பச்சோந்த்ி வாழ்வு

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

திலகபாமா, சிவகாசி


வெட்டியெடுக்கப் பட்ட கிளைகள் போக

உயிரிழந்திருந்த வேர்

பற்றியிருந்த கரம்பை மண்

கட்டியிடுக்கிலும்

கருவேலமரங்களின் கால் ஊடாக

பயணிக்கும் பச்சோந்தி

மாறும் வாழ்வதனில்

மாறாது நகழும் மானுடம்

சுழலும் புவி வேகத்தில்

உணரப் படாத சுழற்சியாய்

மாறும் வேகமாற்றங்களை உணராது

பழித்துப் பேசும் பச்சோந்தியை

இதுவரை நானும் அப்படியே

இன்றோ

நிறம் மாறுதல் வாழ்வென்றாலும்

பழித்துக் காட்ட முடியவில்லை

உதய வானில் இளசாய் வந்த ஞாயிறும் கூட

உச்சிவானில், நிறம் மாறி குணம் மாறி

தகித்து

படுவானில் செம்பிழம்பாய் முகம் மாற்றி

வீழ்ந்துபோக

பாறையின் மேல் கரும் நிறமெடுத்து

இறுக்கத்தையும் கனத்தையும்

இதழோடு தாங்கி

கல்லின் மேல் நீர் ஓட

நீரின் நிறமெடுத்து

கல்லின் மேல் வேர் ஓட

வேரின் நிறமெடுத்து

இலைகளின் மேலென்றால்

இலையினும் மெல்லிசாய்

காற்றோடு படபடத்து

காலவெளி நிரப்பி

பூவோடு வாழ்கையில்

மலரின் வண்ணமெடுத்து அதன்

வாசமோடு நிறம் மாறி

கற்களுக்கருகில் கல்லாக

கரும்புக் கருகில் கரும்பாக

வாழவென்று நிறம் மாறும்

பச்சோந்தி வாழ்வு

இன்று எனக்குள்ளும்

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி