பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue


உயிரியலாளர்கள் இரண்டு வகையான செல்கள் இயற்கையில் இருக்கின்றன என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இவை அவற்றின் அளவைப் பொறுத்தும், இந்த செல்களின் உள்ளே இருக்கும் இதர அமைப்புகள் பொறுத்தும் அடிப்படையிலேயே மாறுபடுவதை வைத்து இப்படிப்பட்ட வகைப்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.

ப்ரோகரியோட் Prokaryotes என்னும் ஆதாரசெல்கள் உள்ளே இதன் ஜீன்கள் குழுமி இருக்கின்றன. இந்த ஜீன்களை இந்த செல்களின் இதர பொருட்களிலிருந்து பிரிக்க எந்தவிதமான சுவரும் கிடையாது. இவைகளின் உள்ளே ஆர்கனெல் எனப்படும் செல்லுறுப்புகள் (க்ளோரொப்ப்ளாஸ்ட் , மிட்டோகாண்டிரியா போன்றவை) யும் கிடையாது.

இன்னும் சிக்கலான செல்கள் யுகாரியோட் Eukaryotes எனப்படும் வளர்செல்கள். இவைகளே எல்லா வாழும் பலசெல் உயிரினங்களின் அடிப்படையான செல்களாக இருக்கின்றன. இவற்றின் உள்ளே இருக்கும் மரபணுக்கள் மற்ற செல்பொருட்களிடமிருந்து பிரித்துக்காண தனியே சுவர்கள் உண்டு. அதே போல, இந்த செல்களின் உள்ளே செல்லுறுப்புகளான ஆர்கனெல்களும் இருக்கும். இந்த ஆர்கனெல்களும் தனித்தனி சுவருக்குள் இருக்கும்.

organelle – என்னும் ஆர்கனெல் என்பது ஒரு செல்லுக்குள் இருக்கும் சுதந்திரமான தனிப்பட்ட சுவருடைய ஒரு அமைப்பு.

முதன்முதலில் பரிணாமத்தில் உருவானவை ப்ரோகரியோட் என்னும் ஆதார செல்களே என்றும், பின்னர் பரிணாமத்தில் இவை மற்ற ப்ரொகரியேட் என்னும் ஆதாரசெல்களை விழுங்கி யூகரியோட் என்னும் வளர்செல்களாக ஆயின என்றும் கருதப்படுகிறது. இந்த வளர்செல்களே உள்ளே ஒரு கருவும் (nuclei) அதனைச் சுற்றி சக்தி உற்பத்தி செய்யும் மிட்டோகாண்டிரியா போன்ற அமைப்புகளும் உள்ளவையாக இருக்கின்றன.

பேராசிரியர் ரோபர்ட்டோ டோகாம்போ என்ற இல்லியனாய் பல்கலைக்கழக ஆய்வாளர் agrobacterium tumefaciens என்ற ஒரு செல் உயிரிகளை ஆராய்ந்து வருகிறார். இவைகளே பல தாவரங்களுக்கு வரும் கால் gall வியாதிக்குக் காரணம்.

அதே நேரத்தில் இந்த செல் மரபணு ஆய்வாளர்களாலும் வெகுவாக உபயோகப்படுத்தப்படுகிறது. டிஎன்ஏ வை ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்கு மாற்ற இந்த ஒரு செல் உயிரியை பயன்படுத்துகிறார்கள்.

இந்த பாக்டாரியாவுக்குள் கண்டறிந்த செல்லுறுப்பு ஒரு செல் வளர்செல் (யுகரியோட்)க்குள் கண்டறிந்த செல்லுறுப்புடன் சரிநிகராக இருந்தது. இந்த குறிப்பிட்ட செல்லுறுப்பு அந்த செல்லுக்குள் இருக்கும் அமிலத்தை அந்த செல் கட்டுப்படுத்த உதவுகிறது.

பேராசிரியர் டொகாம்போ அவர்களைப் பொறுத்த மட்டில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. இதற்குப் பல காரணங்கள். முக்கியமானது இது போன்ற ஒரு செல்லுறுப்பு இதுவரை ஒரு ப்ரோகரியோட் (ஆதாரசெல்) க்குள் கண்டறியப்பட்டதில்லை.

இரண்டுவிதமான செல்களும் ஒரே நேரத்தில் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்றும் கருத இடமிருக்கிறது என்று கூறுகிறார்.

வளர்செல் ஆதார செல்களை விழுங்கியதால் உருவானதே வளர்செல் என்னும் கருதுகோள் ஆட்டம் காண்கிறது இந்த கண்டுபிடிப்பு மூலம் என்றும் கூறுகிறார்.

Series Navigation

செய்தி

செய்தி