பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எமே செசேர் 1913ம் ஆண்டு பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட கடற்பகுதி பிரதேசமான மர்த்தினிக்கைச் சேர்ந்த, கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி – அதாவது மக்களுக்கு உண்மையாய் உழைக்கிற அரசியல்வாதி. பாஸ் புவாந்த் (Basse Pointe) என்கிற பேரூரில் பெரிய குடும்பமொன்றில் பிறந்தவர். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மர்த்தினிக் பிரதேசம் கறுப்பரின மக்களைக் பெருவாரியாகக் கொண்ட எழில் கொஞ்சும் கடற்கரை பிரதேசம். இவரது தந்தையார் ஓர் அரசு ஊழியர். தாயாரொரு தையற்கலைஞர்.

உள்ளூரில் ஆரம்பக் கல்வியில் மிகச் சிறந்த மாணவனாகப் தேர்ச்சிப்பெற்ற செசேர், அரசின் உதவிபெற்று பாரீஸ் மாநரத்தில் லூயி லெ கிரான் (Louis le Grand) உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.அங்கே இவரினும் பார்க்க வயதில் மூத்தவரும், எதிர்கால இலக்கிய கூட்டாளியான செனெகல் நாட்டைச் சேர்ந்த Leopold Sedar Senghor என்கிற நண்பரைச் சந்திக்க இருவருக்குமிடையில் நீண்டகால நட்பிற்கு வித்திடப்படுகிறது. இப்பள்ளியில் பிரெஞ்சு கயானா பிரதேசத்தைச் சேர்ந்தவரும், எமே சேசெரின் ஆரம்பப் பள்ளி நண்பருமான லெயோன் கோந்த்ரான் தமாஸ்(Leon Gontran Damas) என்பவருடன் ஏற்பட்ட நட்பும், பாரீஸில் இதர ஆப்ரிக்க நாட்டு மானவர்களோடு ஏற்பட்டத் தொடர்பும், இவரையும் இதர நண்பர்களையும் மர்த்தினீக் பிரதேச அடையாளத்தின்பால் ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்துகிறது, பொதுவாக பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் விளைவுகள், அதன் பாதிப்புகள் குறித்த சிந்னைகள் என விரிவான தளத்தில் தங்கள் கலகக் குரலைப் பதிவு செய்ய விரும்பினர். 1934ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செசேர் இதர ஆப்ரிக்க, மற்றும் பிரெஞ்சுக் காலணி நண்பர்களின் துணையோடு- (லெயோன் கோந்த்ரான், லெயோபோல்ட் சேதார் செங்கோர், பிராகோ டியோ…) – ‘கறுப்பு மாணவர்(L ‘Etudiant Noir) ‘ என்கிற இதழைத் தொடங்குகிறார். இவ்விதழின் பக்கங்களில்தான் முதன்முறையாக பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் தனித்துவம் பெற்ற ‘நீக்ரோத்தனம் ‘ (Negritude) என்ற சொல் பிரெஞ்சு காலணி அரசாங்கத்தின் கலாச்சார ஆதிக்கத்தின் எதிர்ப்புக் குரலாக பிரசவிக்கப்படுகிறது. ‘கறுப்பன் ‘ எனவொருவன் தன்னை அடையாளபடுத்திக்கொண்டு, பெருமையாய் வாழ ‘ உரத்து முழங்கியது. ஆப்ரிக்க மக்களின் பண்பாடு மற்றும் விழுமியங்களைக் குறைத்துமதிப்பீடு செய்வதும் தமது பண்பாட்டினைத் திணிப்பதுமான பிரெஞ்சு அரசாங்கத்தின் கலாச்சார ஆதிக்க முயற்சியினை முற்றாக நிராகரிக்க இவ்வியக்கம் துணிந்தது. இவ் அமைப்பின் கீழ் இளம் ஆப்ரிக்க படைப்பாளிகளும், செசேர் நண்பர்களும் கைகோர்த்தனர். பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் எதிர்ப்புப் பொருமலில் பிறந்த ‘நீக்ரோத்தனம் ‘ அரசியல் எதிர்ப்புகுரல் அல்ல. பிரெஞ்சு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான குரல் -இனம், நாடென்கிற வெளிகடந்து, பண்பாட்டுச் சுவடை படைப்புலகில் தேடவிழைந்த குரல்- சொந்தமண்ணில் நிழல் தேடும் மனிதர்களின் நிஜத்தைச் சுட்டும் குரல். ‘நான் ஒடுக்கபட்ட மக்களின் இனத்தைச் சார்ந்தவன் ‘ எனச் செசேர் ஒரு முறை கூறி இருக்கிறார்.

1935ம் ஆண்டு மேற்படிப்புக்காக ‘எக்கோல் நொர்மால் சுப்பேரியர் ‘(Ecole Normale Superieure)ற் சேர்ந்த செசேர், 1936ம் ஆண்டிலிருந்து சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அவருக்குப் புகழ்தேடித்தந்த ‘சொந்த நாட்டிற்குத் திரும்புவது குறித்தான கையேடு ‘(Le cahier d ‘un Retour au pays Natal) ‘ என்கிற தலைப்பில் தமது உணர்வுகளை கவிதைகளாவும் கட்டுரைகளாகவும் எழுதினார்:

‘எனது ‘நீக்ரோத்தனம் ‘ ஒரு பாறையோ

அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில்வாங்காவொரு ஜடமோ அல்ல

எனது நீக்ரோத்தனம் குருட்டுபூமியில்விழுகிற அமிலமழையுமல்ல

எனது நீக்ரோத்தனம் உயர்ந்தகோபுரமுமல்ல, பெரியதேவாலயமும் அல்ல

அது பூமியின் செங்குருதியிற் தோயும்

அது வானின் கஞ்சாப்புகையில் மூழ்கும்

பொறுமையினாலுற்ற

பொல்லாங்குகளை இனங்கண்டிடும்…. ‘ என முழங்கியது.

இப்படைப்பு இன்றளவும் ஆப்ரிக்க நாடுகளிலும், பிரெஞ்சு மொழிபேசும் கரீபியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. இவரொரு கறுப்பர் என்கிற காரணத்தினாலேயே, பிரெஞ்சு இலக்கியவாதிகாளால் சரியாக அங்கீகரிக்கபடவில்லையோ என்கிற ஐயம் எழுவதும் உண்மை. 1937ம் ஆண்டு தமது பிரதேசத்தைச் சேர்ந்த சுசான் ரூஸ்ஸி(Susanne Roussi)என்கிற பெண்ணை மணந்துகொண்ட பின்னர் 1939ம் ஆண்டில் முனைவர் பட்டத்துடன் சொந்த ஊரில் பணியாற்றுவதற்காகச் சென்றார்.

மர்த்தினிக் பிரதேசத்தின் சொந்தப் பண்பாட்டு தளத்தினை சுவீகரிக்கவேண்டி ரெனே மேனில், அரிஸ்தித் மொகே (Rene Menil, Arstide Maugee) நண்பர்களின் துணையுடன் சேசேர் தம்பதிகள் 1941ம் ஆண்டு ‘த்ரோப்பிக் ‘(Tropiques -வெப்பமண்டலம்) என்கிற அமைப்பினை உருவாக்குகிறார்கள். மர்த்தினிக் மக்களின் பண்பாட்டினை புனரமைப்பது அதன் நோக்கம். இரண்டாம் உலகப்போரின்போது மர்த்தினிக் பிரதேசத்திற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை, பிரெஞ்சு நிருவாகம் அனுப்பாமல் நிறுத்திவைக்கிறது. தவிர பிரான்சிலும் பொருளாதாரச் சீர்குலைவு, இந்த நிலையில் பிரான்சிலிருந்த விஷி அரசு, அட்மிரல் ரொபெர் (Robert) என்பவரைத் தீவின் நிர்வாகத்தை ஏற்கச் செய்து, அடக்குமுறையை கட்டவிழ்க்கிறது. மர்த்தினிக்கில் அமைந்த இப்புதிய அரசாங்கம் ‘த்ரோப்பிக் ‘ இதழை தடை செய்கிறது. எனினும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் 1943ம் ஆண்டுவரை இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது.

இரண்டாம் உலகப்போர், மிகை யதார்த்தவாதத்தில் (Sur realism) நாட்டாமை கண்ட பிரெஞ்சு இலக்கியவாதியான ஆந்த்ரே ப்ரெத்தோன் (Andre Breton) எமே சேசேர் சந்திப்பிற்கு (1941ம் ஆண்டு) வாய்ப்பு அளிக்கிறது. சேசேரின் கவிதைகளை வாசித்து மனம் நெகிழ்ந்து ‘அதிசய ஆயுதங்கள் ‘ என்கிற சேசேரின் கவிதைத் தொகுப்பொன்றிற்கு ப்ரெத்தோன் முன்னுரை எழுத(1944), அன்று முதல் சேசேரும் தம்மை மிகையதார்த்தவாதத்திற்குள் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்.

ஹைத்திநாட்டு பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய, கலை பண்பாட்டுத் துறை செயலர் தொக்தர் மபில்(Mabille) அழைப்பின் பேரில், அங்கு சென்று சுமார் ஆறுமாதங்கள் அறிவு ஜீவிகள் மத்தியில் சிறப்பானதொரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். அந்நாட்டில் தங்கிய நாட்கள் அவரது படைப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஹைத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்தவர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகள் எமே செசேரின் உழைப்பில் வெளிவந்து புகழ்பெற்றன.

இலக்கியத்தின்பால் ஆர்வங்கொண்டிருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து மர்த்தினிக் பிரதேசத்தின் தலைநகரான ஃபோர்-தெ-பிரான்சு(Fort-de-France) நகரத்தின் மேயராக 1945ம் ஆண்டு தமது 32வது வயதில் தேந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். இவரது உழைப்பின் காரணமாக பிரெஞ்சு அரசாங்கம் தனது காலணி பிரதேசங்களுக்கென பிரத்தியேக சட்டத்தினை இயற்றி பிரான்சு நாட்டின் இதரப்பிரதேசங்களுக்கு இணையான உரிமைகளை வழங்கியது. தன் வாழ்க்கையைப் மர்த்தினிக் பிரதேசத்தின் தலைநகரான ‘ஃபோர்-தெ-பிரான்சு ‘(Fort-de-France)க்கும் பாரீசுக்குமாக கழித்த செசேர் பிரான்சின் தலை நகரில் சில நண்பர்களுடன் இணைந்து ‘ஆப்ரிக்க இருப்பு ‘ என்கிற இதழைத் தொடங்கினார். காலப்போக்கில், இப்பெயர் பதிப்பகமாக உருவெடுத்தது. ஆப்ரிக்க இருப்பு ‘ இதழில் வெளிவந்த ‘காலணி ஆதிக்கத்திற்கெதிரான அறைகூவல் ‘ ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கக்கொள்கைகளை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கக் கொள்கைகள அவர்கள் அனுபவித்திருந்த ‘நாஸிசத்தின் ‘ கொடுமைகளோடு ஒப்பிடப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும் ஐரோப்பிய காலணி ஆதிக்கத்திற்கும் இனவாதத்திற்கும் காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது. 1956ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் மீதான சோவியத் யூனியனின் ஆக்ரமிப்பை விமர்சித்தவர், தாம் அங்கம் வகித்த கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, 1958ம் ஆண்டு தமது பிரதேசத்துக்கென ஒர் அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். ‘மர்த்தினிக் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் நோக்கத்துடனும், சிந்தனைக்கும், செயலுக்கும் உண்மையாக நடக்கவேண்டிய அவசியத்துடனும் அவ்வியக்கம் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஒருபக்கம் அரசியல் ரீதியாக தம் மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முயற்சித்தவர், மற்றொருபுறம் இலக்கியத்திலும் குறிப்பாக ‘மிகை யதார்த்தவாதத்தினை அடையாளபடுத்தும் கவிதைத் தொகுப்புகள் ஊடாக (சிரச்சேதம் செய்யப்பட்ட சூரியன் (1948)- தொலைத்த உடல் (1950…) ) காலணி ஆதிக்கத்தின் அவலங்களுக்கு உரத்து குரல்கொடுத்தார். 1956 ம் ஆண்டிலிருந்து இவரது கவனம் நாடகத்தின்பாற் திரும்பியது. ‘பிறகு நாய்கள் அமைதியாயின – (Et les chiens se taisaient) ‘ என்கிற நாடகம் காலணியாதிக்கத்திற்கு எதிரானக் கலகக்குரல். ‘ரெபெல்(Rebelle) ‘ என்கிற அடிமையொருவன் தமது எஜமானைக்கொன்று, இறுதியில் மற்றொருவனின் நம்பிக்கைத்துரோகத்திற்கு பலியாகும் கதை. காலணி ஆதிக்கத்திலிருந்த மீண்டுவருகிற நாடுகள், தங்கள் மண்ணின் மைந்தர்களினாற் சுரண்டப்படும் அபத்தத்தைப் பேசும் ‘கிறிஸ்தோஃப் அரசனுக்கு நேர்ந்த கதி -Tragedie du Roi Christophe(1963) என்ற நாடகத்திற்கு ஐரோப்பிய நாடுகளிடையே மிகுந்த வரவேற்பு. பெல்ஜியகாலணியான காங்கோ நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவரும், ‘காங்கோவின் தந்தை ‘ என அந்நாட்டுமக்களால் பிரியமுடன் அழைக்கப்பட்ட ‘பத்ரிஸ் லுமும்பா ‘வின் சோக வரலாற்றின் அடிப்படையில் ‘காங்கோவிலொரு பருவகாலம் – (Une saison au Congo), பின்னர் பிரெஞ்சு காலணி மக்களின் வேதனைகளைச் சொல்ல ஷேக்ஸ்பியரின் நாடகமான ‘புயல் ‘ பெயரில் – ‘Une tempete ‘- ஆகியவை முக்கியமானவை. இதுவரை வெளிவந்துள்ள கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளின் என்ணிக்கை பதினான்கு. இவரது படைப்புகள் ஆழ்ந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதோடு, உலகெங்கும் முக்கிய மொழிகளில் வாசிப்புக்குக் கிடைக்கின்றன.

எமே செசேரின் கவிதைகள்

-பிரெஞ்சிலிருந்து தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா

இரவின் முரசு (Tam -tam de nuit)

கனத்த இதயத்துடன் சொபிக் கூட்டம். நதி தடித்த விரல்கொண்டு கூந்தற் கற்களை-ஆயிரமாயிரம் அற்றைத் திங்களின் ஆடித்துண்டுளை-அளையும் ஆயிரமாயிரம் வைரத்துண்டுகளை அபயக்குரலெழுப்பா ஆயிரமாயிரம் ‘நா ‘க்களைச் சுற்றிவரும் கற்களின் கரங்களால் நாணேற்றிய விற்கள் ஒன்றின்மீதொன்றாய் பின்னியொளிந்து சமுத்திர வெளியில் மூழ்கிக்கிடக்கும் கனவுநிழல்களைச் சீண்டும்.

தீர்க்கதரிசனம் (Prophetie)

அங்கே

ஒளிபடைத்த கண்களுடன் சாகசம்

வார்த்தைஜாலம் செய்யும் பெண்கள்

உனது கைப்பிடியில் பால்பருவத்து

பறவையொன்றினைப்போல எழில்கொஞ்சும் இறப்பு

முழந்தாளிட்ட சுரங்கவழி,

ஒவ்வாக் கம்பளிப் புழுக்களை

ஒதுக்கி

விழிமடல் செல்வத்தை

கவனமாய்ச் சேர்க்கும்

உபாயம்தேர்ந்து, இலகுவாய்

தீப்புகும் மரங்கள் வியப்பிலாழ்த்தும்

அங்கேஇராட்சத இரவுக்கு கலப்பற்ற தாவரங்களின் வேகமொத்து

நேரும் இரத்தக்கசிவு

அங்கே இரவிலும் பிரகாசமாய் வானத்து தேன்கூடு, மொய்க்கும் விண்மீன் தேனீக்கள்

அங்கே காலத்தை எதிர்கொள்ள வெளிகளை நிரப்பும் எனது காலடிகள்

அங்கே நம்பிக்கையை நாளையுடனும்,

மழலையை மகாராணியுடனும் சேர்ப்பிக்கும் எனது சொற்களெழுப்பிய வானவில்

எஜமானர்களை இகழ்ந்ததற்காக சுல்தானுடைய வீரர்களை கடித்ததற்காக

பாலைநிலத்தில் விம்மி அழுததற்காக

காவலர்களுக்கு எதிராகச் சத்தமிட்டதற்காக

காரவானில்* பயணிக்கும்

நரிக்கும், ஓநாய்க்கும் தண்டனிட்டதற்காக.

மென்மையான மயில்வாலொத்த

அக்கினியாற்றின் விளிம்பில் குதித்தெழும்

முரட்டுக்குதிரைத்தனமான புகை

சட்டென்று சட்டையைக் கிழித்து

மார்பிளப்பது

காட்சியாய் கண்ணிற் தெரிகிறது

நம்பிக்கையோடு

பார்க்கிறேன்

பிரிட்டிஷ் தீவுகள்

குட்டித்தீவுகள்:

வெடித்துச்சிதறும் குன்றுகள்

மெள்ளக்கரையும்

வாயுக்கடலில்

தீர்க்கதரிசனத்துடன் நீராடும்

எனது கலகக்குரலும்

எனது புரட்சியும்

எனது பெயரும்

– எமே செசேர்

*Caravane -பாலைநில வாகனம்

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation