புரிசை கண்ணப்ப தம்பிரான் நினைவில்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


————————
சோழமண்டல் ஓவியர் சேரியில்
அந்த வெண்நிலவும் களிகொண்ட இரவில்
தாழமும் இசையும் பணிய
அம்பலத்தரசே நீ
ஆடிய தெருக்கூத்தில் எமை
பாரதப் போர்க்களத்து யுக நேற்றில் ஒருகணமும்
கட்டியங்காரனோடு இன்றில் மறுகணமுமாய்
கால இடவெளியுள்
பந்தாடிச் சென்றாயே
உன்னை யாரோ பந்தாடிச் சென்றது.

அன்று காவியம் சொன்ன உன் உடல்
சிவன் முதலாம் அரங்காடிகளின் முகங்களாலும்
முகமோ
மாகவிஞர்களது நாவுகளாலும்
பின்னப் பட்டிருந்தது.

நீ நிகழ்தியது பாரதக் கதைமட்டுமா
நம் மண்ணின் புராண ஆன்மா
நம் சிற்றூர்களின் இதிகாச முழுமை
அறம் வெல்லும் என்கிற
நம் பரம்பரையின் பாடல்கள்
நமது ஞானத்தின் வேர்

மத்தாப்பைக் கொண்டாடும்
வேடிக்கைத் தமிழகத்தில்
தாரகையே உன்னுடைய
காற் சுவடுகூட
தாளம் பிசகாமல்.
உன் ஆவி பிசகியதேன்..

உடல் மொழியால்
ஒரு தேசத்தின் நினைவுகளில்
நீ எழுதிச் சென்ற வேதங்கள்
தமிழ் உள்ள நாள்வரைக்கும்
தாழிசையில் புத்துயிர்க்கும்.

உன் பொற்தாலிப் பூங்கொடியில்
பூத்த மலர் இரண்டு மலர்
உன் கலை ஞானமாம் பூங்கொடிக்கோ
காலமெல்லாம் பொன்மலர்கள்.
—————
visjayapalan@yahoo.com
V.I.S.Jayapalan (Poet)
Linderud vaien 15
0594 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 640 487
mobil: 922 5832

Series Navigation