பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

அமர்நாத்


7. வின்டர் ப்ரேக்

சென்ற வெள்ளிக்கிழமை மாலை, தன்னைத்தவிர வீட்டில் இன்னும் யாரோ இருந்ததுபோன்ற பிரமை பரிமளாவுக்கு. இந்த வெள்ளிக்கிழமை நிஜமாகவே அவளுடன் விட்னி ஜோன்ஸ். மிஸ் ஜோன்ஸ் பெண்கள் விளையாட்டுகளுக்கான கோச். கூடைப்பந்து, சாஃப்ட்-பால் தவிர ஊக்குவிக்கும் பெண்களை மேய்ப்பதும் அவள் பொறுப்பு. அவளுக்கே இரண்டு பெண்கள். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது தென் கலிNஃபார்னியாவில்.
வகுப்புகள் முடிந்ததும் பள்ளியிலிருந்து அவள் தன்காரில் பரிமளாவைத் தொடர்ந்து வந்தாள். அவளுடன் ஒரு துணிப்பெட்டி, ஒரு ஒப்பனைப்பெட்டி, அவ்வளவுதான். இரண்டும் ஒரே அளவு, எது எதுவென்று சொல்வதற்கில்லை. இந்த வருகை திங்களன்றே முடிவானது.
அன்று பரிமளா வீட்டிற்குச்செல்ல காருக்கருகில் வந்தபோது விட்னி, “பரி! நில்! நில்!” என்று கத்திக்கொண்டே அவளைநோக்கி ஓடிவந்தாள்.
“என்ன அவசரம்?”
“எல்லாவழிகளையும் யோசித்துவிட்டேன், பரி! ஒன்றும் ஒத்துவரவில்லை. உன்னிடம் உதவி கேட்பதொன்றுதான் பாக்கி” என்று ஆரம்பித்தாள்.
“எதற்கு?”
“நான் தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கிறேன். உன்வீட்டில் ஒருபடுக்கையறை உபயோகப்படாமல் கிடக்கிறதே. அதை வாடகைக்குவிட முடியுமா?” விட்னி பரிமளாவின் வீட்டிற்கு ஒருசில தடவை வந்திருக்கிறாள், அதிகம் உபயோகத்தில் இல்லாத கோடி அறையையும் பார்த்திருக்கிறாள்.
எதிர்பாராத இந்த விண்ணப்பத்தால் பரிமளா விழித்தாள். அவளைக்கவர விட்னி, “என்னால் மாதம் எண்ணூறு டாலர் தரமுடியும்” என்று சேர்த்தாள்.
அன்று பிற்பகல் ஆசிரியர்கள் யுனியனிலிருந்து வந்த செய்தி பரிமளாவை யோசிக்கவைத்தது. ‘வரிஅதிகரிப்பை மக்கள் ஏற்காததால் மாநில செலவுகளை வெட்டவேண்டிய கட்டாயம். ஆசிரியர்களில் பதினைந்து சதம் பேரை வேலையிலிருந்து விலக்கலாம், அல்லது ஒவ்வொருவர் சம்பளத்திலும் பதினைந்துசதம் குறைக்கலாம்.’ பரிமளாவைப் பொறுத்தவரையில் பின்னது சிலாக்கியம். வரப்போகும் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒருவாய்ப்பு அதுவாகவே தேடிவந்திருக்கிறது. அத்துடன் அனிடா இரண்டு நாட்கள் தங்கிச் சென்றதிலிருந்து இன்னொரு நபர் வீட்டில் இருந்தால் தவறில்லைபோல் தோன்றியது. தாற்காலிக ஏற்பாடாக ஆரம்பித்து, போகப்போக முடிவுசெய்யலாம்.
பரிமளாவின் இரக்கத்தை சம்பாதிக்க விட்னி தொடர்ந்தாள். “நல்லவேளை! நீ திருமணமே செய்துகொள்ளவில்லை. இதுபோன்ற ஏமாற்றம் உனக்கு வராது. எங்கள் திருமணத்தின் வெள்ளிவிழாவைக் கொண்டாட என் கணவனுக்குத் தெரியாமல் ஒரு க்ரூஸ் ஏற்பாடு செய்தேன். ‘வின்டர் ப்ரேக்’கின்போது மெக்சிகோவை அடுத்த தீவுகளுக்குச் செல்லும் ஏழுநாள் பயணம். டிக்கெட் வாங்கியபிறகு அவனிடம் காட்டி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்த திட்டம். அதற்குள் எனக்கு அவன் தந்தான் ஆச்சரியம். இன்னொரு பெண்ணிற்காக என்னை வீட்டைவிட்டுத் துரத்துகிறான்.”
“ஐ’ம் சாரி, விட்னி!”
“பரவாயில்லை, சமாளித்துக்கொள்வேன். எனக்குத்தான் வேலையிருக்கிறதே. தங்குவதற்குத்தான் சரியான இடமில்லை.”
“நீ வரலாம்!”
“தாங்க்ஸ், பரி! தாங்க்ஸ், பரி!” என்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“வரும் வெள்ளிக்கிழமைக்குள் வீட்டை நாங்கள் பாகப்பிரிவினை செய்துவிடுவோம். உடனே தேவைப்படாத என் சாமான்களை வாடகை-அறையில் வைக்கப்போகிறேன். அன்று வந்தால் உனக்கு இடைஞ்சலாக இராதே?”
“இருக்காது.”
“இன்னொன்று, நீ க்ரூஸ் போயிருக்கிறாயா?”
“டிவியில் பார்த்ததுதான்.”
“நான் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டை ரத்துசெய்தால் கொடுத்த பணத்தில் கால்பங்குகூடத் திரும்பிவராது. நீயும் என்னுடன் வாயேன்! பள்ளிக்குத்தான் அப்போது விடுமுறையாயிற்றே.”
“யோசிக்கிறேன்.”
“யோசிக்க என்ன இருக்கிறது? ஒருவாரம் வேளாவேளைக்குச் சாப்பிட்டு கவலையில்லாமல் தீவுகளைச் சுற்றிப்பார்க்கலாம்.”
அடுத்துவந்த நாட்கள் சலனமின்றி நகர்ந்தன.
வீட்டிற்குள்வந்து கோடி அறைக்குள் புகுந்ததுதான், பிறகு விட்னி வெளியே வரவில்லை. பரிமளா சமைத்துமுடிக்க ஆறரைக்கு மேலாகிவிட்டது. விட்னியையும் சாப்பிடக் கூப்பிடுவதா வேண்டாமா என்று மனதுக்குள் விவாதித்தபோது வாசல்மணி அடித்தது. யாராக இருக்கும்? அலிசன் இந்த நேரத்தில் வரமாட்டாளே. பள்ளிக்கூட நிதிக்காக சோளப்பொரியோ, அலங்காரக் காகிதமோ விற்பனை செய்ய குழந்தைகள் யாராவது வந்திருக்கலாம். வாசல்விளக்கைப் போட்டு, கதவின் துளைவழியாகப் பார்த்தபோது நன்கு உடைதரித்த ஒருஆண். கதவைத் திறந்தாள். வீட்டுப்பாதையில் விட்னியின் காருக்குப் பின்னால் ஒருசிவப்பு மியாடா.
ஆண்களுக்கென்று வியாபார நிறுவனங்கள் தீர்மானித்த வாசனை அவனிடமிருந்து கிளம்பி அவளையும் தாண்டி வீட்டிற்குள் நுழையப்பார்த்தது. அப்படிப்பட்ட ஒருவாசம் அவள் இல்லத்தை அதுவரை தாக்கியதில்லை. கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை. அதன் பௌடர் வாசனைதான் அவள் அறிந்தது.
அவன் எதுவிற்றாலும் தனக்கு அது தேவையில்லை என மறுக்கவோ, அரசியல் பிரச்சாரகனாக இருந்தால் யாருக்கு ஓட்டுப்போடுவதெனத் தீர்மானித்துவிட்டேன் என்று சொல்லவோ தயாரானாள்.
“ஹாய்! மன்னிக்கவும். விட்னி ஜோன்ஸ் இங்கே இருக்கிறாளா?”
சிலமணிகளுக்குமுன் அவள் வந்தது உனக்கு எப்படித் தெரிந்ததென பரிமளா ஆச்சரியப்படுவதற்குள் விட்னியே குரல்கேட்டு ஓடிவந்து பரிமளாவைப் பின்னுக்குத் தள்ளினாள். உடலோடு ஒட்டிய வெறும் ஸ்லிப்.
“என் புதிய நண்பன் ரெட். சொல்ல மறந்துவிட்டேன்.”
“பரவாயில்லை” என்ற பரிமளாவின் முனகலை அனுமதியாக அர்த்தம்செய்து ரெட் வீட்டினுள் காலடிவைத்தான்.
“விட்! உன் சினேகிதிக்கு மறுப்பு இல்லையென்றால் நீ இப்படியே இருக்கலாம்” என்று ரெட் அவளை விழிகளால் விழுங்கினான். விட்னி அவனைக் குறும்புடன் பார்த்தாள். அவள் மீதி அலங்காரத்தை முடிக்கும்வரை வரவேற்பறையில் ரெட். அவனுடன் என்னபேசுவதென்று தெரியாமல் பரிமளா சமையலறைக் காரியங்களில் மனதைப்பதித்தாள்.
“நாங்கள் கிளம்புகிறோம். நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம்!”
விட்னியைக் ‘கோச்’களுக்கான ஜாக்சூட்டில் பார்த்துப்பழகிய பரிமளாவுக்கு உடலோடு ஒட்டிய முழங்கால்கள் தெரிந்த மாலைஉடையில் அவள் பேரழகியாகத் தோன்றினாள். பதினைந்து வருஷங்களுக்குமுன் தான் எப்படி இருந்தோமென நினைத்தபோது பொறாமையாகக்கூட இருந்தது. சாப்பிடும்போதும், பிறகு படிக்கும்போதும் அதில் மனம் ஈடுபடாமல் அலைபாய்ந்தது. ஏனென்று தெரியவில்லை. எப்போதும் புதியமாற்றம் முதலில் திடுக்கிடவைக்கும். பிறகு போகப்போக பழகிவிடும் என்று சமாதானம் செய்துகொண்டாள். பத்தரைக்கு படுக்கச்செல்லும்வரை விட்னி வராததால் வாசல்விளக்கை அணைக்கவில்லை. அவளிடம் சாவி கொடுத்தது நல்லதாகப் போயிற்று. படுக்கையிலும் ஆழமில்லாத தூக்கம். “சீ! போக்கிரி ராஜா” என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வசவு அவளை எழுப்பியது. நேரம் தெரியவில்லை. விட்னியின் குரலில் சிலிர்ப்பு, அது என்னவோ செய்தது. இருவர் கோடி அறைக்குள் சென்று கதவைச் சாத்தும் சத்தம். ஏதோவொரு சுலோகத்தை முணுமுணுப்பதுபோல் சத்தமாக உச்சரித்தாள். பக்கத்து அறையிலிருந்து கட்டிலின் க்ரீச்சும், சல்லாபச் சிரிப்பொலிகளும் அவள் காதில் விழவில்லை.

மறுநாள் காலையில் பரிமளா சமையலறை ஜன்னலின் திரையை நகர்த்தினாள். வெளியில் மியாடா இல்லை. காரியம் முடிந்ததும் ரெட் இடத்தைக் காலிசெய்துவிட்டான் போலிருக்கிறது. ஆழமற்ற தூக்கத்தால் அயர்ச்சி. தினப்படிக்கும் அதிகமாகவே காபி தயாரித்தாள்.
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து இரண்டு கோப்பைகள் குடித்துமுடித்ததும் பரிமளாவுக்கு சிந்திக்கும் சக்தி திரும்பியது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு அந்தத் திசையில் தலையைத் திருப்பினாள். விட்னி நிதானமாக நிர்வாணமாக நடந்துவந்தாள். பரிமளா முதல்முறை உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றபோது உடைமாற்றிக்கொள்ளும் அறையில் பெண்கள் குளித்துவிட்டு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உலாவியதைப் பார்த்து சிறுஅதிர்ச்சி. அந்தக்கோலத்தில் பெண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக வீட்டிலேயே உடற்பயிற்சிக்கான சைக்கிளை வாங்கிவைத்தாள். இப்போது மனம் தடுத்தாலும் பார்வை விட்னியின் கழுத்துக்குக்கீழே இறங்கியது. ஏகப்பட்ட வளைவுகள். கோச் என்பதற்காக உட்கார்ந்த இடத்திலிருந்து பெண்களை விரட்டாமல் அவர்களுடன் சேர்ந்து விட்னியும் விளையாடுவாள் என்று கேள்வி. அதனால் அவசியத்தைத்தவிர சதை எங்கும் தொங்கவில்லை. அவள் கணவன் அவளை விட்டுச்சென்றதுதான் ஆச்சரியம், இத்தனை விரைவாக இன்னொரு காதலன் கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை.
“நீ துண்டு எடுத்துவர மறந்திருந்தால் உன் அறையின் அலமாரியின் மேல்தட்டில் இருக்கும்.”
விட்னி தன் நிலையை உணர்ந்து, “ஐ’ம் சாரி” என்றாள்.

திங்கள் நண்பகல். சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி அனிடா நடந்தாள். சரித்திர ஆசிரியருடன் கொலம்பஸ் செய்த மாபாதகங்களை விவாதிக்க சில அதிகப்படி நிமிடங்கள். மிஸ் பரியின் வீட்டிற்குச்சென்று திரும்பிய ஒருவாரத்தில் அவள் நான்காண்டுகள் முதிர்ந்ததுபோல் தோன்றியது. நாட்கள் சந்தோஷமாகக் கடந்துசென்றன. பின்தங்கிய பாடங்களில் மனதைச் செலுத்தியபோது புதிதாக படிக்கக் கற்றுக்கொண்ட குழந்தையின் ஆர்வம். க்ரிஸ்ஸிக்கும் அவள் கணவனுக்கும் தாற்காலிக சமாதானம். விட்னி ஜோன்ஸ் தன் வீட்டில் வாடகைக்குத் தங்கப்போகிறாள் என்று மிஸ் பரி தெரிவித்தபோது, அவர்களுக்குள் ஒத்துப்போகுமா என்ற சந்தேகம் எழுந்தாலும் அவள் பணக்கவலை குறையலாமென்ற திருப்தி. ஆனால், மிஸ் பரியின் முகத்தில் சென்ற வாரத்திலிருந்த தெளிவு இன்று இல்லை. வெள்ளிக்கிழமை நடத்திய பாடத்தையே இன்னொருமுறை நடத்தத் தொடங்கினாள். ஆனந்த் நாசுக்காக அதைச் சுட்டியபோதுதான் அவளுக்கு உறைத்தது. மிஸ் பரியின் புதிய பிரச்சினை என்னவாக இருக்கும்?
பள்ளியில் பணியாற்றும் பரிசாரகர்கள் இறைச்சி கலவாத உணவு ஒன்று இருப்பதையே அறியாதவர்கள். வீகனைப்பற்றி எங்கே கேள்விப்பட்டிருக்கப் போகிறார்கள்? அதனால் வீட்டில் தயாரித்த சான்ட்விச்சும், ஒரு ஆப்பிலும் கொண்ட உணவுப்பையுடன் அனிடா சாப்பாட்டுக்கூடத்தில் நுழைந்தாள். எங்கே உட்காரலாமென்று கண்களை ஓட்டினாள். ஒருமூலையில் எட்டுபேர்களுக்கான நீண்ட மேஜை. அதில் ஒவ்வொரு நாளும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் சாப்பிட வேண்டும் என்றொரு நியதி. மற்ற மேஜைகள் நிறைந்தபின்புதான் அதில் கும்பல் சேரும். இன்றும் அங்குதான் காலியிடம். பரிமளாவும், மூன்று பன்னிரண்டாம் வகுப்புப் பையன்களும்.
“ஹாய் மிஸ் பரி! நான் உட்காரலாமா?”
“ப்ளீஸ், அனிடா!”
பரிமளா ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்தாள். இப்போது பாதாம் பருப்புகளையும் ஆரஞ்சு சுளைகளையும் ஒவ்வொன்றாக மென்றுகொண்டிருந்தாள்.
“எனக்கு அனிடா எந்தக் கல்லூரி செல்கிறாளென்று தெரியும். நீங்களெல்லாம்?” என்று பார்வையைச் சுழலவிட்டாள்.
பெர்க்கிலி… ஸ்டான்Nஃபார்ட்… கோர்னேல்.
“கோர்னேலா? அங்கேதான் நான் படித்தேன். உனக்கு நிச்சயம் பிடிக்கும். வீட்டிலிருந்து தொலைவில் இருக்கிறது என்பதுதான் குறை. உன் பெற்றோர்கள் உன்னை அடிக்கடி வந்து பார்க்கமுடியாது.”
“அதற்குத்தானே அவன் அங்கே போகிறான்” என்று குட்டை உடைத்தான் இன்னொருவன்.
அன்றைய மதியஉணவு பீட்ஸா. அதை வேகமாக வயிற்றில்தள்ளி அதற்காகக் காத்திருந்ததுபோல் பையன்கள் இடத்தைக் காலிசெய்தார்கள்.
அவர்கள் அகன்றதும், “நாலுமாதம் முன்னால் புத்திவந்திருந்தால் நானும் கால்டெக் என்று பெருமையாகச் சொல்லியிருக்கலாம். சான்ஹொசே ஸ்டேட்தான்” என்றாள் அனிடா தொங்கிய குரலில்.
“அதனாலென்ன? உனக்கு அதிகம் செலவிருக்காது. கவனம்வைத்தால் மேற்படிப்பிற்கு கால்டெக் போக வாய்ப்பு கிடைக்கும்.”
சாப்பிட்டு முடித்ததும் அனிடா எழுந்திருக்கவில்லை. அருகிலிருந்து பார்த்தபோது மிஸ் பரியின் முகத்தில் கவலையைவிட வருத்தம்தான் தனித்துத் தெரிந்தது.
“அனிடா! நீ வகுப்பிற்குப் போகவில்லையா?”
“அடுத்தது எனக்கு ஸ்டடி-ஹால், பரி! நான் சீனியர். போகாவிட்டாலும் யாரும் தட்டிக்கேட்க முடியாது.”
அனிடாவுக்கு பரிமளாவின் வருத்தத்திற்கு என்ன காரணமென்று தெரிந்துகொள்ள ஆவல். எப்படிக் கேட்பதென்று யோசித்தாள்.
அதற்குள், பரிமளாவே, “அனிடா! எனக்கொரு உதவி வேண்டும்” என்றாள்.
“எதுவானாலும், பரி!”
“நீ ‘வின்டர் ப்ரேக்’கின்போது ஊரில் இருப்பாயா?”
“நான் எங்கும் செல்வதாக இல்லை.”
“நான் அடுத்தவாரம் மிஸ் விட்னியுடன் க்ருஸ் போகிறேன். நீ தங்கியிருந்த அறையின் ஜன்னலின் கண்ணாடியில் ஒருவிரிசல். அதைச் சரிசெய்ய செவ்வாய் பிற்பகலில் ஒருவன் வருவான். அந்த நேரத்தில் நீ என்வீட்டில் இருக்கமுடியுமா?”
“நிச்சயமாக.”
“தாங்க்ஸ், அனிடா! நம்பகமான ஆள். இப்போதுவிட்டால் அடுத்தமாதம்தான் அவனைப் பிடிக்கமுடியும்” என்று பரிமளா காரணம் சொன்னாள். “நாளை வீட்டின் சாவியை மறக்காமல் தருகிறேன். பாதுகாவல் கண்காணிப்பின் எண்கள் 9345. அதையும் ஞாபகம் வைத்துக்கொள்!”
“பரி! எனக்கு வெகுநாட்களாக எல்லா நண்பர்களையும் அழைத்து வீட்டை அதிரச்செய்து தெருவையே கலக்கவைக்கும் ஒரு ‘வைல்ட் பார்ட்டி’ கொடுக்க வேண்டுமென்று ஆசை. அதற்கு உன் வீட்டைப் பயன்படுத்தப் போகிறேன்” என்றாள் அனிடா. அந்த பயமுறுத்தலையும் அதில் ஒளிந்திருந்த வேடிக்கை தொனியையும் பரிமளா கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் எண்ணங்கள் வேறெங்கோ.
அனிடாவே பேச்சைத் தொடரவேண்டியிருந்தது. “மைக்கிடமிருந்து தப்ப நான் உன்வீட்டில் ஒளிந்தது அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே உறவைத் துண்டித்துவிட்டான்.”
அனிடாவின் குரலில் ஏமாற்றமில்லை, எதிர்பார்த்தது நடந்துவிட்ட நிம்மதிதான். இருந்தாலும் பரிமளா, “அவன் போனால் போகிறான். காத்திருந்தால் உன் அறிவை மதிக்கும் ஒருநண்பன் நிச்சயம் கிடைப்பான்” என்று தேற்றினாள்.
“பரி! உன்னைப் பார்க்கும்போது, நான்தான் உனக்கு ஆறுதல்சொல்ல வேண்டுமென நினைக்கிறேன்.”
பரிமாளா ஆதரவுதேடுவதுபோல் அனிடாவைப் பார்த்தாள்.
“பரி! எதுவானாலும் நீ என்னிடம் தாராளமாகச் சொல்லலாம்!”
சிறிய மௌனத்திற்குப்பின் பரிமளா, “பாத்திரத்தின் சூட்டிற்குப் பயந்து நெருப்பில் குதித்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். “விட்னியின்மேல் எனக்கு எந்தவிதமான வெறுப்பும், பொறாமையும் இல்லை. அவள் உலகம் வேறு. அதில் நுழைய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆண்பெண் உறவுகளைப் புள்ளிவிவரங்களாகவும், மனித உறுப்புகளை மருத்துவ நூலின் படங்களாகவும் பார்க்க நான் பலகாலமாக என்னைப் பழக்கிக்கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் எதை இழந்தேன் என்பதை இந்த இரண்டு நாட்களில் பலமுறை ஞாபகப்படுத்திவிட்டாள். நான் என்ன செய்யட்டும்?”
மிஸ் ஜோன்ஸைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை அனிடா எதிர்பார்க்கவில்லை.
“இந்த சமுதாயத்தில் ஒருத்தி தனியாக வாழ்ந்தாலும் தேவைப்படும்போது அதிகம் பழகாத ஒரு ஆணுடன் உடலுறவை வைத்துக்கொள்ளலாம். இந்தியப் பண்பாட்டில் ஊறிய எனக்கு அப்படிச்செய்ய மனம் ஒப்பவில்லை. அத்துடன், உணர்ச்சிகளுக்கு நான் தரும் மிகஅதிகமான மதிப்பும் ஒருகாரணம். சிலநிமிட சுகத்திற்காக அவற்றை இழக்க எனக்கு விருப்பமில்லை.”
சாப்பாட்டுக்கூடத்தின் பணியாளர்களும் மேஜைகளைத் துடைத்துவிட்டு அகன்றுவிட்டார்கள். காலியான அந்த அகன்ற இடத்தில் பரிமளாவின் வார்த்தைகள் சத்தமாக ஒலித்தன. “பௌதீக உறவுகூட பெரிதாகத் தெரியவில்லை, இத்தனை வருஷங்கள் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு இன்னொரு உயிருடன் மனதையும், வாழ்க்கையையும் பகிர்ந்துகொண்டு ஒட்டிக்கொள்ளவில்லையே என்கிற வருத்தம்தான். அதனால்தான் தனியாக வாழும் பெண்கள் நாய் பூனை வளர்க்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் அது இன்னொரு மனித உயிருக்கு எப்படிச் சமமாகும்?”
கண்ணீர் இல்லாத அழுகை. சின்னப்பெண்ணானாலும் அனிடாவுக்கு அவள் துயரம் புரிந்தது. “பரி! நீ எனக்கு சொன்ன அறிவுரைதான் உனக்கும். இந்த வயதிலும் உன்னைப் புரிந்துகொள்கிறவர்களை நீ சந்திக்கலாம்.”
பரிமளா அதைக் காதில் வாங்கிக்கொண்டாலும் கவலையை விடவில்லை. “அடுத்தவாரம் மிஸ் ஜோன்ஸ_டன் க்ரூஸ் போவதை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. ஏழுநாள் குறுகிய இடத்தில் அவளுடன் இருந்தால் என் தவிப்பு அதிகம்தான் ஆகும். அத்துடன், பயணத்திற்கான பணத்தில் பாதியை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள். அவளிடம் கடன்பட வேண்டுமே என்கிற கவலைவேறு.”
அதற்கு அனிடா பதில் சொல்லுமுன் செல்பேசியில் பரிமளாவுக்கு ஓரழைப்பு.
“எக்ஸ்க்யுஸ் மீ. அனிடா!”
அழைத்தது யாரென்று தெரிந்ததும் பரிமளாவின் குரலில் வருத்தம் மறைந்து மரியாதை வெளிப்பட்டது. “ஹாய் ஹரி! இப்போது நான் பரவாயில்லை, நீங்கள்?”
முகமன்களுக்குப்பின் ஒருநீண்ட செய்தியைக் கேட்க அவள் முகத்தில் ஆழ்ந்த கவனம். கடைசியில் “விவரங்களைச் சொல்லுங்கள்! கூப்பிட்டுப் பார்க்கிறேன்” என்றாள். எழுதுவதுபோல் பரிமளா சைகை காட்டியதும் அனிடா தன் காலியான காகித உணவுப்பையை அவள்முன் வைத்து தன் பேனாவைக் கொடுத்தாள். அதில் அவள் சில எண்களை எழுதினாள்.
“உடனே தொடர்பு கொள்கிறேன். தாங்க்ஸ், ஹரி!”
எழுதிய எண்களை அலைபேசியில் அழுத்தி பரிமளா அடுத்த சில நிமிடங்கள் யாருடனோ பேசினாள். பணிவான வியாபாரக்குரலில் ஏதோவொரு வேலைபற்றிய விவரங்கள்போல் தோன்றியது. மேலும் சில எண்களை எழுதினாள். பேசி முடித்ததும் கைப்பையிலிருந்து ஒரு காகித மடிப்பை எடுத்துப் பிரித்தாள். “இது என்னுடைய பழைய ரெசுமே. இப்போதைக்கு இது போதும்” என்ற சமாதானத்துடன் அனிடாவை அலுவலக அறைக்குச்சென்று அதை ‘ஃபாக்ஸ்’ செய்ய இரண்டாம் முறை எழுதிய எண்களைத் தந்தாள்.
அதைச் செய்துவிட்டு அனிடா திரும்பிவந்து அமர்ந்தாள். பரிமளாவைத் தனியேவிட மனமில்லை.
“தாங்க்ஸ் அனிடா!”
ரெசமே அனுப்பிய காரணத்தை பரிமளாவே சொல்லட்டும் என அனிடா காத்திருந்தாள். அதற்குள் அலைபேசி அழைக்க மறுபடி ஒரு உரையாடல். இந்தமுறை ஒருசில ஆங்கில வார்த்தைகள்தான். பெரும்பாலும் அனிடாவுக்குத் தெரியாத ஒருமொழி. புரியாவிட்டாலும் பரிமளாவின் முகத்தில் ஒருமகிழ்ச்சி, குரலில் ஒருநெருக்கம். சற்றுமுன் ஆக்கிரமித்திருந்த கவலையும் வருத்தமும் எங்கோ சென்றுவிட்டன. அதைக்கண்ட அனிடாவுக்கும் திருப்தி. எழுந்து அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடிவுசெய்தாள்.
பேசி முடித்ததும் பரிமளா, “நான் அடுத்தவாரம் மூன்றுநாட்கள் வேலைவிஷயமாக நாஷ்வில் போயாக வேண்டும். வியாழன்தான் திரும்புவேன்” என்று அறிவித்தாள். அதில், ‘க்ரூஸ் போவதைத் தவிர்க்க எனக்கொரு நல்ல சாக்கு கிடைத்துவிட்டது’ என்கிற மகிழ்ச்சியும் வெளிப்பட்டது.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்