த

படைவீரர்களின் கரிய தலைகளும்

சிந்திய இரத்தப் பெருக்கு கலந்த கடலானது –

முன் காலத்தில்

உக்கிரகுமார பாண்டியர்

கடல் வற்ற வேல் வாங்கியதைப்போன்ற

நிலைமையைக் காட்டியது –

4071.

வெற்றி பெற்ற குதிரைகளின் களிப்பு ஒலி

மற்ற வீரர்களின் ஆயுத ஒலி

யானைகளாகிய மலைகளின் பிளிறும் ஒலி

பலரும் கூடி ஒலிக்கின்ற பல இடங்களின் ஒலி

அனைத்து ஒலிகளின் கலவையானது

“அதிசயிக்கச்செய்யும் உலகின் ஊழிக்காலத்தில்

கடைசி நாளில் ஒலிக்கும்

மேகங்களின் முழக்க ஒலியோ!” என நினைக்க வைத்தது

முன்பு

உக்கிரகுமாரர் ஒலித்த வீர ஒலியையும்

விஞ்சி விட்டது இந்தப்போரின் ஒலி.

4072.

தீயை உமிழும் படைகளை வீசிக்கொண்டனர்

எறிந்து கொண்டனர்

படைக்களத்தில் வெட்டுண்ட உடல்கள்

குருதி நிறைந்த மடுவில் குளித்தன

நிணங்களைத் தின்று கூத்தாடும் பூதங்களுக்கும்

பேய்களுக்கும்

அரும்பணி செய்வதற்கு

உணவு அளித்ததோ இந்தப்போர்!~” எனும்படி விளங்கியது.

4073.

இவ்விதமான கடும் போரினால்

பனை போல் நீண்ட துதிக்கையுடைய

மதயானைகள் கொண்ட

பாண்டியரின் படைகளுக்கு அஞ்சி

சிதைந்து ஓடிப்போனது வடநாட்டு அரசர்கள் படை ;

பாண்டியர்க்குரிய வேம்பு மாலையுடன்

வெற்றித்துறையில் அணிகின்ற

வாகைமாலையும் சூடினர் பாண்டியர்கள்.

4074.

வளவர் பிரான் திருமகளாகிய

சோழமன்னரின் திருமகளாகிய

மங்கையர்க்கரசி அம்மையாரின்

கலவை சாந்து அணிந்து

கொங்கைகள் திளைக்கும் மார்பில்

மூழ்கி வாழ்ந்தார் நின்ற சீர் நெடுமாறனார்.

அவர்

வளமை மிகு

இளவெண்பிறை அணிந்த சிவபெருமானுக்கு

ஏற்புடைய திருத்தொண்டு எல்லாமும்

அளவிலாத புகழ் பெறுமாறு செய்தார்

சிவனருள் பெருக அரசாட்சி செய்தார்.

4075.

அலைகளையுடைய கடல் சூழ் உலகில்

திருநீற்று நெறி விளங்குவதற்காக

சிவநெறி விளங்கப்பெறும்படியாக

அதன் புகழை விளங்க வைத்தார் –

நின்றசீர் நெடுமாறனார்;

நீண்ட காலம் அரசாட்சி செய்தார்

இறைவர் அருளாலே –

எல்லோரும் துதிக்கும் சிவலோகத்தில்

இன்புற்றுப் பணிந்து சேர்ந்தார்.

4076.

பொன்மதில் சூழ்ந்த புகலி காவலரான

சீர்காழியின் தலைவரான திருஞானசம்பந்தரின்

திருவடி சார்பினால் புனிதரான

தென்மதுரை ஆண்ட மாறனாரின்

செங்கமலம் போன்ற அடிகள் வணங்கி

பலவிதமான மணிகளையும்

நீர் விளிம்பில் பரப்புகிற

நீளமான கடற்கரையிலே உள்ள

பழமையான மயிலாபுரியில் வாழ்ந்த

வாயிலார் நாயனார் புரிந்த

திருத்தொண்டின் இயல்பைத்

தொழுது துதித்துக் கூற ஆரம்பிக்கிறோம்.

(நின்ற சீர்நெடுமாற நாயனார் புராணம் முற்றிற்று)

57. வாயிலார் நாயனார் புராணம்

துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்

தொன்மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்)

– திருத்தொண்டத் தொகை – 8

4077.

நூல்களில் காணப்படும் புகழ்ச்சொற்கள் யாவும்

விளங்கும் ஊர் மயிலாபுரி;

தொண்டை நாட்டிலே

வளமைமிகுந்த வாய்மை சிறந்த ஊர் மயிலாபுரி;

பல பெரும் குடிகள் வழிவழியாய் வாழ்ந்து

பெரும் செல்வமுடன் விளங்கும் ஊர் மயிலாபுரி.

4078.

“தன்னிடமுள்ள மணி முதலான பலவகை நிதிகளை

சேமிப்பதற்கான இடம் ! ” என்று கருதியதுபோல

ஆடும் செடிகளையுடைய

அந்நகரின் பக்கங்களிலெல்லாம்

மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளுகிறது —

பெருங்கடல்!

4079.

ஒலிக்கும் அலைகளையுடைய

கடற்கரையின் கானலில்

பரவிய நிலம் முழுவதும்-

வேற்று நாட்டின் மரக்கலங்கள் கொணர்ந்து இறக்கிய

யானைக்கன்றுகள்!

முத்துக்களைக்கழித்து ஒதுக்கும் கடலில்

படிந்து சேர்ந்துள்ளன மேகங்கள் !

செழிப்பான எருமைக்கன்றுகள்!

இவை மூன்றினையும் –

நிறத்தால் பிரித்து அறியமுடியவில்லை

4080.

வெண்நிறமுடையன மாளிகைகள்

மாளிகைஓரச் சாலைகளின் பக்கங்களில்

அசைகின்றன –

வரிசை வரிசையான கொடிகள் ;

பவளம் போன்ற வாய் உடைய

பெண்களின் முகம் பார்க்க அஞ்சி

தூய்மையான நிலா

அங்கு வராமல்

ஒதுங்குவது போலிருக்கிறது

4081.

தெருக்கள் எங்கும் திருவிழா அலங்காரங்கள்!

காளையரின் தூதுவராக இயங்கும் வண்டுகள்

பெண்களின் கூந்தலைச் சுற்றுகின்றன!

வாசனைச்சாந்து பூசி

அலங்கரித்த மாடங்கள் எங்கும்

அழகிய நிதிகள்! துணிகள்!

4082.

நிலைபெற்ற சிறப்புடையது மயிலாபுரி

மிகப்பழமை நீண்ட

அந்தப் பெருநகரில்

சூத்திரர் எனும் மதிநுட்பம் வாய்ந்த குலத்தில்

நன்மைகள் எல்லாவற்றிலும்சிறந்த நன்மை அடையுமாறு

உயர் தன்மை உடைய

“ வாயிலார்” எனும் பெயருடைய

தவப்பேற்றினர் பிறந்தார்

4083.

அவர்

“வாயிலார்” எனும் பழமைமிகு பெருங்குடியில்

தூய பெரும் மரபின் முதல்வராகத் தோன்றினார்

தலைவர் சிவபெருமானின் மீது

நயந்து காதல் கொண்டார்.

4084.

மறவாதிருத்தல் எனும் கருவியால்

மனம் எனும் கோவிலில்

இறைவரை நிலை நிறுத்தினார்

அப்பெருமானை உணரும்

ஞானம் எனும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றினார்

இறவாத ஆனந்தமெனும் திருமஞ்சனம் செய்தார்

அறவாணர் எனும் இறைவருக்கு

அன்பு எனும் அமுது சமைத்து

அர்ச்சனை செய்தார்.

4085.

அகம் மலர்ந்த அர்ச்சனையால்

அண்ணலார் சிவபெருமானை நாள்தோறும்

நிகழ வருகிற அன்பினால் நிறைந்த வழிபாட்டினை

இடைவிடாமல் செய்தார்

சிவபெருமான் கழலடி நிழலினை

புகலிடமாக அடைந்தார்

புண்ணிய மெய்த்தொண்டர் வாயிலார்.

4086.

கங்கை நீர்ச்சடையாரை

சிவபெருமானை

தமது நீண்ட மன ஆலயத்துள்

மிகுந்த அன்புடன் அருச்சனை செய்தார்

அடியவர்களுடன் இருந்து

நீங்காத வீடுபேறு பெற்ற

பெருந்தகையான வாயிலார் நாயனாரை துதித்து

அவர் துணையுடன்

சிறப்பு மிகு திருநீடூரில் வாழ்ந்த

முனையடுவார் நாயனார் இயல்பை

இனி உரைப்போம்.

(வாயிலார் நாயனார் புராணம் முற்றிற்று)

58. முனையடுவார் நாயனார் புராணம்

“அறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க்கு அடியேன்”

(திருத்தொண்டத் தொகை -8 )

4087.

பகையை வென்று உலகைக் காக்கும் சோழமன்னரின்

பொன்னி ஆறு பாயும் திருநாட்டில்

மணம் வீசுகின்றன பூஞ்சோலைகள்

அங்கு மலர் வீசும் அரும்புகளில் வடிகிறது செழும் தேன்

ஆற்றின் வழியே பாய்ந்து அது வெள்ளமாகிறது

அதனால் —

வயலில் உழவர்கள் உழுகின்ற சேறுகூட

மணம் வீசும் ஊர் – நீடூர் .

4088.

வள்ளல் தன்மை கொண்ட

வேளாளர் மரபில் தலைமையான குடியில்

முனையடுவார் நாயனார் பிறந்தார்

நஞ்சையுடைய கழுத்து கொண்ட

நெற்றிக்கண்ணரான சிவபெருமானின் திருவடியில்

செறிந்த காதல் மிகவும் கொண்டார்

உள்ளத்தில் திருத்தொண்டு புரியும் உரிமை கொண்டார்

நட்பில்லாதவரை போரிட்டு

முனையோடு கிள்ளி எறிந்து வெல்வார்

வென்றதால் வரும் வளங்களை

சிவன்அடியவர்களுக்கு அப்படியே

அளிக்கும் வாய்மையாளராக இருந்தார்.

4089.

போரில் தோற்ற பகைவர்

தம்மிடம் வந்து

“பெரும் செல்வம் பெற்றுக் கொள்க

போர் வேண்டாம் ” என்று பேசினாலும்

அதனை நடுநிலையில் நின்று ஆராய்ந்து

கூற்றுவனாகிய இயமனும் அஞ்சி ஒதுங்கும்படி

போர்வினை முயற்சியால் போரில் வென்ற பிறகுதான்

முனையடுவார் நாயனார்

பொன்னும் செல்வமும் பெற்றுக்கொள்வார்

4090.

இந்த விதமாய்ப் பெற்ற செல்வம் அனைத்தையும்

ஈசன் அடியார்கள் கூறியபடி

தூய போனகம்

கரும்பு

நறுமண நெய்

கறி

தயிர்

பால்

கனி

இவை எல்லாமும் கலந்து அளிப்பார்

நிலை பெறும் அன்பின் நெறியில்

பிறழாத வழித் தொண்டை ஆற்றி வந்தார்.

4091.

இத்த்கைய நிலைமையில்

தன் திருத்தொண்டினை

பல நெடுங்காலத்திற்கு

வையத்தில் நிகழச்செய்தார்

அன்பு கொண்டதால்

அந்த செம்மையான நெறியில்நின்று

உமையாள் கணவன் திருவருளால்

சிவலோகம் சென்று அமர்ந்தார்

அங்கு –

பிரியாத உரிமையுடன் வாழ்ந்தார் –

வெற்றி பொருந்தும் போர் செய்த

“முனையாடுவார்” எனும் நாமம் கொண்டவர் ஆனார்

4092.

எதிர்ப்பவர் எவர் எனினும்

போரில் வெற்றி பெற்றபின்னே

அச்செல்வங்களால்

ஈசன் அடியார்க்கு இன்பம் அளித்த

முனையாடுவார் நாயனாரின்

மணம் பொருந்திய தாமரைத்திருவடிகளை வணங்கி

இனி –

தேவர் பெருமான்

சைவநெறி விளங்க செங்கோல் புரிந்து

காவல் செய்த

கழற்சிங்க நாயனார் செய்த தொண்டின்

நிலைமையைச் சொல்வோம்

4093. சுந்தரமூர்த்தி நாயனார் துதி

“சோலைகள் சூழ்ந்த திருமுருகன் பூண்டி எனும் தலத்திலே

வேடுவரால் கொள்ளை அடிக்கப்பட்ட நம்பிஆரூரர்

எமது பழவினையின் மூலத்தை

வேரோடு பறித்துவிடுவார்” என்று நம்பிக்கைகொண்டு

விடிவு உண்டென்று –

திருத்தொண்டின் உள்ளம் சென்ற பயனுக்கும்

ஒரு குறி உண்டு வேறு ஏதும் குறை இல்லை

( முனையாடுவார் நாயனார் புராணம் முற்றிற்று )

( கறைக்கண்டன் சருக்கம் முற்றிற்று )

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்