நேர்த்திக்கடன்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

தீபம்கோபி


அன்று….

அதிகாலை துயிலெழுந்து
ஆற்றுநீரில் தலைக்குளித்து
ஆதவனை தொழுதுவிட்டு
பசுஞ்சோலை வயல்வெளியில்
தலையசைக்கும் இளம்பயிரில்
எனைமறந்த “பொற்காலம்”!

இன்று….

அந்திமேகம் கருக்கவில்ல
அடைமழையும் பெய்யவில்ல..
ஆத்துநீரை பார்த்து பார்த்து
ஆண்டுபல போயாச்சு..

வயல்வரப்பு வறண்டுபோயி
வாழ்க்கை இன்று கனவாச்சு..
சேத்துவெச்ச செல்வமெல்லாம்
வட்டிக்கடை வசமாச்சு…

வெயிலெடிச்சி வெடிச்ச நிலம்
விண்பார்த்து காத்திருக்க!
மண்குளிர மழைபெஞ்சா
மாவிளக்கு நானெடுத்து
கூழூத்த கோவில் வரேன்
குறைதீரு மாரியாத்தா….!

– தீபம்கோபி, சிங்கப்பூர்.
dewwinds@yahoo.com

Series Navigation

நேர்த்திக்கடன்….

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

எம்.கே.குமார்.


கிமூ…….. நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்…இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்…….இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு தினக்கூலி தொழிலாளி.அவர் போன்ற தினக்கூலித்தொழிலாளிகளுக்கு வேலையில் நான் பொறுப்பாளி…….சார் போடுவார்கள்.வெளியே போய் சவுடால் பேசுவார்கள்.கொஞ்சம் கோபமாய்ப்பேசினால் வீட்டுக்கு இப்புடித்தானே சார் போவீங்க……….என்று அன்பாய் விசாரிப்பார்கள்.

நமக்கு இதெல்லாம் சகஜம்.வேலைக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிறது.எத்தனையோ பேரை பார்த்தாகி விட்டது.சில பேரிடம் வேலை வாங்க பெண்கள் கதை பேச வேண்டும். சிலபேரிடம் சினிமாக்கதை பேசவேண்டும். சிலபேரிடம் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகும். சில பேரிடம் நாம் மட்டும் பேசிப்பயனில்லை..அவ்ர்களைப்பேசவைக்க வேண்டும்….பேச்சு முடியும் போது ஏங்க……….அப்புடியே போயி ஒரு அஞ்சு மூட்டை அள்ளி தட்டிட்டு போயிடுங்க..பெரிசு பார்த்தா………அரட்டை அடிக்கிறாங்கன்னு டென்ஷனாயிடும்…அப்புறம் நாந்தான் இதுக்கெல்லாம் திட்டு வாங்கணும்……..என்று மேனேஜரைப்பற்றி போட்டுக்கொடுக்கவேண்டும்….பெரிசு என சொல்லவேண்டும். சிலசமயம் நம்மை அவர்கள் போட்டுக்கொடுத்துவிடுவார்கள்…அத்ற்கும் ரெடியாய் பெரிசு நல்ல மனுஷம்ப்பா…..சும்மா பேசுவாரு ஆனா உதவினா ஒடனே பண்ணுவாரு ன்னு சாட்சி வைத்து பேசவேண்டும்.

பலபேரிடம் நாம் எதைப்பற்றி பேசினாலும் வேலை ஆகாது…பேசி முடிக்கும்போது என்னாசார் பண்ணச்சொல்றீங்க………வீட்டுக்கஷ்டம்…மூணு குழந்தைங்க….அப்புறம் ஒரு பொண்டாட்டி…குடும்பத்தை ஓட்ட கஷ்டமா இருக்கு……வீட்டு வாடகை அஞ்சி மாசமா கொடுக்கலே……….வேலை வெட்டி இல்லாமெ இருந்தேன் .அப்போபார்த்து பக்கத்து வீட்லே இருந்த ஒரு பொண்ணுகூட செட் அப் ஆயிடுச்சி அதுவும் இப்போ அஞ்சி மாசமா…..ஆக அல்லாடுறேன்……..ரெண்டு சம்சாரத்தோட……என்பார்கள்.

பதினெட்டு வயது என சொல்லிக்கொண்டு வேலைக்கு வந்த பன்னிரெண்டு வயது சிறுவன் இசக்கியில் இருந்து………எழுபது வயதை ஐம்பத்தி ஒன்பதாக்கி இதோ சுண்ணாம்பு மூட்டை வைத்து…தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருக்கும்……………ஐயா நாகூர் பிச்சை வரைஎல்லோருக்கும் பிரதானம் வயிறு. சிலபேருக்கு சில வயிறுகள் வயிறு என ஒரே வார்த்தையில் நாம் சொல்லி விட்டாலும் அத்ன் அளவுகள் அதிகம். அதன் பசி அதிகம். சமயத்தில் அது செய்யும் மாயங்களையும் நாம் பார்க்க முடியும்.

கிருஷ்ணமூர்த்தி அண்ணனுக்கு…. ஆம் நான் முதலிலே சொன்னவர்……..கிமூ…..என்று. அவருக்கு நான் என்றால் ஒரு பிரியம். அவரை மட்டும் நான் அண்ணன் என்பேன்…..மற்ற எல்லோரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்…..கூட ஒரு வாங்க……..போங்க சேர்த்து. ஆனால் இவரை மட்டும் அண்ணன்.

‘சுந்தர்..!……..மேலே….பாசிட்டிவ் அடிக்குது……..அந்தக்கன்வேயர்லே இருந்து டஸ்டா வருது. கம்ப்ரெஷ்ர் போட்டு கொஞ்சம் லோடு ஏத்தச்சொல்லலாமே.. ‘.

முதலில் அவர் வேலைக்கு வந்த போது எல்லோரும் போலவே நானும். நக்கலாகத்தான் பேசினேன்…….பார்த்தேன். அவர் உருவம். உயரம்…….ஒரு மாதிரியான கண்கள்….மூன்று பாதி சேர்த்தது போல். ஆனால் இப்போது அவர் பேசிய வார்த்தைகளும் அதன் ஆங்கில உச்சரிப்புகளும் என்னை அவரை அதிசயமாய் பார்க்க வைத்தன.மெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன்.

பி.ஏ படித்தவர். பி.ஏ என்றால் அந்தக்கால பி.ஏ. .இந்தக்கால ஐ ஏ எஸ்…..கூட அதற்கு சமமில்லை….என்றுதான் நான் சொல்லுவேன்.அவ்வளவு ஆங்கிலப்புலமை….முடிந்த வேலை செய்வார்…அவர் உடல்வாகு அப்படி…..கடினமான வேலைகளை நான் கொடுப்பதில்லை….சில பேர் கொடுப்பதாக அவர் என்னிடம் சொல்லமாட்டார்….ஆனால் தெரியும் ..செய்வார்கள்…….ஆளுமை பதவிகளில் இருக்கும் சிலபேருக்கு தமக்கு கீழே இருப்பவர்கள் முட்டாளாய் இருக்க வேண்டும். அதிலும் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் கூட போதும்..அவ்வளவுதான்.தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் அவர்களுக்கு…………

கிமூ….அண்ணணுக்கு இரண்டு பெண்கள்.மூத்த பெண் ஒரு ஜவுளீக்கடையில்.வேலை செய்கிறாள் …இரண்டாவது பெண்….பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.வயதான அம்மா அப்பா .இரண்டு அண்ணன்கள். சுழற்சி முறையில் அம்மா அப்பா நான்கு மாதம் ஒரு வீட்டில். இப்போது இவர் வீட்டில். வறுமை அவர் வீட்டில் வீடு கட்டி குடி வாழ்ந்தது .எப்போதாவது அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். இப்போதுவரை அதற்கு நேரமில்லை.

அவர் கதை அனைத்தையும் அவர் என்னிடம் சொல்லுவார்…தான் பட்ட துன்பம் அனைத்தையும் சொல்லுவார். தன் கை தனது வயிற்றுக்காகவும் தனது வயிறு சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் பட்ட கஷ்டம் படும் கஷ்டம் அனைத்தையும் சொல்வார்.அவற்றில் பாதி என் தந்தை எனக்கு சொன்னதாய் இருக்கும். நான் பார்த்தவையாய் இருக்கும்…வேகாத வெயிலில் இடுப்பெலும்பு உடைய மரம் உடைத்தது நினைவுக்கு வரும் .நெஞ்சம் உருகும்……..இதயம் செயலிழந்து இப்படியெல்லாம் எதற்காக கஷ்டப்பட நாம் பிறந்திருக்க வேண்டும் என நினைக்கத்தோன்றும்.ஆனால் அவர் முகத்தில் நான் அதற்கான வருத்தமே பார்த்ததில்லை.கஷ்டங்களை அவர் சொல்லும்போது கூட.. ‘…எப்படியோ அம்மா அப்பாவை கடைசிகாலத்துலெ சந்தோசமா வெச்சிருக்கோம் சுந்தர்….அது போதும்….நாம பிச்சை எடுத்தாவது அவங்களை சந்தோசமா வெச்சிக்கணும்……..அதுதாம்பா…..நமக்கு சந்தோசம் ‘ என்பார்.

காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்……..அதுவும் ஊனமான ஒரு பெண்ணை……..அவர் சொல்லச்சொல்ல எனக்குள் என்னவோ ஒரு மாதிரி இருக்கும்…….நாம் உயிர் வாழ்கிறோமா என்பது கூட எனக்கு சந்தேகமாயிருக்கும். இருபது வயதில் இருந்து அசைவம் சாப்பிடுவதில்லை….வள்ளலார் பாடல்கள் படித்ததில் இருந்து….சாமி கும்பிடுவதில்லை. ஒவ்வொரு வள்ளலார் ஜோதி தினத்தன்று முடிந்த அளவுக்கு தெருவில் வசூலித்து அன்னதானம் போடுவார்……தன் அந்த மாத சம்பளமும் அதில் முடிந்து விடும்

பட்டினியை கூட ரசித்து அனுபவிப்பார். இரவு வேலை நேரங்களில் தங்களது சாப்பாட்டுக்கு ஏதாவது கேண்டானில்…மீதமிருப்பதை…வாங்கித்தரச்ச்சொல்லி ஒரு பிரிவினர் அன்பாய் எங்க:ளை வேண்டிக்கொண்டிருக்கையில் கூட அவர் எதுவும் கேட்க மாட்டார்.கொண்டுவந்தால் சாப்பிடுவார்….இல்லையேல் யாரிடமும் கேட்கமாட்டார்.என்னிடம் கூட.

‘என்னமோ தெர்யலை சுந்தரு……….இன்னைக்கி எனக்கு வேலைக்கி வரவே புடிக்கலெ கை கால்லாம் ஒரே அசதி….நாளையிலே இர்ந்து நாலு நாளைக்கி வரமாட்டேன்..ப்பா .அம்மா அப்பா வெ கூட்டிக்கிட்டு ராமேஸ்வரம் போறேன். அம்மாவுக்கு ரொம்ப ஆச….அங்கெ போயி ரெண்டு நாளு இருந்து சாமி கும்புட்டுட்டு வரணுமின்னு. நான் சின்னபுள்ளயா இருந்தப்போ நேந்துக்கிச்சாம்…அதுவும் இந்த வலது கையிலே என்னமோ பெரிய கட்டி மாதிரி வந்து கையையே எடுக்கணும்ன்னு எல்லாரும் சொன்னப்போ…அது அங்கெ உள்ள சாமிக்கு நேந்துக்கிச்சாம் …கை செரியாயிட்டா…….ரெண்டு கை நெறய காணிக்கை போடச்சொல்றேன்னு…….. ‘

‘காணிக்கையை கையிலாதவங்களுக்கு போட்டாவது ரெண்டு வேளை நிம்மதியா ச்சாப்பிடுவாங்கே…….அதுக்கும் அம்ம வேண்டாங்கிது..

அதுக்கும் அதுகிட்டே சொல்லிப்பாத்துட்டேன்…….ம்….என்னதான் அது இதுன்னு பண்ணாலும் இதையும் கட்டாயம் பண்ணியாணூம்னு சொல்லுதுப்பா……ஏற்கனவே நெறைய கடென்………இதுலே இப்போ இது வேறே………செரி…அம்மவுக்காக…….எதையும் பண்ணலாம்பா. ‘

‘நான் கோயிலுக்கே போனதில்லை சுந்தரு……இப்போதான் மொதல்லெ போகப்போறேன் அதுவும் ஏம் அம்மாவுக்காக…….நாளைக்கி ரெண்டாம் பொண்ணுக்கு ரிசல்ட் வருதுப்பா…..மொதல்லெ வருவேன்னு சொல்லியிருக்கா…….பாப்போம்பா…….என்னமோ … பெரியவ நல்லா படிப்பா…..அவளைத்தான் படிக்கவெக்கெ முடியாமெ போச்சி…..இவளையாவது கை காலை ஏன் தலையைக்கூட அடமானம் வெச்சாவது படிக்கவெக்கணும்பா….. ‘

நான் எதுவுமே இடையில் பேசவில்லை……..அவர் இன்று ஏதோ வித்தியாசமாக என்னிடம் நிறைய பேசுகிறார்.

‘செரி……அப்போ…..இன்னைக்கிம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கி கெளம்பவேண்டியதுதானே……….ண்ணே….. ‘

‘இல்லேப்பா….அம்மாதான் சொன்னாங்க……..இன்னைக்கி மட்டும் பொயிட்டு வா…….நாலு நாளூ லீவு போடப்போறேன்னு………..அதாம்பா வந்தேன். ‘

‘சரின்னே நல்ல படியா பொயிட்டு வாங்க. பணம் எதுவும் வேணுமுன்னா சொல்லுங்க இப்போ கொஞ்சம் தான் இருக்கு…….காலையிலெனா பேங்க் லெ எடுத்து தருவேன்.ஒண்ணூம் நினைக்காதீங்க சொல்லுங்க பணம் எதுவும் வேணுமா ? ‘

‘இல்லேப்ப…….கேட்டிருக்கேன்…..சூப்பர்வைசர்ட்டே.காலையிலே தர்றேன்னு சொல்லியிருக்கார்………போதும்பா…… ‘

‘என்னப்பா…..சுந்தர் ? என்ன முக்கியமான ப்ரச்சனையா……….ரொம்பநேரமா பேசுறீங்க போல இருக்கு………. ‘

அவரைப்பார்த்ததும்…….கிமூ…..அண்ணா கொஞ்சம் விலகிப்போனார். அவர் விலகுவது தெரிந்து…..வந்த எனது இன்சார்ஜ் சொன்னார்.

‘கிருஷ்னமூர்த்தி…..மேலே ரெண்டாம் ஃபுலோர் லெ ஐனூத்தி பத்து கன்வேயர் பக்கத்திலே ஒரு ஐம்பது மூடை ரீ ப்ராசெஸ் மெட்டாரியல் இருக்கு….அதைக்கொஞ்சம் உள்ளே தட்டி விட்டுடுங்க……..டாப் கவெரை தொறந்து…..பாத்து. போடும்போது ஃபாரின் மெட்டாரியல் ஏதும் உள்ளே போயிடாம பாத்து போடுங்க. கூட வேண்ணா நாகூர் பிச்சைய கூட்டிக்கிங்க…….. ‘

‘என்னப்பா……மேயிர மாட்டை நக்குன மாடு கெடுத்தது மாதிரி……..ரொம்ப ஃப்ரீ யா பேசாதப்பா அவங்ககிட்டே. அப்புறம் ஒருவேலையும் பாக்கமாட்டானுங்க…….. ‘

கிமூ அண்ணன் போன பின் தான் சொன்னார்..

‘இல்லே சார்…..நைட்டு ஷிஃட். ரொம்ப வேலை சொல்லிக்கூடாது சார் அதுவும் இல்லாமெ .கொஞ்சம் பேசினா…….ரிலாக்ஸ் ஆயிடுவாங்க.இல்லையா.அப்புறமா நாம வேலையை சொல்லலாம். அதுக்காகத்தான்…… ‘

‘சரி..பாத்துக்கோ. எப்படியும் எல்லாமூடையையும் போட்டு முடிக்கச்சொல்லு………..சரியா ? ‘

‘ஓக்கே சார்…….பாத்துக்கிறேன் ‘

‘ராஜா என்ன பன்றான்….. ? ‘

‘உள்ளே இருக்கான் சார்……கன்ட்ரோல் ரூம்லே ‘

‘அவென் யாயா அங்கே இருக்கான். என்ன தெரியும் அவனுக்கு…….நீ ப்போயி உள்ளே இருந்துகிட்டு அவனை அனுப்பு……மூடை போடுறதை பாத்துக்கச்சொல்லி…… ‘

‘.சரி சார்…….. ‘

ராஜாவை ரேடியோவில் கூப்பிட்டேன்.

‘மாப்ளே….கேண்டான்லெ போய் சாப்பிட்டு வறேன். மேலே மூடை போடுறாங்க……..கொஞ்சம் போய் பாத்துக்க..நான் சாப்பிட்டு வந்திறேன் ‘

சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அவசரமாக ராஜா என்னை ரேடியோவில் அழைத்தான்.

உடனே அங்கு ஓடினேன்.

கிமூ அண்ணன்……தன் இடது கையால் வலது கையின்மேற்பாதியை பிடித்துக்கொண்டிருந்தார். வலது கையின்……..முழங்கையின் மூட்டிலீருந்து இருந்து வேகமாய் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.முழங்கையின் மூட்டிற்கு கீழே கையில்லை.

அவர் முகத்தில் எந்தவொரு வேதனையும் எனக்கு தெரியவில்லை.

‘கடைசிவரை கோயிலுக்கு போகக்கூடாதுன்னு இருக்கு…….என்ன பண்றது சுந்தர்……. ‘

உடனே அவரை………மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மேலே போய் அந்தக்கையைத்தேடினேன்.

கன்வேயரின் உள்ளே மாட்டிக்கொண்டிருந்தது.கன்வேயரை திருப்பி சுற்றி அதை வெளியே எடுத்தேன்.

என் கை மேலே அந்த கை. அந்த கையின் ஒரு விரலில் ஒரு செப்பு மோதிரம்……….அதில் அந்த சாமி படம்..

சிலவயிறுகள் அழுவது எனக்குக்கேட்டது, அந்தக்கையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும்பொழுது.

***

yemkaykumar@yahoo.com

Series Navigation