பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

கோபால் ராஜாராம்


சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சு சமுத்திரம் அவர்களுக்கு அஞ்சலி

நான் சு சமுத்திரத்தின் சில கதைகளே படித்திருக்கிறேன். அவரது கதைகளோ நாவல்களோ சிறந்தவை என்றோ, அவை இலக்கியச் சிறப்பு மிக்கவை என்றோ என்னால் சொல்ல இயலாது. அன்றைக்கு யாரும் எடுத்து எழுதாத சில கதாபாத்திரங்களை எழுதினார். அது ஒன்றே இலக்கிய சிறப்புக்கு முக்கியமானது என்று என்னால் கருத இயலவில்லை. குடிகாரன் ஒருவன் குடிக்குள் சென்று மீண்டு வருவதைப் பற்றி நாவல் எழுதிய சிவசங்கரியின் நாவலையும் அதில் என்னால் சேர்க்க இயலாது. ஒரு அரவாணியின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய சு சமுத்திரத்தையும் என்னால் அதில் சேர்க்க இயலாது. இர்விங் வாலஸ் என்றொரு எழுத்தாளர் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தார். அவர் இப்படிப்பட்ட வித்தியாசமான விஷயங்களை ஆய்வு செய்து எழுதியதுண்டு. ஆனால் ஒவ்வொரு நாவலும் எழுத வருடங்களாகும். ஆய்வு முழுமை பெற வேண்டுமே. ஆனால் பெருவாரியாக எழுதி விற்ற இர்விங் வாலஸ் நாவல்களைக் கூட இன்று யாரும் சீண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆய்வு செய்து எவரும் தமிழில் எழுதுவதில்லை. வித்தியாசமான பகைப்புலன்களை வைத்து நாவல்கள் எழுதிய் ராஜம் கிருஷ்ணன் கூட ஆய்விற்கு எவ்வளவு நேரம் செலவு செய்தார் என்று தெரியவில்லை. அரவாணி பற்றி அ-புனைகதையாக விவரத் தொகுப்புகளை சு சமுத்திரம் ழுதியிருந்தாலே, சமுத்திரத்தின் நாவலைவிட, அது சிறப்படைந்திருக்கும். ஆனால் தொடர்கதை மாதிரி பத்திரிகைக் கவனிப்பு கிடைத்திருக்காது.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதி நாகராஜனால் ஒரு சிறந்த படைப்பைத் தர முடிந்தது. அது நான் வித்தியாசமாய் எழுதுகிறேனாக்கும் என்று துருத்திக் கொண்டுள்ள தொனி கொண்ட சமுத்திரத்தால் முடியவில்லை. கிராம மக்களைப் பற்றி எழுதிய பூமணி இலக்கியச் சிறப்பை அடைய முடிந்தது. அது சமுத்திரத்தால் முடியவில்லை என்பதே என் கருத்து.

திராவிட இயக்கத்தின் பிதாமகருடன் மிக நெருங்கிய உறவு பேணுவதன் மூலம் அவர் தன் இலக்கியச் சிறப்பை அரசியல் முனைப்புடன் நிறுவ முயன்றிருக்கலாம். ஆனால் அதனால் விளம்பரம் கிடைக்கலாம். அவ்வளவு தான். இலக்கிய அங்கீகரிப்பை இப்படிப் பெற முடியாது. இதே பாணியை அப்துல் ரஹ்மான் போன்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.

‘பற்றி ‘ எழுதுவது இலக்கியம் என்றால் தகவல் தொகுப்புகள் தான் சிறந்த இலக்கியமாக இருக்க வேண்டும். தகவல் தொகுப்புகளிலும் சிறப்பு எய்துவதற்குக் கடும் உழைப்புத் தேவை. இப்படி பற்றி இலக்கியம் நா பாவும் எழுதியதுண்டு. அதிலும் இதே கதை தான். ஆழம் இல்லை. தகவல் முழுமையும் இல்லை. ஆனால் நா பாவின் தமிழ் நடை லகுவானது. ஈர்ப்பு உடையது. சமுத்திரத்திடம் அதுவும் இல்லை.

காஃப்காவின் ‘கோட்டை ‘ கோட்டையின் அகலச்சுவர்கள் பற்றியதல்ல. ‘வழக்கு ‘ நீதிமன்றம் பற்றியதோ வழக்கு பற்றியதோ அல்ல. துரதிர்ஷ்டவசமாக சு சமுத்திரம் மற்றும் பல எழுத்தாளர்களின் பார்வை , ‘பற்றி ‘ எழுதினாலே போதும் , இலக்கியச் சிறப்பு உடையதாக ஆகி விடும் என்பதாய் உள்ளது.

ஆனால், இந்த விஷயங்களுக்கு அப்பால் தன் இலக்கியச் சிறப்புக்கு மிஞ்சிய குரலை உடையவராக இருந்தார். அந்தக் குரல் ஒரு தாழ்த்தப்பட்டவரின் குரலாக, இதுவரையில் உரத்து எழும்பாத, வெளிவராத பலரது குரல்களைப் பிரதிபலித்தது. அவரது முக்கியத்துவம் அவரது இலக்கியத்துக்கல்ல, அவரது குரலுக்கே.

அந்தக் குரல், கோபம் கொண்ட, தன்னுடைய உரிமை என்று கேட்டுப்பெறுகிற, தனக்கு இடம் வேண்டும் என்று வலியுறுத்துகிற குரல் இந்தியாவின் ஜனநாயகக் குரல். உரக்க எழுப்பப்படுவதே நியாயத்தின் அடையாளம் அல்ல என்றாலும், உரக்க எழுப்பியாக வேண்டும். அதுவே என் அஞ்சலிக்குக் காரணம். அந்தக் குரல் பலரது அடைபட்ட குரல்களை திறந்திருக்கிறது. அதற்காகவே நம் நன்றி சு சமுத்திரத்துக்கு.

*****

பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி

பாலு மகேந்திரா தமிழ் இயக்குநர்களில் அசலான ஒரு கலைஞர் ஆனால் அவர் அசலான தமிழ்ப்படைப்புகளல்லாமல், வெளி நாட்டுப் படங்களின் புதிய வார்ப்பாகவே படங்கள் படைப்பதைப் பார்த்து வருந்துவதா அல்லது தமிழின் இலக்கிய எழுத்துப் பரப்பில் அவர் தேர்வு செய்யும் வகையில் ஏதும் படைப்புகள் இல்லை என்று உணர்வதா ? தெரியவில்லை.

‘மிசரி ‘ என்ற ஸ்டாஃபன் கிங் நாவலை அடியொற்றி வந்த ராப் ரெய்னர் படத்தின் பிரதியாக ஜ்ஊலி கணபதி உருவாகியுள்ளது. கேதி பேட்ஸ் குண்டுப் பெண்ணாய் இருந்தால் தமிழ்ப் படத்திலும் சரிதா குண்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். (மேற்கத்திய கலாசாரத்தில் குண்டுப் பெண்ணிற்கு இருக்கும் இளக்காரம் தமிழ்க் கலாசாரத்தில் இல்லை என்ற போதிலும்.) கேதி பேட்ஸ் அமெரிக்காவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர். வேறு படங்களில் தமிழ்மக்கள் அறியக் கூடிய வகையில் சொல்ல்வேண்டும் என்றால் , ‘டைடானிக் ‘ படத்தில் லியானார்டோ டி காப்ரியோவிற்கு டின்னர் டிரஸ் தரும் பெண்மணியாய் வருபவர் இவர்.

சரிதா, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், டெல்லி கணேஷ் எல்லாருமே மிகச் சிறந்த நடிகர்கள். சினிமாவின் இலக்கணம் துல்லியமாக கைவரப் பெற்றவர் பாலு மகேந்திரா. இன்னொரு இயக்குநர் கைகளில் இப்படிப் பட்ட பிரதியெடுப்புக் கூட தரங்குலைந்து போகக் கூடிய வாய்ப்பு உண்டென்பதால் பாலு மகேந்திராவின் முயற்சி பாராட்டத்தக்கது தான். தமிழில் கதை நேரம் செய்த பாலு மகேந்திராவிற்கு , ஒரு அசல் கதை கூடவா தமிழில் கிடைக்காமல் போய்விட்டது ?

மிசரியின் அப்பட்டமான காப்பி என்ற விஷயத்தை மறந்துவிட்டுப் பார்த்தால் படம் மிகவும் ரசனைக்குரிய ஒன்றே. நான் ரசித்தேன்.

**********

gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்