விக்ரமாதித்யன் நம்பி
அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில் வீடு பார்த்து வைத்திருந்தார்கள். அம்மாவை வந்து பார்க்கச் சொன்னார்கள். திருநெல்வேலியில் இனிமேல் இருக்கமுடியாது என்று சின்னப்பிள்ளைக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொன்னார்கள்.
சைக்கிள்கடையை விற்றாயிற்று. ஏழு மரக்கால் விதைப்பாட்டையும் விலைபேசிக் கொடுத்தாயிற்று. வேறே ஒன்றுமில்லை. அப்பா சிங்கப்பட்டி ஜமீன்தாரிடம் செக்ரட்டரியாகச் சேர்ந்துவிட்டிருந்தார்கள். கமலா சித்தியை விடவில்லை. சிங்கம்பட்டியிலேயே வீடெடுத்து இருந்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் அம்மாவை ஏன் கூப்பிடவேண்டும். பிள்ளைகளை ஏன் தேடவேண்டும்.
அம்மா எதற்கும் கலங்கவில்லை. மாமாவை சைக்கிள் கடையிலிருந்து அனுப்பும்போதும் ஒன்றும் சொல்லவில்லை. கூடவே இருந்த அம்மா ஆச்சியை ஊருக்கு அனுப்பிவைக்கும்போதும் கவலைப்படவில்லை. தங்கச்சி காந்தி, வயிற்றில் கட்டிவந்து ஆப்பரேஷன் பண்ணிக் குணமாகாமல், செத்தபோதும் பெரிதாகக் கலவரப்படவில்லை. அவள் பாட்டுக்கு இருந்துகொண்டாள்.
அம்மாவின் பேச்சுதான் குறைந்துவிட்டது. அவள் எப்போதுமே அதிகம் பேசுகிறவள் இல்லைதான். ஆனால், இப்பொழுதெல்லாம் எண்ணித்தான் பேசுகிறாள். உள்ளுக்குள் என்னவோ தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறாள் போல. அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. அக்காவிடமும் இவனிடமும் முன்னைவிடவும் அதிகம் பிரியமாக இருக்கிறாள். தம்பியைக் கீழேயே விடுவதில்லை, தொட்டியில் போட்டிருக்கிற நேரம் தவிர.
சம்சாரி வந்துதான் சொன்னான்: ‘தாயி …. ஐயா இப்டி செஞ்சிட்டாகளே. நயினாகுளத்துப் பத்த யாராவது விப்பாகளா… இவுக இந்தமாதிரி பண்ணிட்டாகளே… ‘
அம்மா எதுவும் சொல்லவில்லை. வீட்டினுள் போய் டிரங்க் பெட்டியில் இருந்து ஒரு வெளுத்த வேஷ்டியும் சட்டையும் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள். மாடக்குழியிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை எடுத்துவந்து, ‘பிள்ளையளுக்குப் பண்டம் வாங்கிக் குடு ‘ என்று கொடுத்தாள். ‘இரண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போ ‘ என்று இலையில் பொதிந்து கொண்டு வந்தாள்.
பக்கத்துவீட்டு அத்தை வந்து கேட்டாள் : ‘என்ன மதினி, சைக்கிள் கடைய வித்தாச்சாம்லா.. இவுக சொன்னாக. ‘
‘ம்… பாக்க ஆளில்லல்லா… கொடுத்திற வேண்டியதுதானே.. ‘ என்று மட்டும் சொல்லிவிட்டு, ‘ பெரியவன் மதுரயிலதான இருக்கான்.. வரவே காணோம் ‘ என்று விசாரித்துவிட்டு வீட்டினுள் வந்துவிட்டாள்.
* * *
கல்யாணியா பிள்ளை வளவு கிழக்கு பார்த்து இருந்தது. காம்பவுண்டில் தெற்கு பார்த்த முதல் வீடு அவரது. தெற்கு வரிசையில் முதலில் இரண்டு சிறு வீடுகள். மூன்றாவதாக கொஞ்சம் பெரியவீடு. தென்மேற்கு மூலையில் இரண்டு குச்சுகள். கல்லிடைக்குறிச்சியில் கல்யாணியா பிள்ளை காம்பவுண்ட் என்றால் யாருக்கும் தெரியும். பரம்பரைப் பணக்காரர். சாப்பாட்டுக்கு வயல் இருந்தது. நெல் வந்துவிடும். வாடகைப்பணம் மேல்செலவுக்குத்தான். பெரியவன் சூரியநாராயணன் அக்கா ஒட்ட. எட்டு படித்துக்கொண்டிருந்தான். சின்னவன் நாலு. இரண்டே பையன்கள். கல்யாணியா பிள்ளை நிரம்ப சாது. கொஞ்சம் காது கேட்காது. அதனாலோ என்னவோ யாரிடமும் தேவையில்லாமல் பேச்சுக் கொடுக்கமாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொள்வார்.
அம்மா ஒரு நல்லநாள் பார்த்து வந்து பால் காய்ச்சிவிட்டுத் திரும்பினாள். அன்றைக்கு அப்பா வீட்டிலேயே இருந்தார்கள். வளவு முழுக்க வந்திருந்தது. எல்லோருக்கும் தம்ளரில் பாலை எடுத்துக் கொடுக்கையில் அம்மா முகத்தில் தனி சந்தோஷம் தெரிந்தது. நிரம்ப காலத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் தெளிச்சியே வந்திருந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு அவியல், கோஸ் பொரியல், மாங்காய்ப் பச்சடியெல்லாம் வைத்திருந்தாள். அப்பா வீட்டுக்கு வராததிலிருந்து அனேகமாக ஒரு சோறு, ஒருகுழம்பு, ஒரு கறி என்றாகியிருந்தது. வருஷப்பிறப்பு, கார்த்திகை, பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதிபூஜை இப்படி விசேஷ நாள்கள் கூட சாதாரணமாகவே கழிந்தன. அன்றைக்குத்தான் பாயாசம் வைக்கத் தோன்றியிருக்கிறது. வளவிலும் சாப்பிட அழைத்திருந்தது.
* * *
அக்காவை திலகர் வித்யாலயாவில் சேர்த்திருந்தது. இவன் கவர்மெண்ட்ஸ்கூல். அந்த வருஷம் அக்கா கட்டுரைப்போட்டியிலும் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு வாங்கினாள். அப்பா வாரத்தில் இரண்டு நாளோ மூன்று நாளோ வந்து கொண்டிருந்தார்கள். சிவா எங்கே, பெரியவன எங்கே என்றுதான் விசாரிப்பார்கள். நெஸ்டில் இருக்கா என்று கேட்பார்கள். அம்மா ஒற்றைவார்த்தையில் பதில் சொல்வாள். தம்பியை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சுவார்கள். அவன் தூங்கிக் கொண்டிருந்தால் தொட்டிலில் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்து உட்காருவார்கள்.
வெளியில் அரண்மனை கார் நிற்கும். உடனே புறப்பட்டுவிடுவார்கள். திருநெல்வேலிக்கு ஏதாவது வேலியாகப் போய்விட்டு வரப் பிந்தினால், கடைசி பஸ் பிடித்து வந்து, மணிமுத்தாறு பஸ் இல்லையென்றால், வீட்டுக்கு வருவார்கள். அம்பாசமுத்திரத்தில் எதுவும் ஜோலியாக வருகையில் இறங்கி வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.
அம்மா வருவதெல்லாம் வரட்டும் என்கிற மாதிரியே இருந்து கொண்டாள். எல்லாம் நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. ஒரு குறையும் இல்லை, அப்பா வீட்டில் தங்காத குறையைத் தவிர. அப்பா எப்பொழுது வருவார்கள், எப்பொழுது போவார்கள், எப்பொழுது இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. அம்மா, அக்காவைப் பள்ளிக்கூடம் அனுப்பிவைப்பதிலும், தம்பிக்கு நெஸ்டிக் கரைத்துக் கொடுப்பதிலும், சமையல் செய்வதிலுமாக இருந்தாள். சாயங்காலம் விளக்கு பூஜை செய்வாள். இடையில் சிறிது காலம் விட்டிருந்தாள்.
காலைக்கு வழக்கமாக இட்லிக்குப் போட்டிருக்கும். மத்தியானம் சுடுசோறு. இராத்திரி பழையது. எப்பொழுதும் சுண்டக்கறி இருக்கும். நார்த்தங்காய் ஊறுகாய், மல்லித் துவையல் இருக்கும். இந்தப்பக்கத்தில் பிரண்டை கிடைக்கும். அம்மா கைபாகத்தில் எல்லாமே ருசியாயிருக்கும். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முறுக்கோ தட்டையோ கிளாஸ்கோ பிஸ்கெட் டின்னிலிருந்து எடுத்துத் தருவாள். சமயங்கள் சீனிக்கிழங்கு அவித்து வைத்திருப்பாள். அவள் என்ன சாப்பிடுகிறாள், எப்பொழுது சாப்பிடுகிறாள் என்பதுதான் தெரியமாட்டேனென்கிறது.
அப்பா வந்து வாடகை கொடுத்துவிடுவார்கள். சுப்பையா மூப்பனார் கடையிலிருந்து மளிகை சாமான் வந்துவிடும். பாலுக்கும் தயிருக்கும் அம்மா கையில் கொடுத்துவிடுவார்கள். வீட்டரிசி சமையல்தான். மொத்தமாக நெல் வாங்கிப் போட்டிருந்தது. அப்பா சாயங்கால வாக்கில் வீட்டில் இருந்தால் உள்ளூர் டூரிங் டாக்கீஸ் கூட்டிக்கொண்டு போவார்கள். புதுப்படம் போட்டிருந்தால் அம்பை கல்யாணிக்கோ கிருஷ்ணாவுக்கோ புறப்பட்டுவிடுவார்கள். அக்கா முன்னேயே சினிமாப்பாட்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இப்பொழுதெல்லாம் முழுசாகப் படிக்க ஆரம்பித்திருந்தாள். ‘தங்கமலை ரகசியத்தில் வரும், அமுதை பொழியும் நிலவே, நீ அருகில் வராததோடு ‘ பாட்டை அடிக்கடி பாடுவாள். ‘கணவனே கண்கண்ட தெய்வத் ‘தில் அஞ்சலிதேவி பாடும் தாலாட்டு, ‘அன்பில் மலர்ந்த நல்ரோஜா, கண்வளராய் என் ராஜா ‘ பாட்டுப் பாடித்தான் தொட்டிலாட்டிவிடுவாள். அக்கா பாடிப்பாடி இவனுக்கும் மனசிலாகி இருந்தது.
அப்பா வரும்பொழுது அரண்மனையிலிருந்து ஆனந்த விகடன், குமுதம், கல்கி படிக்க எடுத்துக்கொண்டு வருவார்கள். இவன், ‘மகாவம்சம் ‘, ‘தில்லானா மோகனாம்பாள் ‘ இப்படி கதை படிக்க ஆரம்பித்திருந்தான். ‘பிராட்வே, வெலிங்டன், ராக்ஸி மற்றும் தமிழகமெங்கும் ‘ என்று வரும் சினிமா விளம்பாரங்களைத் தனியே ‘கட் ‘ பண்ணி எடுத்துச் சேகரிக்கப் பழகியிருந்தான்.
கன்னடியன் கால்வாயில் வருஷம் பூராவும் தண்ணீர் வரும், கோடைக்காலம் தவிர. நல்ல ஓட்டம் இருக்கும் அதில். அம்மாதான் கூட்டிக்கொண்டு போவாள், காலையில். அங்கேதான் இவன் நீச்சல் படித்துக்கொண்டது. அக்காதான் கற்றுக்கொடுத்தது. தோண்டியைக் கவிழ்த்துப்போட்டு, அதைப் பிடித்துக்கொண்டே எப்படியோ அவள் நீச்சல் படித்துக்கொண்டாள்.
திருநெல்வேலி மாதிரியே இங்கேயும் இவர்களையும் அம்மாவையும் பார்த்துவிட்டு, ‘இப்டி கட்டிகட்டியா பிள்ளையள வச்சுட்டு, அந்த மலையாளத்தா மாய்கையில அலையுதாகள, அண்ணாச்சி ‘ என்று தெரிந்தவர்கள் வருத்தப்பட்டுப் பேசுவார்கள். ராஜாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு விட்டுவிட்டார்கள்.
பெண்குழந்தைக்கு ஒன்றரை வயது நடக்கிறது என்று அம்மைக்குத் தெரியும். ஆனால், அவள் எதுவும் கேட்பது இல்லை. கேட்கக்கூடாது என்கிறமாதிரியே இருந்துகொண்டாள். அவளாக எதையும் பேசுவது இல்லை. அப்பாவும் அம்மாவிடம் பேசுவது குறைந்துவிட்டது. வீட்டுக்கு என்னவும் வேணுமா. எல்லாம் இருக்கா. வரட்டுமா. செலவுக்குப் பணம் வச்சிருக்கியா. இப்படித்தான் இருக்கும் அப்பா பேசுவது.
* * *
வளவுக்கு எதிரே மேற்கே பார்த்து இருந்தது, கல்யாணியா பிள்ளை தம்பி சைலப்பன் வீடு. சாலைக்கு அந்தப்புறம் தனி வீடு. சைலப்பன், அண்ணனுக்கு நேர் எதிரானவர். கொஞ்சம் அடர்துடியான மனுஷன். அண்ணனைவிடக் குள்ளம். கட்டு குட்டென்று இருப்பார். இலட்சணமான முகம். சுருட்டை முடி. சற்று கறுப்புதான். நல்ல சதைவைத்து தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால் அப்படித் தோன்றாது. மடிப்புக் கலையாத வேஷ்டி — சட்டையில்தான் வருவார். கையில் மோதிரம், வாட்ச் எல்லாம் கிடக்கும். எப்பொழுதும் தோரணயாகத்தான் தெரிவார்.
சைலப்பன் சரியான வாடாவழி. மனைவியை இவர்தான் பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டாரா, இல்லை அவர்களாகவே போய் விட்டார்களா தெரியவில்லை. வைப்பாட்டியோடுதான் அந்த வீட்டில் இருந்து கொண்டிருந்தார். இருபத்துநாலு மணி நேரமும் போதையில்தான் இருப்பார். மகன்தான் பிரியாணியோ புரோட்டாவா வாங்கிக்கொண்டு வருவான். ஒரே பையன். சூட்டிகையானவன். இவன் வயதுதான் அவனுக்கும்.
சைலப்பன் வீட்டுக்கதவு எப்போதும் அடைத்தே கிடக்கும் என்ன என்றே புரியவில்லை. பிள்ளைமாரில் இப்படி இருப்பது கிடையாது. எதற்காக இந்த மனுஷன் இரவும் பகலும் குடிக்கிறார். ஏன் பொண்டாட்டியை விட்டுவிட்டு இது மாதிரி வைப்பாட்டியை வீட்டிலேயே கொண்டு வந்து வைத்திருக்கிறார். பெற்ற பிள்ளையை எப்படி வேலைக்காரன் போல நடத்த முடிகிறது. எங்கேயாவது வெளியூருக்கோ சினிமாவுக்கோ போகையில் தவிர அவளை யாரும் பார்க்க முடியாது. வெளியே வரவேமாட்டாள் அவள். வரத் தேவையும் இல்லை.
எவ்வளவு சொத்து. கல்லிடைக்குறிச்சி ஊரிலேயே பெரிய பணக்காரர்கள். கன்னடியன் கால் பாசனம். பூவுக்கு இரு போகம். சைலப்பன் நினைத்தாலும் குடித்து அழிக்க முடியாத சொத்து.
ஏதாவது விஷயம் இருந்தால்தான் அண்ணனைப் பார்க்க வருவார். வெளியில் நின்றே கூப்பிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார். இல்லையென்றால் அண்ணன் மகனிடம் சொல்லிவிடுவார். வீட்டுக்குள் போகமட்டார். எந்த வம்புக்கும் போகிற ஆளுமில்லை. இருக்கிறது, குடிக்கிறார். என்னவோ மனைவியோடு ஆகவில்லை, வைப்பாட்டியோடு வாழ்கிறார். என்ன, இப்படி வெளிப்படையாக யாரும் இருக்கமாட்டார்கள். பையன்தான் பாவம். அவன் ஏன் இந்த அப்பாவோடேயே இருந்துகொண்டான். அம்மாவைத் தேடாதா.
சதாசிவம் சனி, ஞாயிறில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவான். முக்கியமாக, லென்ஸ் வைத்து, வேஷ்டியைத் திரைபோலக்கட்டி எங்கிருந்தோ ஃபிலிம் சுருள் கொண்டு வந்து சினிமா போடுவான். கல்யாணியா பிள்ளை மகன் சூரி என்கிற சூர்யநாராயணன், இவன், அக்கா, வளவில் உள்ள சின்னப்பிள்ளைகள் எல்லோரும் கூடியிருந்து பார்க்கிறது. திடாரென்று சைலப்பன் கூப்பிடும் சத்தம் கேட்டு ஓடியே போவான். பிறகு சூரிதான் ஆப்பரேட்டர். சூரியை எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு சிங்கப்பல். பார்க்க அழகாக இருக்கும். மிதந்த விழிகள் சுழலச்சுழலச் சிரித்துச் சிரித்துப் பேசுவான். சித்தப்பா மகன் சதாசிவத்திடம் நிரம்பவே ஒட்டுதலாக இருப்பான். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவான்.
* * *
அப்பா காலையில் வந்திருந்தார்கள். இராமநாதபுரம் போய்விட்டு வருகிறார்களாம், ராஜாவோடு. மத்தியான வண்டிக்கு மெட்ராஸ் போகிறார்கள். நாலு நாள் ஆகும். சொல்லிவிட்டுப் போகத்தான் இங்கேயே இறங்கிக்கொண்டேன் என்று பொதுவாகச் சொன்னார்கள். இவனுக்கு ஞாபகமாக ‘அம்புலிமாமா ‘ வும் ‘கண்ணனும் ‘ வாங்கிக்கொண்டு வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. அக்காவுக்கு அவள் கேட்டமாதிரியே கொலுசு.
பிரயாண அலுப்போ என்ன்வோ குளித்துச் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கினார்கள். அம்பாசமுத்திரம் தாலுகா ஆபீஸில் ஏதோ வேலை இருக்கிறது என்று சிறிது நேரத்திலேயே எழுந்து முகம் கழுவிவிட்டு புறப்பட்டுவிட்டார்கள்.
சாயங்கால வாக்கில் செட்டிபிள்ளைமார் தெருவிலிருந்து செண்பகம் பெரியம்மை வந்திருந்தாள். ‘கொழுந்தன் எப்படி இருக்காக, நீ ஏன் இப்டி மெலிஞ்சி போயிட்டே இருக்கே. பிள்ளையளப் பாத்துதான் ஆறுதலடையணும். அவுக எப்டியும் இருந்துட்டுப் போறாக. சும்மா வீட்லயே அடைஞ்சு கிடக்காத. மனசுதான் உளையும். பிள்ளையளுக்கு அரை பரீட்சை லீவு விட்டதும் ஒரு பத்துநாள் சங்கரன் கோயில் அக்கா வீட்டுக்குப் போயி இருந்துட்டு வா…. ‘ என்று தைரியம் சொன்னாள்.
‘போணும் அக்கா. இவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க, அதான் பாக்கன்…. ‘ என்று இயல்பாகச் சொன்னாள்.
* * *
விளக்கு பூஜை முடிந்ததும், ‘சாப்பிடுறீங்களா…. ‘ என்று கேட்ட அம்மை இவனுக்கும் அக்காவுக்கும் பழையது எடுத்துவைத்தாள். மத்தியானம் வைத்த புளிட்ட கறி இருந்தது. வடகமும் சீனியரைக்காய் வற்றலும் வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். தம்பி தூங்கி விட்டிருந்தான்.
அம்மா ஏனங்களை ஒழித்து அங்ஙணத்தில் போட்டுக் கழுவிவிட்டு வந்து படுக்கை விரித்துக் கொடுத்தாள். அக்காவும் இவனும் படுத்த சிறிது நேரத்தில் வாசலில் என்னவோ பேச்சு சத்தம் கேட்டது. அக்காவுக்குப் பக்கத்தில் படுத்திருந்த அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அம்மா முகம் பளிச்சிட்டது. ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி இருந்தது.
அக்கா தூங்கி விட்டாள். இவன் விழித்திருப்பதைப் பார்த்த அம்மா, ‘நீ தூங்குல…. ஏன் முழிச்சிட்டிருக்க…. ‘ என்று கேட்டுவிட்டு படுத்துக்கொண்டாள்.
வெளியே சைலப்பன் சத்தம் போட்டுக்க்கொண்டிருந்தார். குரல் ஓங்கி ஒலித்தது. ‘இவன் என்ன பெரிய புடுங்கின்னு நினைச்சுக்கிட்டு இருக்கானோ. இவன் பாட்டுக்கு வர்றான், போறான். சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாப்பில இவனே ஜமீன்தாராயிடுவானா. திருநவேலிக்காரனப் பத்தித் தெரியாதாக்கும் எனக்கு. அன்னிக்கு நா வாரேன், இவன் மதியாமப் போறான். தம்பி, நமஸ்காரம்னு இரண்டு வார்த்த பேசினா என்ன குறைஞ்சு போவான். கார்ல போற பவிசா. எப்ப வருவான் அவன். இன்னிக்கு அவனப் பாத்து இதக் கேட்காம இந்த இடத்தவிட்டுப் போமாட்டேன். அவனுக்கு வச்சுக்கிடுதேன் வரிச…. ‘
சைலப்பனின் சலம்பல் சப்தம் கேட்டு கல்யாணியா பிள்ளை வந்துவிட்டார், தம்பியிடம் என்னவோ நல்லவார்த்தை சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது கேட்டது. பக்கத்துவீட்டு சித்தியும் எழுந்திருந்து வந்துவிட்டாள். ‘நீங்க இப்ப வீட்டுக்குப் போய்த் தூங்குங்க… அவுக வந்தபிறகு கேட்டுக்கிடுவோம். அந்த அக்கா பயப்படப் போகுது. பிள்ளையள் எந்திரிச்சிடக்கூடாதுல்ல… நாளைக்கு விசாரிப்போம். அண்ணாச்சி என்ன இதுன்னு குழம்பிப் போயி நிக்காக பாத்தீகள்ல.. எழுந்திரிங்க முதல்ல… ‘ என்று பையச் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.
‘நா எதுக்குப் போணும்… எனக்குக் கேட்டாதான் தீரும். மதினிகிட்ட கேக்கேன்… அவுக சொல்லட்டும் ‘ என்று வந்து கதவைத் தட்டினார்.
கல்யாணியா பிள்ளை பதறியடித்துக்கொண்டு ஓடி வந்திருப்பார் போல. ‘என் குடியக் கெடுத்திராதடா… மானம் மரியாதைக்கு பயந்து வாழ்ந்துட்டுருக்கேன். என்ன இப்படில்லாம் படுத்தாத. வந்துரு. நாளைக்கு அவங்க முகத்தில என்னன்னு முழிப்பேன். பேவரத்து வர்றீயே… நா என்ன செய்யட்டும் ‘ என்று தழுதழுத்த குரலில் புலம்பிக்கொண்டே வந்து தம்பியை எப்படியோ கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
அம்மா எழுந்து ‘லைட் ‘டைப் போட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, கதவை மெல்லத் திறந்து ஒருக்களித்தபடியே பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டு வந்து படுத்துக்கொண்டாள். நிரம்பவும் கலவரப்பட்டுவிட்டாள். தூங்கவில்லை. இவனுக்கு எப்பொழுது தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.
* * * *
அப்பா மெட்ராஸ் போய்விட்டு நேரே இங்கே வீட்டுக்குத்தான் வந்து இறங்கினார்கள். மூன்றுமுறை தட்டுகிற சப்தம் கேட்டு அம்மை போய்க் கதவைத் திறந்தாள். ‘என்ன லட்சுமி… ‘ என்று வழக்கம்போலக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார்கள்.
‘லட்சுமியோ கொட்சுமியோ எல்லாம் இருக்கட்டும்… முதல்ல வேற வீடு பாருங்க. நான் இங்க இருக்கமுடியாது. நீங்க பாட்டுக்குகொண்டாந்து விட்டுட்டுப் போயிருங்க. எவனாவது குடிகாரப்பய வந்து கதவத் தட்டிட்டு நிக்கான். நா அர்த்தராத்திரில இந்தப் பிள்ளைகளையும் வச்சுக்கிட்டு என்ன செய்வேன். துணைக்கு யார் இருக்கா. உடனே வீடு மாறணும். இல்ல, நாங்க திருநவேலிக்கே போயிர்றோம் ‘ என்று படபடத்தாள்.
‘என்ன நடந்தது லட்சுமி… தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசினா எனக்கு என்ன புரியும்.. சொல்லு, என்ன விஷயம். ‘ அப்பா கேட்டார்கள். அம்மா கண்கலங்கியபடியே சொன்னாள்.
‘சரி.. வேற வீடு பார்த்துப் போயிருவோம்… நீ தைரியமா இரு. நான் திருநவேலி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன் ‘ என்று குளித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். சாப்பிடக்கூட இல்லை.
* * *
அந்திக் கருக்கல். இருட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு சடைபின்னிவிட்டு, அம்மா விளக்குப் பொருத்திக் கொண்டிருந்தாள். அப்பாவும் சங்கரன் மாமாவும் வந்தார்கள்.
‘எப்படி இருக்க அக்கா… என் மருமகள எங்க ‘ என்று விசாரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் சங்கரன் மாமா.
‘நீ எங்க வந்த… பிள்ளையள் நல்லா இருக்காங்களா. கொழுந்தியா எப்டி இருக்கா… ‘
அம்மா வெள்ளந்தியாகக் கேட்டாள்.
‘அத்தான் வந்தாக…கூடவே வந்துட்டேன் ‘ சாதாரணமாகச் சொன்னான் சங்கரன் மாமா.
அம்மை அப்பாவுக்கும் சங்கரன் மாமாவுக்கும் காபி போட அடுக்களைக்குப் போனாள்.
‘சங்கரா, போலாமா… ‘ என்று அப்பா வெளியே கூட்டிக்கொண்டு போனார்கள்.
* * *
சங்கரன் மாமா, அப்பாவுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் நெல்லையப்பபிள்ளை மச்சினன். லயன் கம்பெனியில் டிரைவர். துடியாய் இருப்பான்.நல்ல கறுப்பு. வளத்தியும் குறைச்சல்தான். முகத் தீர்க்கம். திருநெல்வேலியில் இருக்கும்போது அப்பாவைத் தேடிவருவான். ‘அத்தான் இருக்காகளா, அக்கா… ‘ என்று கேட்டுக்கொண்டே வருவான். அப்பாதான் இரண்டு முறை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த அத்தையும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு இரண்டு, மூன்று தடவை வந்திருக்கிறார்கள்.
சங்கரன் மாமாவை வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அம்மைகூட சங்கரா என்று இயல்பாகப் பேசுவாள். கூடப் பிறந்த அக்காவிடம் எவ்வளவு பிரியமாக இருப்பானோ அவ்வளவு பிரியமாக இருப்பான் அவனும்.
நெல்லையப்பபிள்ளை பெரியப்பாவை விடவும் அப்பாவிடம்தான் பற்றுதலாக இருந்தான், சங்கரன் மாமா. அப்பாவுக்கு இருக்கும் செழிப்பு, தோரணை, கை தாராளம் எல்லாம் ஈர்த்திருக்கும் போல.
* * * *
அம்மா காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். இரண்டு சிறுதட்டில் கொஞ்சம் அல்வாவும் மிக்சரும் எடுத்து வைத்திருந்தாள். அக்காவும் டியூஷன் முடிந்து வந்துவிட்டாள். ‘அப்பாவும் சங்கரன் மாமாவும் வெளிய நிப்பாங்க… பாத்துக் கூட்டிட்டு வா. காபி ஆறிறப் போகுது ‘ என்று அம்மை இவனிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
வெளியே கூட்டமாய் இருந்தது ரோட்டில். சைலப்பன் வீட்டுமுன் நிறையபேர் நின்றிருந்தார்கள். இவன் ஏறிட்டு மாடியைப் பார்த்தான். அப்பாவும் சங்கரன் மாமாவும் சைலப்பனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். சட்டை கிழிபட்டிருந்தது. திரும்பத் திரும்ப செவிட்டிலேயே அறைந்து கொண்டிருந்தான் சங்கரன் மாமா. அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தார்கள், அப்பா. சைலப்பன் முகத்திலேயே குத்து விழுந்துகொண்டிருந்தது.
சைலப்பன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். ‘விட்டிருங்க அண்ணாச்சி.. விட்டிருங்க அண்ணாச்சி ‘ என்று கேவிக்கேவி அழுதுகொண்டே மன்றாடினார்.
‘மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார்.
‘இறங்குடா நாயே…. ‘ என்று நெட்டித் தள்ளிய அப்பாவின் குரல் அதிர்ந்தது.
‘வாய மூடுறா…. ‘ என்று பிடரியைப் பிடித்துத் தள்ளினான் சங்கரன் மாமா.
பின்னாடியே ஒரு பெண் தடதடவென்று இறங்கிவந்து அப்பாவின் காலில் விழுந்தாள்.
‘அவரக் கொன்னுராதீங்க… நல்லா இருப்பீங்க.. விட்டுருங்க ஐயா…. ‘ என்று வேண்டிக் கொண்டாள்.
‘எழுந்திரிடி… ‘ என்று முடியைப் பற்றி இழுத்து ஒதுக்கிவிட்டான் சங்கரன் மாமா.
தடுமாறிக் கீழே விழுந்த சைலப்பனை எட்டி மிதித்துக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான்.
கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது.
சைலப்பனால் நிற்க முடியவில்லை. துவண்டு சரிந்து விடுவார்போல இருந்தது. சங்கரன் மாமா இடது புறமும் அப்பா வலதுபுறமுமாக ஏந்தி அணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
‘குடிச்சா என்ன வேணாலும் பேசலாமாடா… எங்க வந்து நின்னு பேசுறோம்னு தெரியாம போயிருமோ… சங்கக் கடிச்சு ரத்தத்தக் குடிச்சுருவன். நான் வீட்ல இல்லேன்னா செத்துப்போனேன்னு அர்த்தமா… தீ வச்சுக் கொளுத்திப் போடுவேன்.. கொளுத்தி… ‘ அப்பா முகம் சிவக்க ஓங்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணியா பிள்ளை எதிர் வந்து நின்று அப்பா கையைப் பிடித்துக்கொண்டு, ‘எனக்காக விட்ருங்க, தம்பி..என்னமோ குடிச்சுட்டு உளறிட்டான்… அன்னிக்கே பயந்துட்டிருந்தேன்… கெளரவமான குடும்பம் நாங்க… இப்டி ஊர்கூடி வேடிக்க பார்க்கும்படி ஆயிப்போச்சே… நான் மன்னிப்புக் கேட்டுக்கிடுதேன், தம்பி அவனுக்காக. போதும், விட்ருங்க. செல்லமா வளந்தவன்… இப்டி சீரழியுதானே… மனசு தாங்கல ‘ என்று புலம்பினார்.
‘ நீங்க போங்க அண்ணாச்சி… அவன ஒண்ணும் செஞ்சுரமாட்டோம்… அனுப்பிச்சிடறோம் ‘ என்று சொல்லி விட்டார்கள்.
வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.
‘லட்சுமி… லட்சுமி.. கதவத் திற ‘ என்ற அப்பாவின் சத்தத்தைக் கேட்டுக் கதவை ஒருக்களிக்கத் திறந்தாள்.
‘என்ன இதுல்லாம்… ‘ என்று பதறியபடியே தார்சாவில் காலடியெடுத்து வைத்தாள்.
‘மன்னிச்சுருங்க மதினி ‘ என்று சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தார் சைலப்பன்.
சடாரென்று கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்ட அம்மை வீட்டுக்குள் போய்விட்டாள்.
‘செறுக்கியுள்ள, ஓடுல… ‘ என்று சங்கரன் மாமா எழுப்பிப் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
வேஷ்டியைக் கையில் பிடித்துக்கொண்டே தளர்ந்த நடை நடந்துபோனார், சைலப்பன். கல்யாணியா பிள்ளை ஓடிவந்து கைலாகு கொடுத்துக் கூட்டிக்கொண்டு போனார்.
* * *
- அன்புள்ள தோழிக்கு….
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…
- விதியோ ?
- அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)
- திலகபாமாவின் புத்தக வெளியீடு
- பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
- புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்
- ஏனோ ….
- சுய ரூபம்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)
- நிழல் யுத்தம்
- தேர்தல்
- நானொரு பாரதி தாசன்!
- எரிமலைப் பொங்கல்
- பூவின் முகவரி
- அமைதி
- ஞானம்
- விக்ரமாதித்யன் கவிதைகள்
- வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!
- நேர்ந்தது
- கடிதங்கள்
- உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- அனுமன் வேதம்
- ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!
- சிறு கவிதைகள்
- இறைவன் அருள் வேண்டும்
- வரம் வேண்டி
- ஸ்ரீஆஞ்சனேயன்..
- மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?
- நீ வருவாய் என..
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- அறிவியல் துளிகள்