பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சித்ரா ரத்தினசாமி


எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி என்பதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்து வந்துள்ளது. அன்றைய காலகட்டங்களில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டுஊர் செல்லுவது வழக்கம். அது போன்றே ஆவுடையா குடும்பனும் அவனது மனைவி வெங்கலமடையாளும் மதுரை மாடக்குளத்திலுருந்து தளிக்கு வந்தனர். தளியருகே தினைக்குளம் என்ற ஊரில் தங்கி அரண்மனைக்குட்பட்ட மதகினை காவல் புரிவது நீர் பாய்ச்சுவது மற்றும் மதகில் மீன்களைப் பிடித்து அரண்மைக்குக் கொடுத்து வருதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர்.

சில நாட்கள் கழித்து ஆவுடையானின் மனைவி கருவுற்றாள். இருவரும் மிக மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். எப்போதும் போல் மீன் பிடிக்கச் சென்ற ஆவுடையப்பனுக்கு வலையில் ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அரண்மனையில் ஒரு மீனை மட்டும் எப்படிக் கொண்டு போய்க் கொடுப்பது என்று எண்ணி தன் மனைவி மீன் வேண்டுமென்று ஆசையாகக் கேட்டது நினைவுக்கு வர அம்மீனை அவளுக்கு எடுத்துச் சென்றான். அதைக் கொடுத்து சமைக்கச் சொல்லி விட்டு மதகினைக் காவல் புரியச் செல்கிறான். வெங்கலமடையாள் சமையல் செய்து தனது கணவனுக்கு மதிய உணவு எடுத்துச் சென்றாள்;. அவ்வழியே அரண்மனையார் தினமும் ஆவுடையான் மீன் கொண்டு வருவானே என்று வெகுநேரமாகியும் காணவில்லையென்று தேடிக்கொண்டு வந்து ஆவுடையானிடம் கேட்க அவன் இன்றைக்கு மீன் ஒன்றும் விழுகலை சாமி என்ற கூறிய பதிலோடு திரும்பிக் கொண்டிருந்தவர் எதிர்ப்பட்ட வெங்கலமடையாளிடம் என்ன சாப்பாடு என்று கேட்க அவள் மீன் குழம்புங்க சாமி என்றதும் நம்மை ஏமாற்றி மோசம் பண்ணிவிட்டானே என்ற ஆத்திரத்தில் குறுக்கு வழியே மதகிற்குச் சென்று ஆவுடையானைத் தன் வாளால் வெட்டிப் போட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பிவிடுகிறார். செய்தியறிந்த வெங்கலமடையாள் தன் சுற்றத்தார்களிடம் சந்தனப்பட்டை குங்குமப்பட்டை போன்றவற்றால் அரண்மனைக்கு எதிரில்; ஒரு எரிகுழி ஒன்றினைத் தயார் செய்யச் சொல்லி அதில் தீயைக் கொளுத்தி அந்த எரிகுழியினை முன்று முறை சுற்றி வந்து அனைத்து தெய்வங்களையும் வணங்கி அழுது புலம்பியவாறு

“சிறுமீன் பெருக பெரு மீன் அருக”

“அரண்மனை அழிய ஆமணக்கு விளைய”

என்ற சாபத்தினை அளித்தவாறு தீயினுள் பாய்ந்து குதித்து விடுகிறாள். வெங்கலமடையாள் கர்ப்பமாக இருந்ததால் குழந்தை ஒரு புறமும் அவள் ஒரு புறமாகவும் வெடித்துச் சிதறினர். அக்குழந்தையை காணி மள்ளன் என்பவன் எடுத்து வளர்க்கிறான். பிறகு அக்குழந்தையை எப்படி வளர்ப்பது என்று புலம்ப “நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதே” என்று வெங்கலடையாள் காட்சி கொடுத்ததாகக் கதை நிலவுகிறது. இக்கோவிலில் குடும்ப னேத்தவரே பூசாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தில் ஆடி 18 கழிந்த பிறகு வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடைபெறுகிறது. அப்போது தினைக்குளம் என்ற ஊரிலிருந்து சாமி பொருட்கள் அடங்கிய ஓலைப்பெட்டி (போளை முடி ) மேளதாளத்துடன் எடுத்துச் சென்று சுத்தம் செய்து பின்னர் சந்தனம் பொட்டுவைத்து வழிபடுகின்றனர். நோன்பின் போது படையலாக முதல் ரேண்டு நாள்கள் அசைவ உணவில் முட்டை வைத்த கருங்கோழி சமைத்தும், மீன் குழம்பு, முட்டை, கஞ்சா, சுருட்டு, சாராயம் போன்றவை படைக்கப்படுகிறது.

கடைசிநாள் சைவப்பூசை நடைபெறுகிறது. இப்பூசையில் அவல், பொரிகடலை, தேங்காய், பழம், பால், இளநீர் போன்றவை படைக்கப்பட்டு வழிபடப் பெறுகிறது. அருகில் உள்ள கன்னிமார் கோவிலில் 7 ஊற்றுக்களில் தீர்த்தம் எடுத்து கும்பம் தாளித்து சக்தி அழைத்து; பின்னர் கும்பத்தினையும் போளை முடியையும் எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபடுகின்றனர்.

இன்றும் அரண்மனையிருந்த இடத்தில் நீண்ட காலம் செழித்து வாழ்ந்திட முடியாது என்பது உண்மையாக நிலவிவருகிறது.

—-

chitrarathinasamy@yahoo.com

Series Navigation

சித்ரா ரத்தினசாமி

சித்ரா ரத்தினசாமி