பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


5

சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறையச் சில்லரைபோல கனத்த மெளனம் சுமந்து நடமாடுகிறர்கள். ஐசியூ என்று வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துகள் துளிர்த்தன. ரத்தத்தில் குளிர். அட ஆம்பளையே, நீ அவளுக்கு தைரியம் சொல்ல வேணாமா.

முடியுமா ?

பெண்களை ஆண்கள் அடக்கியாள்கிறதான பாவனைகள் எல்லாம் சும்மா. துயர கணங்களில் அவர்களே ஆண்களை வழிநடத்துகிறார்கள். அவர் பின்சீட்டில் வாகனத்தில் அமர்கிற மனைவி- ஆனால் அலுவலகத்து நெருக்கடி… எதிர்பாராத தருணங்களின் மோதலில் மனம் வெருண்டு விட்டால் அவர் ஈஸ்வரியின் மடிக்குழந்தை ஆகிப்போகிறார். துயரகணங்களில் பெண்கள் பலங்கொண்டு விஸ்வரூபம் எடுக்கிறார்கள். அவர்கள் மனஉறுதி… ‘பிடி ‘ இறுகுகிறது. கவனித்துப் பார்க்கையில்… கணவன் இல்லாமல் நம்குல ஸ்த்ரீகள் போராடி வயிற்றுப்பாட்டையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்த ஆயிரம் பேரை உதாரணம் காட்டலாம். தற்காத்து தற்கொண்டாற் பேணி தகைசார்ந்த சொற்காத்து, அப்புறமுங் கூட சோர்விலாள் பெண். சோறிலாளும் கூட… கணக்கெடுப்பில் அதேபோல அத்தனை ஆண்களைக் காட்ட முடியுமா ? செத்துப்போன புருஷனுக்கு மாலை போடப்போய், தவறுதலாக விதவைக்குப் போடறாளுகள் நம்மாளுகள். பெண்டாட்டி போய்விட்டால் குழந்தைகளை வளர்க்க, என்று சொல்லி இவன் ரெண்டாங் கல்யாணம் செய்துகொள்கிறான் அவசர அவசரமாக. பிறகு அவள் முதல்பெண்டாட்டியின் குழந்தையை வீட்டுவேலை என வாட்டியெடுப்பாள்.

அது வளர்க்கும் இவர்கள் ரெண்டு பேரையும்.

மனசில் ஏன் யோசனை மரணம்… ரெண்டாங் கலியாணம்… எனக் கூவுகிறது ? நான் தடுமாறுகிறேன். உள்ளே நடுங்குகிறேன். லிஃப்ட் வேணாமென்று மாடியேறுவது சிறிது மூச்சுத் திணறுகிறது.

முதலில் அவன் காதல் கடிதம் கொடுத்த வேகமென்ன, பிறகு மின்சாரத்தைத் தொட்டாப்போல கையை இழுத்துக் கொண்ட அவசரமென்ன… தாமதித்தேயானாலும் பிருந்தா சொன்ன ‘ஐ லவ் யூ ‘… அது அதிக அர்த்த வீர்யமும் ஆழமும் செறிந்தது. ஆண்ஜென்மங்கள் சோப்ளாங்கிகள்தாமோ என்னமோ!

பெண்மைக்கு வணக்கம்.

எப்போதுமே இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் கங்காருகள்தாமோ ?

ஐசியூ – என கதவில் பார்க்கவே திடுக்கென்கிறது. முகத்தைத் துடைத்துக் கொண்டார். போறபோக்கில் நானே ஐசியூவில் அட்மிட் ஆயிருவேனா ? பிருந்தா என்னை இன்னொரு சுமையாய்ப் பார்த்துக் கொள்கிறாப் போல ஆயிருமா ?

என்னைப் பார்த்தவுடன் அழுது விடாதே பிருந்தா. என்னால் இப்பவே நிற்க முடியவில்லை. மாடியேறி வருமுன் பதட்டப் பட்டுவிட்டேன். என் பவிஷு இவ்வளவுதான். நான் நந்தகுமாரின் அப்பா. பிரயோஜனமென்ன… சோப்ளாங்கி. நான் உன்… மற்றும் ஈஸ்வரியின்… சந்நிதிக் கதவம்.

கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தார். ஹாவென வாயைப் பிளந்து மூச்சுவிடும் ஓர் எலும்புக்கூடு. முகத்தில் ஆக்சிஜன் முகமூடி. நெஞ்சு காய்ந்த மரத்துண்டாய் வற்றிக் கிடக்கிறது. இவர்தான் திரு. பிருந்தாவா ? நெற்றியில் எதோ கோவில் திருநீறு. நெற்றியில் ஏதுடா விலா எலும்பு என்று குழம்புகிறாப்போல… மனசை ஈரத்துணி உதறினாப்போல தேற்றிக்கொள்ள முயன்றார். விரலால் கண்ணாடியில் சுண்டி அழைப்போமா ? உள்ளே அவர் அருகில் யாருமே இல்லை. திரையொன்று பச்சை வண்ணத்தில். அதன் மறுபுறம் யாரும் இருக்கலாம். பிருந்தா.

‘ஆர் யூ மிஸ்டர் ராஜகோபால் ? ‘ என முதுகில் குரல். உடம்பு துள்ளத் திரும்பினார். ‘ராஜி ? ‘ என்கிறார் கண்நிறைய அவளைப் பார்த்தபடி. என்ன பளீரென்ற முகம். அமைதி. பொறுமை. ‘வாங்க அங்க்கிள்… ‘ என்றாள். தலையாட்டினார். சட்டென்று அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறார். ஒரு ஸ்பரிசப் பரிமாற்றம்… மனசில் பத்திரமாய் இருக்கும். ‘நான் அம்மாவை அனுப்பறேன்… ‘ அப்பாடா, என உடனே ஏற்றுக் கொள்கிறார். கையைக் கட்டிக்கொண்டு வாயிற்சேவகன் போலக் காத்திருந்தார்.

அம்மாபோலவே அச்சசலாய்க் குரல், அதன் மேனரிசங்கள் – இப்படிக்கூட வாய்க்குமா ? அவருக்கு வஸந்த் செந்திலின் ஒரு ஹைகூ கவிதை திடுமென ஞாபகம் வந்தது.

இழவுவீட்டின்

ஒப்பாரிஎடுப்பில்

இறந்தவளின் குரல்

சாவு ஞாபகம் இப்போது வந்திருக்க வேணாமாய் இருந்தது.

பிருந்தா பிருந்தா பிருந்தா…. ஸ்ரீ அரவிந்த அன்னையே இந்தக் கணங்களுக்கான தெம்பை எனக்குத் தா. அன்னைக்கு வணக்கம். அன்னைக்கு வணக்கம். அன்னைக்கு வணக்கம்.

‘ராஜு ? ‘ என்று குரல்சாட்டை திரும்பவும் துள்ளச் செய்தது. ஆ, கண்டேன் பிருந்தாவை. ‘அடேடே ராஜு… நீ மாறவே இல்ல ராஜு ‘ என்று ஒரு கர்ச்சீப்பில் கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள். சற்று தடுமாறித்தான் போனார். உள்வாங்கிய… மிரண்ட குழந்தையின், தயங்கிய… நம்பிக்கைப்படாத சிரிப்பொன்றை உதிர்த்தார்.

‘எப்டியிருக்கே பிருந்தா ? ‘

‘அதான் பாக்கறியே ராஜு. நீ சொல்லு எப்டியிருக்கேன் ? ‘ என்றவள் ‘வா வெளில போகலாம்… ‘ என முன்னே நடந்தாள். விடுபட்டாற் போன்றதோர் பாவனை காட்டினாப் போலிருக்கிறது. ஹாவென்று அவருக்கே விடுபட்டாப் போலிருந்தது.

வெளியே வர என்று முகம் கழுவிக் கொண்டிருந்தாள். சிறு நுரை காதுப் பின்பக்கம் மணத்துக் கிடந்தது. சேஷாத்ரி சொன்னாப்போல, சதை போட்டிருந்தாள். இருந்தாலும் அந்தக் குரல், அந்த உற்சாகம், அதன் ஆளுமை. அந்தக் குரலுக்குமுன் விசுவாச நாயாகிப் போகிறேன் இப்பவும். திடாரென ஒரு வேகம்- இன்றைக்கு நான் எஜமானன் ஆவேன். ஒரு வேடிக்கையான சவால்போல அதை ஏற்றுக் கொண்டார்.

நோயாளிகளின் சொந்தக்காரர்கள் கூட்டம் தங்குமிடம், என்று சற்று தள்ளி தனியறை. உள்ளே டி.வி ஓடியது. டென்டுல்கர் நுாறு அடிப்பானா ? அவர்கள் பரபரத்திருந்தார்கள். இந்தக் கணம்… உள்ளே இருக்கிற… உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நோயாளி நலம் அவர்கள் கவனத்தில் இருக்குமா ? டென்டுல்கர் அடிக்கிற சிக்ஸர் ஐசியூ கண்ணாடியை உடைத்து நோயாளி மண்டையைப் பதம் பார்க்காமல் இருப்பதாக.

‘அப்றம் ? என்ன, பேசச் சொன்னா பேசறதில்லையா ? ‘ என்றபடி பின்னே பார்க்காமல் மாடியிறங்கினாள் பிருந்தா. புடவை சற்று நெகழ்ந்தவாக்கில் இடுப்பு காட்டியது. ஒரு கிள்ளு கிள்ளலாமா ?

‘நேரா சர்ப்ரைசாப் போயி நிப்பமேன்னு இருந்தது ‘ என்கிறார் உற்சாகமாய். மனசில் ஒன்று புரிந்தது- இவள் கணவன் பற்றிய கேள்விகளைத் தவிர்க்க விரும்புகிறாள்… நாட்களாக வாரங்களாகப் போராடும் கணவர். வேளாவேளைக்கு மருந்தும் உணவும் உடைமாற்றலும்… சட்டென்று கண் முழித்தால்… என்ன, என்று முன் குனிந்து கேட்க… ஒத்தாசைக்கு முன்வர தயார்நிலையில் இருந்திருக்கிறாள். உடலும் மனமும் அலுத்திருக்கிறாள். அவரது உயிரின் போராட்டம் சகிக்க முடியாமல் இவள் பாடுபட வேண்டியிருக்கிறது. அட தெய்வமே, இவருக்கு இந்த அவஸ்தையில் இருந்து விடுதலை தரக்கூடாதா ?… அருகில் இருந்து இதை மெகாசீரியல் பார்ப்பதுபோலப் பார்ப்பது கொடுமை.

அது ஐசியூ. டி.வியானால் சேனல் மாற்றி, சிறிது நேரம் டென்டுல்கரைப் பார்க்கலாம். நாம ரொம்ப எதிர்பார்க்கிற நேரம் ‘முடி ‘யாச்சின்னு டக் அடிச்சிட்டு வெளிய வந்துர்றானுங்கள்.

நோயாளியின் உதவிப்பெண்கள் தொடர்கதை வாசிக்கிறார்கள்- ‘பறவைப்பாதம் ‘ மாதிரி எதாவது.

அதிலும் ஐசியூ வந்தால் என்ன செய்வது ?

‘சப்பாத்தி மாவு பிசைஞ்சி நீட்டுக்கு உருட்டி சப்னு அகலத்துக்கு அமுக்கினாப்ல ஆயிட்டியே பிருந்தா ‘

‘எம்பொண்ணுக்கு சப்பாத்தி பிடிக்கும். அவளுக்கு இட்டுப்போட்டே இப்டி ஆயிட்டேனோ என்னமோ ? காலைல சாப்பிட்டுட்டியா ? பசிக்கறது… ‘

‘வெளில எங்காவது நல்ல ஹோட்டலாச் சொல்லு ‘

வழிநடத்துகிறாள் என்னை. அந்த மெலடி… மேலடி, அதான் பிருந்தா. மை லேடி. என்ன தைரியமாய் இருக்கிறாள். வெளியே வந்த புத்துணர்ச்சி. வெளிக்காத்து சுவாசம். அருகில் சிநேகிதன்… ஏடாகூடமாய் எதுவும் விசாரித்து அவளது உற்சாகத்தைக் குலைத்துவிடாதேடா.

ஆட்டோவில் பக்கத்தில் உட்கார்கையில் அவர் கையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். ஈஸ்வரி, குழந்தைங்க புகைப்படம் எதும் கேட்பாள் என நினைத்தார். அட, அவள்தேவை அந்தநாள் ராஜு. முடிந்தால் அவனை ஹெட்மாஸ்டரிடம் அவள் மாட்டிவிட வேண்டும்.

‘ஓயாமப் பேசுவே… மாறிட்டே ராஜு ‘

‘மாற மாட்டேன்… என் லெட்டரை ஏன் அப்டி அவசரமாய் எடுத்துக்கிட்டு ஹெட்மாஸ்டர் ரூமுக்குப் போனே ? ‘

‘பேப்பரை என்னண்ட குடுத்ததும் நீ என்னைக் கழுதையா நினைச்சிட்டியோன்னு ஒரு ஆத்திரம்தான்… ‘

ஹோட்டலில் தனியறை. ஏ/சி. நுழைந்த ஜோரில் அடிச்சாளே ஒரு முத்தம். ஆட்டிவிட்டது உயிர்க்குலையை. ‘நீ இன்னமும் மாறவேயில்லை பிருந்தா. இப்ப ஒத்துக்கறேன். இன்னும் சரியாப் பல்தேய்க்கிறதேயில்லை ‘ என்றான். ‘என்ன சாப்பிடறே ? ‘

‘ஸ்வீட் ‘ என்றவள், ‘உனக்குப் பிடிச்ச ஸ்வீட் ‘ என்றாள்.

‘எனக்குப் பிடிச்ச ஸ்வீட் நீதாண்டி ‘ என்றான் தாபமாய்.

‘பில்லுக்கு அழாதேடா முண்டம். ‘

‘சர்வருக்கு டிப்ஸ் குடுத்து, எதுவும் வேணாம். நீ கொஞ்சநேரம் இந்தப்பக்கம் வராம இருன்னுடலாமா ? ‘ என்றான். சிரிக்கிறார்கள். ‘எப்டி உம்பொண்ணு உன்னைப்போலவே இருக்கா ? அதும் அதே குரல். அசந்துட்டேன் முதல்ல கேட்டதும் ‘

‘ஏ பாவி… நல்லவேளை. அவகிட்ட உளராம வாயை மூடிக்கிட்டியே அந்தமட்டுக்கு சந்தோஷம் ‘ என்றாள்.

‘என்ன படிக்கிறா ? ‘

‘பி.ஈ. எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்… இன்னிக்குப் போணியாறது அதானே ? ‘

‘ஆமாமா. நம்ம காலத்துல ஒரு ரவுண்டு பி.காம்., பி.பி.ஏ-ன்னு காத்தடிச்சது. என்னைத் தேடினியா பிருந்தா ? ‘

‘இல்ல ‘ என்றாள். ‘அது ஒருகாலம். இறந்த காலம்… இப்போது இழந்தகாலம் அது- ஆனாலும் மனசில் வெச்சிக்கிட்டேன். ஒட்டகம் பைக்குள்ள தண்ணீர் சேமிச்சி வெச்சிக்குமாமே… ‘

‘நீ ரொம்ப அறிவாளி பிருந்தா. நல்ல நிதானம். நான் படிச்சிருக்கலாம். படிப்புல உன்னோட போட்டி போட்டிருக்கலாம். உன் அழுத்தம், உள்க்கனல் என்னாண்ட இல்லை. ‘

‘அப்டின்னா ? ‘

‘அப்டின்னா நீ அடிச்சியே முத்தம் அந்த அழுத்தம் அந்த சூடு… ‘ என ராஜபோபால் அவளை இழுக்குமுன் சர்வர் வந்தான்.

‘மிஸ்டர் கொஞ்சம் நகர்ந்து உக்காருங்க. இவ்ள இடம் இருக்கு… ‘

‘நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு சேர் போதுமே ‘ என்றான். ‘சர்வர் சிரிப்பான்ல நம்மைப் பார்த்து… ‘

‘சர்வர் கெட்டவன். இந்த ஊரே கெட்டது. உலகமே கெட்டது… ‘

‘அந்த டயலாக்கை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியா ? ‘

‘நான் விசாரிச்சிட்டேன்… இதுதான் ஜல்சா. கும்மாளம். வாளித் தண்ணில சப்புச் சப்புனுகையால அடிச்சிக்கிட்டே குழந்தை கொட்டமடிச்சிக் குளிக்கறதில்லையா ? ‘

‘ஸ்ரீதரின் இன்றைய தலைப்புச் செய்தி. ‘

‘மனுஷாளுக்கு ஏன் வயசாகிறதுடா ? ‘

‘ஐ நோ நானும் உளர்றேன். இருந்தாலும் திசிஸ் டூ ஸ்கொயர் மச். ‘

‘சரி நயே உளரு… ‘

‘பெண்கள் ஆச்சரியமானவர்கள். கரப்பான் பூச்சிக்கு பயப்படுறாளுகள். சைக்கிள் விட வெலவெலக்கிறார்கள். ஆனால் உறவுநிலைகளில் அவர்கள் பலசாலிகள். ‘

நேரக் கணக்கு பிசகி விட்டது. அவன் என்னென்னவோ பேசிக் கொள்கிறார்கள். அனர்த்தம் என்றாலும் ஆனந்த நர்த்தனம். டென்டுல்கர் சென்சுரி போட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும். யார் கவலைப்பட்டார்கள். என்ன சாப்பிட்டார்கள் என்பதே தெரியவில்லை. வெளியே வெயில் உக்கிரப் பட்டிருக்கிறது. உள்ளே ஏ/சி எனும் நிழற்குடை. மனம் மிதந்த கணங்கள் அவை. எனினும் பிரிவு என்பது ஒன்று மானுட வாழ்வின் நிர்ப்பந்தம். வெளியே வந்து பீடா எடுத்துக் கொண்டார்கள். டாக்சி பிடிக்கையிலேயே மனம் பதற ஆரம்பித்து விட்டது. அவருள் அழுகை. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். எனினும் சலனப்படாத முகம். இதுவே எனக்கு வாய்க்க முடியும். சிறு விடுதலை. நான் நாற்றெனப் பிடுங்கி நடப்பட்டவள். எனக்கு ஒரு கல்யாணவயசுப் பெண். அவள் எதிர்காலம் சுமந்து நிற்கிறேன் நான்.

ஆஸ்பத்திரி திடுமென வந்து முன்னே நிற்கிறது. வாசலிலேயே அவள் இறங்கிக் கொள்கிறாள். ‘வரேண்டா ‘ எனக் கைகுலுக்கினாள். அப்பறம் சொன்னாளே அந்த வார்த்தை. ‘என்னை மறந்துரு ராஜு. ‘

‘ஏய்… ‘ என்றார் பதறி.

‘ஆமாம். ஒரு கனவு கண்டேன் நான். இப்போது கண்விழித்து விட்டேன் ‘ என்றாள் பிருந்தா. ‘வணக்கம் ‘ என்றாள். ‘நேரமாகிறது ‘ என்றாள். ‘நான் என் கூட்டுக்குத் திரும்புகிறேன் ‘ என்றாள்.

திகைத்து நின்றார் ராஜகோபால். அவள் திரும்பிப் பார்க்காமல் போவதைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றார். கடைசியில் அவள் ஜெயித்துக் காட்டி விட்டாள். ஆளுமை மிகுந்த பிருந்தா. தெளிவான வரையறைகள் கொண்ட பிருந்தா. ராஜி என்று பெண்ணுக்கு என்-அடையாளப்பேர் வைத்த பிருந்தா.

அலையென வந்தாள். கால்மண் பறித்தாள். காணாமல் போனாள்.

பறக்கிற பறவை சற்று இளைப்பாற வந்திறங்கினாப் போல…

டாக்சி எதிர்த்திசையில் லாட்ஜைநோக்கித் திரும்புகிறது. ஹாவென்று சாய்ந்தபடி நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.

——

/மு டி கி ற து/

storysankar@rediffmail.com

Series Navigation