This entry is in the series 20040311_Issue

—மதுரபாரதி


இது தெரிந்த பாடல்தான்
இன்று ஏன்
வேறாய்ப் புரிபட்டது ?

நெடுநாளாய்த் தெரிந்ததாய்
முடிவுகட்டிவிட்டதுதானே.
எங்கிருந்து நுழைந்தது
சிலிர்க்கவைக்கும்
நவமான செம்பொருள்!

வார்த்தைகளில்,
அவை நிற்கும் வரிசையில்,
கோர்த்த கட்டமைப்பில்
கொஞ்சமும் மாற்றமில்லை.
குறித்து நின்ற பொருள் மட்டும்
பிறிதொன்றாய்
விரிந்ததென்னே!

குருதியை உறிஞ்சிக்
கனப்பட்ட அட்டையைப் போல
கவிதை தன் வடிவுக்குள்ளே
காலத்தை உறிஞ்சிக்
கொழுத்து விடுமோ ?

இல்லை, வாசிப்பவனின்
மனம் ஆடுகிற
வார்த்தைக் கழஞ்சியிலே
மர்மங்கள் விடுபடுமோ.

இந்தப் பொருளேனும்
இவ்வாறே சமையுமா ?
இல்லை, நாளை சூரியோதயத்தில்
இன்னும் வேறாகிப் பிரமிப்பூட்டுமா.

பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்.

***
madhurabarathi@yahoo.com

Series Navigation