புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

யோகா யோகாம்பிகை


அதன் பிறப்பிடத்தை அதன் பெயரிலேயே புலப்படுத்திவிடுகிறது. அட்டைப் படங்கள் முதல் உள்ளடக்கங்கள் பலவும் கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் மிளிர்கிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெரியவர், சிறியவர்கள், ஆசிரியர்கள், இளந் தலைமுறை உறவுகளின் பல்வகை உணர்வுகளைச் சுமந்துவருகிறது. எழுத்துக்களைப் பதித்திருக்கும் காகிதங்களின் மிளிர்ச்சியும், வடிவமைப்பும் சஞ்சிகைக்கான தோற்றமும் பல் வகை ஆவணங்களைச் சுமந்துவரும் மிடுக்கோடு காட்சியளிக்கிறது. வீட்டிலும் நுால்நிலையங்களிலும் ஆவணப்படுத்தவேண்டும் என்ற உணர்வைத் துாண்டுகிறது சுமார் 100 பக்கங்களைக் கொண்ட இவ் அரையாண்டு சஞ்சிகை.

லுட்சேர்ன் தமிழ் மன்றம் கலைப் பிரிவினரால் வெளியிடப்படும் ஊசிஇலை சஞ்சிகையின் முதலாவது துளிர் அறிமுக விழாவும், வெளியீட்டு வைபவமும் 29.05.2004 சனிக்கிழமை பி.ப 4.30 மணியளவில் சுவிற்சலாந்து லுட்சேர்ன் மாநகர தமிழ் மன்ற அரங்கில் இடம்பெற்றது.

இதன் ஆசிரியர் குழுவில் ஒருவரான லா. சண்முகராஜா அவர்களின் அறிவிப்பு வழியே சாயி ரேடர்ஸ் உரிமையாளர் ரவி அவர்களும், றொமி ஏசியன் சொப் உரிமையாளர் நந்தன் அவர்களும் இணைந்தபடி மங்கள விளக்கை ஏற்றி வைக்க ஆரம்பித்த இவ்விழா அமைதி வணக்கத்தை அடுத்து ஆசிரியர் குழுவின் ஒருவரான சுரேஸ்குமாரின் வரவேற்புரையுடன் தொடர்ந்தது.

முதல் நிகழ்வாக ஒரு குட்டி இசைக்கச்சேரி. வழங்கியவர்களும் குட்டி இசைக் கலைஞுர்கள் தான். மாணவன் ரூபன் வயலினில் சோலோ இசையினை மீட்க> றுக்சன்> சுதன் ஆகியோரது மிருதங்க இசை பக்கவாத்தியமாக வந்து செவிப்பறையினை இதமாகத் தழுவிக்கொண்டது. சபையில் அமைதியைப் பேணி, வந்திருந்தவர்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி வெளியீட்டு வைபவத்தை அறிமுக விழாவை மெருகூட்டியது இவ் இசையமுதம். அந்தளவில் விழா ஏற்பாட்டாளர்களுக்கும், இசைக் கச்சேரியை வழங்கிய குட்டி இசைஞுர்களுக்கும் பாராட்டுக்கள்.

தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலமைச் செயலர் திரு. திருமாவளவன் அவர்கள் இவ்விழாவில் பங்குகொண்டமை இவ்விழாவிற்குக் கிடைத்த மேலதிக சிறப்பம்சம் ஆகும். “வியாபாரப் பத்திரிகைகள் தவிர்ந்து குறிக்கோளுடன் உயர் இலட்சியங்களின் அடிப்படையில் வெளிவரும் பத்திரிகைகள் அனேகமாக நின்றுவிடுவதுண்டு. ஆனால் இன்றைய ஈழத்தைப் பொறுத்தவரை ஊடகத்துறை முனைப்புடன் முன்னேறிச் செயற்படுவதனால் இந்நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் ஊசிஇலை தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துக்கள்“ என்று சிற்றுரையுடன் கூடிய தமது ஆசியுரையை வழங்கியிருந்தார் திரு. திருமாவளவன் அவர்கள்.

லுசேர்ன் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. சண்முகதாசன் அவர்கள் தமிழ் மன்றத்தின் 13 ஆண்டு காலச் சேவையினைச் சுருங்கக்கூறி அதன் இன்னோர் அம்சமாக இவ் ஊசிஇலையைப் பார்ப்பதாகத் தமது ஆசியுடன் கூடிய ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் ஊசிஇலை என்ற பெயரைப் போற்றிப் புகழ்ந்து காதலியைக் கட்டியணைக்கும் ஆதங்கத்துடன் நேசத்துடன் ஊசிஇலை சஞ்சிகையை ஆர்வத்துடன் நோக்குவதாக குறிப்பிட்டார்.

இளம் தலைமுறையினரின் சார்பில் சுரேந்தினி தேவராசா பேசுகையில் ~~இது எமது பத்திரிகை. இதை ஒவ்வொரு மாணவர்களிடமும் எடுத்துச்செல்லவேண்டும்~~ எனக் குறிப்பிட்டார்.

மேலும் – வணக்கம் – பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராசா, ருக்சன், நிதர்சனா> தமிழ் மன்றக் கல்விப் பொறுப்பாளர் ரஞ்சன், ஆசிரியர் நிர்மலா, ஆசிரியர் முருகவேள், புண்ணியமூர்த்தி, அருளானந்தம் போன்றோர் கருத்துரை வழங்கினர்.

ஊசிஇலை துளிர் ஒன்றின் வெளியீடு மிகவும் சிறப்பாக நிகழ்ந்;தமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஊசிஇலை கணணி வடிவமைப்பாளர்களில் ஒருவரான தயா லோகதாசன் அவர்கள் வழங்க தமிழ் மன்றத் தலைவர் திரு. சண்முகதாசன் அவர்கள் மேடையில் ஊசிஇலை துளிர் ஒன்றின் முதல் பிரதியைப் பலத்த கரகோஷத்தின் மத்தியில் பெற்றுக்கொண்டார்.

தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர் சி.அண்ணாமலை அவர்கள் அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தி ஒவியர் வாவி பாஸ்கர் அவர்களினால் வாசிக்கப்பட்டது.

இறுதியில் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு. ஏ.ஜி.யோகராஜா அவர்கள் தனது தொகுப்புரையில் புலம்பெயர் சூழலைப் பொறுத்தவரை பெற்றோர், ஆசிரியர், இளந்தலைமுறை, சிறார்களிற்கான தனித்தனி இதழ்களைத் தருவிக்கவேண்டிய காலம் இது. ஆனால் துறைசார்ந்து அதற்காக உழைப்பதற்கான பொருள் வலிமை எம்மிடம் இல்லாததால்தான் தலைமுறைகளின் தேவைகளைச் சார்ந்து ஓர் இதழைப் பிரசவிக்க முற்பட்டிருக்கிறோம் எனக் கூறினார்.

ஓவியர் கே.எம்.ரி.பாலகுமார் அவர்களின் நன்றியுரையுடன் துளிர் அறிமுக விழா இனிதே முடிந்தது.

– யோகா யோகாம்பிகை –

Series Navigation

யோகா யோகாம்பிகை

யோகா யோகாம்பிகை