பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

அமர்நாத்


அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான், அவ்வளவுதான் என்று சில ஆண்டுகளுக்குமுன் மருத்துவர்கள் தெரிவித்தபோது அவளுக்கும் அவள் கணவன் சுந்தருக்கும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி. சென்ற ஆகஸ்ட்டில் ஐந்திற்குபதில் ஆறுவயதில் கின்டர்கார்டன் சேர்ந்து மற்ற குழந்தைகளுடன் பழகிய அஷ்வினிடம் ஓரளவு முன்னேற்றம். அதற்காகக் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், பூஜையும்.
ஆராதனை முடிய நண்பகலாகிவிட்டது. அது நடக்கும்போதே ஊத்தப்பம், சட்னி, எலுமிச்சை சாதம், கோஸ் கறி, தயிர்சாதம், பாயசம் எல்லாம் மொத்தமாக ‘வுட்லன்ட்ஸி’லிருந்து வண்டியில் வந்து இறங்கின. அவற்றை கோவிலின் கூடத்தை ஒட்டிய சமையலறைக்கு எடுத்துவர சாமி உதவினான். சுந்தர் கூடத்தின் வாசலில் நின்று அஷ்வினை ஒருகையில் தூக்கிக்கொண்டு இன்னொரு கையால் கோவிலுக்கு வந்தவர்களைச் சாப்பிட அழைத்தான். சரவணப்ரியாவும், மஞ்சுளாவும் இயந்திரம்போல் உணவுவகைகளைத் தட்டுகளில் போட்டு நீண்ட மேஜைமேல் வரிசையாக வைத்தார்கள். ஞாயிறு என்றதால் மனிதகும்பல் அவற்றை அங்கே அதிகநேரம் இருக்கவிடவில்லை. அந்தக் கூட்டத்தில் சாமிக்குத் தெரிந்த முகங்கள் அதிகமில்லை. தானும் ஒருதட்டை எடுத்துக்கொண்டு உட்கார இடம் தேடினான். கோடியில் சிறியமேஜைக்கருகில் ஒருத்தி மட்டும். முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் சொல்லலாம். கழுத்துவரை வெட்டிய தலைமயிர். இறுகிய முகம், பொறுப்பான பதவியினால் வந்திருக்கும்.
“நான் எதிரில் உட்காரலாமா?”
“தயவுசெய்து.”
அவளை முன்பு சந்தித்ததாக நினைவில்லை. வீட்டிற்கருகிலோ, வேலையிலோ பரிச்சயமாகாத இந்தியர்களை படேல் கடையில் புதிதாக இறங்கியிருக்கும் கத்திரிக்காயையும் வெண்டைக்காயையும் பொறுக்கும்போது பார்ப்பதுண்டு. ஊரில் வசிக்கும் இன்னும் சிலரைக் கோவிலில் காலணிகளைக் கழற்றுமிடத்திலோ, மாடியில் கடவுள் சன்னிதியிலோ சந்திக்கலாம். இவள் இரண்டாவது ரகத்தில் சேர்ந்தவளாக இருக்கும். எப்போதாவதுதானே சாமி கோவிலுக்கு வருகிறான், அதனால் அவளைத் தெரியவில்லை.
உட்கார்ந்ததும் சாமி தாளித்துக்கொட்டாத “ஹாய்!” சொன்னான். அதற்குப் பதிலாக, அவளும் உதட்டளவில், “ஹாய்” என்பதோடு உரையாடல் முடிந்து இருவரும் சாப்பாடுவதில் கவனம் வைக்கலாமென்று எதிர்பார்த்தான். ஆனால், அவளுக்கு அவனைப்பற்றி நிறையவே தெரிந்திருந்தது.
“சாம்! வான்டர்பில்ட்டில் உங்கள் ஆராய்ச்சி எதில் நிற்கிறது?”
சுருக்கமாக அதைச் சொல்லிமுடித்தபோது கையகல ஊத்தப்பத்தைக் காரமான சட்னியுடன் மென்றாகிவிட்டது.
“உங்கள் மனைவி சாரா எல்சியில் எக்ஸ்பெர்ட் ஆயிற்றே. அதைப்பற்றி அவள் பேசியதை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவள் ஆராய்ச்சி?”
“தற்போது அமினோ அசிட்களை அளவிடுவதில் நிற்கிறது.”
“குறிப்பாக எந்த அமினோ அசிட்கள்?”
கோவிலின் கீழ்த்தளத்தில்தான் சாப்பாடு, இருந்தாலும் இல்லாத ஒன்றைச்சொல்லி உண்மையை மறைக்க மனம்வரவில்லை. “1-ப்ரோமோப்ரோபேன், அதைப்போல் இன்னும்சில இரசாயனப் பொருட்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளை அளவிட ஒருபெரிய திட்டம் உருவாகும் கட்டத்தில் இருக்கிறது. அதற்காக 1-ப்ரோமோப்ரோபேனை எலிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் அதைப் பயன்படுத்தும் ஒரு தொழிற்சாலையின் வேலையாட்களிடமிருந்து சேகரித்த இரத்தத்தையும் சிறுநீரையும் ‘அனலைஸ்’ செய்கிறாள்” என்று அந்தத்துறையில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும் புரியும்படி சுருக்கமாகச் சொன்னான்.
அவள் சாப்பிடுவதை சட்டென்று நிறுத்தியதுபோல் தோன்றியது. இரத்தத்தையும் சிறுநீரையும் குறிப்பிட்டது அவள் பசியைக் கெடுத்துவிட்டதோ?
பேச்சை மாற்ற, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று சாமி திருப்பிக் கேட்டான்.
“கெம்-சேஃப்.”
அவன் முகத்தில் அந்தப் பெயரை அறிந்ததற்கான அறிகுறி துளியுமில்லை. அதனால் அவள், “பெயரைக் கேள்விப்பட்டதில்லையா? நாஷ்வில்லைத் தவிர இன்னும் நான்கு இடங்களில் எங்கள் ஆராய்ச்சி அலுவலகங்கள் இருக்கின்றன” என்றாள் பெருமையாக.
“அப்படியா? எந்த மாதிரியான ஆராய்ச்சி?”
“இருபது ஆண்டுகளாக நாங்கள் எல்லாவிதமான இரசாயனப்பொருட்களாலும் உயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பீடுசெய்து அந்த அறிவை அரசாங்கத்துடனும், வாடிக்கை நிறுவனங்களுடனும் பகிர்ந்துகொள்கிறோம். எங்களிடம் நேரடியாகப் பணிபுரியும் விஞ்ஞானிகள் பொதுமக்கள் நலம், மருத்துவம், சூழலியல், நச்சுப்பொருளியல், புள்ளியியல் என்று பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து வந்தவர்கள். பலவருஷ அனுபவம் சேர்த்தவர்கள். அவர்களைத்தவிர அந்தந்தத் துறைகளில் புகழ்பெற்ற நிபுணர்களின் உதவியையும் நாங்கள் அவ்வப்போது நாடுகிறோம்.”
இதை அவள் சொல்லிமுடிப்பதற்குள் உணவுத்தட்டு காலியாகிவிட்டது. சாமிக்கு ‘கெம்-சேஃப்’ நிறுவனத்தின் குறிக்கோளை அதன் வலைத்தளத்தில் படிப்பதுபோல் இருந்தது. அதனால் அதிகம் அக்கறை காட்டவில்லை.
“அது போகட்டும், அங்கே நீ என்ன செய்கிறாய்?” என்று நேராகக் கேட்டான்.
“பொதுத்தொடர்பு” என்கிற மொட்டையான பதில். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அவர்கள் வேலையின் விவரங்களை நெருங்கிய நண்பர்களிடம்கூட மூச்சுவிடக்கூடாது என்பது விதி. அதனால் அவன் பொதுத்தொடர்பின் விளக்கத்தை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவள்தான் எதையோ ஆழ்ந்து யோசிப்பதுபோல் தெரிந்தது.
அப்போது மஞ்சுளா ‘ஸ்டைரோNஃபாம்’ கோப்பைகளில் பாயசம் ஊற்றி நீண்ட மேஜையில் இன்னொரு வரிசையை ஏற்படுத்தினாள். அதற்காகக் காத்திருந்ததுபோல் மற்றவள், “எக்ஸ்க்யூஸ் மீ!” என்று எழுந்துசென்று ஒருகோப்பையை எடுத்தாள். சாமியின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஒருமடக்கில் பாயசத்தைக் குடித்துவிட்டு கோப்பையையும் தட்டையும் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு வேகமாக வெளியேறியபோது, கதவருகில் முன்புறம்மட்டும் நரைத்த ஒருமாமி அவளைப் பிடித்துக்கொண்டுவிட்டாள். ‘வேறுவழியில்லை’ என்கிற முகத்தைக்காட்டி அங்கேயே நின்று உரையாடினாள்.
சாமியும் எழுந்து தட்டைக் குப்பையில் தள்ளிவிட்டு சமையலறைக்குள் சென்றான். “நான் இனிமே கவனிச்சிக்கிறேன். உங்க ரெண்டுபேர்லே யாராவது சாப்பிடப்போகலாம்!” என்றான்.
“நீங்க முதல்லே போங்கோ!” என்று மஞ்சுளா சரவணப்ரியாவைக் கிளப்பினாள். அவள் ஒருதட்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
சாமி, “மஞ்சுளா! கதவு பக்கத்திலே நீலசட்டை, கறுப்பு ஸ்கர்ட்லே ஒருத்தி பேசிண்டிருக்காளே, அவ யார்னு தெரியுமா?” என்று கேட்டான்.
வேலையை நிறுத்திவிட்டு பார்வையை மஞ்சுளா அந்ததிசையில் ஓடவிட்டாள். “மாதவி ரங்கனாதன். ஃப்ரான்க்லின்லே இருந்தா. ஒருமாசம் முன்னாடிதான் அங்கேயிருந்து உங்களுக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிண்டு போயிருக்கா.”
“அப்படியா?”
“அவ ‘கெம்-சேஃப்’லே கம்யுனிகேஷன் டிரெக்டர். அறிமுகப்படுத்தணுமா?”
“அவசியமில்லை.”

மாமியிடமிருந்து ஒருவழியாக பிய்த்துக்கொண்டு, கோவிலிலிருந்து வெளியேவந்து, மூன்று கார்வரிசைகளைக் கடக்கும்போதே மாதவி கணவனை அழைத்தாள். “ரங்க்! எனக்கு அவசர வேலை. குழந்தைகளைக் கவனித்துக்கொள்! ஐந்துமணிக்குள் வந்துவிடுவேன்” என்றாள். அவள் உட்காருவதற்கு முன்பே ‘இன்ஃபினிடி’ உயிர்பெற்றது. நகர்ந்து அவளுடைய மனதின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது. அது நெடுஞ்சாலையில் ஊரின் மேற்கிலிருந்து கிழக்கே விமான நிலையத்தையும் தாண்டும்வரை, சாமி சொன்ன தகவல் மாதவியின் மனதை நிறைத்தது.
நெடுஞ்சாலையிலிருந்து வெளியேவந்து, சில குறுக்குத்தெருக்களைக் கடந்ததும் ‘கெம்-சேஃப்’ தலமையகம். சுற்றுச்சுவரின் நுழைவாயில் அவள் நீட்டிய அட்டையைப் படித்து கடந்துசெல்ல அனுமதி அளித்தது. முன்புறம் முழுவதும் காலி. இருந்தாலும், வழக்கமான இடத்தில் காரை நிறுத்தி பாட்டரியில் இயங்கும் பொம்மைபோல் கட்டடத்தைச்சுற்றி நடந்து இடது பக்கக்கதவை அடைந்தாள். சுவரில் பதித்த சாதனத்தில் அவள் ரகசிய எண்களைப் பதித்ததும் கதவு பீஈஈங் என்று வரவேற்றது. அதைத்திறந்து நுழைந்தவுடன் அலுவலக அறைகளின் வரிசை. முதலில் ப்ரெசிடென்ட் பட்லர். அடுத்த கதவில் ‘டாக்டர் மாதவி ‘மாட்’ ரங்கனாதன், உதவித்தலைவர்’ என்ற பளபளக்கும் உலோகப் பெயர்ப்பலகை. அதற்குப்பின் அவளுடைய உலகம்.
‘கெம்-சேஃப்’ நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையிலும் வௌ;வேறு வேதிப் பொருட்களின் ஆபத்துகளை அளவிடும் ஆராய்ச்சி. டெட்ராய்ட்டில் க்ரோமியம்-6 உணவுக்குழலில் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை என்று காட்டப்படுகிறது. டாம்பா அலுவலகம் ‘மாலதயான்’ பூச்சிகொல்லியால் உடலுக்கு சீர்கேடு அதிகமில்லை என்று நிரூபிக்கிறது. 1-ப்ரோமோப்ரோபேனின் விற்பனை குiயாமல் பாதுகாப்பது நாஷ்வில் அலுவலகத்தின் பல பொறுப்புகளில் ஒன்று.
மாதவிக்கு முன்னாலிருந்த கணினியில் 1-ப்ரோமோப்ரோபேன் தலைப்பில் எத்தனையோ கோப்புகள். அதைத் தயாரிக்கும் மோனார்க்கோ கம்பெனியிலிருந்து சமீபத்தில் வந்த தொடர்புகளைக் கவனமாகப் படித்தாள். ‘மார்க்ஸ் க்ளீனிங் சர்வீஸ_’க்கு எதிராக அதன் தொழிலாளர்கள் சமீபத்தில் தொடுத்த வழக்கு அவர்களுக்குக் கவலை தந்ததாகத் தெரிந்தது. அந்த வழக்கில் மார்க்ஸ் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் சாட்சிசொல்ல ‘கெம்-சேஃப்’ அழைக்கப்படும் என்பதால் 1-ப்ரோமோப்ரோபேன் உடலில் ஏற்படுத்துவதாக சொல்லப்படும் மாறுபாடுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்ற அறிக்கையை தன்னுடன் பணியாற்றும் விஞ்ஞானிகள் துணையுடன் அவள் ஏற்கனவே தயாரித்திருந்தாள். ஆனால், அது வீண் என்று தோன்றுகிறது. சாமி கொடுத்த தகவலின்படி, ஒரு தொழிற்சாலையின் காற்றில் பரிவியிருக்கும் 1-ப்ரோமோப்ரோபேனையும், அதனால் அங்கே பணிசெய்கிறவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளையும் கட்டுக்கோப்பாக அளந்து, அவற்றின் முடிபுகளை ‘கெமிகல் ரிசர்ச் இன் டாக்சிகாலஜி’ போன்ற தரமான சஞ்சிகையில் சரவணப்ரியா விரைவில் வெளியிடுவாள் என்று எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட கனமான ஆராய்ச்சிக்கட்டுரையைக் காட்டி எதிர்க்கட்சி வக்கீல்கள் நீதிபதியைத் தங்கள் பக்கம் சாய்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னொருமுறை வேறொரு கரைப்பானின் நச்சுக்குணங்களைப் பற்றி அவள் செய்த ஆராய்ச்சியால் செயற்கைஇழைத் தொழிலகங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் நஷ்டமென்று கேள்வி. இந்தமுறை ஏமாறக்கூடாது. அவள் எந்தத் தொழிற்சாலையில் இரத்தம் சேகரித்திருப்பாள்?
மோனார்க்கோவின் யூ.எஸ். வாடிக்கையாளர்களின் பட்டியலில் எவ்வளவோ தொழிற்சாலைகள். அவற்றில் புஷ் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் சுலபமாக உள்ளே நுழைந்துவிட முடியாது. தொழிலாளர்களின் இரத்தத்தை எடுத்திருந்தால் அது மோனார்க்கோவுக்கு உடனே தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட தகவல் எதுவும் அவள் கண்ணில் படவில்லை. அதனால், அமெரிக்காவில் சரவணப்ரியா தன் கைவரிசையைக் காட்டவில்லை என்பது நிச்சயம்.
உலகமயமான வணிக உறவுகளால் சீனா இருக்கவே இருக்கிறது. அங்கே இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் குறைவு. அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து எதையும் மறைக்கலாம். அந்தத் தொழிலாளிகளின் இரத்தம் சரவணப்ரியா போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம். ஜேசன் குழுவினர் சீனாவில் ‘கார்பன்-டை-சல்iஃபட்’ உபயோகிக்கும் ரேயான் தொழிற்சாலைக்கு ஒருவாரம் சென்று அதன் வௌ;வேறு இடங்களில் பணியாற்றுகிறவர்களின் இரத்தத்தையும், சிறுநீரையும் சேகரித்துவந்து விரிவான கட்டுரை வெளியிட்டது நினைவுக்கு வந்தது. இப்போதும் அதைச் செய்திருக்கலாம். மோனார்க்கோ கம்பெனியின் வணிகச் செயல்பாடுகளைப் படித்தபோது, ஷாங்காயில் இருந்த அவர்கள் கிளை நிப்பன் இரசாயன நிறுவனத்துடன் போட்டியிட முடியாமல் இரண்டாண்டுகளுக்குமுன் மூடப்பட்டது தெரிந்தது. அதனால் அந்நாட்டில் யார் 1-ப்ரோமோப்ரோபேன் பயன்படுத்திகிறார்கள் என உடனே அறிவதற்கில்லை.
அடுத்தபடி இந்தியா. அங்கே ‘ரீகல்-சால்வி’ற்கு நல்ல மார்க்கெட் என்று மோனார்க்கோவின் விற்பனை விவரங்களில் அறிந்தாள். சரவணப்ரியா இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்கு தெரிந்தவர்கள் மூலம் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்திருக்கலாம். அது சென்னையில் இருந்தால் வியப்பதற்கில்லை என்று அவள் சிந்தனைத்தொடர் முடிந்தபோது மனதில் ஒருதெளிவு. குளிர்ப்பெட்டியைத் திறந்து சர்க்கரை சேர்க்காத கோக-கோலாவை அனுபவித்துக் குடித்தாள். ஜேசனைப்போல் பல்கலைக் கழகங்களிலோ, பொதுத் துறையிலோ பணிசெய்பவர்கள் தாங்கள் செய்யும் ஆராய்ச்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகக் கர்வம் கொள்வது சரியில்லை. பணம் அவர்களுக்கு ஒருபொருட்டல்ல. ஆனால், ஆராய்ச்சி எப்படிப்பட்ட முடிவுகளைத் தரும் என்பதில் அவர்களுக்கும் அக்கறை உண்டு. அரசாங்க மானியத்தைப் பெறுவதற்கும், விஞ்ஞான உலகில் தங்கள்பெயரை நிலைநாட்டவும் ஆராய்ச்சியை ஒருகுறிப்பிட்ட வழியில் எடுத்துச்செல்கிறார்கள் என்பதை அவர்கள் மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட ஆராய்ச்சியின் விளைவுகள் பலருக்கு அசௌகரியமும் வேறுசிலருக்கு பலன்களும் ஏற்படுத்தும். இரண்டையும் ஒப்பிட்டு அதற்குத் தீர்ப்புவழங்க சிலர் அவசியம் என்று தன் தொழிலை நியாயப்படுத்தினாள்.
பிற்பகல் நான்குமணி. இந்தியாவில் அதிகாலை. யாரையும் கூப்பிட முடியாது என வீட்டிற்கு வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் ஐந்து வயது நீலாவும், இரண்டரை வயது ஷீலாவும் கூக்குரலோடு கட்டிக்கொண்டார்கள். அவளுக்கிருந்த உற்சாகத்தில், “இப்போது சமைக்க நேரமில்லை. ‘சக்-ஈ-சீஸ்’ போகலாமா?” என்று கேட்டு அவர்களின் கூச்சலை அதிகப்படுத்தினாள். அங்கே, பெண்கள் அப்பாவுடன் விளையாட்டு இயந்திரங்களில் கவனத்தையும் காசுகளையும் பறிகொடுத்தபோது, மாதவி ஒருமூலையில் அமர்ந்து அடுத்து செய்யவேண்டியதை யோசித்தாள். ஒருமணியில் மற்றவர்கள் களைத்துப்போய் அவளைத் தேடிவந்தார்கள்.
“மாம்! என் பரிசைப்பார்!” என்று ஷீலா முப்பதுசென்ட் கூடப்பெறாத ஒரு பிளாஸ்டிக் மாலையைக் காட்டினாள். இத்தனை நேரம் பணத்தை செலவழித்தற்குப் பரிசு.
“ப்ரெட்டி, நாளை நீ பள்ளிக்கு அணிந்து செல்லலாம்.”
பீட்ஸா சாப்பிடும்போது, “ரங்க்! குழந்தைகள் தூங்கினபிறகு ராத்ரிக்கு நீ ப்ளான் ஒண்ணும் வச்சுக்கலியே” என்றாள்.
“ஏன்?”
“மோனார்க்கோ சம்பந்தப்பட்ட ஒரு தகராறு. சரிசெய்ய வழி தெரிந்துவிட்டது. அதற்காக நான் மறுபடி ‘கெம்-சேஃப்’ போகணும். எப்போது திரும்புவேன் என்று தெரியாது.”
“பரவாயில்லை” என்ற அவன் பதிலில் ஏமாற்றம் ஒளிந்திருந்தாலும் அவள் செய்யக்கூடியது எதுவுமில்லை.
எட்டுமணிக்கு மறுபடி அலுவலக அறை.
மோனார்க்கோவின் ஹைதராபாத் கிளையை அழைத்தபோது அமெரிக்க உச்சரிப்பில் ஒரு சரளா.
“நான் யூ.எஸ். நிறுவனத்தின் ஆலோசகர். தென்னகத்தின் பிரதிநிதியுடன் தொடர்புகொள்ள வேண்டும்.”
அவள் தந்த எண்ணை அழைத்து தன்னை அறிமுகம ;செய்துகொண்டாள்.
“நான் சாப்பிடுகிறேனே. பிறகு கூப்பிடட்டுமா?”
“சென்னைலே ‘ரீகல்-சால்வ்’ உபயோகிக்கறது யார்னு சொல்லுங்க, அது போதும்” என்று தமிழுக்கு மாறினாள்.
“ஊருக்குள்ள ஒண்ணு. கொஞ்சம் தள்ளி ரெண்டு கம்பெனி.”
“ஊருக்குள்ள இருக்கறது…”
“ரைடர் சீட்ஸ்.”
“தாங்க்ஸ். மிச்சத்தை நல்லா சாப்பாடுங்க!”
“நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?”
“நீங்க செய்யலை, மிஸ்டர்! ரைடர் சீட்ஸ்லே ஒருத்தன். தொழிலாளிங்களோட ‘ப்ளட்’டை டெஸ்ட் பண்ண யாரையோ உள்ளே விட்டிருக்கான்.”
“மேனேஜர் கஜமுகன் விஷயம் தெரிஞ்சவர். சகாதேவன் இளிச்சவாயன், அவன்தான் செஞ்சிருப்பான்.”
“நான் மேனேஜரோட பேசறேன். அப்புறம் மேலிடத்திலே உங்களைப்பத்தி நல்ல வார்த்தை போடறேன்.”
“தாங்க்ஸ் மாடம்!”
கஜமுகனை அழைக்குமுன் அவர் சரித்திரத்தைத் தெரிந்துகொண்டாள்.
“மிஸ்டர் கஜமுகன்! நான் மாதவி ரங்கனாதன், மோனார்க்கோவின் வியாபாரத்திற்குத் துணைசெய்யும் ‘கெம்-சேஃபி’ன் கம்யுனிகேஷன் டிரெக்டர். ‘ரீகல்-சால்வி’ன் நான்குவருட வாடிக்கை என்பதால் உங்களுக்கு மூன்றுமாத சப்ளை இனாமாகத் தர விரும்புகிறோம். ஆட்சேபம் இல்லையே?
“எப்படி இருக்க முடியும், மிஸ்?”
“மாநிலஅரசு நெடுஞ்சாலைகளின் வேக உச்சவரம்பை நிர்ணயிக்க எங்கள் உதவியை நாடும்போது, நீங்கள் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் ஊர்திகளின் எண்ணிக்கை, அவற்றின் சராசரி வேகம், போக்குவரத்தின் தடங்கல் ஆகிவற்றின் உறவுகள் பற்றி செய்த ஆராய்ச்சியைத்தான் பயன்படுத்துகிறோம்.”
“அப்படியா?” என்றார் பெருமிதத்துடன்.
“அதை விரிவாக எங்கள் விருந்தினராக வந்து உரையாற்ற வேண்டும்.”
“எங்கே?”
“டாம்பாவில். உங்கள் குடும்பத்தையும் அழைத்துவரலாம். பக்கத்திலிருக்கும் டிஸ்னி வோர்ல்டிலும், யுனிவெர்சல் ஸ்டூடியோஸிலும் அவர்களுக்கு ஒருவாரம் போவதே தெரியாது.”
ஒரு நீண்ட மௌனம்.
“மிஸ்டர் கஜமுகன்! நீங்கள் தயங்குவது நியாயம்தான். நான் வெளிப்படையாகவே என் எதிர்பார்ப்புகளைச் சொல்லிவிடுகிறேன். ‘ரீகல்-சால்வ்’ பயன்படுத்துவதால் தொழிலாளிகளுக்கு பாதிப்பு அதிகமில்லை என்று நிரூபிப்பதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு நிபுணரை உங்கள் தொழிலகத்திற்கு அனுப்ப இருக்கிறோம். சமீபத்தில் அங்கே வந்தவர்களைப்போல எங்களுக்கு ஒருவாரம் வேண்டாம், ஒருநாள் இருந்தால் போதும்.”
வியப்பில் கஜமுகன் பதில்சொல்வில்லை.
“அவர்கள் அறிக்கையைப் படித்தீர்களா?”
“இன்னும் இல்லை. அதைப்பற்றிய ஒரு விஞ்ஞானக் கட்டுரை வெள்ளிதான் வந்தது.”
“உங்களுக்கு எதற்கு அந்தச் சிரமம்? எனக்கு அதை ஃபாக்ஸ் செய்தால் போதும். உங்கள் தொழிற்சாலை தடங்கலின்றி நடக்க வேண்டுமானால்…”
“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்!” என்று ஆர்வத்துடன் கேட்டார் கஜமுகன்.
“வான்டர்பில்ட்டில் உங்கள் தொடர்பு ஆள் யார்?”
“சரவணப்ரியா.” மாதவி எதிர்பார்த்த பதில்.
“அடுத்த திங்கள் காலை, நீங்கள் அவளுக்கொரு மின்-தபால் அனுப்பவேண்டும்.”

பட்லர், “மாட்! இந்த அவசரக் கூட்டத்திற்கு முக்கிய காரணம் இருந்தாக வேண்டும்” என்றார். திங்கள்காலை எட்டுமணிக்கு அவருடைய விசாலமான அறையின் ஒரு மூலையில் வட்டமேஜை ஒன்றைச் சுற்றி அவர், அவருடைய செக்ரடரி லின்டா, மற்றும் மாதவி மட்டும்தான். “உன்னைப் பார்த்தால் நீ நேற்றிரவு சரியாகத் தூங்கினதுபோல் தெரியவில்லையே” என்றும் சேர்த்துக்கொண்டார்.
“இரண்டிற்கும் ஒரே காரணம்தான், பாஸ்!” என்றாள் மாதவி. கஜமுகனுடன் பேசிமுடித்து அது தொடர்பான சிலவேலைகளைச் செய்து, வீட்டிற்குத் திரும்பி, தூங்கச்சென்றபோது பின்னிரவு. ஆனாலும் ஆறுமணிக்கு எழுந்து கவனமாகச்செய்த ஒப்பனையில் சோர்வை மறைத்திருந்தாள். “மோனார்க்கோ கெமிகல்ஸ் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று 1-ப்ரோமோப்ரோபேன். அதைப் பயன்படுத்தும் தொழிலகங்களின் காற்றில் அதற்கு உச்ச வரையறை நிர்ணயிக்க வேண்டுமென்று சிலர் ‘ஈபிஏ’வைக் கேட்டிருக்கிறார்கள். இப்போது வரம்பு எதுவும் கிடையாது.”
“அதனாலென்ன? ‘ஈபிஏ’ நம்கையில். புஷ் பதவியில் இருக்கும்வரை ஒரு கட்டுப்பாடும் ஏற்படாது. அதற்குப்பிறகும் நம்ம ஆள்தான் வருவான். ஹில்லரி க்ளின்டனும், ஓபாமாவும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகட்டும்.”
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் நம் நிறுவனத்தின் வெற்றிக்கு அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிருப்பதில்லை. விஞ்ஞானத்தையும் துணைக்கு வைத்திருக்கிறோம்.”
சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சயின்டிஃபிக் கம்யுனிகேஷன் துறையில் பிஎச்.டி. பட்டம்பெற்ற மாதவியின் புத்திகூர்மையில் பட்லருக்கு அளவுகடந்த நம்பிக்கை. பத்து ஆண்டுகளுக்குமுன் நான்குபேர்களுடன் அவர் தொடங்கிய ‘கெம்-சேஃப்’ நிறுவனத்திற்கு அதைப் பிரபலப்படுத்த ஒரு ஆள் தேவைப்பட்டது. ஐந்து தேர்வர்களில் அவளும் ஒருத்தி. பதினைந்து நிமிடம் பேசுவதற்குள் அவருக்கு அவளைப் பிடித்துவிட்டது. அந்தக் குறுகிய காலத்தில் ‘கெம்-சேஃப்’ பலமடங்கு வளர்ந்திருந்தது. ஐம்பதாயிரம் டாலரில் ஆரம்பித்த மாதவியின் சம்பளமும் இப்போது மூன்றுமடங்கையும் தாண்டியிருந்தது. பிரச்சினைகளை முளையில் இருக்கும்போதே கிள்ளுவது அவள் தனிச்சிறப்பு. மாறான கருத்துடையவர்களை மடக்க அவர்களைவிட ஒருதப்படி முன்னால் வைப்பது அவள் வெற்றியின் ரகசியம்.
“ஆரம்பத்திலிருந்து சொல்!”
“ஜேசன் குழுவினர் 1-ப்ரோமோப்ரோபேன் கலந்த காற்றை சுவாசிப்பதால் எலிகளுக்கு நரம்புக்குறைபாடு ஏற்படுகிறதெனக் காட்டியிருக்கிறார்கள்.”
“எலிகளுக்குத்தானே” என்றார் அலட்சியமாக. “சென்றமாதம் நடந்த டாக்சிகாலஜி கூட்டத்தில் அதைப்பற்றி அவர்கள் ஒரு போஸ்டர் செய்தார்கள். நானும் பார்த்தேன். புதிதாக ஒன்றுமில்லை. 1-ப்ரோமோப்ரோபேனை மிகமிக அதிக அளவில் சுவாசிக்கும் எலிகளுக்கு நரம்புநோய்கள் வரலாமென்பது பல ஆண்டுகளாகத் தெரிந்ததுதான்.”
“அதுமட்டுமல்ல, அதன் பாதிப்பை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அளக்கவும் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். இரத்தம், சிறுநீர் இரண்டிலும் ப்ரோமின் அதிகரிப்பதால் பாதகம் ஏற்படுகிறது, அந்த ப்ரோமின் சாப்பாட்டிலிருந்து குடிக்கும் தண்ணீர்வரை பலவழிகளில் வந்திருக்கலாம், 1-ப்ரோமோப்ரோபேன் மூலமாகத்தான் வந்தது என்பது நிச்சயமில்லை என்கிற சந்தேகத்தைப் பல ஆண்டுகளாகக் கிளப்பியிருந்தோம். இனி அப்படிச் செய்யமுடியாது. வேறு ஏதாவது யோசிக்கவேண்டும்.”
“அவர்கள் எப்படி கணிக்கிறார்களாம்?
“நேற்று வான்டர்பில்ட்டின் வலைத்தளத்தில் தேடினேன். சென்றவாரம் அதைப்பற்றி ஜேசன் மருத்துவமையத்தில் கொடுத்த ஆராய்ச்சி உரையின் சுருக்கம் கிடைத்தது. இரத்தத்தில் ப்ரோபில்சிஸ்டின், சிறுநீரில் அசீடில்ப்ரோபில்சிஸ்டீன் இரண்டையும் ‘பயோமார்க்கரா’கப் பயன்படுத்துகிறார்கள்.”
பட்லர் யோசித்தார். “இன்னும் எதாவது இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீ இவ்வளவு கவலைப்படமாட்டாய்.”
“இந்தியாவிற்குச் சென்று ‘ரீகல்-சால்வ்’ பயன்படுத்தும் தொழிலாளர்களின் இரத்தத்தையும் சிறுநீரையும் எடுத்துவந்து ‘அனலைஸ்’ செய்திருக்கிறார்கள். ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. நரம்புகளின் பாதிப்பை தொழிலாளர்களின் ‘பயோமார்க்கர்’களோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது என நிரூபிப்பார்கள். அந்தக் கண்டுபிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டால் தொழிற்சாலைகளில் 1-ப்ரோமோப்ரோபேன் காற்றின் அளவு 50 பிபிஎம்மாகக் குறைக்க நேரிடும். அப்படிச் செய்வதில் அவற்றின் உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட செலவாகும். வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. இதைக் காரணமாகவைத்து வெளியேறும் காற்றிலிருந்து அதைப் பிரித்தெடுத்து மறுபடி பயன்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். மோனார்க்கோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை என்னாவது?”
“நீ சொல்வது சரி. மோனார்க்கோ நம்முடைய மிகமுக்கியமான வாடிக்கைகளில் ஒன்று.”
“இவ்வளவும் நேற்று எனக்குத் தெரிந்தது.” எப்படியென்று அவர் கேட்கவில்லை. அரசாங்க ஆதரவில் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஆராய்ச்சியின் விவரங்களைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு புஷ் அரசு உரிமை தந்திருக்கிறது. “தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு இன்னுமொரு காரணம். 1-ப்ரோமோப்ரோபேன் பற்றிய ஆய்வு வெறும் முன்னுரைதான். அத்துடன் வேறுசில இரசாயனப் பொருட்களின் விளைவுகளை விரிவாக ஆராய அரசின் மானியத்திற்கு வான்டர்பில்ட் விஞ்ஞானிகள் விண்ணப்பம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த இரசாயனப் பொருட்கள் எவை எவையென்று தெரியவில்லை. ஆனால் அவற்றில் பல நம் ஆதரவாளர்களின் தயாரிப்புகளாக இருக்குமென்பதில் துளியும் சந்தேகமில்லை. மானியத்தைப் பற்றி முடிவெடுக்க பரிசீலனைக்குழு அடுத்த திங்கள் வருகிறது.”
“அந்தக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் எனக்குத் தேவை, லின்டா!” என்று அவளைப் பார்த்துச் சொன்னார். “அவர்களில் நமக்கு வேண்டியவர்கள் யாராவது நிச்சயமாக இருப்பார்கள். மாட்! நீ மேலே சொல்!”
“ஜேசன் எந்தத் தொழிற்சாலைக்குச் சென்றான் என்று தேடினேன். சென்னையில் ஊர்திகளுக்கு இருக்கைகள் தயாரிக்குமிடத்தில் ‘ரீகல்-சால்வ்’ அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.”
“பெயர்?”
“ரைடர் சீட்ஸ். உடனே அதன் மேனேஜரை அழைத்தேன். ஜேசன் அங்கேதான் சென்று சாம்பிள் எடுத்துவந்திருக்கிறான். அதன் மேனேஜரிடம் ‘ஜேசன் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டால் தொழிலாளர்கள் வழக்கு தொடுப்பார்கள். இதுபோல் யூ.எஸ்.ஸில் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தமில்லாத எல்லா நோய்களுக்கும் இதுதான் காரணம் என்று தொழிலாளர்களின் வக்கீல்கள் கேட்கும் ஈட்டுத்தொகைகளைக் கொடுத்துக் கட்டுப்படியாகாமல் ஒரு தொழிற்சாலையை மூடப்போகிறார்கள்’ என்று சொன்னேன்.”
“பயத்தில் வழிக்கு வந்திருப்பானே.”
“வந்து, என்ன செய்யவேண்டுமென்று கேட்டான். ரைடர் சீட்ஸில் சேகரித்த விவரங்களை வெளியிடும் அனுமதியை திரும்பப்பெற ஒத்துக்கொண்டான். பிறகு, நம்முடைய ஆள் ஒருவனை அவனிடம் உடனே அனுப்ப வேண்டும்.”
“மும்பையில் இருக்கும் நம் பிரதிநிதி கில்மர் சரியான ஆள்.”
“கில்மர் சென்னை சென்று அந்த மேனேஜரை சந்தித்தால் தொழிலாளிகளின் உடல்நிலையைச் சோதிக்க அவன் தேவையான ஏற்பாடுகள் செய்வான்.”
“அவர்களிடம் குறைபாடு இருந்தால் அது வெளிப்படாதா?”
“சந்தேகமில்லாமல். ஆனால் அது 1-ப்ரோமோப்ரோபேனால் வந்தது என்று எப்படிச் சொல்லமுடியும்? அந்தத் தொழிற்சாலை அமைந்திருக்கும் இடத்தைக் கூக்கிலில் ஆராய்ந்தபோது அதற்கு எதிரிலேயே மாநில அரசின் பேருந்துகளுக்கான பணிமனை ஒன்று இருப்பது தெரியவந்தது. அதிலிருந்து வெளியேறும் புகையால் இருக்கலாம். எல்லோரும் ஒரே கான்டீனில்தான் சாப்பிடுகிறார்கள். அந்த உணவின் தரம் எப்படியோ? சென்னைக் காற்றில் இல்லாத நச்சுப்பொருட்களா? அவர்கள் போக்குவரத்தில் அந்தக்காற்றை சுவாசித்துதானே தினம் வேலைக்கு வரவேண்டும்? இவற்றில் எதுவேண்டுமானாலும் அவர்களுக்கு நரம்புநோயைத் தரலாம்.”
“ப்ரில்லியன்ட். எல்லாம் யோசித்து வைத்திருக்கிறாய்.”
“இன்னும் ஒன்று. இந்த முடிபுகளைவைத்து நாமே ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்போகிறோம். அதில் ரைடர் சீட்ஸ் மேனேஜரின் பெயரை சேர்ப்பதாக வாக்களித்திருக்கிறேன்.”
“அத்துடன் அவனுக்கு இன்னும்சில பரிசுகளும் தரலாம். ஜேசன் இன்னொரு தொழிற்சாலையைத் தேடிப்பிடிக்க சிலவருஷங்கள் ஆகும்” என்று பட்லர் திருப்திப்பட்டார். “லின்டா! இதற்கான மொத்த செலவுகளில் நம் பங்கையும் சேர்த்து மோனார்க்கோவுக்கு பில் அனுப்பிவிடு!”

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்