பச்சைக்கிளி

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

நம்பி


மணிவேல் கிட்டத்தட்ட எல்லா முனைகளிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தான். மூன்று வருடங்களாக இவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்றவள் வசதியான வரன் வரவே சொல்லாமல் போய்விட்டாள். சிதைந்த கவனத்தைப் பயன்படுத்தி செய்யாத குற்றத்திற்காக இருந்த வேலையும் போயிற்று. பட்ட காலிலே படும் என்பதைப் போல் எதிரே வந்த கார் காலை ஒடித்து கிராமத்து வீட்டில் முடக்கிப் போட்டது. இருபத்து ஆறு வயதில் இதைவிட வேறு என்ன தண்டனை வேண்டும்.

பொழுது சாயத் தொடங்கியது. மெதுவாக பனி இறங்க ஆரம்பித்தது. மணிவேல் திண்ணைச் சுவற்றை பிடித்தபடி நடை பழகினான்.

‘தம்பி, உங்களுக்கு நேரம் போகலன்னு, வயக்காட்டுல இருந்து இந்த கிளிய புடிச்சாந்தேன் ‘ வேலையாள் ஒரு அழகான பச்சைக்கிளியுடன் வந்தான்.

‘அடப்பாவி. இப்படி அதோட றெக்கை எல்லாம் வெட்டி வச்சிருக்கியே ‘ மணிவேலுக்கு தானே அடிபட்ட வலி.

‘இல்லேன்னா பறந்து போயிடும். நம்ம வயக்காட்டுல பனமரத்து பொந்துல குஞ்சிங்களுக்கு இரை கொடுத்துகிட்டு இருந்திச்சு. அப்படியே சத்தம் இல்லாம லபக்னு அமுக்கிட்டேன் ‘ சாதனையாய்ச் சொன்னான்.

‘என் கண்ணுல காமிக்காத. முதல்ல வீட்டுக்கு பின்னால இருக்குற மூங்கில் புதர்ல விட்டுட்டு வா ‘ கோபமாக கத்தினான். வேலையாள் ஒன்றும் புரியாமல் கிளியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

இரவு ஊரடங்கிவிட்டது. மார்கழி குளிர் எலும்புக்குள் ஊசியாய் குத்தியது. பாவம் அந்தக் கிளி. குளிர் தாளாமல் மூங்கில் புதரில் இருந்து கத்த ஆரம்பித்தது.

‘கடவுளே.. என்ன தவறு செய்துவிட்டேன் ‘ தூக்கம் வராமல் தவித்தான் மணிவேல்.

விடியும் வரை அந்தக்கிளி கத்திகொண்டே இருந்தது. அது ஒவ்வொரு முறை கத்தும்போதும் மணிவேலுக்கு தன் நெஞ்சில் யாரோ ஈட்டியால் குத்துவது போல் இருந்தது.

மறுநாள் காலை வேலையாளை அழைத்து அந்தக் கிளியை பிடித்து வீட்டுக்குள் அடைக்கச்சொன்னான். ஆனால் அது பிடிபடவில்லை. அதன் சத்தம் கேட்டு ஒரு கிளிக் கூட்டமே வந்துவிட்டது. அதன் துணைக்கிளி இரை கொடுத்தது. வாஞ்சையாய் அலகால் தடவியது. பொழுது சாயும் வரை உடன் இருந்துவிட்டு குஞ்சுகளிடம் சென்றுவிட்டது. இரவு பனி இறங்கவும் குளிர் தாளாமல் கிளி கத்த ஆரம்பித்து விட்டது.

மணிவேலுக்கு பொறுக்க முடியவில்லை. தான் வாய்விட்டு அழ முடியாததை எல்லாம் அந்தக் கிளி சொல்வது போல உணர்ந்தான். கிளி ஒவ்வொரு தடவை கத்தும்பொழுது இவன் மனசு துடித்து அடங்கும். இவன் மெளன

அழுகைக்கு அந்தக்கிளி எதிர் பாட்டு படிப்பது போல் இரவெல்லாம் தூங்காமல் கிளியுடன் சேர்ந்து இவனும் மனுதுக்குள் மருகினான். ஒரு விதத்

தில் வேதனையை பகிர்ந்துகொள்ள துணை கிடைத்தது போல் ஆறுதலா

கக்கூட இருந்தது.

பத்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. துணைக்கிளி இரை கொடுப்பதும், இரவில் கிளியுடன் மணிவேல் மெளனமாய் அழுவதும் தொடர் கதையானது. இப்பொழுது அந்தக் கிளி தத்தித்தத்தி அடுத்த மரக்கிளைகளுக்கு பறக்க ஆரம்பித்தது.

அன்று மதியம் மணிவேல் சாப்பிட்டுவிட்டு தூக்கம் பிடிக்காமல் வெறிச்சோ

டியிருந்த சாலையைப் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து இருந்தான்.

அப்பொழுதுதான் கிளி பறக்கப் பழகிக் கொண்டிருந்தது. சாலையின் எதிர்பு

றம் இருக்கும் வேப்ப மரத்திற்கு பறக்க முயற்சி செய்தது. இறகு வலு இழக்க பாதி வழியில் நடு சாலையில் விழுந்தது.

எங்கிருந்து வந்ததோ பாவி நாய். கண நேரத்தில் கிளியைக் கவ்வ இரத்தம் சொட்டியது.

‘அம்மா ‘ அலறினான் மணிவேல்.

‘என்னப்பா ‘ ஓடிவந்தாள் அம்மா.

‘கிளி ‘ கையை நீட்டினான். பேச முடியவில்லை.

அதற்குள் யாரோ தெருவில் கூச்சலிட்டவாரு ஓடி வந்தான். நாய் கிளியை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டது. கிளியை தூக்கிப் பார்த்தான். துடித்து அடங்கியது. ‘செத்துப் போச்சுங்க ‘. சாலை ஓரத்தில் தூக்கிப் போட்டுவிட்டு போய்விட்டான்.

மணிவேல் அம்மாவை இறுக்கமாக கட்டிக்கொண்டான். மடியில் முகம் புதைத்து நீண்ட நேரம் அழுதான். எதற்காகவென்று இனம் பிரிக்க முடியாமல்.

***

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி